அரண்மனை குடும்பம் -51



பங்களாவுக்குள் நுழைந்துவிட்டிருந்த ரத்தி, ஹாலில் கிடந்த சோபாவில் அமர்ந்தவளாக அழத் தொடங்கியிருந்தாள். அருகிலேயே அமர்ந்த தியா தன் தாயை மிகப்பரிதாபமாக பார்த்தாள்.“அம்மா... என்ன நடந்துச்சு! எனக்கு எல்லாமே ஆச்சரியமாயிருக்கு... அய்யாவுக்கும் உங்களுக்கும் மனஸ்தாபமா?” என்று பங்கஜம் சோபாவுக்குக் கீழே தரையில் கார்பெட் மேல் அமர்ந்தபடி கேட்கவும் ரத்தியும் நடந்தவைகளை அவளிடம் சொல்லத் தொடங்கினாள்.

“என்னன்ன தெரியல பங்கஜம்... திடீர்னு நான் அவருக்கு பிடிக்காம போயிட்டேன். அது மட்டுமில்ல... அவர் மாமா பொண்ணான மஞ்சு மேலயும் அவருக்கு ஒரு மோகம் உண்டாயிடுச்சு. இப்ப அவர் அவளை கல்யாணம் பண்ணிக்கற ஒரு முடிவுல இருக்காரு...” “அட கொடுமையே... அது எப்படிம்மா இப்படி ஒரு மாற்றம்..?”

“அதான் எனக்கும் தெரியல...”
“வீட்ல பெரியவங்க என்ன சொல்றாங்க?”
“எல்லாரும் அவர் பக்கம்தான் நிக்கறாங்க. நான்தான் வெளிய இருந்து வந்தவளாச்சே? என் கிட்ட வேண்டா வெறுப்பாதானே இது நாள் வரை பேசிகிட்டிருந்தாங்க...”
“அது எப்படிம்மா... இதோ மொசக் குட்டி கணக்கா அழகா ஒரு பொண்ணு வேற... உங்கள எப்படிம்மா அவங்க மறுக்க முடியும்?”“ஏதோ நடந்துருக்கு பங்கஜம்... இங்க நாம சந்திச்ச வாழைப்பழ சாமியாரும் கவனமா இரு... விபரீதம் நடக்க நிறைய வாய்ப்பு இருக்குன்னாரு... அது இப்ப நடக்க தொடங்கியிருக்கு...”
“சரி... என்னம்மா பண்ணப் போறீங்க?”

“எனக்கு இப்போதைக்கு உதவி செய்ய அந்த சாமியார்தான் இருக்கார். அவருக்காகதான் நான் இப்ப ஏற்காட்டுக்கே வந்துருக்கேன்...”
“நாளைக்கு காலைல அப்ப முதல்ல போய் பாத்துடுவோம்மா...”
“ஆமாம்... அவர் கைலதான் இருக்கு இப்ப என் வாழ்க்கை...”
“பாப்பா உடம்பு நல்லாதானே இருக்கு... திரும்ப எந்த பிரச்னையும் இல்லையே?”

“தியாவுக்கு உடம்புல இப்ப ஒரு பிரச்னையுமில்ல... ஆனா, பாவம்... பாரு... நடக்கறதை எல்லாம் பாத்து குழந்தை குழம்பிப் போயிட்டா. தன் அப்பாவா இப்படி நடந்துக்கறார்னு அதிர்ச்சியில் இருக்கா...”ரத்தி பேச்சோடு பேச்சாக தியாவை இழுத்து கட்டிக் கொண்டாள்.

பங்கஜம் கண்களும் கலங்கி விட்டன. அமைதியாக எல்லாவற்றையும் கேட்டபடி இருந்த நாச்சிமுத்து “அந்த மாமாகாரர் நல்ல மனுஷன் இல்லம்மா. எங்களை இங்க இருந்து கீழ துரத்தும் போதே நினைச்சேன். அவர்தான் ஏதோ திருகு வேலை பாத்துருக்கணும்...” என்றான். “திருகு வேலைன்னா?” பங்கஜம் பின் பாய்னட் ஆக கேட்டாள்.“இப்படி ஒரு ஆள் மின்னல் வேகத்துல மனசு மாறி தப்பா நடந்துக்கறாருன்னா அதுக்குப் பின்னால ஏதோ மருந்து மாயம் இருக்கணும் புள்ள...”“மருந்து மாயம்னா... புரியற மாதிரி சொல்லுய்யா...”“ஏன் நீ கேள்விப் பட்டதில்லையா... இது ஏதோ செய்வினையாதான் இருக்கணும்...”
“ஐயோ செய்வினையா... அப்படின்னா?”

