துவைக்காமல் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று ஜீன்ஸ் அதிகாரி சொன்னது சரிதானா..?



‘‘கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு...’’ என்பது நம் ஊர் மரபு. ஆனால், இன்றைய டிஜிட்டல் உலகில் குளிக்கவும், சாப்பிடவும், துணி துவைக்கவும் நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஊர்விட்டு ஊர் வந்து, அறை எடுத்து தங்கி வேலை செய்யும் இளைஞர்களின் நிலைமையோ இன்னும் மோசம். வாரத்திற்கு ஒருமுறை அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறைதான் அவர்கள் துணிகளை துவைப்பார்கள். அதுவும் தண்ணீர் கிடைக்கும் போதுதான்.

ஆனால், ‘‘நீங்கள் எப்போதாவது துணிகளைத் துவைத்துப் பயன்படுத்தினால் தோல் பிரச்னைகளும், தொற்றுகளும் ஏற்படலாம்...’’ என்கின்றனர் நிபுணர்கள். அதேநேரத்தில் சரியான இடைவெளியின்றி அடிக்கடி துணிகளைத் துவைத்தாலும் அவை விரைவில் சேதமாகிவிடும்.

இந்நிலையில் மக்கள் பயன்படுத்துகின்ற துணி வகைகளை எவ்வளவு முறை பயன்படுத்த வேண்டும், எப்போது துவைக்க வேண்டும், துவைக்காமல் அணிவதால் என்ன பாதிப்புகள் வரும் என்பதை எச்சரிக்கை பதிவாக பட்டியலிடுகின்றனர் நிபுணர்கள். முதலில் உங்களுடைய தோல் மற்றும் வியர்வையுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருப்பதால் உள்ளாடைகள், சாக்ஸ், லெக்கிங்ஸ் என இறுக்கமாக அணியும் ஆடைகளை ஒரு முறைக்கு மேல் அணியக்கூடாது என்கின்றனர். இது இருபாலினருக்கும் பொருந்தும். இவற்றைக் கைகளால் மட்டுமே துவைக்க வேண்டும்; வாசிங் மெஷினில் வேண்டாம் என பரிந்துரைக்கின்றனர். காரணம், இதில் பாக்டீரியாக்கள் அதிகமாக படர்ந்திருக்குமாம்.

அடுத்து, நேரடியாக சூரிய வெளிச்சம் படாத பகுதியில் காயவைக்க வேண்டும். இல்லையென்றால் விரைவிலேயே இந்த வகையான ஆடைகள் சேதமாகிவிடும். முடிந்தால் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை பழைய உள்ளாடைகள் மற்றும் சாக்ஸை புறந்தள்ளிவிட்டு புதிதுக்கு மாறுவது நல்லது.ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகின்ற சட்டை, டி-ஷர்ட், ரவிக்கை, சுடிதார் டாப்ஸ்... போன்ற அனைத்து வகையான மேலாடைகளையும் அதிகபட்சமாக இரண்டு முறை அணியலாம். அடுத்து மீண்டும் துவைத்த பிறகே பயன்படுத்த வேண்டும். ஜீன்ஸ் பேன்ட்டை நான்கு அல்லது ஐந்து முறையும், மற்ற வகை பேன்ட்களை இரண்டு அல்லது மூன்று முறையும் அணியலாம்.

இதில் ஜீன்ஸ் பேன்ட்டை துவைக்காமல் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று ‘லிவைஸ்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி உட்பட நிறைய பேர் சொல்லியிருப்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால், இந்தியாவில் நிலவும் காலநிலைக்கும், வாழ்க்கை முறைக்கும் ஜீன்ஸை துவைக்காமல் அணிய முடியாது என்பதே பலரின் கருத்து.

அடுத்து ஸ்வெட்டரை சட்டைக்கு வெளியே அதிகபட்சமாக ஆறு நாட்களும், சட்டையில்லாமல் இரண்டு நாட்களும் அணியலாம் என்கின்றனர். குளிர் காலத்தில் மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்படுவதால் பெரும்பாலும் பாக்டீரியாக்கள் ஸ்வெட்டரை அதிகமாகத் தாக்காது. எப்போதாவது அணிகின்ற கோட்-சூட் மற்றும் ஜாக்கெட்களை ஐந்து அல்லது ஆறு முறைக்கு மேல் துவைக்காமல் அணியக்கூடாது.

