நடிக்கிறதை விட்டுட்டா.. நான் எப்படி பூவா சாப்பிடுவது..?



கோவை சரளாவின் லைஃப் டிராவல்

தமிழ் சினிமாவின் தலைசிறந்த நகைச்சுவை நடிகைகளில் ஒருவரான கோவை சரளா, இப்போது ‘செம்பி’யில் மிரட்ட வந்துள்ளார்.

சரளா என்பதுதான் உங்கள் உண்மையான பெயரா?

என் பெயர் சரளகுமாரி. சினிமாவுக்கு வந்த பிறகு பத்திரிகைக்காரர்கள் கோவை சரளா என்று மாற்றினார்கள். அப்படி, பத்திரிகைக்காரர்கள் கொடுத்த பெயர்தான் கோவை சரளா.

காமெடியில் எப்படி மாஸ்டராக உயர்ந்தீர்கள்?

பெரியளவில் எந்த பயிற்சியும் எடுக்கவில்லை. என் முகம் சினிமாவில் தெரிந்தால் போதும் என்றுதான் நினைத்தேன். சிலர் செகண்ட் ஹீரோயின் பண்ணலாம் என்று சொன்னார்கள். சிலர் காமெடிக்கு செட்டாவீங்கனு சொன்னார்கள். சரி, காமெடி என்னால் பண்ணமுடியுமா என்று யோசித்தேன். எனக்கு  கூச்ச சுபாவம் அதிகம். சினிமாவில் நீடித்து நிற்கணும்னா காமெடி சரியான சாய்ஸா இருக்கும் என்று ஆலோசனை சொன்னார்கள்.

ஆரம்பத்தில் காமெடி காட்சிகளில் வெட்கத்தோடும் கூச்சத்தோடும் நடித்தேன். பிறகு அந்த கேரக்டராகவே மாறி நடிக்கும் வித்தையைத் தெரிந்து கொண்டேன்.

மேடையில் இருந்து சினிமாவுக்கு மாறுவது கடினமாக இருந்ததா?

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட நான் எந்த வித நடிப்புப் பயிற்சியும் இல்லாமல் இருந்தேன். என்னுடைய அப்பா ராணுவ வீரர். வீட்ல எல்லாமே சிஸ்டமேட்டிக்காக இருக்கும். காலையில் 5 மணிக்கு எழுந்துகொள்ள வேண்டும். வீடு, வாசலைச் சுத்தம் செய்து கோலம் போடணும். சாணியை பக்கெட்டில் கரைத்து வாசலில் தெளிக்கணும். இளம் வயதில் வீட்டு நிர்வாகத்துக்குரிய அடிப்படை வேலைகளைச் செய்திருக்கிறேன்.

அந்த பழக்கத்தால் இன்றளவும் பணியாளர்கள் உதவி இல்லாமல் என் தேவைகளை நானே செய்துகொள்கிறேன்.

அப்படி கட்டுப்பாடு நிறைந்த குடும்பத்தில் டிராமா என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. அப்பாவிடம்  டிராமாவில் நடிக்க பர்மிஷன் கேட்டபோது மறுத்தார். பல நாள் சாப்பிடாமல் ஸ்டிரைக் பண்ணிய பிறகுதான் வெற்றி கிடைத்தது.  

உள்ளூர் நாடகக் குழுவில் கோவை அனுராதா, கே.எஸ்.ஆர்.ட்ரூப், விமலா ரமணி ஆகியோருடன் இணைந்து  நடிக்க ஆரம்பித்தேன். விடிய விடிய நடித்த அனுபவமெல்லாம் கிடையாது. அமெச்சூர் ட்ரூப் என்பதால் மாலை 6 மணிக்கு தொடங்கி 9 மணிக்கெல்லாம் முடிந்துவிடும். ஐம்பது நாடகங்களில் நடித்திருப்பேன்.  

அந்த டிராமா  பின்னணி சினிமாவுக்கு உதவியாக இருந்தது. குறிப்பாக டயலாக் டெலிவரிக்கு உதவியது. சினிமாவுக்கு வந்த பிறகுதான் கோவை ஸ்லாங் இருப்பது தெரிந்தது. மணிமேகலை என்ற ஸ்டேஜ் ஆர்டிஸ்டமிருந்துதான் கோவை ஸ்லாங் பேசுவதை கற்றுக்கொண்டேன்.

