சிறுகதை - கஸ்ஸியா ஃபிஸுலா
‘‘நான் கெல்லிஸ் ரோட்டில் இருக்கற ‘கஸ்ஸியா ஃபிஸுலா’ மரத்துக்குக் கீழே நிற்கிறேன். நீ வந்து சேர்ந்துடு...’’ அமலேஸ்வரன் சொல்லி முடித்த நிமிசம் நான் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தேன்.  ‘அரே ஓ சம்பா...’ என்று என் மனசு ‘ஷோலே’ படத்தில் வரும் அம்ஜத் அலிகானுக்கு டூப் போட்டுக்கொள்ள, பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு, அந்த ‘கஸ்ஸியா ஃபிஸுலா’ மரத்தின் பூர்வாங்கத்தைத் தேடி ஷூவோடு கூகுளுக்குள் ஓடி அதன் தமிழ்ப் பெயரைத் தெரிந்து கொண்டபோது எனக்கு கோபத்துக்கு பதில் சிரிப்புதான் வந்தது. பைக்கை சென்னை சாலைகளில் தேய்த்த போது, மனசு கல்லூரி நாள்களின் லாவணி பாடியது.
 படித்து முடித்ததும் வேலை கிடைப்பது எல்லாம் வரமென்று சொன்னவன் மட்டும் என் கையில் கிடைத்தால், எறும்புப் புற்றுக்கு அருகே, இனிப்பைத் தடவி கட்டிப் போட்டு, உருகும் தார்ச்சாலையில் உருண்டு கரணம் போட வைத்து விடுவேன்.இத்தனை நாள் சந்தோசத்துக்கு செலவு செய்த வாழ்க்கையை, சட்டென்று வருமானத்துக்கு செலவு செய்வது வணங்காமல் வலித்தது.எட்டு மாதம் மொத்தமாய் வைசாக்’கில் பைசாவுக்கு பிரயோசனம் இல்லாமல் வாழ்ந்து முடித்தாயிற்று.
காலை ஆறு மணிக்கு எழுந்து அவசரமாய் தயாராகி, குண்டு ராவ் கடையில் பிசரெட்டு தின்று, வேகமாய் ஓடி, மீசைக்கு டை பூசிய கடுவன் பூனை டிரெய்னியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு, ஞாயிறு முழுக்க துணி துவைக்கவும், தூங்கி எழவும் செலவு செய்து கொண்டு...இந்த வாழ்க்கை பிடிக்கத்தான் இல்லை. ஆனால், இப்போது வாழ்வதுதான் முழு வாழ்க்கைக்குமான சிலபஸ் என்று தெரிந்தபோது, பழைய நாள்கள் அதிர்ச்சியில் அப்படியே அன்னபோஸ்ட்டாய் ஜெயித்துப் போனது.
நான் ‘கஸ்ஸியா ஃபிஸுலா’ மரத்தைத் தொட்டபோது, கொன்றை மரத்துக்குக் கீழ் கிடந்த நீண்ட மரபெஞ்சில் அமலேஸ்வரன் அமர்ந்திருந்தான். கையில் இருந்த சிகரெட்டை உயர்த்திப் பிடித்து என் வரவிற்கு டார்ச் அடித்தான், சிவப்பு மூக்கு சிகரெட்டோடு.பக்கத்தில் போனதும் எழுந்து நின்று என்னை ஆரத் தழுவிக் கொண்டான். என் அலுப்பும் சலிப்பும் அந்த அணைப்பில் இடம் தெரியாமல் போனது.
முகத்தை நிமிர்த்தி முள் தாடி நிரம்பிய அவன் முகத்தில் முத்தமிட்டேன். ஆணை ஆண் முத்தமிடுவதை, நாயர் டீ அடித்துக் கொண்டே கொஞ்சம் விசித்திரமாய்ப் பார்த்தார். அவருக்கு என்ன தெரியும் எங்கள் நட்பைப் பற்றி.‘‘கொன்றை மரம்னு சொன்னா புரியாதா..? அதென்ன கொரியன் படத்து கதாநாயகியை கொஞ்சுறாப்புல ‘கஸ்ஸியா கிஸ்சியா’னுட்டு...’’ தோளில் கைபோட்டுக் கொண்டேன்.‘‘படிச்ச படிப்பை மறக்கலாமா! உனக்கென்னய்யா... படிச்சு முடிச்ச, வேலைக்கு போயிட்ட, அடுத்தென்ன, கல்யாணம்தானே..!
