ரீவைண்ட் 2022- வரவு எட்டணா செலவு பத்தணா..!



கடந்த 2020, 2021ம் ஆண்டுகள் கொரோனாவால் முடங்கிப்போயின. இந்த 2022ம் ஆண்டு தொடக்கம் கூட கொரோனா பரவலால் ஸ்தம்பித்தது. ஆனால், பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு கொரோனா பரவல் குறைந்து, ஒருகட்டத்தில் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்ற நிலை வந்தபிறகே பலரும் ஆசுவாசமாயினர். 
கொரோனாவால் முடங்கிப் போயிருந்த தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்தன. இப்போது நிலைமை ஓரளவுக்கு சீராகியிருக்கிறது. இந்நிலையில் 2022 ம் ஆண்டு பொருளாதார நிலைமையை கொஞ்சம் ரீவைண்ட் செய்தோம். எப்படியிருந்தது? 2023ம் ஆண்டு எப்படியிருக்கும்?

இதுகுறித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி பொருளாதாரத் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் முத்துராஜாவிடம் பேசினோம். ‘‘பொதுவாக, பொருளாதாரப் பிரச்னைகளை வளர்ச்சி, வருமானம், வறுமை, வறட்சி, வயதானவர்கள், வாழ்க்கைத்தரம், பாலின பாகுபாடுனு சில காரணிகளை வைத்து அளவீடு செய்கிறோம். இதனுடன் விலையேற்றமும், பணவீக்கமும் பார்க்கப்படுது.

இந்த அடிப்படையில் பார்க்கிறப்ப உலகளவில் 2022ல் எதிர்பார்த்த வளர்ச்சியில்ல. கோவிட் சூழல்ல இருந்து மீண்டு வந்தாலும்கூட எதிர்பார்த்த வளர்ச்சியில்ல. நிறைய நாடுகள்ல 2021, 2022ல் ஓரளவு வளர்ச்சி இருந்தது. ஆனா, அது நாட்டின் மற்றும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கான வளர்ச்சியாக இருக்கல.

சீனாவில் கோவிட் தாக்கம் அதிகமாக இருந்தாலும்கூட அவங்க பொருளாதாரத்துல பெரியளவில் பாதிக்கப்படலனு சொல்றாங்க. ஆனா, அங்கிருந்து வரும் தகவல்கள் நம்பகத்தன்மை உடையதா என்பது கேள்வியாக இருக்கு.

ஆக, 2022ல் உலகளவில் வளர்ச்சினு பார்க்கிறப்ப பின்தங்கியே இருந்திருக்கு. 2023ம் ஆண்டு இதைவிட மோசமாகலாம்னு உலக வங்கி, உலகப் பொருளாதாரக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சொல்றாங்க. ‘வளர்ச்சி விகிதம் குறையுது. பார்த்து இருங்க’னு மற்ற நாடுகளை எச்சரிக்கை செய்திருக்காங்க.  

ஆனா, இந்தியாவைப் பொறுத்தவரை 2021ம் ஆண்டுக்கு 2022ம் ஆண்டு பரவாயில்லனும், 2023ம் ஆண்டு 2022ஐவிட சிறப்பாகவே இருக்கும்னும் அந்த அமைப்புகள் கணிக்கிறாங்க.
ஆனா, தேவையான வளர்ச்சி இருக்காதுனுதான் சொல்லணும். இதுசம்பந்தமாக நிறைய கருத்துக்களும் இருக்குது. வளர்ச்சி என்பது வருமானத்தின் அடிப்படையில்தான் பார்க்கப்படுது. பல நாடுகள்ல தேசிய வருமானம் நல்லாயிருக்கு. ஆனா, தனி நபர் வருமானம் குறைஞ்சிருக்கு. 2023ல் இன்னும் குறைவாக இருக்கும்னுதான் கணக்கிடுறாங்க. ஆனா, இந்தியாவைப் பார்க்கிறப்ப நடுத்தரமாக இருக்கும்னு பாசிட்டிவ்வா சொல்றாங்க.

அப்புறம் ஒருபக்கம் வருமானம் கூடுது வளர்ச்சி கூடுதுனு சொல்றோம். ஆனா, வறுமையும் கூடிட்டு இருப்பதை கவனிக்க வேண்டியிருக்கு. பொதுவா வருமானமும், வளர்ச்சியும் கூடும்போது வறுமை குறையணும் இல்லையா? ஆனா, இப்ப வறுமை கூடியிருக்கு. அப்ப 2022ல் ஏற்றத்தாழ்வு மிக்க பொருளாதாரம் இருந்திருக்கு.இதை Sustainable Development Goalsனு இலக்கு வைத்து செயல்படுகிற ஐநா குழு சொல்றாங்க. ஒவ்வொரு நாட்டிலும் நீடித்த நிலையான வளர்ச்சி வரணும்னு 17 இலக்குகள் சொல்லி உலக நாடுகளை எச்சரிக்கிறாங்க.

