அப்பா... மகன்... கிரிக்கெட் பயிற்சியாளர் குடும்பம்!
‘‘கிரிக்கெட்ல பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே நிறைய டெக்னிக்ஸ் இருக்குது. பேட் பிடிக்கிற விதத்தில் தொடங்கி தோள்பட்டையை உயர்த்துவதில், பந்தை கவனிப்பதில், கால்களை நகர்த்துவதில், கைவிரல்களை சுழற்றுவதில்னு ஒவ்வொன்றிலும் பல நுட்பங்கள். ஆனா, இது நிறைய பேருக்குத் தெரியாது. ஒருவர் கிரிக்கெட்ல ஜொலிக்கணும்னா அந்த நுட்பங்கள் எல்லாவற்றையும் படிக்கணும். அது பயிற்சியின் வழியாகத்தான் கிடைக்கும். அதுக்கு சரியான பயிற்சியாளர் அவசியம்.
பிறகு கடினமாக உழைக்கணும். உடலை ஃபிட்னஸாக வச்சுக்கணும். இதையெல்லாம்விட மனபலம் ரொம்ப முக்கியம். அதுவே ஒருவரை உலகளவில் கொண்டு போகும்...’’ கிரிக்கெட் பயிற்சி பற்றி அவ்வளவு நுட்பமாகப் பேசுகிறார் பீட்டர் ஃபெர்னாண்டஸ்.
தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இவர் இப்போது தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கிறார். அதுமட்டுமல்ல. இந்தியாவிலுள்ள சிறந்த சுழற்பந்து பயிற்சியாளர்களில் இவரும் ஒருவர். தவிர, இந்திய அளவில் பெயர் சொல்லும் சிறந்த கிரிக்கெட் பயிற்சியாளரும் கூட.
அஸ்வின், வருண் சக்கரவர்த்தி, திருஸ்காமினி, ஹேமலதா, நிரஞ்சனா... என இந்திய வீரர், வீராங்கனைகள் பலருக்கும் பயிற்சி அளித்தவர். 35 ஆண்டுகள் பயிற்சியாளராக பலத்த அனுபவம் கொண்டவர்.
இவரைப் போலவே இவரின் மகன் ரோஹனும் இப்போது கிரிக்கெட் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ‘‘நான் பிறந்தது மகாராஷ்டிரா மாநிலத்துல உள்ள சத்தாரா என்கிற கிராமத்துல. என் அப்பா கூப்பர் எஞ்சினியரிங் வேலை செய்தார். அவரின் சிறப்பான பணியைப் பார்த்திட்டு சென்னை சிம்சனுக்கு அனுப்பினாங்க. அப்படியாக நாங்க சென்னைக்கு குடிவந்தோம்.
செயின்ட் பேட்ஸ்லதான் படிச்சேன். அங்க காலையில் கிரிக்கெட்டும், மாலையில் ஹாக்கியும் ஆடினேன். அந்நேரம் ஏ.ஜி.ராம்சிங்னு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பயிற்சியாளராக வந்தார். இவர் மகன் கிர்பால் சிங்கும் இந்திய அணிக்காக ஆடியவர். பிறகு லயோலா கல்லூரியில் பி.யு.சி சேர்ந்தேன்.