‘நகைச்சுவையின் ராணி’யான நீங்கள் குணச்சித்திர வேடத்தில் ‘செம்பி’யில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டீர்கள்..?

என்னை நகைச்சுவை ராணி என்றெல்லாம் சொல்லாதீங்க. நான் சினிமாவை கற்றுக்கொண்டிருக்கும் நடிகை மட்டுமே. ஆயிரக்கணக்கில் சினிமா பாடிலேங்வேஜ் இருக்கிறது. அதை கத்துக்கணும். ‘செம்பி’யில் என்னைத் தேர்வு செய்ததற்கு தயாரிப்பாளார்கள் ரவீந்திரன், அஜ்மல்கான், ரியா, இயக்குநர் பிரபு சாலமனுக்கு நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் என்னிடம் வந்தார்கள்.

சிலசமயம் நான் இப்படி யோசிப்பேன்... நிறைய காமெடி படங்கள் பண்ணிட்டோம். நம்முடைய பேர் சொல்ற மாதிரி ஒரு படம் வித்தியாசமாக அமையலையே என்று.

ஆண் நடிகர்களைப் பொறுத்தவரை கவுண்டமணி, வடிவேல், விவேக் போன்றவர்களுக்கு அப்படி அமைந்தது. அந்த நிலையில் என்னுடைய வழக்கமான பாணியிலிருந்து வெளியே வந்து வேறு ஒரு டைமன்ஷனில் நடிக்கணும் என்று யோசித்தேன்.

அப்போது இயக்குநர் பிரபுசாலமன் ‘செம்பி’ கதையைச் சொன்னார். கதை கேட்டதும் பயந்தேன். என்னால் அப்படி நடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அவர் சொன்ன கதை குருவி தலையில் பனங்காய் வைத்த மாதிரி இருந்தது. ஆனால், கேரக்டரை விடுவதற்கும் மனசு இல்லை.

நான் எப்படியாவது நடித்தே ஆகணும் என்று கமிட்டானேன்.படப்பிடிப்புல ‘டயலாக் எல்லாம் ஓகே. பெர்ஃபாமன்ஸை பொறுத்தவரை நான் எதுவும் பண்ணமாட்டேன். நீங்கதான் சொல்லணும்’ என்று பிரபு சாலமனிடம் சொன்னேன். அவர், ‘கவலையே படாதீங்க, நீங்க கண் அசைக்கிற மாதிரி இருந்தாலும் என்னை கேட்காமல் பண்ணமுடியாது’ என்றார்.  

பிரபுசாலமனுடன் வேலை செய்தது ரொம்ப எளிதாக இருந்தது. அவரை பொறுமையின் சிகரம்னு சொல்லலாம். படத்துல எல்லா கேரக்டரும் அவர்தான். பொம்மலாட்டத்துல பொம்மைகளை ஆட்டுவிக்கும் பொம்மலாட்டக்காரராக எங்களை அன்பால் ஆட்டு வித்தார். இந்தப் படத்தோட மொத்த வெற்றியும் அவருக்குதான் போய்ச் சேரும். என்னுடன் நடித்த குழந்தை நிலா, பத்மினி அம்மா மாதிரி நடிப்புல பின்னியெடுத்தது. மியூசிக் டைரக்டர் பிரசன்னா, ஒளிப்பதிவாளர் ஜீவன் என அனைவரும் நூறுசதவீதம் வேலை பார்த்தார்கள்.

கூரை மீது ஏறி நடிச்சபோது கோரைப் புற்கள் கால்களை பதம் பார்த்துவிட்டது. மரத்தில் ஏறி தேன் எடுப்பது மாதிரி ஒரு காட்சி. ஐந்து நிமிஷம் என்று சொல்லி நான்கு மணி நேரம் மரத்தில் உட்கார வைத்துவிட்டார்கள். மரத்துல உட்கார்ந்ததுக்கு பயப்படவில்லை. தேனீக்கு பயந்தேன். தேனீ கொட்டிவிடும்  என்று அனிச்சையாக நாம் கொஞ்சம் ரியாக்‌ஷன் கொடுத்தாலும் கீழே விழ வேண்டிய சூழ்நிலை இருந்தது. வீழ்ந்தால் எலும்புகூட கிடைக்காத மாதிரியான பள்ளத்தாக்கு அது.

