இயக்குநர் ஆகணும்னு வந்தேன்... இப்ப காமெடி வில்லனா... கேரக்டர் ஆர்டிஸ்டா மக்கள் முன்னாடி நிக்கறேன்!
‘ஆசை ஆசையாய்’ படம் மூலம் தமிழ்ச் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ரவி மரியா. பிறகு, ‘மிளகா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார். ஆனால், இதையெல்லாம்விட நகைச்சுவை நடிகர் அவதாரம்தான் அவரை நம் கண்முன்னால் என்றென்றும் நிலைநிறுத்தி அப்ளாஸ் செய்ய வைக்கிறது.
 இயக்குநர் எழிலின், ‘தேசிங்கு ராஜா’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ ஆகிய இரண்டு படங்களும் ரவி மரியாவை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது. அந்த படங்களில் இவரும் நடிகர் சூரியும் செய்த காமெடி கலாட்டா வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பவை. இதன் காமெடி இப்போதும்கூட பல செய்திகளுக்கான மீம்ஸ்களுக்குத் தீனி போடுகின்றன. ஷூட்டிங் ப்ரேக்கில் இருந்த ரவி மரியாவிடம் பேசினோம். 
‘‘சினிமா துறைக்குள் வந்து 25 ஆண்டுகளாகுது. இயக்குநர் ஆகணும்னுதான் வந்தேன். இயக்குநராக படங்களும் பண்ணினேன். ஆனா, இப்போ காலம் என்னை காமெடி வில்லனா கொண்டு போயிட்டு இருக்கு. நான் நடிகன் ஆவேன்னு கனவிலும் நினைச்சுப் பார்க்கல. சந்தோஷமா இருக்கு...’’ கலகலவென சிரிக்கிறார் ரவி மரியா.
‘‘சொந்த ஊர் விருதுநகர். இயக்குநர் வசந்தபாலன் என் நண்பர். அவர் படிச்ச கல்லூரியில்தான் நானும் படிச்சேன். அவர் பி.எஸ்சி முடிச்சதும் ஷங்கர் சார்கிட்ட சேர்ந்திட்டார். அப்புறம், நான் பி.காம். முடிச்சிட்டு சென்னைக்கு வந்தேன். நண்பர் வசந்தபாலன் மூலம் இயக்குநர் ஏ.ஆர்.காந்திகிருஷ்ணா சார்கிட்ட சேர்ந்தேன். பிறகு, எஸ்.ஜே.சூர்யா சார்கிட்ட உதவி இயக்குநரா பணியாற்றினேன். அவர்தான் என் குருநாதர். அவரிடம் ‘குஷி’ படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி மூன்றிலும் பணி செய்தேன். பிறகு, ‘ஆசை ஆசையாய்’ படம் மூலம் இயக்குநரானேன். அது சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி சார் படம். அந்தப் படம் மூலம் அவர் மகன் நடிகர் ஜீவாவை அறிமுகம் செய்தேன். அப்புறம், ‘நியூ’, ‘அன்பே ஆரூயிரே’னு எஸ்.ஜே. சார் படங்கள்ல சின்னச் சின்ன கேரக்டர் செய்தேன். ஆனா, பெரிசா நடிகன் ஆகணும்னு நினைச்சதெல்லாம் இல்ல.
என்னை நடிகனாக்கியது நண்பர் வசந்தபாலன்தான். ‘வெயில்’ல வில்லன் ரோல் கொடுத்து என்னை வெளிச்சத்திற்குள் கொண்டு வந்தார். அவர் இல்லனா இன்னைக்கு இந்த இடத்துல ரவி மரியா இல்ல...’’ என நெகிழ்வாகச் சொல்லும் ரவி மரியா, ஆசுவாசமாகத் தொடர்ந்தார்.
‘‘பிறகு மலையாளப் படங்கள்ல நடிக்க வாய்ப்பு வந்தது. அப்புறம், ‘மாயாண்டி குடும்பத்தார்’ படம் கவனிக்க வச்சது. அடுத்து, ‘மிளகா’ படம் இயக்கினேன். அதுல இயக்குநரா என்னை ரசிச்சாங்க. பிறகுதான், எழில் சாரின் ‘மனம் கொத்தி பறவை’யும், ‘தேசிங்கு ராஜா’வும் நடிகராக பெரும் கவனம் ஈர்த்திடுச்சு. ‘காமெடி வில்லன்’ என்கிற பெயரை எனக்குப் பெற்று தந்தது. அதேநேரம், குணச்சித்திர கேரக்டரும் சில படங்கள்ல செய்தேன். இதை நான் நடிக்கிறப்ப பல பெரிய இயக்குநர்கள் குறிப்பிட்டுச் சொல்லி பாராட்டியிருக்காங்க.
‘சந்திரமுகி 2’ படத்துல நடிக்கிறப்ப கூட இயக்குநர் பி.வாசு சார் என்கிட்ட, ‘சமீபகாலத்துல நீ ஒருத்தன் மட்டும்தான் காமெடிக்கும், வில்லனுக்கும், குணச்சித்திர கேரக்டருக்கும் செட்டாகுற’னு சொன்னார். அங்க வடிவேல் சாரும் பார்த்திட்டு, ‘மரி... உங்க காமெடி நிறைய பாக்கிறேன். பின்றீங்க. இவ்வளவு நாள் உங்களை பத்தித் தெரியாம இருந்த்திட்டேன். இனி சேர்ந்து பயணிப்போம்’னு சொன்னார். இப்படி கிடைக்கிற பாராட்டுகள்தான் என்னை இன்னும் சிறப்பா பண்ணணும்னு ஊக்கப்படுத்திட்டு இருக்கு.