அங்க பி.யு.சி ஃபெயிலாகிட்டேன். பிறகு எம்.சி.சியில் பி.யு.சி படிச்சேன். அங்க எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைச்சது. அப்புறம் எம்.சி.சியிலேயே பி.ஏ. எகனாமிக்ஸ் சேர்ந்தேன். அங்க 8வது இடத்தில் விளையாடும் ப்ளேயராக இருந்தேன். பிறகு என் கடின பயிற்சியால் 3வது இடத்தில் விளையாட வாய்ப்பு கிடைச்சது. நிறைய ரன்கள் அடிச்சேன். இருந்தும் சென்னை பல்கலைக்கழக அணிக்குத் தேர்வாகல. செகண்ட் இயர்ல எனக்கு ஸ்காலர்ஷிப் தரல. நிதி இல்லைனு சொல்லிட்டாங்க. பிறகு மறுபடியும் லயோலாவுக்கு வந்தேன். இங்க ஸ்காலர்ஷிப் தர்றோம்னு சொன்னதால பி.ஏ எகனாமிக்ஸ் இரண்டாம் ஆண்டு சேர்ந்தேன். இங்கேயும் நான் ஹாக்கி விளையாடினேன். இங்க ஹாக்கி வீரர் பாஸ்கரன் கீழ் பயிற்சி எடுக்க தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
அப்பதான் அவர், கிரிக்கெட் அல்லது ஹாக்கி ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுனு அறிவுரை சொன்னார். நான் கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்தேன். மூன்றாமாண்டு எனக்கு சென்னை பல்கலைக்கழக அணியில் விளையாட வாய்ப்பு கிடைச்சது. அப்ப பரத் ரெட்டி தலைமையின்கீழ் சென்னைப் பல்கலைக்கழக அணியில் ஆடினேன். இவரும் இந்திய அணியில் விளையாடியவர். அப்போ நாங்க கோப்பை வென்றோம்.
பிறகு எனக்கு ஃபுட் கார்ப்பரேஷன்ல வேலை கிடைச்சது. ஆனா, அங்க ஒப்பந்தத்துல கையெழுத்து போடச் சொன்னதால வேலை வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்பதான் ஏ.ஜி.ராம்சிங் பரிந்துரையில் உடுமலைப்பேட்டையிலுள்ள வெங்கடேசா பேப்பர் போர்ட்ஸ் நிறுவன கிரிக்கெட் டீம்ல சேர்ந்தேன். அதேநேரம் தமிழ்நாடு அணிக்கும் தேர்வானேன். அப்ப எஸ்.வெங்கட்ராகவன் கேப்டனாக இருந்தார். அவர் தலைமையில் ரஞ்சி டீம்ல ஆடினது மறக்கமுடியாதது...’’ மளமளவென ஞாபகங்களை நினைவுகூர்ந்தவரிடம், பயிற்சியாளர் பணி பற்றிக் கேட்டோம். ‘‘1987ம் ஆண்டு பயிற்சியாளராக ஆனேன். எனக்கு கிரிக்கெட் பயிற்சியாளர் ஆகணும்னு ஆர்வம் ரொம்ப இருந்தது. நான் பேட்ஸ்மேன் என்பதால் முதல்ல பேட்டிங் பயிற்சியாளராக இருந்தேன். அப்ப இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரிஜேஷ் பட்டேலின் அகடமிக்கு பயிற்சியளிச்சேன். பேப்பர் போர்ட்ஸ் வேலை செய்திட்டே பயிற்சியாளர் பணியையும் செய்திட்டு இருந்தேன்.கிரிக்கெட் பயிற்சியாளர் பணி அவ்வளவு சுலபமானதல்ல. முதல்ல டெக்னிக்ஸ் தெரியணும். அதை புத்தகங்கள் பார்த்து படிச்சேன். ஆனா, வெறும் புத்தகங்கள் மட்டும் உதவாது. அனுபவங்களே பல விஷயங்களைக் கத்துத்தரும். அதன்வழியாகவே சொல்லித்தர முடியும்.
என் அனுபவங்கள் எனக்கு கைகொடுத்தது. இருந்தாலும் இப்பவரை புதுப்புது நுட்பங்களை நான் கத்துக்கிட்டேதான் இருக்கேன்...’’ என்கிறவருக்கு இப்போது 70 வயதாகிறது. ‘‘அப்புறம், தமிழ்நாடு கிரிக்கெட் அகடமி, தமிழ்நாடு அண்டர் 17 கிரிக்கெட் அணிக்கெல்லாம் பயிற்சியாளரா பணி செய்தேன். 90கள்ல மூன்று ஆண்டுகள் ரஞ்சி கோப்பைக்கான அணி தேர்வாளராகவும் இருந்தேன். பிறகு, 2001ல் பேப்பர் போர்ட்ஸ் நிறுவனத்துல இருந்து வந்துட்டேன். அங்க 24 ஆண்டுகள் பணியாற்றினேன்.
