பொன்னியின் செல்வன் இயக்குநருக்கு செவாலியே விருது!
சென்னையின் நவீன நாடகக்காரர்கள் நன்கு அறிந்த பெயர் பிரவீன். கடந்த 30 வருடத்துக்கும் மேல் நவீன நாடகம், ஓவியம், நடனம், சினிமா என்று பல கலைகளில் தடம் பதித்தவருக்கு, சிவாஜி, கமல், சத்தியஜித்ரே போன்றவர்களுக்கு கிடைத்த செவாலியே விருதை ஃபிரெஞ்சு அரசாங்கம் கொடுத்து கௌரவித்திருக்கிறது.
 இவர், ஃபிரெஞ்சு மொழிக் கல்வி மற்றும் கலாசார நிறுவனமான அல்லயன்ஸ் ஃபிரான்சே சென்னைக் கிளையின் பிரசிடெண்ட் ஆக இருக்கிறார். ‘‘கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு ஃபிரான்ஸ் தேசம் கொடுக்கும் ஒரு கெளரவமிக்க விருது இது. செவாலியே என்பதற்கு பெருமைக்குரியவர் என்று அர்த்தம்.  கல்லூரிக் காலம் முதலே ஃபிரான்ஸ் தேசத்துடன் தொடர்பு உண்டு. சென்னைக் கூத்துப்பட்டறை மூலம் பல நாடகங்களை இயக்கியதோடுதான் என் கலை வாழ்வு ஆரம்பித்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அல்லயன்ஸ் நிறுவனம், எங்களைப் போன்ற ஆரம்பக் கட்ட கலைஞர்களுக்கு இலவசமாக நாடகத்துக்கான பயிற்சிக்கும், நிகழ்த்துதலுக்கும் இடம் கொடுத்ததை மறக்கவே முடியாது.
அல்லயன்ஸ் நிறுவனத்தில் கூத்துப்பட்டறை நாடகங்கள் நடைபெற்றபோது, நான் சில ஃபிரெஞ்சு எழுத்தாளர்களின் படைப்புகளை நாடகமாகப் போட ஆரம்பித்தேன். உதாரணமாக லா ஃபோன்டேனின் (la fontaine) ‘ஃபேபிள்’ (fables) நாடகம், புதுமைப்பித்தனுக்கு பிடித்த ஃபிரெஞ்சு எழுத்தாளரான மாப்பசானின் ‘ஓர்லோ’ (Horlo) போன்ற நாடகங்களைப் போட ஆரம்பித்தேன்.
கூத்துப்பட்டறையின் ந.முத்துசாமி, எங்களைப் போன்ற புதிய நபர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், தகப்பனாகவும் இருந்தார்...’’ என்னும் பிரவீன், ஃபிரெஞ்சு படைப்புகளை நாடகங்களாக அரங்கேற்றியதால் தனக்கு செவாலியே விருது கிடைக்கவில்லை என்கிறார். ‘‘நாடகம் தவிர நவீன ஓவியம், நடனம் என பல துறைகளில் ஈடுபட்டுள்ளேன்.
ஏன், தமிழ் சினிமாவில் கூட நடிப்பு, தோட்டா தரணிக்கு உதவி, ஆடை உதவி போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளேன். ஃபிரெஞ்சு எழுத்தாளர்களான மோலியரின் ‘டொன் ஜுவானை’ 1991லும், காம்யூவின் ‘கலிகுலா’வை 95லும், மோலியரின் ‘வேசக்காரனை’ 98லும் இயக்கியிருந்தாலும் போகப்போக பலவித கலை தொடர்பான வேலைகளைத்தான் பார்க்க ஆரம்பித்தேன். உதாரணமாக, நாடகத்தில்கூட ஷேக்ஸ்பியரின் ‘ரிச்சர்ட் த்ரீ’யை ‘பட்டம்’ என்ற பெயரில் 2002ல் நாடகமாக நிகழ்த்தினோம். இந்தக் காலக்கட்டத்துக்கு இடையில் நான் மேஜிக் லேன்டர்ன் எனும் பெயரில் ஒரு சிறு நாடக அமைப்பையும் தொடங்கிவிட்டேன். ஆரம்பித்த ஆண்டு 1992. கூத்துப்பட்டறை அல்லது எங்களைப் போல சிறு கலைஞர்களுக்கு நாடகங்களைத் தயாரிப்பதில் பல சிரமங்கள் இருக்கும். முக்கியமாக ஒரு நாடகத்துக்கு சுமார் 6 மாதங்களாவது பயற்சி இருக்கும். இதற்கான பணத் தேவை இருக்கும்.
