உலகம் முழுவதும் வைரலான இலங்கைத் தமிழரின் பாடல் ஐயோ சாமி... நீ எனக்கு வேணாம்...



‘ஐயோ சாமி... நீ எனக்கு வேணாம்... பொய் பொய்யாய் சொல்லி ஏமாத்தினது போதும்...’சமீபத்தில் இலங்கையில் இருந்து வெளியாகி ட்ரெண்டான தனியிசைப் பாடலின் வரிகள் இவை. எப்படி தமிழகத்தில் உருவான ‘என்ஜாய் எஞ்சாமி...’ பாடல் உலகைக் கலக்கி ட்ரெண்ட் செட்டர் ஆனதோ, அதேபோல இப்போது ‘ஐயோ சாமி’ உலகத் தமிழர்களை உச்சரிக்க வைத்திருக்கிறது.
உலகம் முழுவதும் சுமார் ஒரு கோடிேய 25 லட்சம் பேர் இந்தப் பாடலைப் பார்த்து ரசித்துள்ளனர். இலங்கை நாடாளுமன்றத்திலும், மலேசியா தேர்தலிலும் கூட இந்தப் பாடல் ஒலித்திருக்கிறது. அவ்வளவு வைரலாகியிருக்கும் இந்தப் பாடலை எழுதியவர் இலங்கைக் கவிஞரும், தமிழருமான பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின்.

‘‘ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது ஒரு சாதாரண தனியிசைப் பாடல்தான். ஆனால், சினிமா பாடலைத் தாண்டி கவனம் பெற்றிருப்பது உற்சாக மனநிலையைத் தந்திருக்கிறது. யார் இந்த பொத்து வில் அஸ்மின் என என்னை பலரும் இப்போது இணையத்தில் தேடி வருகிறார்கள். சிலர் இதற்குமுன் நான் எழுதிய பாடல்களைக் கேட்டுப் பாராட்டுகின்றனர். நிறைய ஊக்கம் தருவதாக அமைந்திருக்கிறது...’’ என உற்சாகம்பொங்கச் சொல்லும் அஸ்மினின் பூர்வீகம் தமிழ்நாடு.

‘‘என் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம். என் உறவினர்கள் எல்லோரும் அங்கே இருக்கின்றனர். என் தாத்தா காலத்தில் வேலைநிமித்தம் இலங்கை வந்துவிட்டனர். நான் மட்டக்களப்பு பிராந்தியத்தில் அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற பொத்துவில் என்கிற ஊரில் பிறந்தேன். அப்பா உதுமா லெப்பை அரிசி ஆலை நடத்தினார். அம்மா ஆயிஷா இலங்கையைச் சேர்ந்தவர்.

மட்டக்களப்பு பிராந்தியம் என்பது நாட்டார் பாடல்களுக்கு பெயர்பெற்ற இடம். அங்கு பாமர மக்கள் இயல்பாகவே நாட்டுக்கவிதை பாடக்கூடியவர்கள். எனவே, என்னுடைய பரம்பரையில் இருப்பவர்கள் கவி பாடுவதில் வல்லவர்களாக இருந்தனர். என் அப்பா பேச்சாற்றல் மிக்கவர். சிறந்த வாசிப்பாளர். சிறுவயதிலேயே பத்திரிகை வாசிப்பை எனக்குள் கொண்டு வந்தவர். அப்படியாக வாசிப்பு என்னுள் பல கதவுகளைத் திறந்தது.

90களிலேயே ‘குங்குமம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் பத்திரிகைகளை இலங்கை வாசகசாலைகளில் நான் வாசித்திருக்கிறேன். இதனுடன் எங்கள் வீட்டில் 24 மணிநேரமும் இலங்கை வானொலி ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும். இளையராஜாவின் பாடல்கள் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. தூங்கும்போது பிபிசி செய்திகளைக்
கேட்டுக்கொண்டே தூங்குவேன்.

வானொலி என்பது எங்கள் வாழ்க்கையுடன் தொடர்புடையது. இவைகளெல்லாம் என்னை கவிஞனாக்கியது. இலங்கை தேசிய பத்திரிகைகளில் என்னுடைய கவிதைகள் வந்திருக்கின்றன.

1997ம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து கவிதைகள் எழுதி வருகிறேன். 2001ம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற ஒரு கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன். பேராதனை பல்கலைக்கழகத்தில் நடந்த தேசிய மட்ட கவிதைப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றேன்.

உயர்தரம் படிக்கிறபோதே இரண்டு கவிதை நூல்கள் கொண்டு வந்தேன். நான் கலை இலக்கிய மாணவன். பி.ஏ படித்திருக்கிறேன். ஆரம்பத்தில் பத்திரிகைத் துறையில் பணியாற்றினேன். சில ஆண்டுகள் ஆசிரியராகவும் பணி செய்தேன். யுனிசெஃப் நிறுவனத்தின் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் பணியில் இருந்தேன். பிறகு, இலங்கை அரசின் ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக 13 ஆண்டுகள் பணியாற்றினேன். அந்தக் காலகட்டத்தில்தான் பாடல்கள் எழுத ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் நானே இசையைக் கட்டமைத்து பாடல்கள் எழுதினேன். பிறகு, 2012ம் ஆண்டில் ‘நான்’ திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் சர்வதேச ரீதியாக பாடலுக்காக ஒரு போட்டி வைத்தார். அந்தப் போட்டியில் 20 ஆயிரம் பேர் பங்ககெடுத்தனர். அதில் கலந்துகொண்டு எழுதினதுதான் ‘தப்பெல்லாம் தப்பே இல்ல...’ பாடல். ‘நான்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது.

