ரீவைண்ட் 2022-நான் வளர்கிறேனே மம்மி!



தொழில்நுட்பத்துக்காகவே தொழில்நுட்பம் என்று கருதப்பட்ட காலம் இருந்தது. அதனால் பயனடைய வேண்டும் என்றால் கூட அது குறித்த ஒரு குறைந்தபட்ச புரிதல் அவசியம் என்ற நிலை இருந்தது.ஆனால், மெல்ல தொழில்நுட்பம் முதிர்ச்சி அடைய அது பலரும் பயன்படுத்தும் வகையில் எளிதாக தன்னை (usability) தகவமைத்துக்கொண்டது. ஒரு காலத்தில் கருத்தியலும் அரசியல் செயல்பாடுகளும் ஒரு சமூகத்தின் செல்திசையை தீர்மானிப்பவையாக இருந்தன. இன்று அந்த வரிசையில் தொழில்நுட்பமும் சேர்ந்து கொண்டது.அந்த வகையில் இந்த ஆண்டு நிகழ்ந்திருக்கும் சில தொழில்நுட்ப பாய்ச்சல்களை சுட்டுவது முக்கியம் என்று நினைக்கிறேன்.

மரபணுத்தொகை வரிசைப்படுத்தல்

கோவிட் தொற்று காலத்தில் நிகழ்ந்த தொழில்நுட்ப பாய்ச்சல்களில் ஒன்று மரபணுத்தொகை வரிசைப்படுத்தும் களத்தில் (genomic sequencing) நிகழ்ந்தது. கோவிட் சோதனை சமயத்தில் நம் மூக்கிலும் தொண்டையிலும் சுரண்டி எடுக்கப்பட்ட சாம்பிள்களில் நூற்றில் இரண்டு மரபுணுத்தொகை வரிசைப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்பட்டன. அவை துரித காலத்தில் உலகம் முழுதும் உள்ள பல்வேறு சோதனைச்சாலைகளில் முழுதும் வரிசைப்படுத்தப்பட்டன.

அப்படித்தான் ஆல்ஃபா, பீட்டா, டெல்ட்டா போன்ற கோவிட் மாறிகள் (variants) கண்டுபிடிக்கப்பட்டன. ஓமிக்ரான் முதலில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சோதனைச்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டு உலகெங்கிலும் உள்ள பிற ஆராய்ச்சியாளர்களுடன் உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது. சீக்வன்சிங் தொழில்நுட்பத்தில் இந்தப் பாய்ச்சல் நிகழ்ந்திராவிட்டால் உலகின் பல்வேறு பகுதிகளில் உருவாகிய கோவிட் மாறிகளை நம்மால் அடையாளம் கண்டு உடனுக்குடன் தடுப்பு நடவடிக்கை எடுத்திருக்க முடியாது.

கோவிட் மரபணுத்தொகை மொத்தமே 30 ஆயிரம் எழுத்துக்களே. ஆனால், மனித மரபணுத்தொகையின் நீளம் 320 கோடி. வரும் காலங்களில் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி மனித மரபணுத்தொகையையும் தொடர்ந்து கண்காணித்து அதில் நிகழும் திரிபுகளை (Mutations) அடையாளப்படுத்த முடியும். பல நோய்களை முன்னரே கண்டுபிடிக்க, புதிய மருந்துகளை உருவாக்க இந்த தொழில்நுட்பம் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும்.

விண்வெளி தொழில்நுட்பம்

வானியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்த ஆண்டு மிக முக்கியமான சாதனைகள் அரங்கேறியுள்ளன. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்டு இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இருப்பதிலேயே மிக அதிக தூரமும் மிகத்துல்லியமாக பார்க்கக்கூடியது மான இந்தத் தொலைநோக்கி பிரபஞ்ச உருவாக்கம் குறித்த மிக விரிவான படங்களை அனுப்ப ஆரம்பித்துள்ளது. இருபது ஆண்டுகால முயற்சியான இது ‘மானுடத்தின் விழிகள்’ என்றே அழைக்கப்படுகிறது.

