வருங்காலம் பாப்பேவின் காலமாக இருக்கும்...
மூன்றாவது முறையாக அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்றிருக்கலாம். சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருதினை லியோனல் மெஸ்சி வாங்கியிருக்கலாம்.
ஆனால், கத்தார் உலகக் கோப்பையின் நாயகன் என்றால், அது ஃபிரான்ஸ் அணியின் 24 வயதே நிரம்பிய கிலியான் பாப்பே என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இப்படியொரு இறுதிப்போட்டியை இதுவரை யாரும் கண்டிருக்கமாட்டார்கள். அர்ஜென்டினா அணியினரே கூட முதல்பாதியில் இரண்டு கோல்கள் அடித்தவுடன் வெற்றி நம் வசம் என்கிற நம்பிக்கையிலேயே இருந்தனர். அந்த நம்பிக்கையை இரண்டாவது பாதியில் தவிடுபொடியாக்கி அர்ஜென்டினாவுக்கு கிலி ஏற்படுத்தியவர் கிலியான் பாப்பே.

கடந்த 2018ம் ஆண்டு உலகக் கோப்பையில் ரவுண்ட் 16 சுற்றிலேயே அர்ஜென்டினாவை 4 - 3 என்ற கோல் கணக்கில் ஃபிரான்ஸ் வென்றது. அப்போதும் கிலியான் பாப்பேதான் இரண்டாவது பாதியில் இரண்டு கோல்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.  ஆனால், இம்முறை மூன்று கோல்கள் அடித்து சமநிலைப்படுத்தினாலும் பெனால்டியில் அர்ஜென்டினா வெற்றியைத் தனதாக்கியது. இருந்தும் பாப்பேயின் ஆட்டத்தைக் கண்டு உலகமே மெய்மறந்தது. அவரின் வேகமும், பந்தை ட்ரிப்பிள் செய்யும் விதமும், சட்டென கோல் போடும் திறனும் அவரை வியந்து பேச வைத்திருக்கிறது. உலக ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக மாறியிருக்கிறார் பாப்பே.  1966ம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பிறகு இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் பாப்பே. அப்போது இங்கிலாந்து அணி வீரர் ஹர்ஸ்ட், மேற்கு ஜெர்மனியுடனான இறுதியாட்டத்தில் மூன்று கோல்கள் அடித்தே சாதனையாக இருந்தது. இதுமட்டுமல்ல. இந்த உலகக் கோப்பையில் எட்டு கோல்கள் அடித்து அதிக கோல் அடித்த வீரருக்கான கோல்டன் பூட் விருதையும் தன்வசப்படுத்தியுள்ளார் பாப்பே. தவிர, சிறந்த வீரருக்கான சில்வர் பால் விருதும் வென்றிருக்கிறார்.
 பாரிஸின் புறநகரான போன்டியில் 1998ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பிறந்தவர் பாப்பே. அந்த ஆண்டுதான் ஃபிரான்ஸ் கால்பந்து அணி முதன்முதலாக உலகக் கோப்பையை வென்றிருந்தது. அப்போது ஃபிரான்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் இப்போது அணிக்குப் பயிற்சியாளராக இருக்கும் டிடியர் டெஷாம்ப்ஸ்தான். இந்த இரண்டையும்கூட இப்போது ஒற்றுமைப்படுத்தி வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.
பாப்பேவின் தந்தை வில்ஃப்ரைட் பாப்பே, கேமரூனை பூர்வீகமாகக் கொண்டவர். கால்பந்து பயிற்சியாளரும் கூட. தாய் ஃபைஸா லமாரி, அல்ஜீரியாவைச் சேர்ந்தவர். கைப்பந்து வீராங்கனை. இரண்டு பேருமே விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் கிலியானுக்கும் விளையாட்டில் அதீத ஆர்வம். தந்தையின் வழிகாட்டு தலில் கால்பந்து பயிற்சியை ஆறு வயதில் தொடங்கினார்.
ஏஎஸ் போன்டி கால்பந்து கிளப் அணிக்காக விளையாடினார். அங்கு பயிற்சியாளராக இருந்த அன்டோனியோ ரிக்கார்டி சிறந்த பயிற்சியை வழங்க அங்கிருந்து பாப்பேவின் பயணம் தொடங்கியது. இவரின் வளர்ப்பு அண்ணன் ஜிரெஸ் கெம்போ கோகோவும், உடன்பிறந்த தம்பி எதன் பாப்பேவும் கூட கால்பந்து வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறகு, கிலியான் பாப்பே, ஃபிரான்ஸ் கால்பந்துக் கூட்டமைப்பின் கண்காணிப்பில் இயங்கும் தேசிய கால்பந்து மையத்தில் சேர்ந்து பயிற்சி மேற்கொண்டார். அதுவே அவரை கிளப், தேசிய அணிக்களுக்குள் அழைத்துச் சென்றது.