“யாருக்கு தெரியும்... இங்க கூட ஒரு எஸ்டேட்ல அதோட முதலாளிக்கு வேலைக்காரி ஒருத்தி மருந்து மாயம் செஞ்சு அந்த எஸ்டேட்டையே தன் பேருக்கு எழுதி வாங்கிட்டதா சொல்வாங்க...”
“அது  யாருய்யா எனக்கு தெரியாத அப்படி ஒருத்தி?”
“செம்மநத்தம் ஆரஞ்சு எஸ்டேட் பாக்கியலட்சுமி புள்ள...”
“பாக்கியம் அம்மாவா... அவுகளா... நெசமாவா..?”
“நான் என்ன நேர்லயா பாத்தேன்... எல்லாம் சொல்லக்
கேள்விதான்...”

“அந்த மருந்து மாயம்லாம் யார் செய்றா?”
“இங்க சேர்வராயன் மலைலயே ஆள் இருக்கறதா கேள்வி...”
“அட கொடுமையே... இப்படியும் கூட மனுசங்களா?”
“பொறவு... சாமியே அசுரங்களோட சண்டை போட்டுருக்காருன்னும்போது நாமெல்லாம் ஒண்ணுமேயில்ல...”
நாச்சிமுத்து சொல்லச் சொல்ல ரத்திக்கு குளிரை மீறி வியர்க்க ஆரம்பித்தது. கூடவே தீர்க்கமாய் ஒரு எண்ணம்.

“நாச்சிமுத்து... நீ சொன்ன மாதிரிதான் எதாவது இருக்கணும். என் கணேஷ்ஜீ ரொம்ப நல்லவர். அவரை மாதிரி ஒரு நேர்மையானவரை பார்க்கவே முடியாது. இன்னும் சொல்லப் போனா அவருக்கு மஞ்சுவை கொஞ்சம் கூட பிடிக்காது. ஏன்னா மஞ்சு ஒரு ஹிஸ்டீரியா பேஷண்ட். பிடிவாதம், திமிர், துரோகம்னு கெட்ட குணங்கள் அவ்வளவும் உடையவ! சுய நலத்தோட உச்சம்.

நிச்சயமா அவளை என் கணேஷ்ஜீ விரும்ப சான்ஸே இல்லை...”

உறுதியான குரலில் சொன்ன ரத்தி, “பங்கஜம்... இப்ப போனா சாமியாரை பார்க்க முடியுமா?” என்று கேட்டாள் அதே வேகத்தில்.“இப்பங்களா... வேண்டாம்மா... பொழுது விடியட்டும். கொஞ்சம் பொறுத்துக்குங்க...

இந்த ராத்திரி நேரம் கடும் குளிர் வேற. போய் சாமிய பாக்க முடியாட்டி சிக்கலாயிடும்...”பங்கஜம் ரத்தியை சமாதானப்படுத்த, ரத்திக்கும் அது புரிந்தது. எப்பொழுது பொழுது விடியும் என்கிற கேள்வியோடு படுக்கை அறை நோக்கி நடந்தாள். பங்கஜமும் அவர்களுக்கான டின்னர் தயாரிப்புக்காக சமையல் கட்டுப் பக்கம் சென்றாள்.

பங்களா முகப்புக்கு கணேசன் வந்தபோது மணி பத்தை கடந்துவிட்டிருந்தது. மஞ்சு செகண்ட் ஷோ செல்வதற்கான ஆயத்தங்களோடு காத்துக்கொண்டிருந்தாள். கணேசனும் காரை விட்டு இறங்காமல் போனில் அவளை அழைத்தான்.

“மஞ்சு... வெளிய வா. நான் வந்துட்டேன்...”“இதோ வந்துகிட்டே இருக்கேன்...” என்ற மஞ்சுவை சுந்தர வல்லி ஒரு மாதிரி பார்த்தாள்.“என்னம்மா... ஏன் அப்படி பாக்கறே?”“இல்ல... ராத்திரி ஷோ முடிஞ்சு வருவேதானே?”

“இது என்ன கேள்வி... வந்து தானே தீரணும்..?”“அதுக்கில்லடி... அப்படி வரும்போது கணேசன் ரூமுக்கு போய்டு. நான் கதவைத் திறக்க மாட்டேன். கணேசன் கேட்டா நான் மாத்திரை போட்டுகிட்டதால எழுந்திருக்க முடியாதுன்னு எதையாவது சொல்லி அவன் ரூமுக்கே போயிடு...”“சரி சரி... நான் பாத்துக்கறேன்...”