இன்னுமொரு முக்கிய சாதனை நாஸா நிறுவனத்தின், மனிதர்களை மீண்டும் நிலவிற்குக் கொண்டு செல்லும் முயற்சியான ஆர்டிமிஸ் திட்டம். சில ஆரம்ப கால தடங்கலுக்குப் பிறகு இந்த முதல் கட்ட சோதனை வெற்றிகரமாக விண்ணில் உத்தேசிக்கப்பட்ட பாதையில் செலுத்தப்பட்டு மீண்டும் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது. இதன் அடுத்த கட்ட திட்டமான மனிதர்களை நிலவுக்கு (2025ல்) கொண்டு செல்லும் பயணம் ஏற்கனவே முழுவீச்சில் நடந்து வருகிறது.அது தவிர விண்வெளி போட்டிக்கான களமாகவும் உருவெடுத்துள்ளது. கடற்படை, தரைப்படை, கப்பல்படை என்பதோடு விண்வெளிப்படை என்பதையும் அதிகாரபூர்வமாக அமெரிக்கா போன்ற நாடுகள் ஆரம்பித்துள்ளன.

புரத மடிப்புகள்

பல வருடங்களுக்கு முன் DeepBlue என்ற கணிப்பொறியுடன் உலக செஸ் சாம்பியன் காரி காஸ்பரோவ் செஸ் விளையாடியது பலருக்கு நினைவிருக்கலாம். முதல் போட்டியில் காஸ்பரோவ் வென்றார். பின் அடுத்த வருடம் மேம்படுத்தப்பட்ட மென்பொருளின் துணை கொண்டு DeepBlue வென்றது.சமீபத்தில் செஸ்ஸை விட மிகவும் சிக்கலான சீன விளையாட்டான ‘கோ’ (Go) விளையாட்டில் AlphaGo என்ற செயலி உலக கோ சாம்பியனை வென்றது. இந்த தொழில்நுட்பங்களின் குறிக்கோள், மனிதர்களை விளையாட்டுகளில் வீழ்த்துவதல்ல; மாறாக மனிதர்களைப் போல சிந்திப்பதில் உள்ள அத்தனை சாத்தியக்கூறுகளையும் கற்றுக்கொண்டு நினைவு வைத்துக்கொள்வது.

இந்த AlphaGoதான் சில மாற்றங்களுடன் தற்சமயம் AlphaFold ஆக பணி செய்துவருகிறது. அதன் முக்கிய குறிக்கோள் புரத மடிப்புகளின் வடிவங்களை ஊகித்துச் சொல்வது.
நமது பயாலஜி என்பது அடிப்படையில் புரதங்களால் ஆனது. மொத்தம் உள்ள இருபது கோடி புரதங்கள் ஒவ்வொன்று ஒரு குறிப்பிட்ட வரிசையில் இணைக்கப்பட்ட அமினோ அமிலங்களால் ஆனவை. அவை எந்த வரிசையில் இணைந்துள்ளன என்பதைப் பொறுத்து அதன் வடிவம் (folding) மாறும்.

ஒரு புரதத்தின் பணி என்பது அதன் வடிவத்தோடு தொடர்புடையது. ஆனால், ஒவ்வொரு புரதத்தையும் ஆராய்ச்சிக்கூடத்தில் வைத்து அதன் வடிவத்தைக் கண்டறிவது மிகுந்த உழைப்பைக் கோரும் செலவு பிடித்த பணி. மேலும் 20 கோடி புரதங்களின் வடிவத்தை ஆராய்ச்சி மூலம் கண்டறிய பல நூறு ஆண்டுகள் தேவைப்படும்.

AlphaFold போன்ற செயலிகள் இந்த சவாலை சிறப்பாக எதிர்கொள்கின்றன. அமிலோ அமிலங்கள் அமைந்துள்ள வரிசையை வைத்துக்கொண்டு அந்த புரதத்தின் மடிப்பு, அதாவது வடிவம் எவ்விதம் இருக்கும் என்று கிட்டத்தட்ட சரியாக ஊகித்துவிடுகின்றன.  இந்த வருடம் கிட்டத்தட்ட எல்லா புரதங்களின் வடிவங்களையும் ஊகித்து விட்டதாக அறிவித்திருக்கிறார்கள்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்கை தனியே சுட்டி எழுத ஒரு காரணம் உள்ளது. ஒரே சமயத்தில் பல்வேறு நிறுவனங்களின் மூலம் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகளை முன்னெடுத்திருப்பவர். டெஸ்லா மின்சாரக் கார்கள் முற்றான தானியங்கி திறனை (FSD) நோக்கி இன்னுமொரு படி எடுத்து வைத்துள்ளன.இன்னொரு நிறுவனமான Space-X நாளுக்கு நாள் தனது ராக்கெட் தொழில்நுட்பத்தை மேம்படுத்திக்கொண்டு வருகிறது. பல நாடுகளுக்கு விண்வெளி சேவையை குறைந்த செலவில் குறித்த நேரத்தில் அளிக்கும்  நிறுவனம் என்ற நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