இதேபோல உடற்பயிற்சி செய்யும்போது அணியும் ஆடைகளை ஒரே முறைதான் அணிய வேண்டும். அரை மணி நேரம் அணிந்திருந்தால் கூட மறுமுறை அணியக்
கூடாது. காரணம், உடற்பயிற்சியின்போது வெளியாகும் வியர்வையில் அதிகமாக பாக்டீரியாக்கள் தங்கும். அது அப்படியே அந்த துணிகளில் படர்ந்துவிடும்.  
தூங்கும்போது அணிகின்ற ஆடைகளை இரண்டு அல்லது மூன்று முறை அணியலாம் என்கின்றனர் தோல் மருத்துவர்கள்.

இதுமட்டுமல்ல. படுக்கை விரிப்பு, தலையணை உறை, கம்பளி, போர்வை போன்றவற்றை வாரத்துக்கு ஒருமுறையும், குளித்த பிறகு ஈரத்தைத் துவட்ட பயன்படுத்தப்படும் துண்டுகளை மூன்று நாட்களுக்கு ஒருமுறையும் சுடுதண்ணீரில் துவைக்க வேண்டுமாம். தலையணை உறை, கம்பளி... போன்றவற்றில் படியும் வியர்வையும், நாம் குளித்துவிட்டு துண்டில் துடைக்கும்போது அதில் படியும் ஈரமும் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ஏதுவானவை. இவற்றை துவைத்த பிறகு நன்கு வெயில் அடிக்கும் இடத்தில் காயவைக்க வேண்டும்.

‘‘சிலர்  வியர்வையில் நனையும் உடைகளைத் துவைக்காமல் நல்ல வெயிலில் காயப்போட்டு மீண்டும் பயன்படுத்துகின்றனர். இது தவறானது. வெப்பமான சூழல் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு சாதகமானது. அதனால் வியர்வையால் நனையும் ஆடைகளை உடனடியாக சுடுதண்ணீரில் துவைத்த பிறகே மீண்டும் பயன்படுத்த வேண்டும்...’’ என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த தோல் மருத்துவரான ரோஸி.

சாக்ஸை ஒரு முறைக்கு மேல் துவைக்காமல் பயன்படுத்திக் கொண்டே இருந்தால் பாதங்களிலும், விரல் இடுக்குகளிலும் பூஞ்சைத் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தவிர, கேன்வாஸ் ஷூவைத்  துவைக்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது இன்சோல்களைத் துவைப்பது முக்கியம். ஏனென்றால் ஷூவின் உட்பகுதியில் உள்ள இருளும், ஈரப்பதமும் பூஞ்சைகள் வளர்வதற்கு ஏதுவானவை.

‘‘நம் உடலின் மீது இயற்கையாகவே ஏராளமான பாக்டீரியாக்கள் குடியிருக்கின்றன. வியர்வையினால் உண்டாகும் ஈரப்பதம் பாக்டீரியாக்கள் வாழ்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்குமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்த பாக்டீரியாக்கள் அதிகமாக வளரும்போது தொற்று, பூஞ்சை, தோல் சம்பந்தமான பிரச்னைகள் உண்டாகின்றன.

மட்டுமல்ல; பாக்டீரியாக்கள் வியர்வையுடன் கலந்து நாம் அணிகின்ற ஆடைகளுடன் ஒட்டிக்கொள்கின்றன. தோலின் மேற்பகுதியில் பாக்டீரியாக்கள் இருக்கும் வரை பெரிதாக பிரச்னைகள் இல்லை. ஆனால், அவை சுவாசத்தின் வழியாகவோ அல்லது வேறு வழியிலோ உடலுக்குள் புகுந்துவிட்டால் ஆரோக்கியத்துக்குக் கேடு...’’ என எச்சரிக்கிறார் ரோஸி.  

த.சக்திவேல்