ஆனால், இப்படியே வாழ்க்கை போனா என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகுது..! கொஞ்சம் அடிபடணும், லேசா மிதிபடணும், சில ஏமாற்றம் வரணும். ஆசைப்பட்டதுல ஏதோ ஒண்ணு ரெண்டு நடக்கணும். அப்போதான் மச்சி இந்த வாழ்க்கையில த்ரில் இருக்கும்...’’ இழுப்பில் மிச்சமிருந்த சிகரெட்டை அவன் கையாலேயே எனக்குத் தந்தான். உறிஞ்சி, ரயிலைப் போல புகையைக் கக்கிக் கொண்டேன். டீ சொல்லிவிட்டு கையில் இருந்த தாமிர காப்பை மேலேற்றிக் கொண்டான். ஆள் நிறையவே வாடி இருந்தான். தாடை எலும்பு லேசாய் கீழ் இறங்கி, இருக்க, அதை தாடியைக் கொண்டு அழகாக மறைத்து ஒப்பேற்றி இருந்தான்.ஒரே டம்ளரில் டீயைக் குடித்துக் கொண்டபோது, அந்த ஒரு டம்ளரில் பங்குக்கு நிற்கும் அருளையும், டேவிட்டையும் நினைத்துக் கொண்டோம். பத்து ரூபாய் டீ, பத்து பேருக்கு ருசிகாட்டும் அந்த நாளில்.
கொன்றை மரத்தில் மஞ்சள் பூக்கள் சரம் போல தொங்கிக் கொண்டிருந்தன. இலைகள் எல்லாம் உதிர்ந்து போயிருக்க, மலர்களே இலைகளாகி மரத்தை காபந்து செய்து கொண்டிருந்தது. ‘‘அருளும், டேவிட்டும் பேசறானுகளாடா..? நான் நேத்து கால் பண்ணேன்... ‘வாடா அமலேஸைப் பார்த்துட்டு வரலாம்’னு சொல்லி. தட்டி விடறான்டா மச்சான்...’’
‘‘டேவிட்டு சயின்ஸ் படிச்சிட்டு, சானிடரிவேர் கம்பெனியில வெஸ்டன் டாய்லெட்டுக்கு நீள அகலம் பார்த்துட்டு இருக்கான்டா.
அருள் அதுக்கும் மேல, ஈவன்ட் மேனேஜ்மென்ட் பார்க்கிறானாம். கொடுமை...’’ மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். இப்போதெல்லாம் நிறைய ஊதித்தள்ளுகிறான் போல் எனக்குத் தோன்றியது. அவசரமாய் கவலைப்பட்டுக்கொண்டே அவனைப் பார்த்தேன்.
‘‘ஏதோ ஒரு வேலை. லைஃபை ஸ்டார்ட் பண்ணணும் இல்ல...’’ என்றேன். அதில் வருத்தமும்,அழுத்தமும் சேர்ந்தே இருந்தது.அமலேஸ் எங்கோ வெறித்துக் கொண்டு சிறிதுநேரம் அமர்ந்து இருந்தான். அவனை எதுவும் காயப்படுத்தி விட்டேனோ என்று தாமதமாக உணர்வு வந்தது.‘‘பண்ணணும்... பண்ணணும்.