‘செம்பி’யில் எங்கிட்ட நகைச்சுவையை எதிர்பார்க்க வேண்டாம். அதற்கு தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத் என நிறைய பேர் இருக்கிறார்கள். எல்லாரும் விருதுகள் வாங்குமளவுக்கு பெஸ்ட் பண்ணியிருக்கிறார்கள்.

தமிழ் நடிகைகளில் உங்களை சிறந்த நகைச்சுவை நடிகையாக நினைக்கிறீர்களா?

அப்படி நினைக்கவில்லை. ஆச்சி அம்மா ஸ்டைல் வேறு. ஆச்சி அம்மாவை கவனித்தால் அவருடைய ஸ்டைல் எனக்குள் வந்துவிடும். அதனால் தனி ரூட் எடுத்து டிராவல் பண்ணுகிறேன். தமிழ் சினிமாவில் ஓர் இடம் பிடித்துவிட்டேன் என்று நினைத்ததில்லை. யார் காமெடி பண்ணாலும் எனக்குப் பிடிக்கும்.

படங்களின் எண்ணிக்கை குறைந்த மாதிரி தெரியுதே... செலக்டிவ்வாக நடிக்கிறீர்களா?

அதுதான் உண்மை. நிறைய ஓடணும்னு அவசியமில்லை. அதுக்காக நான் நிறைய சம்பாதித்துவிட்டேன் என்று நினைக்கவேண்டாம். பணம் அதிகம் இருந்தால் ஆபத்து. பணம் அதிகம்இருப்பவர்களிடம் எல்லோருமே நல்லவர்களாகவே பழகுவார்கள். கெட்டவர்களை அடையாளம் காணமுடியாது. கடைசியில் மூலையில் உட்கார்ந்து குமுறி குமுறிக் அழணும். அது  தேவையா!

‘காமெடி  காட்சிகள் காரணமில்லாமல் வெட்டப்படுவதால் படங்கள் பார்ப்பதை தவிர்த்துவிடுகிறேன்’ என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தீர்கள்... அதைப்பற்றி விரிவாகச் சொல்லுங்களேன்?

படங்களில் நடிப்பதைக்குறைத்துவிட்டேன், பார்ப்பதில்லை என்று சொல்லவில்லை. நடிக்கிறதை விட்டுட்டா, நான் எப்படி பூவா சாப்பிடுவது..? ஆரம்பத்தில் ஒரு படத்தில் சூப்பரா காமெடி பண்ணியிருந்தால் அதை பலரிடம் சொல்லி சிலாகிப்பேன். தியேட்டருக்கு போய் படம் பார்த்தால் ஒரு ஷாட் கூட இருக்காது. நான் இருக்கிறேனா என்று தேட வேண்டிய நிலை வரும்.
அப்போது காமெடி டிராக் நிறைய எடுப்பார்கள். அந்த டிராக் நல்லா இருக்கும். ஆனால், அந்தப் படத்தில் வைக்காமல் வேற படத்தில் வைத்திருப்பார்கள். அந்த மாதிரியான ஏமாற்றங்கள் நடந்துள்ளது. ஏமாற்றங்களை சந்தித்ததால் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ்கிறேன்.

கோவை சரளா வாழ்க்கையில் கமல் யார்?

கமல் சார் ஒரு பல்கலைக்கழகம். அதில் படிக்கும் மாணவி நான். சினிமாவைப் பொறுத்தவரை எந்த ஒரு புதுமையையும் அவர்தான் ஆரம்பித்து வைக்கிறார். ஆதி மனிதர்கள் எப்படி உலகத்தை கட்டமைத்தார்களோ அது மாதிரி கமல் சார் சினிமாவை கட்டமைத்த ஆதி உலக நாயகன். கமல் சாருடன் சேர்ந்து நடிக்க நான் என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை.
தமிழ் சினிமாவில் காமெடிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறீர்களா?

