தாலி செய்ய இத்தனை சடங்குகள்! அசத்தும் கேரள தமிழர்கள்



அந்த வீட்டிலிருந்து மெலிதான புல்லாங்குழல் இசை ஒலிக்கிறது. வாசலில் வாழைத் தோரணம், தென்னை ஓலைப்பந்தல், ஷாமியானா. கல்யாண வீடு போல அல்ல, கல்யாண வீடேதான் என்று சொல்லும் அளவு விருந்தினர்கள் உள்ளே சென்று கொண்டிருக்கிறார்கள். பந்தலில் நிறைய நாற்காலிகள்; பட்டுச்சேலை, தங்கநகைகள், பட்டு வேட்டி, பட்டுச் சட்டை பளபளக்க ஏராளமான ஆண்கள், பெண்கள்.
அந்த ஹாலின் முகப்பில் மலர்மாலைகளால் சூழப்பட்ட முகூர்த்தப்பந்தல். அதன் நடுவே புத்தம் புது பஞ்சமுகக் குத்துவிளக்கு, வெள்ளித்தட்டு, பித்தளைத் தட்டுகள்.
அவற்றின் நீள அகலத்திற்கு வாழை இலைகள். அரளி, செவ்வந்தி, மல்லிகை என பூக்கள். ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை, ஆப்பிள், மாதுளை என பழ வகைகள்.

இதற்கு நடுவே சந்தன வண்ண வேட்டியும், மெரூன் வண்ண சட்டையும் அணிந்த நடுத்தர வயது மனிதர். தன் கையோடு கொண்டு வந்திருந்த பையில் இருந்து பொருட்களை எல்லாம் எடுத்து வைக்கிறார். சந்தனம், மஞ்சள், திருநீறு, குங்குமம், நெய், எண்ணெய், பன்னீர், எலுமிச்சை, தேங்காய்கள், தூபக்கால், கற்பூர ஆரத்தி தட்டு. கூடவே வெள்ளியால் ஆன ஊதுகுழல்.
எலுமிச்சையை நான்கு துண்டாக வெட்டி ஒரு கிண்ணத்தில் இடுகிறார். மஞ்சளை ஒரு தட்டில் கொட்டி அதில் பன்னீர் ஊற்றி பிசைகிறார்.  

அவரின் உதவியாளர் பஞ்சமுக விளக்குக்கு பஞ்சுத் திரி போடுகிறார். தேங்காய்களை எடுத்து வரிசையாக வைக்கிறார். மலர்கள், அவல்பொரி, வெற்றிலைகள், பாக்கு, கற்பூரம்... என அடுத்தடுத்து பொருட்கள் வெளியே வருகின்றன. இதேவேளையில் நடுத்தர வயதுக்காரர் சிறு கிண்ணத்தில் சந்தனம் கரைக்கிறார். அதை மோதிர விரலால் ஒற்றி ஒற்றி, பஞ்சமுக பித்தளை விளக்குக்கு அடிமுதல் நுனிவரை பொட்டாக இடுகிறார். தொடர்ந்து  குங்குமம் வைத்து விளக்குக்கு மல்லிகைப்பூச்சூடல்.

அடுத்து ஒரு பெரிய வெற்றிலையை எடுத்து அதில் பிசைந்த மஞ்சள் வைத்து உருட்டப்படுகிறது. அதை மெல்ல மெல்ல உருவமாக்குகிறார். அதில் ஒரு முனையைக் கிள்ளி, உருண்டையின் நடுவே இட்டு நீட்டி மெத்துகிறார். அட, எண்ணி சில மணித் துளிகளில் அவர் கைகளில் பிள்ளையாரின் உருவம். ஹால் நாற்காலிகளில் கூட்டம் நிரம்பிக் கொண்டே இருக்கிறது. மங்கல இசை சன்னமாக எங்கிருந்தோ ஒலித்தபடி இருக்கிறது.
நேரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. அரைமணி, முக்கால் மணி, ஒரு மணி நேரம், இல்லை... இரண்டு மணி நேரமே நகர்ந்திருக்கும். நிறைய சடங்குகள், நிறைய பொட்டிடல் பூச்சூடல் செய்த மனிதர் ஒரு நீண்ட வாழை இலையில் உமியைப் பரப்பி, அதன் மீது கொட்டாங்குச்சி கரியைப் பரப்புகிறார். இன்னொரு பக்கம் அவல்பொரி, உலர் திராட்சை, கற்கண்டு இப்படியான கலவைப் படையல் தயாரித்து வைத்திருக்கிறார்.