‘வளர்ச்சி அடைகிறீர்கள். ஆனா, வறுமையை ஒழிக்க முடியல. அதுக்கான திட்டமிடுதல் செய்யுங்க’னு வலியுறுத்துறாங்க. 2022ல் நிறைய நாடுகள்ல வறுமையின் கொடுமை இருந்திருக்கு. இந்தியாவிலும் வறுமை கூடியிருக்கு.சமீபத்துல ஜி.எஸ்.டி வருமானம் கூடியிருக்குனு மத்திய நிதி அமைச்சர் சொன்னதை படிச்சிருப்போம். ஆனா, அதே சமயம் வேலையின்மையும், வறுமையும் கூடியிருக்கு. அப்ப எங்கேயோ கோளாறு இருக்குனுதான் அர்த்தம்.

நாங்க பகிர்வு பொருளாதாரம் (Distribution Economics)னு சொல்வோம். அது சரியா நடந்திருக்கானு பார்க்க வேண்டியிருக்கு. அதாவது, பெறப்பட்ட மொத்த வருமானம் மற்ற எல்லோருக்கும் சரியா பகிரப்பட்டிருக்கானு பார்க்கணும்.

அதனால, 2023லும் இந்தப் பேச்சு இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா, நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாக, 2030க்குள் உலகில் உள்ள எல்லா நாடுகளும் மிக முக்கிய பொருளாதாரப் பிரச்னைகளைக் களையணும்னு சொல்லப்பட்டிருக்கு. ஆனா, வருமானம் சரியாக பகிரப்படும்போதே பிரச்னைகள் களையும். அதனால, இதை சரியாகக் கையாளவில்லை என்றால் 2023லும் பிரச்னையாக இருக்கும்னு எதிர்பார்க்கிறாங்க.

அடுத்து, வறட்சி. இதை சுற்றுச்சூழல் பொருளாதாரத்துல கொண்டு வர்றாங்க. ஏன்னா, காலநிலை மாற்றத்தால் ஒருபக்கம் வெள்ளம் போகுது. இன்னொரு பக்கம் வறட்சி ஏற்படுது. இந்தப் போக்கு 2022ல் நிறைய இருந்தது. 2023லும் நிறைய நாடுகள் இந்தப் பிரச்னைகளைச் சந்திக்கும்னு சொல்றாங்க. காலநிலை மாற்றம் இப்ப பொருளாதாரத்துல பெரிய பிரச்னையா உருவெடுத்திருக்கு.

தட்பவெப்பநிலை மாறுவதால் பாதிக்கப்படுவது மனித வாழ்க்கை மட்டுமல்ல; விவசாயமும், தொழிலும்தான். இது பொருளாதாரத்தைப் பாதிக்கும். இதை 2023ல் கணக்கில் கொண்டு நிறைய நாடுகளும், நம் இந்தியாவும், இங்குள்ள மாநிலங்களும் பேசி முயற்சி எடுப்பாங்கனு நான் நினைக்கிறேன்.

அப்புறம், வயதானவர்கள். இன்னைக்கு நம் நாட்டை நிறைய இளைஞர்கள் உள்ள நாடென சொல்கிறோம். ஆனா, 2047ல் நாம் எப்படி இருக்கணும்... எப்படி இருக்கப் போகிறோம்... அதில் சாதக, பாதகங்கள் என்னனு ஒன்றிய அரசே ஓர் அறிக்கை வெளியிட்டு இருக்காங்க.

அதுல முதல் முக்கிய பிரச்னையே இந்த வயதானவர்களை எப்படி பார்க்கிறது என்பதுதான். நமக்கு வயதானவர்கள் ஒரு முதலீடு மாதிரி. ஒருபக்கம் வீட்டுல அவங்க தங்கள் அனுபவங்களை பகிர்வது மூலம் நமக்கு நல்ல விஷயங்கள் கிடைக்கும். அப்புறம், குழந்தைகளைப் பார்த்துகிறவர்களாகவும் இருப்பாங்க.