அடுத்து ஜிப்ரான் இசையில் ‘அமரகாவியம்’ படத்தில் ‘தாகம் தீரக் கானல் நீரே...’ பாடல் எழுதினேன். இதுமாதிரி 25 திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறேன்.
இப்போது முழுமூச்சாக தமிழ்ச் சினிமாவில் தொடர்ந்து பாடல்கள் எழுதும் நோக்கில் சென்னை வந்திருக்கிறேன். தமிழ்ச் சினிமாவில் மிகப்பெரிய அளவில் ஒரு வெற்றிப் பாடல் எழுத வேண்டும் என்கிற வேட்கையில் இருக்கிறேன்...’’ என்கிறவரிடம் ‘ஐயோ சாமி’ பாடல் பற்றிக் கேட்டோம்.

‘‘இலங்கையில் பொருளாதாரச் சிக்கல் வந்தபோது ‘வாழணுமா, சாகணுமா சொல்லுங்கள்...’ என்று தனியிசைப் பாடல் எழுதினேன். அதை அங்கே ஆர்ப்பாட்டத்திலேயே போட்டார்கள். அது வைரலானது. அந்தப் பாடலை 50 லட்சம் பேர் பார்வையிட்டனர். அதன்பிறகு நான் தமிழகம் வந்துவிட்டேன். ‘ஜமீலா’ என்கிற தொலைக்காட்சித் தொடருக்கு நான் எழுதிய பாடல் ஒளி
பரப்பாகி வருகிறது. இப்போது ‘திரும்பிப்பார்’ என்கிற படத்திற்கு பாடல் எழுதியிருக்கிறேன்.

இதற்கிடையில்தான் ‘ஐயோ சாமி’ பாடல் எழுதக் கேட்டனர். இந்தப் பாடலைப் பாடிய விண்டி குணதிலக, சிங்கள இசைத்துறையில் புகழ்பெற்ற ருகாந்த குணதிலக என்கிற மிகப்பெரிய பாடகரின் மகள். அவருடைய அம்மா சந்திரலேகா பெரேராவும் சிங்கள சினிமாவில் மிகப்பெரிய பாடகி.விண்டி குணதிலக அமெரிக்காவில் பிறந்தவர். ஆங்கிலக் கல்வி கற்றவர். தமிழே தெரியாதவர். அதேபோல இந்தப்பாடலுக்கு இசையமைத்திருக்கின்ற சனுகா விக்கிரமசிங்கே, இலங்கையில் பிரபலமான இசைக்கலைஞரின் மகன்.

இவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு இவ்வாறு காதல் தோல்வியை வைத்து ஒரு தனிப்பாடல் செய்கிறோம் என்றார்கள். சிங்களத்தில் அவர்கள் எழுதிவிட்டார்கள். அந்த சிங்களப் பாடலை தமிழில் அவ்வாறே எழுத வேண்டும் என்று என்னிடம் கேட்டார்கள். நான், ‘சிங்களப் பாடல் வரிகளின் கட்டமைப்பும், இசையும் வேறுமாதிரியானது. அதனால், அந்தப் பாடலை இவ்வாறு எழுதினால் அது வெற்றிபெறாது. ஆனால், இதனுடைய இசைக்கட்டுக்கு என்னால் எழுதமுடியும்’ என்று சொல்லி இந்தப் பாடலை எழுதினேன்.

அவர்கள் இருவரையும் இது வரைக்கும் நான் நேரில் சந்தித்தது கூட இல்லை. தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டோம். இந்தப் பாடல் சென்னையில்தான் உருவாக்கப்பட்டது. இந்தப் பாடல் உருவாக்கத்திற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது.

தமிழகத்தில் இருக்கிற என்னுடைய தோழி ஒருத்தி தன்னுடைய காதல் தோல்வியை என்னிடம் வேதனையாகப் பகிர்ந்துகொண்டார். தன்னை ஒருவர் ஏமாற்றிவிட்டதாகவும், அதனால் தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை நம்பியிருந்த தன்னை துரோகம் செய்துவிட்டார் என்றும் சொன்னவுடனே, அந்தப் பெண்ணின் மனப்பான்மையில் இருந்து நான் இந்தப் பாடலை எழுதினேன்.

கடந்த நவம்பர் 6ம் தேதி இந்தப் பாடல் வெளியானது. ஆனால், இவ்வளவு தூரம் கவனிக்கப்படும் என நான் நினைத்திருக்கவில்லை.  இந்தப் பாடலை உலகெங்கும் வாழும் தமிழர்கள் கேட்டு எனக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி வருகின்றனர். சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிரான மனநிலையில் இருந்தார்கள். சிங்களவர்கள் தமிழ்மொழியை உச்சரிக்க விருப்பம் இல்லாதவர்களாக இருந்தார்கள். ஆனால், இன்று இந்தப் பாடல் அதை மாற்றியிருக்கிறது.

இப்போது அடுத்த பாடல் விண்டி குணதிலகவுடன், ‘போடா போ...’ என்ற தலைப்பில் பெண்ணின் மனநிலையில் செய்திருக்கிறோம். அதேபோல் சனுகா இசையமைத்துப் பாடும், ‘அவளுக்கு கனடாவில் கல்யாணம்...’ என ஆணின் பார்வையில் ஒரு காதல் தோல்விப் பாடல் முடித்திருக்கிறோம். இப்படி இன்னும் பல புதிய பாடல்கள் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளன...’’ என உற்சாகமாகச் சொல்லும் அஸ்மின், ‘‘தமிழ்ச் சினிமாவில் சிறந்த பாடலாசிரியனாக வரவேண்டும் என்பதே என் கனவு. இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு பாடலாவது எழுத வேண்டும்...’’ கண்களில் நம்பிக்கை மிளிரச் சொல்கிறார் பொத்துவில் அஸ்மின்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்