இதனால்தான் ஆரம்பக் கட்ட நாடகங்கள் சிறு கூட்டம் கூடும் இடங்களில் நடைபெற வேண்டிய சூழல் அன்று இருந்தது. இதை உடைத்து கொஞ்சம் பெரிய அளவிலான ஆடியன்சுக்கு நாடகங்கள் போய்ச் சேர வேண்டும் என்று நினைத்தேன். அப்போது என் நினைவுக்கு வந்த ஆடியன்ஸ், பள்ளிக் குழந்தைகள். உடனே மேஜிக் லேன்டர்ன் எனும் அமைப்பை ஏற்படுத்தி பள்ளியில் நாடகங்களைப் போடுவதற்கான முயற்சிகளில் இறங்கினோம். சில ஸ்பான்சர்களும் கிடைத்தார்கள்.
இதை வைத்துதான் சில விழிப்புணர்வு நாடகங்கள், லா ஃபோன்டேனின் ‘ஃபேபிள்’ போன்ற கதைகள் நிறைந்த நாடகங்களைப் போட்டோம்...’’ என்று சொல்லும் பிரவீன், ‘பொன்னியின் செல்வன்’ நாடகத்தை பிரம்மாண்டமாக இயக்கியவர். ‘‘‘பொன்னியின் செல்வன்’ நாடகத்துக்குத் தேவையான பயிற்சி மற்றும் நிகழ்த்துவதற்கான உதவியை ஆரம்பத்தில் இலவசமாக வழங்கியது அல்லயன்ஸ்தான். பிற்பாடுதான் டிக்கெட் அடித்து பெரிய அளவில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 2014ல் நிகழ்த்தினோம்.
அப்போது அந்த நாடகத்தைப் பார்க்க மணிரத்னம், கே.பாலச்சந்தர் போன்றவர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். டைரக்டர் என்று என்னை மணிரத்னத்துக்கு அறிமுகம் செய்தார்கள். இருவாரம் கழித்து மணிரத்னத்தின் ஆஃபீசில் இருந்து ஒரு ஃபோன் வந்தது. ஃபோனில் பேசியவர் மணிரத்னத்தின் அசிஸ்டென்ட்களில் ஒருவரான சுதா கொங்கரா. ‘சூரரைப் போற்று’ பட டைரக்டர். அப்போது மணி சார் ‘ஆயுத எழுத்து’ எடுத்துக்கொண்டிருந்தார். ‘ஒரு சிறு பாத்திரத்தில் நடிக்க முடியுமா’ என்று சுதா கேட்டார். மணி சாரைப் போய்ப் பார்த்தேன். பாரதி ராஜாவின் அடியாளாக அதில் நடித்திருப்பேன். இதன்பிறகு தொடர்ந்து 2வது, 3வது அடியாளாக நடிக்கவே அழைப்பு வந்ததால் சினிமாவில் நடிப்பதைத் தவிர்த்தேன். நல்ல வாய்ப்பாக வந்தால் மட்டுமே நடிப்பது என முடிவு செய்தேன்.
அப்படித்தான் சுதா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராக நடித்தேன்...’’ என்று சொல்லும் பிரவீன், அல்லயன்ஸ் பிரசிடெண்டாக தமிழகத்துக்கான கலாசாரத் திட்டங்களை அமல்படுத்த இருக்கிறார். ‘‘அண்மையில் கலாசார ஆய்வு மற்றும் நிகழ்வுகளுக்காக அல்லயன்சில் ஒரு புது கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. அல்லயன்ஸ் முன்னெடுக்கும் கலாசார கலைத் திட்டங்களுக்கு இந்தக் கட்டடம் இலவசமாக வழங்கப்படும். வெளியாட்களுக்கு சிறுதொகையில் வாடகைக்கு விடப்படும்.
இத்தோடு தமிழ்நாட்டின் நலிந்த பிரிவினரில் திறமையானவர்களுக்கு கலைகளைக் கற்றுக் கொடுக்கும் திட்டமும் இருக்கிறது. மேஜிக் ேலன்டர்னின் கனவுத் திட்டமான மக்களிடம் கலைகளை கொண்டு போய்ச் சேர்ப்பதற்கான ஒரு மையத்தை உருவாக்கவேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை ஒன்றும் உள்ளது. பொதுவாக இன்றும்கூட நவீன நாடகங்களுக்கான இட வசதி இங்கே இல்லை. வெளிநாடுகளில் அப்படியில்லை. கலைஞர்களை அங்கீகரிக்கிறார்கள். அதேபோன்ற ஒரு நிலை இங்கும் வரவேண்டும்...’’ என்கிறார் பிரவீன்.
செய்தி: டி.ரஞ்சித்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|