2015ம் ஆண்டு மொனாக்கோ அணிக்காக லீக் ஒன்னில் அறிமுகமானார். அப்போது பாப்பேவின் வயது 16. மொனோக்கோ அணியின் இளம்வீரர் என்ற பெயருடன், இளம் வயதில் மெனானோக்கோ அணிக்காக கோல் அடித்தவர் என்கிற பெயரையும் பெற்றார். பாப்பேவின் அதிரடியான நுணுக்கமான ஆட்டம் பல கிளப்களுக்கும் பிடித்துவிடவே அவரைத் தங்கள் பக்கம் இழுக்க துடித்தன. 2017ம் ஆண்டு பாரிஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப் அணிக்காக 180 மில்லியன் யூரோக்களுக்கு ஒப்பந்தமானார்.
இந்திய மதிப்பில் தோராயமாக 1,580 கோடி ரூபாய்.இதன் மூலம் நெய்மருக்குப் பிறகு அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட இரண்டாவது வீரர் ஆனார் பாப்பே. இந்த பாரிஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப் அணிக்காக இதுவரை 128 போட்டிகளில் 117 கோல்கள் அடித்துள்ளார். பல வெற்றிக் கோப்பைகளையும் பெற்றுத் தந்துள்ளார்.
2017ல் பாப்பேவின் ஆட்டத்தைப் பார்த்து வியந்த பயிற்சியாளர் டெஷாம்ப்ஸ் அவரை ஃபிரான்ஸ் தேசிய அணியில் ஆட அழைத்தார். ஃபிரான்ஸ் அணியில் இடம்பிடித்தவர், பிறகு, 2018ம் ஆண்டு உலகக் கோப்பை அணியிலும் இடம்பெற்றார்.
அந்த உலகக் கோப்பையில் பெருவுடனான ஆட்டத்தில் ஒரு கோல் அடித்து அணியை வெற்றிபெறச் செய்து ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருதும் பெற்றார்.உலகக் கோப்பையில் பீலேவிற்குப் பிறகு இளம் வயதில் கோல் அடித்த இரண்டாவது வீரர் என்கிற பெருமையும் பெற்றார். அந்த உலகக் கோப்பையில் மட்டும் நான்கு கோல்கள் அடித்தார். இதனால், ஃபிபாவின் இளம் வீரர் விருது அப்போது பாப்பேவிற்குக் கிடைத்தது. ‘‘இறுதிப் போட்டியில் கோல் அடிப்பது எப்போதுமே சிறப்புதான். இதுபோன்ற தருணங்களுக்காக நான் கடுமையாக உழைக்கிறேன். இது முடிவல்ல. ஏனென்றால் எனக்கு மேலும் செல்ல வேண்டும் என்கிற லட்சியம் உள்ளது. எனது திறன் என்னை அனுமதிக்கும் அளவுக்கு செல்ல விரும்புகிறேன். இவ்வளவு இளம் வயதில் உலகக் கோப்பையை வெல்வது உங்களுக்கு பல்வேறு கதவுகளைத் திறக்கும். எனவே நான் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமென நினைக்கிறேன்...’’ என அப்போது சொன்னார் பாப்பே.
இந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியிலும் அவர் மட்டுமே அணிக்காக மூன்று கோல் அடித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இதில் கடைசியாக வழங்கப்பட்ட பெனால்டியும் சேர்த்தால் நான்கு கோல்கள். இனிவரும் காலங்களில் ஜாம்பவான் பீலே, மரடோனா, மெஸ்சி, கிறிஸ்டியனோ ரொனால்டோ என உலகம் போற்றும் உன்னத கால்பந்து வீரர்களின் வரிசையில் பாப்பேவும் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதை கால்பந்து நிபுணர்களும் ஆமோதிக்கின்றனர். வருங்காலக் கால்பந்து உலகம் பாப்பேவின் காலமாக இருக்கும் என அவர்கள் கணிக்கின்றனர்.
பேராச்சி கண்ணன்
|