அந்த இடமே நேரம் செல்ல செல்ல மங்கலகரமாக மாறுகிறது. மஞ்சள் பிள்ளையாருக்கு பூச்சூடல், பொட்டிடல் எல்லாம் நடக்கிறது. நெல் உமி, கரித்துண்டுகள் பரப்பப்பட்டதன் மீது கட்டிக் கற்பூரம் வைக்கப்படுகிறது. தூபக்காலில் சாம்பிராணி புகை. தட்டில் பூஜைப் பொருட்கள் வைத்து கற்பூரம் ஏற்றப்பட்டு வந்திருந்தவர்களிடம் காட்டப் படுகிறது.

எல்லோரும் தொட்டுக் கும்பிடுகின்றனர். ஒரு தேங்காய் உடைத்து வைக்கப்பட, அதன் தண்ணீர் கீழே விழாமல் பாதுகாக்கப்பட்டு அப்படியே திருப்பி ஓரிடத்தில் வைக்கப்படுகிறது. பிறகு அந்த நெல் உமி மற்றும் கரிக்கட்டையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த கற்பூரத்தை ஒரு பஞ்சுத்திரியில் நல்லெண்ணெயில் நனைத்து தீபத்தில் காட்டி பொருத்தி, இங்கே இடுகிறார் அந்த மனிதர்.

இப்போது உமியும், கரிக்குள் இருக்கும் கற்பூரமும் பற்றிக் கொள்கிறது. உமி, கரி கொழுந்து விட்டு எரிய தன் வெள்ளி ஊதுகுழலால் ஊதுகிறார் அவர். ஓர் இளம் கணவன், மனைவி ஒரு பழத்தட்டுடன் அந்த மணவறையைச் (?!) சுற்றி வருகிறார்கள். அதன் நடுவே மூன்று சிறு கட்டிகளாக பொன் வைக்கப்பட்டிருக்கிறது. அதை மூன்று முறை சுற்றி வந்து அந்த மனிதரின் காலில் விழுந்து வணங்கி அந்த தம்பதியினர் வழங்குகிறார்கள்.அதைக் கும்பிட்டு வாங்கிய இவர், மறுபடி பல்வேறு சீர், சடங்குகளை அந்தத் தங்கக் கட்டிகளுக்கு செய்து நெருப்பில் பத்திரமாக வைத்துவிட்டு ஊதுகுழலால் நெருப்பை ஊதுகிறார்.

நேரம் நீள்கிறது. நெருப்பு பொன் ஜுவாலையுடன் சுடர் விடுகிறது. அப்படியே மேலும் சில மணித்துளிகள். பொன் உருகி விட்டது. மூன்று கட்டிகளும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டது. இப்போது அதை எடுக்கிறார். உடைத்து தண்ணீருடன் வைக்கப்பட்ட தேங்காயில் இடுகிறார். தங்கம் தளதளக்கிறது. ஜொலிக்கிறது. அதை எடுத்து மறுபடி ஒரு வெற்றிலையில் வைத்து, எரிந்த கரித்துகளையும் வேறு திரவத்தையும் வைத்து மைபோல் ஏதோ கலக்குகிறார் அவர்.

பின்னர் அந்த தம்பதியரை அழைக்கிறார். அவர்கள் இவர் காலில் விழுந்து அதை வாங்குகிறார்கள். அதை வந்திருந்த விருந்தாளிகளிடம் எல்லாம் காட்டி, ஆசீர்வாதம் வாங்கி திரும்ப அந்தக் கூடத்தில் பூஜையில் ஈடுபட்டவரிடமே கொடுக்கிறார்கள். இப்படி நீளும் சடங்கு முறைகளை எண்ண முடியவில்லை.

