யார் இந்த ஸ்மிருதி மந்தனா?



பெண்களுக்கான ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்தில் மிக அதிகபட்சமாக 3.4 கோடி ரூபாய்க்கு ஏலம்  போயிருக்கிறார் ஸ்மிருதி மந்தனா. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பெண்களுக்கான ஐபிஎல் போட்டிக்காக இந்த தொகையைக் கொடுத்து அவரை வாங்கியிருக்கிறது பெங்களூரு அணி.
இந்த ஏலத்தில் பங்கேற்ற 5 அணிகளும் வீராங்கனைகளை வாங்க மொத்தமாக 12 கோடி ரூபாய்தான் செலவழிக்க முடியும் என்ற நிபந்தனை இருக்கிறது. அந்த 12 கோடியில் கிட்டத்தட்ட மூன்றரை கோடி ரூபாய் கொடுத்து மந்தனா வாங்கப்படுகிறார்.

யார் இந்த ஸ்மிருதி மந்தனா?

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு புகழ்பெற்ற மும்பை நகரத்தில் பிறந்தவர்தான் ஸ்மிருதி மந்தனா. 26 வயதான அவர் இப்போது இந்திய அணியின் துணை கேப்டனாகவும், தொடக்க ஆட்டக்காரராகவும் இருக்கிறார்.ஸ்மிருதி மந்தனாவின் அப்பாவும், அண்ணனும் கிரிக்கெட் வீரர்களாக இருந்தவர்கள்.

அதனால் அவரது ரத்தத்திலேயே கிரிக்கெட் ஊறிப் போயிருந்தது.  அவரது அப்பா ஸ்ரீநிவாஸ் மந்தனா மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் ஆடியவர். அவரது அண்ணன், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருக்கிறார்.
அவர்கள் ஆடும் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கப் போய் சிறுவயதிலேயே மந்தனாவுக்கும் கிரிக்கெட்டில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவரும் கிரிக்கெட் பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கினார்.

சிறுவயதில் அவர் பயிற்சி பெறும் காலத்தில் பெண்கள் கிரிக்கெட் அத்தனை பிரபலமாக இல்லை. அதனாலேயே அவ்விளையாட்டில் பெண் குழந்தைகள் அதிகம் பயிற்சி பெறவில்லை. அதனால் 200 முதல் 300 ஆண்கள் பயிற்சி பெறும் மைதானத்தில் ஒரே பெண்ணாக ஸ்மிருதி மந்தனா பயிற்சி செய்தார். முழுக்க முழுக்க ஆண் குழந்தைகளுக்கு நடுவில் ஒரே பெண்ணாக பயிற்சியில் ஈடுபட்டது மிகவும் கஷ்டமாக இருந்ததாக ஒரு பேட்டியில் மந்தனா கூறியிருக்கிறார்.

அந்த கஷ்டத்துக்கு நடுவிலும் விடாமல் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட மந்தனா, 9 வயதிலேயே  தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் ஆடத் தொடங்கினார். 15 வயதுக்கு உட்பட்ட மகாராஷ்டிர அணிக்காகத்தான் அவர் முதலில் ஆடினார். அதன் பிறகு 11 வயதில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகாராஷ்டிர அணியில் இடம் பிடித்தார்.

2013ம் ஆண்டில், தனது 17 வயதிலேயே மேற்கு மண்டல அணிக்காக அவர் இரட்டைச் சதம் அடிக்க, கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை இவர் மீது திரும்பியது. கூடவே தேர்வாளர்களின் பார்வையும்.2013ம் ஆண்டில் வங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஆடும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார் மந்தனா. அப்போதில் இருந்து இந்திய அணியின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக மந்தனா இருக்கிறார்.

சர்வதேச டி20 போட்டியில் அரைசதம் எடுத்த இளம் வீராங்கனை, ஒரே தொடரில் அதிக சதங்களை அடித்த வீராங்கனை உள்ளிட்ட பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான மந்தனா, இப்போது நடந்துவரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் முக்கிய வீராங்கனையாக இருக்கிறார்.“இந்தியாவில் ஒரு பெண், விளையாட்டு வீராங்கனையாவது அத்தனை எளிதான விஷயமல்ல. பல குடும்பங்களில் பெற்றோர் அதற்கு சம்மதிக்க மாட்டார்கள். என் விஷயத்தில் அப்படி இல்லை.

என்னைவிட என் பெற்றோர்தான் நான் கிரிக்கெட் வீராங்கனையாக வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்கள் கொடுத்த ஊக்கம்தான் இன்று என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது...” என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் ஸ்மிருதி மந்தனா. இன்று அவருக்கு கிடைத்துள்ள இந்த சம்பளத்துக்கு அவரது பெற்றோர் தந்த ஊக்கமும் ஒரு காரணம் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் வைத்துக்கொண்டால் நல்லது.

என்.ஆனந்தி