தோற்றவர் ஜெயித்தார்!
தெலுங்குப் பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் கைகால சத்யநாராயணா. ஆனால், இவர் தெலுங்குப் பட நடிகர் மட்டுமல்ல. அதனால்தான் இவரது மறைவுக்கு ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமும் அஞ்சலி செலுத்தி யிருக்கிறது.தன் குடும்பத்தின் முதல் பட்டதாரியான கைகால சத்யநாராயணா, முதலில் நடிகராகவே விரும்பவில்லை. இவரது மாமாதான் ‘முயற்சி செய்’ என ஊக்கப்படுத்தினார். காரணம், கல்லூரி நாட்களில் மேடை நாடகங்களில் இவர் முத்திரை பதித்ததுதான்.
 தொடக்கத்தில் இவர் சந்தித்தது அவமானம் மட்டுமே. கே.வி.ரெட்டி இயக்கத்தில் நடிக்க தேர்வானார். ஆனால், கடைசியில் அந்த வாய்ப்பு இன்னொருவருக்குச் சென்றது. என்றாலும் விடாமல் முயற்சி செய்தார். ‘சிப்பாயி கூத்துரு’ தெலுங்குப் படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஆனால், படம் பப்படம். ராசியில்லாத நடிகர் என்பதால் துணை நடிகராக நடிக்கக் கூட வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.
தற்கொலை செய்து கொள்ள இவர் முடிவெடுத்தபோதுதான் இயக்குநர் விட்டலாச்சார்யாவை சந்தித்தார். ‘வில்லனாக நடி’ என்ற அவரது அறிவுரையை ஏற்றார். என்.டி.ஆர் இரு வேடங்களில் நடித்த ‘அகி பிடுகு’வில் பட்டையைக் கிளப்பினார். இதன்பிறகு கைகால சந்தித்தது எல்லாம் ஏற்றம்தான். கணீர் குரல், மாயாஜாலம், சரித்திரம், சமூகம்... என எல்லா ஜானர்களுக்கும் பொருந்தும் நடிப்பு... இவை எல்லாம் இவரது அடையாளங்களாகின.உண்மையிலேயே இவரது இழப்பு, பேரிழப்பு தான்.
காம்ஸ் பாப்பா
|