கோவிட் முதல் நீரிழிவு, கொலஸ்ட்ரால் வரை...சீறிப் பாயும் மருத்துவத் துறை!



ரீவைண்ட் 2022

இனி மருந்துகளே மனிதர்களுக்குத் தேவையிருக்காது என்பதுதான் ‘நாளைய மருத்துவம்’ என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள். அப்படி ஒரு நிலை உண்மையிலேயே சாத்தியமா..?
பலத்த சுழல்காற்று வீசும்போது மதில்சுவர்களை எழுப்பியவர்களுக்கு இடையே காற்றாலைகளை அமைப்பவர்கள் புத்திசாலிகள் என்று கூறப்படுவதுண்டு.

கொரோனா சமயத்தில் கூட தடுப்பு மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்த நிறுவனங்களின் மீது அப்படியொரு குற்றச்சாட்டு எழுந்தது. புதுப்புது நோய்களையும் நோயாளர்களையும் உருவாக்கி, அதற்கு நிவாரணிகளையும் தடுப்புமருந்துகளையும் தயாரித்து பணம் செய்யும் மெடிக்கல் மாஃபியா எனும் குற்றச்சாட்டுகளுக்கிடையே, உண்மையில் மருந்தே இல்லாத ஓர் உலகத்தைப் படைக்க அறிவியலாளர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பதையும், அந்த ஆராய்ச்சிகள் இந்த வருடம் வேகம் பிடித்திருப்பதையும் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா..?

சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை இவ்வளவு நோய்கள் இருக்கவில்லை. அதிநவீன தொழில்நுட்பங்களும் இருக்கவில்லை. உயிர்காக்கும் சிகிச்சைகளும் தடுப்பூசிகளும் இருக்கவில்லை. அதுகுறித்த கவலையும் மனிதனிடம் இருக்கவில்லை. ஆனால், இன்றோ கண்மூடி கண்திறந்தால் கேன்சர், ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் என்று நோய்கள் ஒருபக்கம்... கொரோனா, டெங்கு, ஜிகா, பன்றிக்காய்ச்சல்  என புதிது புதிதாக நோய்த்தொற்றுகள் மறுபக்கம்.

இவற்றுக்கான மருந்துகள், தடுப்பு மருந்துகள், அறுவைசிகிச்சைகள், அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் என பணம் ஈட்டும் மருத்துவமனைகளுக்கு இடையே, மருந்தே தேவையில்லாத மனிதர்களை உருவாக்க அறிவியல் ஒரு அசகாயப் பாய்ச்சலை இந்த ஆண்டு நிகழ்த்தி வருகிறது.அதிலும் முதலாவது கொரோனாவில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.

சென்ற இரு வருடங்களில் கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி கொத்துக்கொத்தாக மனிதர்களைக் கொன்று குவித்தபோது, நமக்கு உடனடித் தேவையாக இருந்தது அதிவிரைவான ஓர் அவசரகாலத் தடுப்புமருந்து. அப்படி நமக்குக் கிடைத்ததுதான் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள்.

உண்மையில் நமது உடலின் ஒவ்வொரு செல்களுக்குள்ளும் இருக்கும் இந்த எம்ஆர்என்ஏ எனும் மெசஞ்சர் ஆர்என்ஏக்கள், நமது டிஎன்ஏக்களின் மரபுச் சங்கிலியிருக்கும் பிரதிகளைப் பிரித்து, அவற்றை நகலெடுத்து, அந்தத் தகவல்களைப் புரதங்களை உற்பத்தி செய்யும் இடங்களுக்கு எடுத்துச்செல்லும் தூதுவராக விளங்குகிறது.

இந்த எம்ஆர்என்ஏ போலவே  செயற்கை முறையில் ஒன்றைத் தயாரித்து, அதில் நமக்குத் தேவையான நோய்க் குறியீடுகளை (உதாரணமாக கொரோனா வைரஸ் பிரதி) ஏற்றி, அதை நம் உடலில் செலுத்தும்போது, உடலுக்குள் தூது சென்று, நமக்குத் தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றல்களை உருவாக்கி, அந்த நோய் வராமலே பார்த்துக்கொள்ளும் முறைதான் இந்தத் தடுப்பூசிகள் வேலைசெய்யும் முறையாகும்.

கோவிட் காலத்தில் நமது தடுப்புமருந்துகளின் பாரம்பரிய நீண்டகாலப் பரிசோதனை முறைகளைத் தவிர்த்து, வீரியம் நிறைந்த தடுப்புமருந்தைக் குறைந்த காலத்தில் கண்டுபிடிக்க வேண்டிய தேவையிருந்தது. நினைத்தபடியே அதிவிரைவான தீர்வை கோவிட் தடுப்பூசிகள் நமக்குப் பூர்த்திசெய்ய இப்போது அதே எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தைக் கொண்டு டிபி, மலேரியா, எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்களுக்கும் சில புற்றுநோய்களுக்கும் தடுப்புமருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது.

இன்னும் முக்கியமாக உலகின் பூதாகர நோயாக உருவெடுத்திருக்கும் சர்க்கரை நோய்க்கு எதிரான இதே வகைத் தடுப்புமருந்துகள் உருவாகிவருகின்றன என்பதுதான் இந்த ஆண்டின் முதல் மருத்துவப் பாய்ச்சல் எனலாம்.மருத்துவத்தில் இரண்டாவது பாய்ச்சலும் கொரோனாவால்தான் நிகழ்ந்திருக்கிறது. கொரோனா சமயத்தில் இறந்தவர்கள் போக, பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் இரத்தநாள அடைப்புகள் காரணமாக பாதிப்படைந்தது ஒரு பெரும் வேதனையாக மாறியுள்ளது.

இதற்கான தீர்வாக, ஏற்கெனவே ஆராய்ச்சியிலிருந்த ‘நானோ தொழில்நுட்பம்’ எனும் மீநுண் தொழில்நுட்பத்தில் சில மாற்றங்களைச் சேர்த்து அந்த இரத்தநாள அடைப்புகளை குறிவைத்து துல்லியமாக உடைத்தது மருத்துவத்தில் ஒரு நம்பகமான முன்னேற்றத்தை உருவாக்கியுள்ளது.

இருதயநோய், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கும் மருந்தில்லா சிகிச்சையாக எதிர்காலத்தில் இதைப் பயன்படுத்தமுடியும் என்பதுடன், நோய் சிறிய அளவில் கண்டறியப்படும்போது மேற்சொன்ன எம்.ஆர்.என். ஏ நுட்பத்துடன் இந்த நானோ நுட்பத்தையும் இணைத்து, மைக்ரோலெவலில் செல்கள் அல்லது அதன் மூலக்கூறு வரை சென்று, ஒரு நோயை வேரிலிருந்து குணப்படுத்துவது என்பது, மனித ஆரோக்கியத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தும் அற்புத அறிவியல் கண்டுபிடிப்பாகப் பார்க்கப்படுகிறது.

இந்த எம்ஆர்என்ஏ மற்றும் நானோ போன்ற தொழில்நுட்பங்கள் நமக்கு ஏற்படும் நோய்களைத்தான் குணப்படுத்தும் என்றால், நமக்கு நோய் வராமலே இருக்க gene editing எனும் CRISPR (Clustered Regularly Interspaces Short Palindromic Repeats) தொழில்நுட்பமும் இந்த ஆண்டில் வேகமெடுத்து வருகிறது. நமது மரபணுக்கள் எனும் டிஎன்ஏக்களின் அமைப்பை மாற்றி அமைக்கும் இந்த க்ரிஸ்பர் தொழில்நுட்பம் பழையதுதான் என்றாலும், இந்த ஆண்டு இரத்தப் புற்றுநோயில், TCR எனும் வெள்ளை அணுக்களில் க்ரிஸ்பர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு, மனிதர்களுக்கான பரிசோதனை வரை வந்துள்ளது.

உண்மையில் இந்த டிஎன்ஏ மாற்றம் புற்றுநோய்கள் மற்றும் மரபணு நோய்கள் சிகிச்சையில் பெரும் தாக்கத்தையும், நிரந்தரத் தீர்வையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதே சமயம், இந்த க்ரிஸ்பர் நுட்பத்தில் நமக்குப் பிறக்கும் குழந்தையின் நிறம், தோற்றம், நோயற்ற நிலை, ஏன் அறிவுக்கூர்மையைக் கூட நம் விருப்பம் போல் மாற்றியமைக்க முடியும் என்பதை முயன்று பார்த்த சீன விஞ்ஞானி ஜியான்கீ இப்போது தடைசெய்யப்பட்ட ஆய்வைச் செய்த காரணத்திற்காகச் சிறையிலிருக்கிறார் என்றாலும், விரைவிலேயே அதுவும் நிகழக்கூடும் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

இத்துடன் சமீபத்தில் வைரலான ஜெர்மனியின் ‘எக்ட்டோ - லைஃப்’ என்ற தனியார் நிறுவனத்தின் காணொலி, பெண்களின் கருப்பையைப் போலவே செயற்கையாக உருவாக்கப்படும் கருவறைகள் மூலம், நாம் விரும்பியபடி வருடத்தில் 3000  குழந்தைகளை பிறக்க வைக்கமுடியும் என்பதுடன் செயற்கைக் கருவூட்டலில் இப்போதிருக்கும் பெரும் சிக்கல்களைத் தீர்த்துவைக்கும் பாய்ச்சலாகவும் கருதப்படுகிறது.

இவற்றையெல்லாம் தாண்டி, இன்று நோயுற்று உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருப்பவர்களுக்கு AI எனும் செயற்கை நுண்ணறிவு மற்றும் 3-D தொழில்நுட்பம் மூலமாக, தானம் தருபவர் மற்றும் தானம் பெறுபவர் உறுப்புகளை செயற்கையாக ஒளித்திரையில் உருவமைத்து, ஒப்பிட்டு, பிறகு தேர்வு செய்வது இந்த ஆண்டின் ஒரு முக்கிய நுட்பம் என்றால் -இதே செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாடிக்ஸ் மூலம் செய்யப்படும் அறுவைசிகிச்சைகளின் துல்லியம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவை மட்டுமன்றி ஏ.ஐ. மூலமாக, நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக் கண்காணிப்பில் சென்ற வருடங்களைக் காட்டிலும் இந்த வருடம் இன்னும் பல மைல் தூரம் கடந்து நிற்கிறோம் என்பது மிகப்பெரிய ப்ளஸ் எனலாம்.

இந்த எம்ஆர்என்ஏ, நானோ, க்ரிஸ்பர், எக்ட்டோ, ஏ.ஐ. போன்ற நாளைய மருத்துவங்கள் இருக்கட்டும் டாக்டர்... ப்ரஷர், சுகர், கொலஸ்ட்ரால் என்று நாங்கள் தினமும் கைநிறைய மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருக்கிறோமே... இதற்கு ஒரு தீர்வே இல்லையா... என்று கேட்கிறீர்களா..?

இந்த வருடம், அதற்கும் ஒரு விடை கிடைத்துள்ளது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தினால் போதும் என்று சொல்லப்படும் ‘Inclisiran’ எனும் கொலஸ்ட்ரால் மாத்திரைகளும், வாரம் ஒருமுறை உட்கொண்டாலே போதும் என்று சொல்லப்படும் ‘Tirzepatide’ என்ற சர்க்கரைநோய் உடற்பருமனுக்கான மருந்துகளும் இந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, அறிவியலின் அடுத்த மாபெரும் பாய்ச்சல் என்பதுடன் வரும் வருடங்களில் அது விற்பனைக்கு வந்துவிடும் என்பது உண்மையிலேயே ஆறுதலளிப்பதாக உள்ளது.

உண்மையில் மெடிக்கல் மாஃபியா என்று சொல்வதெல்லாம் மனிதநீதியைக் கணக்கில் கொள்ளாத சில தனிப்பட்ட நிறுவனங்களின் பிசினஸ் முறைகளாக இருக்கலாம். ஆனால், அறிவியலும் மருத்துவமும் உண்மையில் மனிதர்களை ஆரோக்கியமாக வாழ வைக்கவே என்றைக்கும் முயன்று வந்துள்ளது; வெற்றியும் அடைந்துள்ளது என்பதைத்தான் வரலாறு முழுவதும் பார்த்து வந்துள்ளோம்.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம் எனும் தொன்மையான அறிவியல், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இணைந்த ஒரு அற்புதத்துறையாக மாறிவருவதையும், நோய் கண்டறிதல், கண்காணித்தல், குணப்படுத்துதல், சீரமைத்தல் என்பது மட்டுமல்லாமல் நோய்கள் வராமலே தடுக்கும் நாளைய மருத்துவத்தை உருவாக்கி, நமது சராசரி ஆயுளை 70 ஆண்டுகளாக உயர்த்தியிருக்கிறது என்பதுதான் உண்மை என்கிறது புள்ளிவிவரங்கள்.

யார் கண்டது..?

அடுத்த சில வருடங்களில் மனிதனின் சராசரி ஆயுள் ஆயிரம் ஆண்டுகளாக மாறி, ‘‘என்னடா இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்க..?’’ என்ற கேள்விக்கு -‘‘என்ன அவசரம் அங்கிள்.? இப்பத்தான் எனக்கு 250 வயசாகுது. இன்னும் நூறு வருஷம் போகட்டுமே..!” என்பது போன்ற கற்பனைகளும் நிஜமாகலாம். 

ஆனால், அது மருத்துவ அறிவியலால் மட்டுமே சாத்தியமாகும் என்பதுதான் உண்மை.அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

டாக்டர் சசித்ரா தாமோதரன்