“விட்றாதடி... முதல் ராத்திரிதான் எல்லாம்கறது எங்க காலம்... உனக்கு இன்னிக்குதான் அது. நான் சொல்றது புரியும்னு நினைக்கறேன்...”
சுந்தரவல்லி கொஞ்சம் வெட்கத்தை விட்டே பேசினாள்.“நீ எனக்கு மேல வேகமா இருக்கம்மா...” என்று வேகமாக வாசலில் போர்ட்டிகோ நோக்கி நடந்தாள் மஞ்சு.
அவள் விலகிய சில நிமிடங்களில் எல்லாம் குலசேகர ராஜா வந்து விட்டார்.

“என்னங்க போன காரியம் என்னாச்சு..?” என்று தங்கள் அறைக் கதவை தாழிட்டுக் கொண்டே கேட்டாள் சுந்தரவல்லி.
“நான் ஒரு கணக்கு போட்டு போனேன்... ஆனா, எதுவுமே நடக்கல சுந்தரம். அந்த செய்வினைக்காரன் வரவேயில்லை...”
“ஏங்க..?”‘‘தெரியல...”
“போன் பண்றதுக்கென்ன?”
“இத நீ சொல்லணுமா? போன் போகல...”
“அப்ப என்ன பண்ணப் போறீங்க?”

“அவன் பணம் இப்ப என்கிட்டல்ல இருக்கு... அதுக்காக அவன் வருவான்... வந்தே தீருவான்...”
“அந்த ரத்தியும் ஏற்காடு பங்களாவுக்கு போயிட்டா. கணேசன் இப்ப வந்து நம்ம மஞ்சுவ செகண்ட் ஷோ கூட்டிகிட்டு போயிருக்கான்... அவ்வளவு தாங்க... இனி இந்த ஜோடியை பிரிக்க முடியாது. அவளுக்கு ஒரு முடிவு கட்டிட்டா அப்புறம்
நமக்கு எந்த சிக்கலும் கிடையாது...”

‘‘தெரியும்... ஏற்காட்ல இருந்தே எனக்கு தகவல் வந்துடுச்சி...”
“ஆமாங்க... நல்ல சந்தர்ப்பங்க... என்ன பண்ணப் போறீங்க?”
“எதாவது பண்ணித்தானே தீரணும்? ஆனா, பொறுமையா அதே சமயம் பிசிறில்லாம பண்ணணும்...”

குலசேகர ராஜா சொல்லிக் கொண்டே வாட்ரோப்பில் இருந்து இரவு உடையான பைஜாமாவை எடுத்து அணிந்து கொண்டவராய் சோபாவில் வந்து அமர்ந்தார்.
அப்போது அவர் செல்போனில் ரிங்டோன். திரையில் மூர்த்தி பெயர்.

“பாஸ்...”
“என்ன மூர்த்தி..?”
“இப்ப எனக்கு அந்த போதி முத்துகிட்ட இருந்து போன் வந்துச்சு...”
“அப்படியா... ஆமா... ஏன் வரலையாம்?”“அதை ஏன் கேக்கறீங்க... இப்ப மூணு பேரும் அந்த மலைல ஒரு பெரிய பள்ளத்துக்குள்ள விழுந்து கிடக்கறாங்க! மூணு பேருக்குமே பயங்கர ரத்தக் காயங்கள்... எலும்பு முறிவும் கூட!’’
“என்ன சொல்றே நீ... எப்படி ஆச்சு இப்படி?”

“நம்மை பாக்க வர்ற வழியில ஒத்தை காட்டு யானை எதிர்ல வந்துருக்கு. சாயந்தரம் 5 மணிக்கே கிளம்பிட்டாங்களாம். சரியா அந்தி நேரம்... யானை துரத்தத் தொடங்கியிருக்கு. தப்பிச்சு ஓடப்பார்த்துருக்காங்க. அப்ப மழை பேஞ்சு பாதை கொழஞ்சி கிடந்ததுல வழுக்கிவிட்டு மூணு பேருமே ஒரு பெரிய பள்ளத்துல விழுந்துட்டாங்களாம்.

இப்பதான் போதி முத்துவுக்கு மயக்கம் தெளிஞ்சிருக்கு. உடனேயே என்னைத்தான் கூப்ட்டான். சாமி முதல்ல எங்கள வந்து காப்பாத்துங்கன்னு ஒரே கதறல்...”
“என்ன மூர்த்தி சொல்றே. இப்படி கூட நடக்குமா?”

“காட்டுல இதெல்லாம் ரொம்ப சகஜம் பாஸ்...”
“சரி... அந்த மலைல எந்த இடத்துல விழுந்து கிடக்க
றாங்க?”