அப்ப முன்னாள் இந்திய வீரர் ராபின் சிங் என்னை அழைத்தார். அவர் டிரினிடாட்ல இருந்து 1980கள்ல சென்னைக்கு வந்தப்ப அவரின் முதல் நண்பராக இருந்தவன் நான். அவர் பல ஆண்டுகால பழக்கம். அவருடன் சேர்ந்து ஏ.சி.முத்தையாவின் மேக் ஸ்பின் பவுண்டேஷன்ல பயிற்சியாளராக சேர்ந்தேன். இங்கதான் நான் ஸ்பின் பயிற்சியைக் கத்துக்கிட்டேன். அங்க தலைமை பயிற்சியாளரானேன். அப்ப பல சர்வதேச வீரர்கள், பயிற்சியாளர்களை வச்சு கேம்ப் நடத்தினோம்.
ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் டெர்ரி ஜென்னர், ஆஸ்லே மல்லட், இந்தியாவின் ஆஃப் ஸ்பின் லெஜெண்ட் பிரசன்னா, மணீந்தர்சிங், முரளிதரன்னு பலருடன் சேர்ந்து வேலை செய்தேன். அவங்ககிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். குறிப்பாக ஷேன் வார்னேவின் பயிற்சியாளரான டெர்ரி ஜென்னருக்கு உதவியாக ரெண்டு ஆண்டுகள் இருந்தேன். அவர்தான் என்னுடைய ஸ்பின் பயிற்சி குருனு சொல்லலாம்.
இதுக்கிடையில் நான் பிசிசிஐயின் லெவல் II, லெவல் III பயிற்சியாளருக்கான சான்றிதழ்கள் பெற்றேன். இதுல லெவல் IIIதான் அதிகபட்ச சான்றிதழ். இந்த சான்றிதழ் பெற 15 நாட்கள் பயிற்சி, தியரி, தேர்வு எல்லாம் இருக்கும். கேள்விகளும் கேட்பாங்க. அதுல பாஸாகி சான்றிதழ் வாங்கணும். அப்பதான் அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளராக இருக்கமுடியும். அந்தச் சான்றிதழ் பெற்றேன்.
இப்ப நான் பேட்டிங், பவுலிங்னு ரெண்டிலும் பயிற்சி அளிக்கிறேன். என்கிட்ட பல வீரர், வீராங்கனைகள் பயிற்சி எடுத்திருக்காங்க. அஸ்வினுக்கு அண்டர் 17ல் பயிற்சி அளிச்சிருக்கேன். அப்ப அவர் பவுலிங் பண்ணல. ஓபனிங் பேட்ஸ்மேனாக இருந்தார். ஆந்திரா அணிக்கு எதிராக இருநூறு ரன்கள் அடிச்சார்.
இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி, இந்திய பெண்கள் அணியில் ஆடிய திருஸ்காமினி, ஹேமலதா, நிரஞ்சனா உள்ளிட்ட பலருக்கு பயிற்சி கொடுத்திருக்கேன். இப்ப என் மாணவி ஹேமலதா மகளிர் ஐபிஎல் அணியில் குஜராத் அணிக்காகத் தேர்வாகி இருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு...’’ என உற்சாகமானவர், தொடர்ந்தார். ‘‘2016ல் மேக் ஸ்பின் பவுண்டேஷனை மூடும்வரை அங்க சிறப்பாக பணி செய்தேன். பிறகு ஆறு ஆண்டுகள் வேலையில்லாமல் வீட்டுல சும்மா இருந்தேன். கடந்த ஆண்டுதான் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டேன். என்னை தலைமை பயிற்சியாளராக இருக்கச் சொல்லிதான் சொன்னாங்க. ஆனா, எனக்கு பயிற்சியாளராக சொல்லிக் கொடுக்கவே பிடிச்சிருந்தது. அதனால, கடந்த ஓராண்டாக பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுறேன்.
