ரீவைண்ட் 2022-சிறந்த நடிகைக்கான விருது Goes to...
நவீனமயமாக்கல், பாக்ஸ் ஆபீஸ், கோடிகளில் வசூல், வைரல் மோட்... என இந்த வருடம் நினைத்துப் பார்க்க முடியாத மாஸ் காட்டியிருக்கிறது சினிமாவின் வளர்ச்சி.
எனில் நாங்கள் மட்டும் சும்மாவா என்ன... என நடிப்பிலும், கெட்டப்பிலும் சிறந்து விளங்கி, அனுபவசாலி முதல் அறிமுக நடிகைகள் வரை இவ்வருடம் நாயகிகள் பலரும் நடிப்புக்காகவே பாராட்டுகளைப் பெற்று நடிகர்களுக்கு நிகராக... ஏன், அவர்களுக்கே சவால் விடும் அளவுக்கு அபார நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பற்றிய குறிப்பு...
 ஷிவானி ராஜசேகர்
‘அன்பறிவு’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுகளையும் பெற்றார். இவரின் குறிஞ்சி கேரக்டரின் எதார்த்தமும், ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்புமாக விமர்சனங்களிலும் பேசப்பட்டார். ‘இதுதாண்டா போலீஸ்’ புகழ் டாக்டர் ராஜசேகர் மற்றும் நடிகை ஜீவிதாவின் செல்ல மகளான இவர், இப்போது அப்பாவின் சொந்தப் படத்திலேயே பிஸியாக இருக்கிறார்.
 கீர்த்தி சுரேஷ்
‘மகாநதி’ கேரக்டருக்காக ஏற்கனவே உடல் எடையைக் குறைத்து, கூட்டி நடிப்பில் அசத்தி தேசிய விருதைப் பெற்ற கீர்த்தி சுரேஷ், இந்த வருடமும் ‘சாணிக் காயிதம்’ வழியே முத்திரை பதித்திருக்கிறார். எவ்வித மேக்கப்பும், ஆடம்பரமான உடைகளும் இல்லாமல் நடிப்பை மட்டுமே அணிகலனாகக் கொண்ட அவரின் ‘பொன்னி’ கேரக்டர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
 மீதா ரகுநாத்
‘முதல் நீ முடிவும் நீ’ படம் மூலம் மூன்று கெட்டப்களில் அசத்தியவர். 21 வயது சென்னைப் பெண்ணான மீதாவின் ரேகா கேரக்டர் கிட்டத்தட்ட இளைஞர்கள் பலரையும் ‘இப்படி ஆழமாகக் காதலிக்கும் காதலியா?’ என ஏங்க வைத்தது. ஸ்கூல் கேர்ள், காலேஜ் கேர்ள் என எதற்கும் பொருந்திப் போகும் அப்பாவி லுக்கில் மீதா மிகையில்லா நடிப்பில் மிளிர்ந்தவர்.
 மிருணாள் தாக்கூர்
‘சீதா ராமம்’ படத்தின் வழியே பல இளைஞர்களுக்கும் கனவுக் கன்னியாகவே ஆனவர். இப்படம் மூலம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் என்ட்ரியாகி இப்போது இணையத்தில் எங்கும் எதிலும் டிரெண்டிங்கில் மின்னுகிறார்.கை நிறைய சுமார் அரை டஜன் படங்கள் வைத்திருக்கும் மிருணாளின், சீதா மகாலட்சுமி (எ) இளவரசி நூர்ஜஹான் கேரக்டருக்கு ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் கூட வாவ் சொன்னார்கள். இதனாலேயே தமிழிலும் சில பெரிய புராஜெக்டுகளில் கையெழுத்திட்டுள்ளார் மிருணாள்.
 சிம்ரன்
‘ராக்கெட்ரி: த நம்பி எஃபெக்ட்’ படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடித்த மாதவனின் மனைவி மீனா நாராயணன் கேரக்டரில் அற்புதமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் சிம்ரன். வயதான கெட்டப்பில் உடல் நிலை சரியில்லாமல், மனநிலை சற்றே பிரச்னையான தோற்றத்தில் பலரையும் கண் கலங்க வைத்தார்.
 சமந்தா
‘வந்தா... நின்னா... பார்த்தா... ரிப்பீட்டு...’ என இணைய உலகை எழுந்து நின்று ஆட வைத்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ சமந்தாவின் கதீஜா கேரக்டரை வருட இறுதி வரைகூட யாரும் விட்டுக்கொடுக்கவில்லை. ஆழமான காதலும், நக்கலான சீண்டலும், ஸ்டைலிஷான தோரணையுமாக ‘கதீஜா’ சமந்தா இந்த வருடம் டிஜிட்டல் உலகையும் கலக்கினார்.
 இவானா
‘காமப் பிசாசாடா நீ..?’ இந்த வருடத்தின் மோஸ்ட் வாண்டட் டயலாக் இதுவாகத்தான் இருக்கும். ‘லவ் டுடே’ படத்தின் வழியாக இக்கால இளம் பெண்களின் பிரதிநிதியாக, அவர்களின் காதல், நட்பு, குடும்பம், ரகசியங்கள், விருப்பு, வெறுப்பு, பிரச்னைகள்... என அத்தனையையும் அற்புதமாக வெளிப்படுத்தியவர் இவானா. இவரது நிகிதா கேரக்டர் வைரலாக மாறி இணையத்தில் மட்டுமல்ல, சமூகத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 சாய் பல்லவி
அப்பாவுக்கான போராட்டம், நீதிமன்றம், வழக்கு, வாய்தா, அடுத்து என்ன நடக்குமோ என்னும் தவிப்பு... என ‘கார்கி’ பாத்திரம் கடந்து போக முடியாத பாத்திரமாக மாறியிருக்கிறது. சாய் பல்லவி ஏற்கனவே நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும் இந்தப் படம் அவரது கரியரின் கிரீடத்தின் மேல் வைத்த வைரமாக ஜொலிக்கும்.