இது போக உலகெங்கிலும் சாட்டிலைட் இணைய சேவை அளிக்கும் திட்டமான StarLink மெல்ல விரிவடைந்து இன்று பத்து லட்சம் பயனர்களை அடைந்திருக்கிறது. முற்றிலும் சாட்டிலைட் வலைப்பின்னல்களின் மூலம் கிடைக்கும் இணைய சேவை என்பதால் உலகின் எந்த மூலையிலும் தங்கு  தடையில்லாமல் 24 மணி நேர சேவை கிடைக்கும். மேலும் புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் எதுவானாலும் இணைய சேவை என்பது பாதிக்கப் படாமல் இருக்கும்.

இது இன்னொரு வகையிலும் முக்கியமானது. இணைய சேவை என்பதை தேச எல்லைகள், அரசு கட்டுப்பாடுகள் தாண்டிய ஒன்றாக உருவகிக்கிறது. சீனா போன்ற நாடுகளில் ஒட்டுமொத்த இணைய சேவையையும் அரசாங்கத்தின் தணிக்கைக்கு உட்பட்டே மக்கள் அணுக முடியும். நாம் இன்று சர்வசாதாரணமாக பயன்படுத்தும் கூகுள், யூடியூப், ஃபேஸ்புக் போன்ற தளங்கள் கூட  சீனாவில் தணிக்கை செய்யப்படுகின்றன. இணைய சேவை என்பது ஒரு தொழில்நுட்ப வசதி என்பதைத் தாண்டி உலகளாவிய அத்தியாவசியமான பொதுச் சேவை என்று ஆகிவிட்ட சூழலில் இவ்வாறு தடைகளற்ற இணைய சேவை என்பது மிக அத்தியாவசியமான ஒன்றாகிறது.

செயற்கை நுண்ணறிவு (AI)

இவ்வனைத்து தொழில்நுட்ப சாதனைகளுக்கும் மிகவும் இன்றியமையாத அடிப்படை கட்டுமானத்தை அளிப்பதாக தகவல் தொழில்நுட்பம் விரிவடைந்து வருகிறது. தகவல் தொழில்நுட்பம் பிற துறைகளில் நிகழும் பாய்ச்சல்களை எல்லாம் இணைத்து பெருக்கும் ஒரு  multiplier ஆக உருவெடுத்துள்ளது.Digital First என்றது பின்னர் Data first என்று மாறியது. இப்போது AI first என்ற தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. நாம் இதுவரை பல்வேறு துறைகளில் உருவாக்கிய அறிவு இதன்மூலம் திரண்டு ஒற்றை அறிவுப்பரப்பாகும் நிலையை நோக்கி மெல்ல நகர்ந்துகொண்டிருக்கிறோம்.

இதுவரை மனிதர்களுக்கு பெரும் சவாலாக இருந்த, நம்மால் தீர்க்கவே முடியாத பல சிக்கல்களை எதிர்கொள்ள AI  மிக சக்திவாய்ந்த ஒரு கருவியாக உருவாகிவருகிறது.
OpenAI, DeepMind, Google Brain போன்ற நிறுவனங்கள் இந்த தளத்தில் தீவிரமாக இயங்கி வருகின்றன. chatGPT போன்ற AI செயலிகள் ஏற்கனவே எவ்வளவு முன்னேறியுள்ளன என்பதை அனைவருமே கண்டிருப்போம்.