ஆனா, இன்னொரு பக்கம் அவங்களுக்கான மருத்துவ செலவு, உணவு செலவு, அவர்களை யார் பாதுகாப்பது என்பது போன்ற பல விஷயங்கள் இருக்குது. இது பொருளாதாரத்தில் மிக முக்கிய பிரச்னையாக மாறிட்டு வருது. ஏன்னா, இவங்களால வருமானம் வராது. ஆனா, ஒரு குடும்பத்தின் செலவு கூடிட்டே வரும். மேற்கத்திய நாடுகள்ல வயதானவர்கள் அனைவரும் கட்டாயமாக இன்சூரன்ஸ் வச்சிருக்காங்க. அந்தக் கார்டை வச்சு அவங்க மருத்துவம் உள்ளிட்ட விஷயங்களை கவனிச்சிக்கலாம். நம் நாட்டில் இன்சூரன்ஸ் பொருளாதாரம் அந்தளவுக்கு வளரல.

இந்தச் சூழல்ல வயதானவர்களின் பொருளாதாரம் என்பது சிக்கலாக இருக்கும். அதனால், வருகிற 2023ம் ஆண்டு அரசு வயதானவர்களுக்கான செலவு திட்டமிடல் செய்யணும். அதாவது, மருத்துவம் உள்ளிட்ட நேரடி செலவுகள் செய்வதும், இன்சூரன்ஸ் போல மறைமுக செலவுகள் செய்வதுனும் இருக்கணும்.

அப்போதுதான் வயதானவர்கள் பொருளாதாரம் சிக்கலாக மாறாது.
அப்புறம், வாழ்க்கைத்தரம். 2021, 2022ல் வாழ்க்கைத்தரம் மேம்படலனு சொல்றாங்க. இது 2023ல் தொடரும்னு சொல்லப்படுது. இதுக்கு முக்கிய காரணம் வருமானம் இல்ல. வேலையின்மை. வேலையின்மையைத் தாண்டி வேலையிழப்பு நடந்திருக்கு. குறிப்பா, கோவிட் தொற்றால் நிறையப் பேர் வேலையை இழந்திருக்காங்க.

உலகளவில் வேலையின்மை என்பது நிரந்தரப் பிரச்னை. அப்புறம், வேலையில் திறமையின்மை பிரச்னையும் இருக்குது. ஆனா, இப்ப இதனுடன் வேலையிழப்பு செய்வது புதுப் பிரச்னையாக உருவெடுத்திருக்கு. இந்தியா மட்டுமல்ல, நிறைய நாடுகள்ல வேலையிழப்பு செய்வது நடந்திருக்கு. 2023ல் இதை சரிசெய்வதற்கான முயற்சிகள் நடக்கும்னு எதிர்பார்க்கலாம்.  

அடுத்து விலையேற்றமும், பணவீக்கமும் 2022ல் பெரும் பிரச்னையாக இருந்தது. 2023லும் அது உலக அளவிலும், தேசிய அளவிலும் பிரச்னையாக இருக்கும்னு சொல்றாங்க.
அப்புறம், பாலின பாகுபாடு. பத்தாண்டுகளுக்கு முன்பைவிட இப்ப பாலின பாகுபாட்டில் அதிகமான விழிப்புணர்வு வந்திருக்கு. இதைப்பத்தி உலக பொருளாதார அறிக்கை, இந்திய பொருளாதார அறிக்கை எல்லாவற்றிலும் பேசியிருக்காங்க.

ஆண், பெண் பாலினத்துல கூலி வேறுபாடு, வேலை வேறுபாடு, அவங்களுக்கான சமூக மதிப்புல வேறுபாடுனு எல்லாவற்றிலும் வேறுபாடு பார்க்கிறோம். இது களையப்படணும்னு முயற்சி செய்றாங்க. இப்ப நிதி ஆயோக் பாலின பாகுபாட்டை குறைப்பதற்கான வேலைைய கடும்முயற்சி எடுத்து செய்றாங்க. ஆண்டு அறிக்கையை பார்க்கிறப்ப 2021 - 22ல் நல்ல முயற்சி எடுத்திருக்காங்க. 22 - 23லும் முயற்சி எடுப்பாங்கனு எதிர்பார்க்கலாம்.