 ஆண்ட்ரியா
‘அனல் மேலே பனித்துளி’ படத்தின் மதி கேரக்டரை மறக்கவே முடியாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் புரியும் அத்தனை பேரையும் கேள்வி கேட்ட பாத்திரம் ஆண்ட்ரியாவின் மதி கேரக்டர். ‘என் உடம்பு எனக்குதானே ஆயுதமா இருக்க முடியும்... எப்படி அது அடுத்தவங்களுக்கு ஆயுதமா இருக்க முடியும்?’; ‘மானம்ங்கறது நான் வாழ்ற வாழ்க்கையிலே இருக்கு... நான் போட்டிருக்கற உடைல இல்ல...’ என்னும் இவரின் நீதிமன்ற வசனங்கள் அப்ளாஸை அள்ளியிருக்கிறது.
நித்யா மேனன்
‘தாய்க்கிழவி...’ போல் நமக்கு ஒரு பெஸ்ட்டி இல்லையே என தமிழக இளைஞர்களை ஏங்க வைத்தவர் ‘திருச்சிற்றம்பலம்’ நித்யா மேனன். அக்கறை, அசால்ட், அலட்டிக் கொள்ளாத நடிப்பு... என நித்யா மேனனின் ‘சோபனா’ பாத்திரம் வைரல் ஹிட். ‘உன்ன மாதிரி ஒருத்தன் கிடைப்பானாடா...’ என தனுஷைப் பாராட்டுவதாகட்டும், ‘ஏன்டா இப்படி ஹோட்டல் சர்வர் மாதிரி ட்ரெஸ் போட்டிருக்கே...’ என தனுஷை கிண்டலடிப்பதாகட்டும்... சோபனா சொக்கத் தங்கம் என டிக் அடித்தனர் ஆடியன்ஸ்.
அதிதி ஷங்கர்
‘கஞ்சாப் பூ கண்ணால...’ என ‘விருமன்’ படத்தில் கார்த்தியை மட்டுமல்ல, தமிழ் நாட்டையே ஆட வைத்திருக்கும் அதிதி ஷங்கரின் தேனு கேரக்டர்தான் இன்று பட்டி தொட்டியெங்கும் பேச்சு. மேக்கப் இல்லாத முகம், பாவாடை தாவணி, எண்ணெயை வழித்து வாரிய ஒற்றை ஜடை... என முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகை பட்டியலில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறார் அதிதி ஷங்கர்.
பார்வதி அருண்
‘காரி’ படத்தில் சசிகுமாருக்கு சவாலாக நின்ற பாத்திரம் மீனா பாத்திரம்தான். தமிழில் இதுதான் பார்வதி அருணுக்கு முதல் படம். ஆனால், கொஞ்சமும் அது தெரியாத அளவுக்கு கிராமத்துப் பெண்ணாக மாறி பிள்ளை போல் வளர்க்கும் காளைக்கும், மனம் விரும்பிய காதலனுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு தவித்த ‘மீனா’ கேரக்டர் கிராமத்து மக்களிடமும் கூட கிளிக் ஆகியுள்ளது.
துஷாரா விஜயன்
காதலிலும், காமத்திலும் கூட வர்க்க வாதம், பகுத்தறிவு, பெண்ணியம், விருப்பு, வெறுப்பு, என் பெண்மை என் உரிமை நீ யார் கேட்க... என வித்தியாசமாக வகுப்பெடுத்த ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் ரெனேவை நிச்சயம் தமிழ் சினிமா மறக்காது. ஏற்கனவே ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மாளாக பாராட்டுகளைத் தட்டியவர் இந்த வருடம் ரெனேவாக முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் பலரையும் வியக்க வைத்திருக்கிறார்.
சித்தி இத்னானி
வட இந்தியாவில் வாழும் தமிழ்ப் பெண் ‘பாவை’யாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சித்தி இத்னானி, முதல் படத்திலேயே ‘மறக்குமா நெஞ்சு...’ என சிம்புவை மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் பாட வைத்த பைங்கிளி. இந்தக் கேரக்டருக்கு இந்த மீட்டர்தான் நடிப்பு என கோடிட்டது போல் நடித்தவர். இந்த வருடத்தின் சிறந்த அறிமுக நடிகைகள் பட்டியலில் நிச்சயம் இணைவார்.
ஐஸ்வர்யா லட்சுமி
இவ்வருடம் ஐஸ்வர்யா லட்சுமிதான் கனவுக் கன்னி என்னும் கட்டத்துக்குள் பச்சக்கென பொருந்துவார் போல! ‘பொன்னியின் செல்வன் - 1’ படத்தில் இவரது சமுத்திர குமாரி - பூங்குழலி - கேரக்டர் பலரது தூக்கத்தைக் கெடுத்தது எனில், ‘அம்மு’ படத்தின் அம்மு கேரக்டர் அடக்கி ஆளும் கணவர்களை பளார் என அறைந்தது. அந்தத் தாக்கம் இறங்குவதற்குள் குஸ்தி, பாடி பில்டிங், பைக் ரைட், ஆக்ஷன் என ‘கட்டா குஸ்தி’ படத்தின் ‘கீர்த்தி’ கேரக்டர் ஓ மை காட் என கண்களை விரிய வைத்தது. மூன்றும் மூன்று விதமான கேரக்டர்... மூன்றிலும் அழுத்தமான முத்திரை... என ஐஸ்வர்யா லட்சுமி இந்த வருடம் பலருக்கும் பிடித்த நடிகை லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார்.
ஷாலினி நியூட்டன்
|