யோசிச்சு பாரு வினு... நாம மதிப்பு தெரியாம செலவு செய்தபோது அந்த பணத்து மேல இருந்த மரியாதை இப்போ மதிப்பு தெரிஞ்ச பிறகு சுத்தமா போச்சு. ஒவ்வொரு நிமிசத்தையும் காசு சம்பாதிக்க மட்டும் செலவு செய்துட்டு... அடப் போடா..!’’நாங்கள் நடக்க நடக்க, டேவிட்டும் அருளும் ஒரே பைக்கில் வந்து எதிரில் நின்று காலூன்றி சிரித்தார்கள். அமலேஸ் பின்னால் கையைக் கட்டிக் கொண்டு அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தான், அவர்கள் என்னோடு பேசிக் கொண்டிருப்பதை.‘‘வினு, மூணு மாசமா இங்கேயே இருக்கேன். ஒரு வார்த்தை கால் பண்ணி பேசலடா. உன்னைப் பார்த்ததும் சீன் போடறானுக பாரு...’’ முகத்தைத் திருப்பிக் கொள்ள, இருவரும் இறங்கி வந்து தோளில் கைபோட்டு, சிலுமிசம் செய்து, கிச்சு கிச்சு மூட்டி அவனை தன்னக்கட்டிக் கொண்டிருக்க, என் மனசு முழுக்க கல்லூரி சாலையில் நின்றது.
பச்சையப்பாஸுக்கும், லயோலாவுக்கும் நடுவில் நாலு பேரும் நடந்து தேய்த்த பாதைகள் இப்போது எந்த நண்பர்கள் குழுவால் நடந்து தேய்க்கப் படுகிறதோ..!
‘‘இண்டர்வியூ இருக்குன்னு சொன்னியே அமலா..! போயிட்டு வந்தியா...’’ கடலை வண்டிக்காரனிடம் நான்கு பொட்டலங்களை வாங்கிக் கொண்டு, ஜீ பே பண்ணி விட்டு வந்தான் அருள்.
‘‘பஸ்சுக்கு சில்லறை இருக்காது அப்பெல்லாம். பாஸ்’லதான் காலேஜுக்கு வருவான். இப்போ, பத்து ருபா கடலைக்கு ஜீ பே’வாம்... காசு என்னென்ன வேலை எல்லாம் செய்யுது பாருங்கடா...’’ புறங்கையால் வாயை அடைத்துக்கொண்டு அமலேஸ் சொல்ல, எனக்கும் டேவிட்டுக்கும் சிரிப்பு துள்ளிக் கொண்டு வந்தது.
பக்கத்தில் வந்த அருள் சரியாய் இனம் கண்டு கொண்டான் எங்களை. கடலைப் பொட்டலத்தை கையில் திணித்துவிட்டு முறைத்துக் கொண்டே நின்றான். ‘‘என்னடா, லந்தா... நான் நகர்ந்ததும் அந்த முள்ளம் பன்றி ஏதோ சொல்லி இருக்கான். நீங்களும் சிரிச்சு வைக்கிறீங்க...’’‘‘விடுடா மச்சான்... கொஞ்சம் காலாற நடக்கலாம்டா. வண்டியை ஓரங்கட்டிட்டு வாங்க...’’நான்கு பேரும் நடக்க ஆரம்பித்தோம். மொத்த வாழ்க்கையில் தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல், விரல்கடை அகல கல்லூரி வாழ்க்கை. அந்த ஒற்றை ருசியை தொட்டுக் கொண்டே, உப்பு சப்பில்லாத மொத்த விருந்தும், உள்ளிறங்குகிறது.
‘‘கவின் சீரியல்ல நடிக்க டிரை பண்றானாம்....’’ ‘‘தீப்தி ஹாஸ்பிடல்ல பி.ஆர்.ஓ. ஆகிட்டாளாம்...’’ ‘‘குணாளன் ஆளு இவனுக்கு டாட்டா காட்டிட்டாடா...’’
நிறைய இருந்தது பேசிக் கொண்டே இருக்க. நடந்த பாதையிலேயே நடந்து வந்து அதே கஸ்ஸியா மரத்தை அடைந்தோம். இருள் படியத் தொடங்கி இருந்ததால், இலை இல்லாத மரம் மஞ்சள் பூக்களோடு தங்கச் செடிபோல தகதகத்தது.டீயும், சிகரெட்டும் சொல்லி விட்டு, பணத்தைத் தந்துவிட்டு அமலேஸ் அருகில் வந்து அமர்ந்தான்.‘‘நீயேன்டா கொடுத்தே..! நாங்க பார்த்துக்க மாட்டோமா..!’’ என்று நான் கேட்டபோது அமலேசின் முகம் குன்றிப் போனது.