அப்புறம் இந்திய பொருளாதாரத்தை உலக வங்கியும், சர்வதேச நிதியமும் பாசிட்டிவ்வா சொல்றாங்க. நம் பிரதமர், நிதி அமைச்சர் அறிக்கையை பார்க்கும்போது கொஞ்சம் அபரிமிதமா இருக்கும். அவங்க நாம் ரொம்ப முன்னேறிட்டோம்னு டபுள் டிஜிட் சதவீதத்தைச் சொல்றாங்க. ஆனா, பன்னாட்டு நிறுவனங்கள் அப்படியிருக்க வாய்ப்பில்ல. சராசரியாக 8 சதவீத வளர்ச்சி அடையலாம்னு சொல்றாங்க. அந்த எட்டு சதவீதமே மற்ற நாடுகளை ஒப்பீடு செய்யும்போது பெரிசுதான். ஆனா, அது நமக்கு போதுமான வளர்ச்சியாக இல்ல.

அப்புறம், 2023ல் ஜி.எஸ்.டி பெரிய விஷயமாகப் பேசப்படும். இந்த ஜி.எஸ்.டி கவுன்சில்ல பாதகம் என்னனா, எந்த மாநிலங்கள் உற்பத்தி சார்ந்த மாநிலங்களோ அந்த மாநிலங்களுக்கு அது சாதகமாக இல்ல. அதனால, இதை மறுவரையறை செய்யவேண்டியிருக்கு.

அதாவது, மாநிலங்களுக்கு இடையே இருக்கிற பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் மாவட்டங்களுக்கிடையே இருக்கிற பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை களைவதுபோல ஜி.எஸ்.டி இருக்கிறமாதிரி 2023ல் பேசுவாங்கனு நான் எதிர்பார்க்கிறேன்.

அடுத்து, 2023ல் இந்தியா ஜி20 மாநாட்டை லீட் பண்ணப் போறாங்க. அதுக்கான முயற்சியா உலக நிறுவனங்கள் இந்தியாவைப் பற்றி சொல்லும் பல குறைகளைக் களைவாங்கனு நினைக்கிறேன். அதனால பாலின பாகுபாடு, சுற்றுச்சூழல் சம்பந்தமான பிரச்னை, இளைஞர்களிடம் உள்ள வேலையில்லா நிலை, வேலையிழப்பு உள்ளிட்டவை கொஞ்சம் சரியாகலாம்னு தோணுது. 

தமிழகம்னு பார்க்கிறப்ப நாம் நம்பர் ஒன் மாநிலம்னு சொன்னாலும் கூட அது நிலைத்திருக்கணும். அதுக்கு நிதி நிர்வாகம் முயற்சி செய்யணும். அதாவது எங்கெல்லாம் தேவையில்லாத செலவுகள் இருக்கோ அதைக் குறைக்கணும்.

கடந்த பத்தாண்டுகள்ல தமிழக அரசு அதிகமாக செலவு செய்ததால கடன் சுமை கூடியிருக்கு. இப்ப நம்பர் ஒன் மாநிலம்னு இருந்தாலும் கடன் அதிகமிருக்கு. இந்த கடனை அடைக்கும் முயற்சிகள் குறித்து 2023ல் பேசுவாங்கனு நினைக்கிறேன்.அப்புறம், மானியம். இதை ஒழுங்குபடுத்தணும்.

உண்மையில் கொடுக்கவேண்டிய நபர்களுக்கு கொடுக்கணும்னு தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கணும். அடுத்து, வரியை ஒழுங்குபடுத்தணும். எந்தெந்த வரியில் ஏமாற்றுதல் இருக்கோ, எந்தெந்த வரியில் தப்பிக்க வழியிருக்கோ அதை சரிசெய்யணும். வரிக் கொள்கை சுமையா இருக்கக்கூடாது. விரும்பிக் கட்டுகிற மாதிரி இருக்கணும். அதேநேரம் வசூலும் அதிகரிக்கணும். 2023ல் இதைப்பற்றியும் பேசுவாங்கனு எதிர்பார்க்கிறேன்.

கடைசியாக ரெண்டு விஷயத்தை முக்கியமானதாக பார்க்கிறேன். ஒண்ணு திறன் மேம்பாடு. அது எந்தவித திறனாகவும் இருக்கலாம். அதை மேம்படுத்தணும். அடுத்து பகிர்வு மேம்பாடு. அதாவது எங்க அதிகமாகப் போகுது, எங்க குறைவாக இருக்குனு பார்த்து அதைக் களையணும். குறிப்பா, எந்தெந்த மாவட்டங்கள் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் பின்தங்கி இருக்கோ அதை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கணும். இந்த ரெண்டையும் சரியாகக் கையாண்டால் தமிழக அரசு 2022ல் இருந்ததைவிட 2023ல் சிறப்பாக நடைபோடும். முழுமையான நம்பர் ஒன் இடத்தையும் அடையும்.

பேராச்சி கண்ணன்