இது மட்டும் 2 மணி நேரத்திற்கும் மேல் நடக்கிறது. அதற்குப் பிறகு ஏக போக விருந்துபசாரம் நடக்கிறது. இது நடந்தது நம் ஊரில் அல்ல. கேரள மாநிலம், கோட்டயம் அருகே உள்ள சங்கணச்சேரி என்ற ஊரில்! தேவராஜன் - ராஜேஸ்வரி என்பவர்களின் மகன் ஜீவன்ராஜுக்கும், கோவையைச் சேர்ந்த திரிவேணிக்கும் நடைபெறவிருக்கும் திருமணத்திற்கு தாலி செய்யும் சடங்குதான் ஒரு முகூர்த்தக் காட்சி போலவே அரங்கேறியிருக்கிறது!

‘‘திருமணம் என்றால் அது பெண் வீட்டில் அல்லது பெண்ணின் ஊரில்தான் நடக்க வேண்டுமா? மாப்பிள்ளைக்கு என்று என்ன இருக்கிறது? அதனால்தான் மாப்பிள்ளை வீட்டில் பொன் உருக்கி தாலி செய்யும் சடங்கை ஒரு திருமணத்திற்கு நிகராகவே நடத்துகிறோம். இதற்கு மாப்பிள்ளை சைடில் இருந்து அத்தனை விருந்தாளிகளையும் அழைத்து விருந்து வைக்கிறோம்.

திருமணத்திற்கு ஐந்து அல்லது ஏழு நாள் முன்பு நடக்கும் இந்த வைபவம்தான் ஒரு திருமண விழாவுக்கு அச்சாரமிடுகிறது. இது தமிழ்நாட்டிலிருந்து மூணு நாலு தலைமுறைக்கு முன்னால் வந்த கலாசாரம், பழக்க வழக்கம்தான். இன்று வரை தொடர்கிறது!’’ என்று அதிர வைக்கிறார்கள் இந்த நிகழ்வை நடத்திய தேவராஜன் - ராஜேஸ்வரி தம்பதியினர். இவர்களின் மகன் ஜீவன்ராஜுக்கு திருமணம். அதற்கு பொன் உருக்கும் வைபவத்திற்கு தாலி கொடுத்து இந்த சீர் சடங்கை செய்தது மாப்பிள்ளையின் சகோதரியும் மைத்துனரும்.

நம்ம ஊர் திருமணங்களில் எல்லாம் பல்வேறு சடங்குகள் இன்றும் நடக்கத்தான் செய்கின்றன. பெண் - மாப்பிள்ளை பார்க்கும் சடங்கு, நல்ல வார்த்தை பேசுதல், நிச்சயதார்த்தம், ஜவுளி எடுத்தல், உப்பு வாங்குதல்... இப்படி பல சடங்குகளில் தாலி வாங்கும் சடங்கு என்பது பெரும்பான்மை வீடுகளில் சட்டென்று முடிந்து விடுகிறது. நல்ல நாளில் இரு குடும்பத்தாரில் சிலர் மட்டும் சென்று தாலிக்குத் தங்கம் வாங்கி, பொன் வேலை செய்யும் விஸ்வகர்மாவிடம் அதை முறையாகக் கொடுத்து தாலி செய்யச் சொல்லுவர். முகூர்த்த நாளுக்கு முன்தினம் நல்ல நேரம் பார்த்து அதை வாங்கி வருவர்.

இன்னும் பெரும்பாலான வீடுகளில் இந்த சடங்கு இன்னமும் இன்ஸ்டன்ட் ஆகி விட்டது. மாப்பிள்ளை அல்லது பெண் வீட்டைச் சேர்ந்த சிலர் கடைக்குச் சென்று ரெடிமேடாக அங்கிருக்கும் தாலியில் தங்கள் சமூக வழக்கப்படி இருக்கும் டிசைனை வாங்கி, கோயிலில் வைத்து வணங்கிவிட்டு மண்டபத்துக்கு எடுத்துச் செல்கிறார்கள். ‘‘ஆனால் இது ஆயிரங்காலத்துப் பயிர்.