மின்கலன்கள்

பழைய நோக்கியா செல்போன்களைப் பயன்படுத்தியவர்களுக்கு அதன் மின்கலன் (battery) எவ்வளவு தடிமனானது என்பது தெரிந்திருக்கும். திறன்பேசிகள் (smartphone) பயன்பாடு ஆரம்பித்த பின் பெரிய திரையும் தொடர் பயன்பாடும் திறன்மிக்க மின்கலன்களுக்கான தேவையை உருவாக்கியது. இப்போதைய கைபேசிகளில் இருக்கும் லித்தியம் மின்கலன்கள், ஒரு பிஸ்கட் சைஸ்தான் என்றாலும் எட்டு மணி நேரப் பயன்பாட்டுக்கு தாக்குப் பிடிக்கின்றன.

அதே போல பெரிய கொள்ளளவு கொண்ட மின்கலன்களுக்கும் தேவை அதிகரித்து வருகிறது. மின்சாரக் கார்களில் பயபடுத்தப்படும் மின்கலன்களைத் தவிர இன்னும் பெரிய அளவில் ஒட்டுமொத்தமாக ஒரு நகரத்துக்கே குறுகிய காலத்துக்குத் தேவையான மின்சாரத்தை மின்கலன்களில் சேமித்து வைக்கும் திட்டங்களும் செயல்பட ஆரம்பித்துவிட்டன.

இவ்வாறு அதிகம் செலவில்லாமல் செய்ய முடியும் என்றால் சூரிய ஒளி போன்ற மரபுசாரா மின்சாரத் தயாரிப்புகளுக்கு இன்னுமே ஊக்கம் கிடைக்கும். பகலில் சேமிக்கப்படும் மின்சாரத்தை இரவில் மின்கலன்களில் இருந்து எடுத்துக்கொள்ளலாம். நீடித்த பயனும் நிறைய கொள்ளளவும் கொண்ட super batteryகளைக் குறிவைத்து தீவிரமான ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அதே சமயம் இவ்வித மின்கலன்களை எளிதாக மறுசுழற்சி செய்வது எப்படி என்ற ஆராய்ச்சியும் இணையாக  நடக்கிறது.

நாளை

வரும் வருடங்களில் பல்துறை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஒன்றுடன் ஒன்று இணைய ஆரம்பிக்கும் (convergence), ஒன்றை இன்னொன்று பாதிக்க ஆரம்பிக்கும். மின்சாரத்தினால் ஓடும் கார்கள், ஒரு காரின் அடிப்படை வடிவமைப்பையே மாற்றிவிடுகின்றன. பெட்ரோல் டாங்க், ஃபியூவல் பம்ப் போன்றவை தேவையில்லாத விஷயமாகிவிடுகிறது.

அடிப்படை உந்து விசை மோட்டாரில் இருந்து வருவதால் அதை முற்றிலும் டிஜிட்டலாக இயக்க முடிகிறது. நிரல்களின் மூலம், கார்கள் தாமாக இயங்கும் திறனைப் பெறுகின்றன்.

தானாக இயங்க முடிகிற கார்களுக்கு ஸ்டியரிங் என்பதே தேவையில்லை என்றாகிவிடும். ஸ்டியரிங் இல்லை என்றால் இருக்கைகள் முன்னோக்கித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. 

இப்படி கார்கள் முற்றிலும் தானியங்க முடியும் என்றால் அவற்றை ஒரு தேனீ கூட்டம் போல (autonomous fleet) நாம் பயன்படுத்தலாம். சொந்தமாக ஒரு காரை வைத்திருக்க வேண்டும் என்பதே காலாவதியான ஒரு ஐடியாவாகிவிடும். நினைக்கும் போது நாம் முற்றிலும் தானியங்கக்கூடிய ஒரு காரை வீட்டின் முன் அழைக்கலாம்.

தானியங்கி கார்கள் விபத்துகளைக் குறைக்கும். அது வாகனக் காப்பீட்டு முறைகளை மாற்றி அமைக்கும்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இது ஒரு உதாரணம்தான். இதேபோல மருத்துவம், கல்வி, பொருளாதாரம் என்று  பலதுறை உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். வரும் ஆண்டு இவ்வகை தொழில்நுட்ப இணைவுகளை முன்னிறுத்தும் ஒன்றாக அமையும்.அறிபுனை எழுத்தாளர் ஆர்த்தர் கிளார்க் சொல்வார், “Any sufficiently advanced technology is indistinguishable from magic...” என்று. நம் வாழ்நாளில் இத்தகைய மேஜிக்குகளைப் பார்க்கும் வாய்ப்பு நமக்கும் அமையும்.

கார்த்திக் வேலு