“அது அவனுக்கே தெரியல. நாமதான் போய் கண்டுபிடிக்கணும்...”
மூர்த்தி சொல்லி நிறுத்த குலசேகர ராஜா முகத்தில் உடனேயே ஒரு பிரகாசம். கொஞ்சம் போல யோசனை.“பாஸ்... என்ன அமைதியாகிட்டீங்க?”

“ஒண்ணுமில்ல. நாம போகாட்டி அவங்களால் அங்க இருந்து வரமுடியாதா?”
“அது தெரியல... நிச்சயம் யாராவது உதவி செய்யாம அவங்க அங்க இருந்து வெளிய வரமுடியாது. அதான் இப்ப அவங்க நிலை...”
“இந்த நிலைல அவன் ஏன் உனக்கு போன் பண்ணான்? அந்த போதிமுத்துவுக்கு வேற யாருமில்லையா?”

“நாம காத்துக் கிட்டிருக்கறதா நினைச்சு போன் பண்ணியிருப்பான். அப்புறம் செல்போன்ல சார்ஜும் கம்மியா இருக்கு... சீக்கிரம் வாங்கய்யான்னான்...”
“அருமை... அருமை...”

“என்ன பாஸ் சொல்றீங்க?”
“துப்பாக்கிக்கே வேலை இல்லாம பண்ணப் போறாங்க மூர்த்தி... புரியல..?”
“ஓ... நீங்க அப்படி வர்ரீங்களா..?”

“இது அல்வா மாதிரி சந்தர்ப்பம். எப்படியாவது காலைல அந்த பள்ளத்தை நெருங்கி பெரிய கல்லா தூக்கிப் போட்டு அவங்க கதையை முடிப்போம். இதை விட ஒரு நல்ல சான்ஸ் நமக்கு கிடைக்கவே கிடைக்காது...”

“ஆமாம் பாஸ். நீங்க இப்ப சொல்லும் போதுதான் எனக்கும் புரியுது...”
“நீ இப்பவே அந்த போதிமுத்துகிட்ட அவங்க கிடக்கற பள்ளம் அந்த மலைல எந்த இடத்துல இருக்கு... எப்படி வரணும்னுல்லாம் கேட்டுக்கோ. அப்படியே காலைலல்லாம் வந்துடுவோம், தைரியமா இருங்கன்னும் சொல்லி வை...”“ஓகே பாஸ்...”குலசேகர ராஜா போனை கத்தரித்து விட்டு “சுந்தரம்... காலம் இப்ப எனக்கு எல்லா வகைலயும் கை கொடுக்க தொடங்கிடிச்சு...” என்றார் மிக உற்சாகமாய். அப்படியே அவர்கள் பள்ளத்தில் கிடப்பதைக் கூறி முடிக்கவும் சுந்தரவல்லியும் பிரகாசமானாள்.

“ஏங்க... அவங்கள கொன்னுட்டா இந்த ரத்திக்கு வழி?”“முதல்ல இவனுங்கள முடிக்கறேன். இவங்கதான் ரொம்ப ஆபத்தானவங்க. அப்புறம் அவ விஷயத்துக்கு வருவோம். ஏற்காட்ல தனியாதானே இருக்கா? கணேசன் கூப்ட்டான்னு போன் பண்ணி எஸ்டேட் தோட்டத்துக்கு அந்த குட்டிப் பொண்ணோட வரச் சொல்லி அங்க இருக்கற எற கிணத்துல பிடிச்சு தள்ளிட்டா முடிஞ்சிச்சு கதை.புருஷன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கப்போறது பிடிக்காம தற்கொலை செய்துகிட்டதாதான் எல்லாரும் நினைப்பாங்க...”

“எல்லாம் சரியா நடந்துடும்தானே?”
“நமக்கு நேரம் நல்லா இருக்கு சுந்தரம். அதான் அந்த மூணு பேரும் கூட யானை துரத்தி பள்ளத்துல விழுந்துட்டாங்க. ஆள் நடமாட்டமில்லாத வனாந்தரப் பகுதி அது. என்ன நடந்தாலும் கேட்க நாதி இல்லை. இப்ப நானும் மூர்த்தியும் போகாட்டி கூட அவங்க பொழைக்கறது கஷ்டம். இருந்தாலும் போறேன்னா வேற யாரையும் அந்த போதிமுத்து கூப்டுடக் கூடாதுன்னுதான்... அப்படியே கண்ணார சமாதி கட்டிட்டும் வந்துடுவேன்...அடுத்த குறியே அந்த ரத்தியும் குட்டியும்தான்!” குலசேகர ராஜா குரலில் குரூரம் கூத்தாட்டமாய் வெளிப்பட்டது.