அத்தனை சொந்த பந்தங்களையும் அழைத்து இத்தனை சடங்கு சீர்களை செய்து, விருந்து போட்டு ரொம்ப அக்கறையோடு செய்தால் அதை கட்டிக்கொள்ளும் பெண்ணுக்கும், அதை கட்டும் ஆணுக்கும் ஒரு பொறுப்புணர்வு இருக்கும். அவ்வளவு சுலபமாக அதைக் கழற்ற மனசு வராது. அதனால்தான் இப்படியெல்லாம் அந்தக் காலத்திலேயே சடங்கு சம்பிரதாயங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்!’’ என்கிறார் அய்யப்பன்.

இந்த பொன் உருக்கும் சடங்கை நடத்திய அனில்குமார், இதை ஆமோதிக்கிறார். ‘‘இந்த சடங்கு முழுக்க முழுக்க தமிழ்க் குடும்பங்களில், அனைத்து சமூகத்தினரிடமும் இருந்தது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணமே இப்படித்தான் நடக்கும். அதில் தாலிக்கு பொன் உருக்கும் வைபவமே தனி சடங்காக இருக்கும். இங்கே கேரளாவில் மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பே வந்த தமிழ்க் குடும்பங்கள் நிறைய இருக்கு. நாங்களே சங்கரன்கோயிலிலிருந்து வந்த குடும்பம்தான். நாங்க வெவ்வேறு வேலைகளில் ஈடுபட்டு கடைசியா தங்க வேலைக்கு வந்தோம்.

இந்த வைபவத்தை மாப்பிள்ளை வீட்டுலதான் செய்வாங்க. மாப்பிள்ளையோட அம்மாவும் அப்பாவும் தங்கம் வாங்கி எங்களை மாதிரி பொன்வேலை செய்றவங்ககிட்ட கொடுப்பாங்க. அல்லது மாப்பிள்ளையோட கல்யாணம் கழிச்ச சகோதரிமார் கொடுக்கலாம். மாப்பிள்ளையோட அம்மா, கணவன் இல்லாமல் இருந்தாலோ, மாப்பிள்ளைக்கு சகோதரிமார் இல்லையென்றாலோ அவங்க சித்தப்பா, பெரியப்பா முறையில் வர்றவங்க கொடுக்கலாம்.

பொன்னுக்கு தாலி வாங்கும் எங்களுக்கும் சில கட்டுப்பாடுகள் இருக்கு. இந்த வேலைசெய்யும்போது அசைவம் சாப்பிடக்கூடாது என்பது உட்பட நிறைய சம்பிரதாயங்கள் உண்டு. இது காலம் காலமா நடந்துட்டிருக்கு. ஆனா, தமிழ்நாட்டுல இப்ப இந்த சடங்கு ரொம்ப குறைஞ்சுபோச்சுன்னு கேள்விப்படறோம். ஆனா, கேரளாவில் வசிக்கும் தமிழ்க்குடும்பங்கள் மத்தியில இப்ப இந்த வைபவம் பாப்புலர் ஆகிட்டிருக்கு.

இந்த விருந்துக்கு மட்டும் சாதாரண வீட்லகூட 300 பேருக்கு குறையாம வருவாங்க. சிலர் மண்டபத்தில், ஆடிட்டோரியத்தில் கூட்டி வச்சு சம்பிரதாயங்கள் செஞ்சு ஆயிரம் பேருக்கு மேல விருந்து போடறதும் உண்டு. நான் பத்து வருஷங்களா இப்படி தமிழ் சம்பிரதாயத்தோட பல்லாயிரம் குடும்பங்களுக்கு தாலி செய்து கொடுத்துட்டு வர்றேன்...’’ புன்னகைக்கிறார் அனில்குமார்.

கா.சு.வேலாயுதன்