அண்டர் 25, அண்டர் 19, அண்டர் 14, அண்டர் 12 எல்லாத்துக்கும் நான் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கேன். இப்ப என் மாணவிகள் சிலர் லெவல் ஒன் சான்றிதழ் வாங்கி பயிற்சியாளராகவும் இருக்காங்க. இதைவிட என் மகன் ரோஹனும் என்னைப் போல பயிற்சியாளராக ஆனதுதான் மனசுக்கு நிறைவாக இருக்கு...’’ என பீட்டர் நெகிழ, அருகிலிருந்த ரோஹன் தொடர்ந்தார்.
‘‘அப்பாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றித்தான் நான் பயிற்சியாளராக மாறினேன். அப்பாதான் என் முதல் குரு. நான் 12ம் வகுப்புக்குப் பிறகே கிரிக்கெட்டை சீரியஸாக ஆட ஆரம்பிச்சேன். அப்பா எனக்கு கோச் பண்ண ஆரம்பிச்சதும்தான் ஆர்வம் அதிகமாச்சு...’’ என்கிற ரோஹன் இப்போது வந்தவாசி அருகே சேத்துப்பட்டு கிராமத்தில் கிரிக்கெட் அகடமி ஒன்றை நடத்தி வருகிறார்.
‘‘நான் பள்ளிப்படிப்பு முடிச்சதும் ஓராண்டு போட்டோகிராபி படிச்சேன். பிறகு, குருநானக் கல்லூரியில் பி.எஸ்சி விஸ்காம் சேர்ந்தேன். அங்க செகண்ட் இயர்ல பி டீமிற்கு ஆடினேன். மூன்றாமாண்டு ஏ டீமிற்கு தேர்வாேனன். என் பெர்ஃபாமன்ஸை பார்த்திட்டு கல்லூரி பி.டி பேராசிரியர் ஜெய்கணேசன் சார் எனனை டீம் கேப்டனாகவும் ஆக்கினார். என்னுடன் விஜய்சங்கர், அபராஜித், இந்திரஜித், ஷாரூக்கான் எல்லாம் காலேஜ் டீம்ல ஆடினாங்க. தமிழ்நாடு செகண்ட் டிவிஷன் வரை ஆடினேன்.
2012ல் கல்லூரியில் படிக்கிறப்பவே மேக் ஸ்பின்ல அப்பாவுடன் ஜூனியர் பசங்களுக்கு பயிற்சி அளிப்பேன். அங்கிருந்துதான் என் கோச்சிங் ஜர்னி ஆரம்பிச்சது. அவருடனே கற்றேன். அப்புறம், வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் வரும் கேம்ப்கள்ல கலந்துப்பேன். அங்க ஏதாவது சந்தேகம் இருந்தால் அப்பாவிடம் கேட்டு கத்துப்பேன்.
2017ம் ஆண்டு பயிற்சியாளராக ஆனேன். அப்புறம், என் கேரியரை இம்ப்ரூவ் பண்ண துபாய் போய் ஐசிசியின் லெவல் ஒன் சான்றிதழ் வாங்கினேன். அங்க ராபின் சிங் இருந்தார். அவர் துபாய்ல ராபின் சிங் ஸ்போர்ட்ஸ் அகடமியைத் தொடங்கியிருந்தார். எனக்கு சர்வதேச அனுபவங்கள் வேணும்னு அவர்கிட்ட ஒரு வாய்ப்பு கேட்டிருந்தேன். அப்படியாக அவரின் அகடமியில் சேர்ந்த மூணு மாசத்திலேயே தலைமை பயிற்சியாளராக ஆனேன். அங்கிருந்து சென்னைக்கு 2019ம் ஆண்டு கடைசில வந்தேன்.