நான் சினி துறைக்குள் வர என் பெற்றோரும் ஒரு காரணம். என் அப்பா சுப்பையா கடின உழைப்பாளி. எப்பவும் உழைச்சிட்டே இருக்கிற மனுஷன். என் அம்மா தாயம்மா. அவங்கதான் என்னை சின்ன வயசுல எம்ஜிஆர், சிவாஜி நடிச்ச படங்களுக்கு எல்லாம் அழைச்சிட்டுப் போய்க் காட்டினாங்க.
அப்பவே டி.ராஜேந்தர் சார் மாதிரி பேசுவேன். டான்ஸ் ஆடுவேன். கல்லூரியில் மேனோ ஆக்டிங் செய்து பாராட்டு எல்லாம் வாங்கியிருக்கேன். வீட்டுல எப்பவும் சப்போர்ட்தான். இப்ப என் அக்கா, தங்கை எல்லாம் ஆசிரியர்களாக இருக்காங்க. என் மனைவி மரியம் புஷ்பமும் குழந்தைகளும் பெரிய சப்போர்ட்டா இருக்காங்க...’’ என்கிற ரவியிடம் இப்ப முழுநேர காமெடியன் ஆகிட்டீங்க போல என்றோம். ‘‘பொதுவா, நகைச்சுவைதான் ரசிகர்களுக்கு பிடிச்சிருக்கு. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா சார், ‘ரவி... ஐந்து சீன் வந்தாலும் கலக்கிட்டு போயிடுறார். அவரை ஏன் முழுநேர காமெடியா போடக்கூடாது’னு கேட்டிருக்கார். பிறகே, ‘காட்டேரி’ படத்துல நடிக்க வச்சார். அந்த பட காமெடி பெரிய ஹிட் அடிச்சது. இந்தப் படத்தைப் பார்த்திட்டு மூணு படங்களுக்கு வாய்ப்பும் வந்தது.
நம்ம பண்ற காமெடி படத்தின் வெற்றிக்கு பயன்படுதேனு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதைத் தந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லுலனும். அதனால, ரசிகர்களுக்காக நான் முழுவதும் காமெடி நடிகராக நடிக்க தயார்தான். இருந்தும் காமெடி வில்லன் பண்றதும் சிறப்பாகவே இருக்கு. சமீபத்துல ‘ஜெயில்’ படத்துல மறுபடியும் வில்லன் கேரக்டர் பண்ணினேன். எனக்கு ஒரே பயம். ஏன்னா, காமெடியா பண்ணிட்டு இப்படி திடீர்னு சீரியஸ் வில்லன்னு சொன்னதும் பயந்தேன். ஆனா, அதுக்கு மக்கள் நிறைய ரெஸ்பான்ஸ் தந்தாங்க. நண்பர் வசந்தபாலன், ‘ரவி, நீங்க வில்லனுக்கும் செட்டாகுறீங்க காமெடிக்கும் செட்டாகுறீங்க’ பாராட்டினார்.
இயக்குநர் சுந்தர்.சி சாரும், ‘உங்கள மாதிரி பன்முக அமைப்பு யாருக்கும் இல்ல. மணிவண்ணன் சார் மாதிரி நீங்க வில்லனுக்கும் காமெடிக்கும் செட்டாகுறீங்க. அதனால எம்.ஆர்.ராதா சார் ரூட்டை பிடிச்சிடுங்க. கடைசி வரைக்கும் சினிமாவுல சிறப்பா பயணிக்கலாம்’னு சொல்லி வாழ்த்தினார். எனக்கு ரெண்டிலும் பயணிக்கவே ஆசை. இதுல காமெடி வில்லன் ரொம்ப பிடிச்சிருக்கு...’’ என்கிற ரவி மரியா இனி இயக்குநர் அவதாரம் முடியாத விஷயம் என்கிறார்.
‘‘மறுபடியும் இயக்க முடியாது. ஆனால், நடிப்பில் நிறைய படம் பண்ணமுடியும். அதனால, நடிக்கவே விரும்புறேன். இப்ப நடிகர் ஆதியுடன் ‘பார்ட்னர்’னு ஒரு படம் பண்றேன். அடுத்து, எழில் சார் இயக்கத்துல ‘ஜெகஜலா கில்லாடி’, சன்னி லியோன் நடிப்பில், ‘ஓ மை கோஸ்ட்’, சேரன் சார் நடிப்பில் ‘தமிழ்க்குடிமகன்’, பி.வாசு சார் இயக்கத்துல உருவாகும், ‘சந்திரமுகி 2’, சிறுத்தை சிவா சார் இயக்கத்துல ஒரு படம்னு 15 படங்கள் நடிச்சிட்டு இருக்கேன்...’’ என உற்சாக புன்னகையுடன் சொல்கிறார் ரவி மரியா.
ஆர்.சந்திரசேகர்
|