‘‘ஏன் நீங்க சம்பாதிக்கிறீங்க... நான் சும்மா இருக்கேன்னு சொல்றீங்களா..? பிய்ச்சுப் போடுவேன். எப்பவும் நான்தானேடா செலவு செய்வேன். இப்பவும் நான் அதே அமலேஸ்தான்டா. என்ன, வீட்டில கொஞ்சம் அலட்சியம் பண்றாங்கதான். அதுவும் தம்பி போன வாரத்துல இருந்து வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டான்ல... விடு விடு பார்த்துக்கலாம்...’’ என்றான் தாடையை வருடிக்கொண்டே.
அந்த இருட்டிலும் அவன் கண்ணோரம் பளபளப்பது துல்லியமாகத் தெரிந்தது.வருமானத்தை விட, மரியாதைதான் முக்கியம் என்று இந்த நிமிசம் புரிய ஒரே சிகரெட்டை நால்வரும் இழுக்க இழுக்க இனபமானோம்.‘‘இப்படியெல்லாம் ஃப்ரெண்ட்ஷிப் இனியெல்லாம் கிடைக்காதுடா. இப்போ பசங்க எல்லாம் நம்மளை மாதிரி இல்லே..!’’ அங்கலாய்த்துக் கொண்டோம். பேச நிறைய இருந்தது. பேசி முடிக்கவோ, பேச்சை முடிக்கவோ யாருக்கும் இஷ்டமில்லை.
லேசாய் எம்பி கொன்றை மலர்களை கை நிறைய உருவி, எங்கள் மூவரின் மீது அட்சதை போல் தூவி ஆசீர்வதித்தான் அமலேஸ்.‘‘ஏமீரா இது...’’‘‘நல்லா இருங்கடா..! சீக்கிரம் குடும்பஸ்தன் ஆகி, குழந்தை குட்டிகளைப் பெத்துகிட்டு கிழவனாகிப் போயிடுங்கடா...’’
வாய்விட்டுச் சிரித்தோம்.‘‘அடுத்து எங்கேடா சந்திக்கிறது..?’’ என்றான் டேவிட்.‘‘நம்ம அருள் வீட்டு தெருவிலே இருக்கே தெஸ்பீசியா பாபுல்னியா. அங்கேதான் அடுத்த சந்திப்பு. வினு அடுத்து வரும் போது..?’’ சொன்னபோது எல்லோரும் ஆத்மார்த்தமாக சிரித்துக் கொண்டோம்.
நட்பென்ற நல்ல மரத்துக்கு என்ன அறிவியல் பெயர் இருக்கிறதோ தெரியவில்லை.மூவரும் ஒரே வண்டியில் ஏறிக்கொண்டார்கள். எனக்கு வழியில் வேலை இருந்தது. ஏனோ பிரிவுபசாரமாக மனசை அழுத்தியது.‘‘அமலா, சீக்கிரம் வேலையில உட்காருடா...’’ என்றேன் ஆத்மார்த்தமாக. வழக்கம்போல ஒரு சிரிப்பு.
‘‘அடுத்தமுறை வர்ற வரைக்கும் உன்னையே சிந்திக்கிற மாதிரி ஏதாவது ஒண்ணு சொல்லேன்...’’ வண்டி நகர நகர, பின்னாலேயே நடந்தபடி கேட்டேன்.‘‘கற்புன்னு ஒண்ணு இருக்காடா வினு..? அப்படின்னா அது யாருக்கானது..?’’‘‘ஆண் பெண் இருவருக்கும் ஆனது...’’ என்றேன் அடர்வான குரலோடு.
ஏதோ இலக்கிய ரீதியில் என்னைச் சிந்தித்து, சுழற்றி அடிக்கப் போகிறான் என்று நான் காத்திருக்க -‘‘அப்போ மூன்றாம் பாலினத்துக்கு கற்பு இருக்கா, இல்லையா..? யோசிச்சு வை. அடுத்த முறை சந்திக்கும்போது சொல்லு...’’ போய் விட்டான்.இடுப்பில் கைவைத்து அப்படியே நின்றுவிட்டேன். என் தலையில் கஸ்ஸியா ஃபிஸுலா மலர்களைத் தூவி அர்ச்சித்தது.
- எஸ்.பர்வின் பானு
|