வெற்றிடம்னு சொல்லமுடியாது. ஜெனரேஷன் கேப். மக்கள் ரசனை ஒவ்வொரு காலத்திலும் மாறுபடும். இப்போது கொஞ்சமா நடித்தாலே நாங்கள் சிரித்துக்கொள்கிறோம் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். மக்கள் திரையை ரசித்து பார்க்குமளவுக்கு நேரமில்லை. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரிடமும் செல்ஃபோன் அதிகாரம் செலுத்து
கிறது.நடிகர் சங்க தேர்தலில் ஆக்டிவ்வாக செயல்பட்டீர்கள். புதிய கட்டடம் திறப்பு விழா எப்போது?

நடிகர் சங்கம் கட்டுவதில் நிறைய பிராசஸ் இருக்கிறது. நடுவில் இரு தரப்புக்கிடையே பிரச்னைகள் வந்தன. எல்லாத்தையும் சால்வ் பண்ணிட்டு முறையாக லோன் வாங்கிப் பண்ணவேண்டும். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று அவசரப்பட முடியாது. யாரிடமும் டொனேஷன் கேட்க முடியாது. ஸ்டார் நைட் பண்ண முடியாது. மக்கள் கொரோனாவிலிருந்து இப்போது தான் மீண்டு வந்துள்ளார்கள். இந்த நிலையில் மக்களிடமும் கையேந்த முடியாது. சட்டத்துக்கு உட்பட்டு என்ன வேலைகள் பண்ண முடியுமோ அது நடந்துகொண்டிருக்கிறது.

சீனியர் நடிகை, காமெடி ஸ்டாராக இருப்பதால் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கலாம். நகைச்சுவை நடிகையாக வர விரும்பும் புதியவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?

நானே ஆலோசனை பிறரிடம் கேட்கிறேன்! ஆலோசனை சொல்லுமளவுக்கு நான் வளரவில்லை. அப்படி சொனால் நம்பவும்மாட்டீர்கள். எந்த கேரக்டர் கொடுத்தாலும் போல்டாக ஃபேஸ் பண்ணணும். பங்சுவாலிட்டி, சின்சியாரிட்டி, டெடிக்கேஷன் இது இருந்தால்தான் காமெடியில் பேர் வாங்க முடியும். காமெடி என்றில்லாமல் எல்லா விஷயத்துக்கும் இது பொருந்தும்.  

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்களில் மனோரமா இருந்ததால் அவருடைய காமெடி பெரியளவில் மக்களிடையே சென்றடைந்தது. உங்களுக்கு அந்த மாதிரியான வாய்ப்புகள் குறைவாகவோ அல்லது முன்னணி நடிகர்கள் தவிர்த்துவிட்டதாலோ உங்கள் திறமை மக்கள் மத்தியில் முழுமையாக சென்றடையவில்லை என்று சொல்லலாமா?

மனோரமா ஆச்சிக்கு கிடைத்த வாய்ப்புகள் மாதிரி எனக்குக் கிடைக்கவில்லை. அப்போது காமெடிக்கு என்று ரைட்டர்ஸ் இருந்தார்கள். கதை எழுதும்போதே நாகேஷ் - மனோராமா, தங்கவேலு - மனோரமா, சோ - மனோரமா என்று எழுதுவார்கள்.

இப்போது அப்படி இல்லை. அப்படியிருந்தும் நான் மக்கள் மத்தியில் பேசப்படுகிறேன் என்றால் இறைவன் அருள். எனக்கு ரைட்டர்ஸ் இல்லை. நானே முட்டிமோதி காயப்பட்டுத்தான் வந்தேன்.
மக்களோடு மக்களாக  இருக்கிறேன். அவர்கள் வாழ்க்கையில் இருந்து  சினிமா பண்ணுகிறேன். அதனால் என்னை யாரும் நடிகை என்று அழைப்பதில்லை. அக்கா என்றுதான் அழைக்கிறார்கள். அதுல சின்ன மாற்றம்... அக்கா என்று அழைத்தவர்கள் இப்போது அம்மா என்று அழைக்கிறார்கள். அதுதான் கொஞ்ச ஃபீல்லாகுது!

எஸ்.ராஜா