(தொடரும்)

அசோகமித்திரன், மண்ணாங்கட்டியார் கேட்ட பதினாறு பேறுகளைத் தன் ஞாபகத்திற்குக் கொண்டு வரப்பார்த்தார். அதைக் கண்ட மண்ணாங்கட்டியார் “ரொம்ப சிரமப்
படாதே... அபிராமி பட்டன் இதைத் தன் அந்தாதில ஒரு பாட்டாவே பாடி வெச்சிட்டான். எதையும் பாட்டா எழுதி வெச்சிட்டா அப்புறம் அது மறக்கவே மறக்காது...” என்றவர் அந்த பாட்டையும் பாடிக்காட்டத் தொடங்கினார்.

“கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
தூயநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரோடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!”

என்று அந்தப் பாடலைப் பாடிமுடிக்க மண்ணாங்கட்டியார், “என்ன... பாட்டுக்குள்ள புதைஞ்சிருக்கற அந்த பதினாறு இப்ப தெரியுதா?” என்று கேட்டார்.
“தெரியுது குரு... கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிச்சல், பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நல்லபிள்ளைகள், நம்பிக்கை, நோயில்லாத உடல், முயற்சி, வெற்றின்னு நீங்க பாடும்போதே அதை நான் பட்டியல் போட்டுட்டேன்...” என்றார் அசோகமித்திரன்.

“இப்படி ஒரு பட்டியல விமானமும், மின்சாரமும் கண்டு பிடிச்ச வெள்ளக்காரன் கூட உணர்ந்து சொல்லல... ஆனா, நம்ம மூதாதையர்கள் சொல்லியிருக்காங்க. மனுஷ வாழ்க்கை பற்றின ஒரு ஆழமான பார்வையும் சிந்தனையும் இல்லாம இப்படி வரிசைப்படுத்த முடியுமா..? யோசி...”“உண்மைதான்... இப்படி நீங்க சொல்லும் போது தெளிவாவே புரியுது. ஆனாலும் இதெல்லாம் மூடத்தனங்கற மாதிரியும் சில விஷயங்கள் இதே மூதாதையர்கள் கிட்ட இருக்கே?”

“அதுல ஒண்ண சொல்லேன்...”
“இறந்தவர்களுக்கு எள்ளும் தண்ணியும் விட்றது... ஒரு தாம்பாளத்துல ஒரு சொம்பு தண்ணில விட்ற கைப்பிடி எள் அவங்களுக்கு உணவா மாறிப்போகுதுன்னு சொல்றத எப்படி ஏத்துக்கறது?”
“தபாலாபீஸ்ல நீ ஒருத்தருக்கு மணியார்டர் பண்றே... இங்க கட்ற அந்த பணமேவா அவருக்கு போகுது... அங்க இருக்கற போஸ்ட் ஆபீஸ்ல இருக்கற பணத்தைக் கொடுத்து நேர் செய்யறாங்க இல்லையா?”

“அதை செய்ய தபாலாபீஸ்ல ஊழியர்கள் இருக்காங்க. இங்க நான் எள்ளையும் தண்ணியையும் கீழதானே கொட்றேன்...”“வாஸ்தவம்தான்... உன்னோட இந்த செயல்பாட்டுக்கு பின்னால தபாலாபீஸ்ல ஊழியர்கள் இருக்கற மாதிரி, இங்க தேவசக்திகள் இருக்கு. அந்த சக்திக்கு உன்னோட பக்தியும் பாவனையும் மட்டும்தான் கணக்கு. அந்த தேவசக்தி உன் எள்ளையும், தண்ணீரையும் உன் பித்ருக்களுக்கான உணவா, பொருளா, அருளா, மருந்தா, மாத்திரையா கொண்டு போய் சேர்க்கறாங்க. எள்ளோட கலந்த தண்ணீர் ஆவியாகி, நீ யாரை நினைச்சும் உத்தேசிச்சும் அதை விட்டையோ அவர்களை அடையுது...”

“ஆனா, எனக்கு அது தெரியலியே?”“இது புலன்களுக்கு புலனாகற விஷயமில்ல... உணர்வால உணர வேண்டிய விஷயம்...”“எப்படி..?”அசோகமித்திரனின் கேள்விக்கு வார்த்தைகளில் பதில் கூறாமல், தன் யோகசக்தி கொண்டு வேறு விதமாகப் பதிலளிக்கத் தயாரானார் மண்ணாங்கட்டியார்!

இந்திரா செளந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி