ரீவைண்ட் 2022-என்னவெல்லாம் நடந்தன 2022ம் ஆண்டில்?
ஓர் ஆண்டில் என்பதல்ல, ஒவ்வொரு நாளிலும் ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நடக்கும். இதில் எவற்றையெல்லாம் குறிப்பிடுவது என்பது தொகுப்பவரின் பார்வையில்தான் அமையும். மேலும் இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ்நாடு, இந்தியா, உலகம் என்றெல்லாம் முழுவதுமாக பிரித்துப் பார்க்க முடியாதபடி உலகப் பொருளாதாரம், ஊடக, அரசியல் வலைப்பின்னல்கள் அனைவரையும் பிணைத்துள்ளன. உக்ரைன் போர் என்னும் வரலாற்று நிகழ்வு உலகளாவிய பாதிப்புகளை நீண்ட காலத்திற்கு உருவாக்கக் கூடிய நிகழ்வு உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் மற்றும் ஆக்கிரமிப்பு.
 அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளே, அழுத்தங்களே ரஷ்யாவைத் தூண்டின என்று ஏற்றுக் கொண்டாலும் கூட, ரஷ்யாவின் தாக்குதலை, குறிப்பாக குடிமக்கள் மீதான இரக்கமற்று தொடரும் தாக்குதல்களை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. இந்தத் தாக்குதலினால் இந்தியாவில் ஏற்படும் மறைமுக பாதிப்புகளைக் குறித்து பேசுவதற்கு முன்னால் எப்படி உடனடியாக இது நாட்டில் பல்வேறு இடங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியது என்பதை கவனிக்க வேண்டும்.

இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மருத்துவப் படிப்பிற்காக மாணவர்கள் உக்ரைன் சென்றிருந்தார்கள். இந்த போர் மூளும் வரை அத்தனை பேர் அவ்விதம் மக்களுக்கு பரவலாகத் தெரியாத ஒரு நாட்டிற்கு சென்றிருப்பார்கள் என்பதை யூகிக்கவே முடிந்திருக்காது. சற்றேறக்குறைய 16,000 மாணவர்கள் உக்ரைன் போரில் மாட்டிக்கொண்டு, பெரும் அவதிகளுக்குப் பிறகு மாநில, ஒன்றிய அரசுகளின் செயல்பாட்டால் மீட்கப்பட்டார்கள். தமிழ்நாடு அரசு முன்முயற்சி எடுத்து 1900 தமிழ்நாட்டு மாணவர்களை மீட்டுக் கொண்டுவர வகை செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த மாணவர்களின் கல்வி எப்படி தொடர்கிறது, இவர்கள் எதிர்காலம் என்ன என்பதைக் குறித்த கேள்விகள் நீடிக்கின்றன.
 இந்த நிகழ்ச்சியில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், சிறு நகரங்கள், ஏன்- கிராமங்களிலிருந்துகூட மாணவர்கள் கல்வி பயிலும் விருப்பத்தால் எங்கோயிருக்கும் உக்ரைன் நாட்டிற்குச் செல்லுமளவு உலகமே ஒரு கிராமமாக சுருங்கியுள்ளது. ஆனால், திடீரென்று அண்டை நாடுகளுக்குள் பெரும் பகை வெடித்து, கொத்து கொத்தாக அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் கொடூர யுத்தம் தொடங்கி விடுகிறது.
 இதில் மிகப்பெரிய துயரம் என்னவென்றால் இந்த யுத்தம் தொடர்ந்து நீடிப்பதுடன், சமாதானம் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் கண்ணுக்குத் தெரியவில்லை. மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவைத் தாக்கினால் அணு ஆயுதப் போர் மூண்டுவிடும். ரஷ்யாவின் மீது விதித்த பொருளாதாரத் தடைகளால், பல்வேறு பொருட்களின் விலைகள் உலகம் முழுவதும் உயர்ந்ததே தவிர, ரஷ்யாவை அதனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
சீனா, ரஷ்யாவை ஆதரிப்பதால் ரஷ்யா தனிமைப்படவில்லை. இந்தியாவும் சந்தர்ப்பவாத நோக்கில் ரஷ்யாவிடமிருந்து மலிவாக எண்ணெய் இறக்குமதி செய்கிறதே தவிர அதனுடன் உறவினைத் துண்டித்துக் கொள்ளவில்லை. இந்தியா போரை ஆதரிக்கவில்லை; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றெல்லாம் இந்தியப் பிரதமர் கூறுகிறார். வெளியுறவு அமைச்சர் ரஷ்யாவுடன் வர்த்தக உறவுகள் தொடரும், அது நீண்ட நாள் உறவு என்று கூறுகிறார். மேற்கத்திய நாடுகளும் இந்தியாவை அதிகம் கண்டிக்கும் நிலையில் இல்லை.
மொத்தத்தில் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு மேல் யாரும் எதுவும் செய்யப் போவதில்லை. ரஷ்யா தாக்குதலைத் தொடர்கிறது. உக்ரைனும் திருப்பித் தாக்குகிறது. உயிரிழப்புகளும், சேதங்களும் தொடர்கின்றன. இது அப்படியே இரு நாடுகளுக்குள்ளான நீடித்த பகைமையாக சுருங்கி, வலுவிழக்குமா அல்லது சர்வதேச பிரச்னையாக மீண்டும் வீரியம் பெறுமா என்று தெரியவில்லை. இந்தியாவில் தொடரும் இந்து மதவாதமும், சகிப்பின்மையும் ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி அரசும் சரி, மாநில அரசுகளும் சரி மதவாத நெருப்பில் எண்ணெயை ஊற்றிக்கொண்டேதான் இருக்கின்றன.
கர்நாடகாவில் பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் என்னும் முக்காடிட்டு வரக்கூடாது என்று திடீரென ஒரு உத்தரவை அரசு பிறப்பித்து பெரும் கலவரத்திற்கு வழி வகுத்தது. அந்தப் பெண்களின் நம்பிக்கையின் பேரில் அவர்கள் அதை அணிந்து வருவதால் கல்வி நிலையங்களின் இயக்கத்திற்கு என்ன பிரச்னை என்பது தெளிவாக இல்லை. அவர்கள் முடியை மறைக்கும் விதமாக ஒரு துணியை அணிவதால் யாருக்கு என்ன இடைஞ்சல் இருக்க முடியும் என்பது கேள்வி.
அதே நேரத்தில் இரானில் பெண்கள் தங்களை ஹிஜாப் அணியச்சொல்லி கட்டாயப் படுத்தக் கூடாது என்று மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். மாஷா அமினி என்ற இளம்பெண் சரிவர ஹிஜாப் அணியவில்லை என்று போலீஸ் கைது செய்து துன்புறுத்தியதால் இறந்துவிட்டார் என்ற செய்தி, பெண்களைத் திரண்டெழுந்து போராடத் தூண்டியுள்ளது. ஹிஜாப் அணியும் உரிமைக்காக கர்நாடகாவில் போராடு வதும், அணியாமல் இருக்கும் உரிமைக்காக இரானில் போராடு வதும் ஒரு முரண்பாடு போலத் தோன்றினாலும் இரண்டுமே உரிமைக்கான போராட்டங்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஏன் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் அரசாங்கங்கள் தனி நபர் உரிமையில் மதத்தின் பேரால் தலையிடுகின்றன என்பதே கேள்வி.
பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா என்பவர் முகம்மது நபியை அவமதிக்கும் விதத்தில் பேசியது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்தைச் சந்தித்தது. உள்ளூரில் பல விரும்பத்தகாத வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. தொடர்ந்து வெறுப்பு அரசியலை விதைப்பதில் பாஜக முனைப்பாக இருக்கிறது என்ற எண்ணம் தவிர்க்க முடியாதது.
இந்தியாவில் ஆளும் கட்சியை விமர்சித்து, எதிர்த்து செயல்படு பவர்கள் கைது செய்யப்படுவது, அலைக்களிக்கப்படுவது என்பது தொடர்கிறது. குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி, பல்வேறு சில்லறை வழக்குகளில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு அலைக்கழிக்கப்பட்டார். ஒரு டுவீட் செய்ததற்காக அஸ்ஸாம் போலீஸால் கைது செய்து அங்கே கூட்டிச் செல்லப்பட்டதெல்லாம் கடும் உரிமை மீறல் எனலாம். இது ஒரு உதாரணம் மட்டுமே.
பாரத் ஜாடோ யாத்திரை இத்தகைய இருண்ட மேகங்களுக்கிடையே தெரியும் சூரிய ஒளியாக, நம்பிக்கைக் கீற்றாக அமைந்திருப்பது காங்கிரஸ் தொண்டர்களுடன் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கும் ஒற்றுமை நடைப் பயணம். எந்த திட்டவட்டமான அரசியல் நோக்கமோ, போர்க்குரலோ எதுவுமின்றி, சமூகத்தை ஒருங்கிணைப்பதையே நோக்கமாகக் கொண்டு கன்யாகுமரியிலிருந்து காஷ்மீர் நகர் வரை 3570 கிலோமீட்டர் தூரம் 150 நாட்களில் நடந்து செல்கிறார் ராகுல் காந்தி. பன்னிரண்டு மாநிலங்கள் வழியாகச் செல்கிறது இந்த யாத்திரை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியிடம் கன்யாகுமரியில் தேசியக் கொடியைக் கொடுத்து இந்த யாத்திரையைத் தொடங்கி வைத்தார்.
வழிநெடுகிலும் பல்வேறு சமூக களப்பணியாளர்கள், சிந்தனையாளர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பலரும் இந்த பாத யாத்திரையில் பங்கேற்கிறார்கள். சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பார்க்கும் எல்லோருக்கும் உற்சாகத்தையும், அன்பையும் பரிசளிக்கிறார் ராகுல் காந்தி. பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜனாக இருந்தாலும் சரி, மாற்றுத் திறனாளி பள்ளி மாணவனாக இருந்தாலும் சரி அனைவருடனும் மனம் திறந்து உரையாடுகிறார்.
இந்த ஆண்டின் மிகுந்த மன எழுச்சியைத் தரும் நிகழ்வாக இந்த பாத யாத்திரையைத்தான் குறிப்பிட வேண்டும். இது அரசியலைக் கடந்து, வெறுப்புக்கும் வன்முறைக்கும் மாற்றாக அன்பையும், ஒருங்கிணைப்பையும் விதைப்பதாக உள்ளது. மனிதர்களை அடையாளங்களின் பேரில் பிளவுபடுத்தி, போராகவும், கலவரமாகவும், வன்முறையாகவும் உலகைச் சீரழிக்கும் மனப்போக்கிற்கு எதிரான ஒரு எளிமையான, மகத்தான செயல்பாடாக நிகழ்கிறது பாரத் ஜாடோ யாத்திரை.
ஊடகங்கள், குறிப்பாக வட இந்தியாவில், இந்த யாத்திரையைப் புறக்கணிக்கின்றன. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. இந்தச் சூழலில் இந்திய ஒன்றிய அரசின் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதும், மக்கள் நலன் சார்ந்த திமுக அரசின் செயல்பாடுகளும் தமிழக மக்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
ராஜன் குறை
|