அப்பாவுக்கு நிறைய மாணவர்கள் இருந்தாங்க. கொரோனா நேரம் என்பதால் கூட்டம் சேர்க்காமல் இருக்க தனிநபர் சிலருக்கு மட்டும் பெர்சனலாக கோச்சிங் கொடுத்தோம். அப்பதான் கோச்சிங் அகடமி ஆரம்பிக்கலாமேனு தோணுச்சு. ஆனா, இங்க சிட்டியில் நிறைய அகடமி இருக்குது. அதனால, வேறு ஊரில் தொடங்கலாம்னு நினைச்சேன். அதுக்கு இன்னொரு காரணம், மாவட்டங்களில் உள்ள திறமையானவர்களைக் கண்டுபிடிக்கலாம்னு தோணுச்சு. அங்குள்ள கஷ்டப்படுகிற திறமையான பசங்களைக் கண்டெடுத்து பயிற்சி அளிக்கலாம்னு நினைச்சேன்.
கடந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சேத்துப்பட்டுல பெர்னாண்டஸ் அகடமி ஆஃப் கிரிக்கெட் எக்ஸ்சலன்ஸ் என்கிற பெயர்ல அகடமி தொடங்கினேன். அங்க ஒருவர் இடம் தந்தார். அவரின் இரண்டு பசங்களும் கிரிக்கெட் ஆடுறாங்க. அவங்களுக்கும் பயிற்சி அளிக்க கேட்டுக்கிட்டார். இப்ப அந்த பசங்க விழுப்புரம் மாவட்ட அணியில் ஆடுறாங்க. முதல் டிவிஷன் டீம்ல இருக்காங்க.
நான் கிரிக்கெட் பயிற்சியுடன், தியரி கிளாஸும் எடுப்பேன். கேம் ப்ளான் பற்றியெல்லாம் சொல்லித்தருவேன். அப்பாவைப் போலவே நானும் திறமையுள்ள கஷ்டப்படுகிற பசங்களுக்கு ஃப்ரீயாவே சொல்லித் தர்றேன். அப்பாவைப் போல சிறந்த பயிற்சியாளர்னு பெயரெடுக்கணும்னு ஆசை...’’ என ரோஹன் நிறுத்த, பீட்டர் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினார்.
‘‘பொதுவாக கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பாக வரணும்னா ஏழு வயதிலிருந்தே பயிற்சியை ஆரம்பிக்கணும். முதல்ல என்ஜாயா விளையாடவிட்டு ஆர்வத்தை வளர்க்கணும். அப்புறம், பத்து வயதில் கொஞ்சமாக டெக்னிக் சொல்லித் தந்து பயிற்சி அளிக்கணும். பசங்க, பொண்ணுங்க யாராக இருந்தாலும் சரி. ஆனா, நான் முன்னாடியே சொன்னபடி ஆர்வமும், கடின உழைப்பும் அவசியம்.
இப்ப டிஎன்சிஏ நிறைய போட்டிகள் நடத்துறாங்க. தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் தொடர்ந்து கேம்ப் பண்றாங்க. தேர்வாளர்களை அனுப்பி சிறந்த சுழற்பந்துவீச்சாளர், வேகப்பந்து வீச்சாளர், பேட்ஸ்மேன்னு தேர்ந்தெடுக்கிறாங்க. அதன்வழியாக இளைஞர்கள் பலரும் ஆர்வமாக தங்கள் திறமையை நிரூபிக்கிறாங்க.
இதனால சிறந்த வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு கிரிக்கெட்டிற்கு கிடைச்சிட்டு இருக்காங்க. இது நல்ல முன்னேற்றம். தமிழ்நாட்டின் கிரிக்கெட் எதிர்காலத்துல சிறப்பாக இருக்கும்...’’ என நம்பிக்கையாகச் சொல்கிறார் பீட்டர் ஃபெர்னாண்டஸ்.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|