பசி
சூடாக, பொன் முறுகலான தோசையுடன் இரண்டு கிண்ணிகளில் சாம்பார், சட்னி வைத்துத் தட்டைக் கொண்டுவந்த சப்ளையரின் வெள்ளை உடையில் திட்டுத்திட்டாக, சாம்பார், சட்னி, எண்ணெய்க் கறைகள். முகத்தில் காலையிலிருந்து வேலை செய்ததின் களைப்பு.

எனக்கு முன்னே இருந்தவரின் மேசையில் தோசைத் தட்டை வைத்துவிட்டு, ‘‘தம்பீ, தண்ணி வை...’’ என்று குரல் கொடுத்தபடி சமையலறை உள்ளே சென்றான். கதவு முன்னும் பின்னும் ஆடியது.
எப்போதும் வாடிக்கையாளர்கள் நிறைந்திருக்கும் மத்தியதர ஹோட்டல் அது. காலை ஆறு மணி முதல் இரவு பதினோரு மணி வரை, இடைவிடாத கூட்டம். அங்கு விற்கப்படும் உணவின் தரத்துக்குக் கட்டியம் கூறும் கூட்டம்!
 நான்கு பேர் அமர்ந்து சாப்பிடக் கூடிய அளவில் மேசை, நாகாலிகள். பத்து மேசைகள், மூன்று வரிசையாகப் போடப்பட்டிருக்கும். அன்றைய மெனு எழுதிய கரும்பலகை சுவரில் தொங்கும். நீள்வடிவக் கண்ணாடிப் பெட்டியில் ஐஸ்கிரீம் மற்றும் இனிப்புகள். அருகில் கருநீல உடையில் சூப்பர்வைசர். சமையலறை மணத்துடன், கறை படிந்த வெள்ளை உடையில் சப்ளையர்கள்.
தோசையைப் பிய்த்து சாம்பாரில் முக்கி வாய்க்குள் போடும் வரை, என் மேல் வைத்த கண் வாங்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்த குழந்தைக்கு இரண்டு அல்லது மூன்று வயதிருக்கலாம். கொஞ்சம் செம்பட்டையான முடி, உச்சந்தலையில் ரிஷிகள் மாதிரிக் குடுமியாகக் கட்டியிருந்தது. காதுகளில் சிறு வளையங்கள்; மூக்கில் குட்டி பலூன் சளி! பக்கத்து நாற்காலியில் அதன் அப்பா, மேல் சட்டை பட்டன் திறந்திருக்க, தங்கச் சங்கிலி மின்ன கைபேசியை நோண்டிக்கொண்டிருந்தான். ‘டங்’கென்ற தம்ப்ளர் வைக்கின்ற சத்தம் கேட்டுத் தலை நிமிர்ந்து, “14 இட்லிகள் இருக்கா?” என்றான்.
“இருக்கு சார்...”“நெறைய நெய் விட்டு இரண்டு ப்ளேட் கொண்டாங்க...”ஆர்டர் செய்துவிட்டு அமைதியாக மீண்டும் கைபேசியில் மூழ்கிப்போனான். குழந்தை ஒரு வினாடி அவனைப் பார்த்துவிட்டு, மீண்டும் என் கை, சாம்பார், வாய் என பார்க்கத் தொடங்கியது. கையிலிருந்த சிறு விள்ளல் தோசையைக் காட்டி, ‘வேணுமா?’ என்பதைப் போல நான் தலையாட்ட, மூக்கை உறிஞ்சித் தலையைக் குனிந்து கொண்டது.
“என்னப்பா... இங்கே தனியா ஒக்கார்ந்திருக்கே... அவங்க ரெண்டு பேரும் எங்கே?” கேட்ட பெரியவர் குழந்தையின் தாத்தாவாக இருக்க வேண்டும்.
அரை மனதுடன் கைபேசியை மூடிவைத்துவிட்டு, நாலு மேசை தள்ளி அமர்ந்திருந்த அம்மாவையும், மனைவியையும் காட்டினான். குழந்தை என்னையும் தாத்தாவையும் மாறி மாறிப் பார்த்தது.
“அறிவு இல்ல... கொழந்தைய தனியா ஒக்காத்தி வெச்சா, அது எப்பிடி சாப்பிடும்?” பதிலுக்குக் காத்திராமல் வேகமாய் நடந்து சென்று எதிரில் வந்த இன்னொரு சப்ளையர் மீது லேசாக மோதி, மனைவியும், மருமகளும் அமர்ந்திருந்த மேசைக்குச் சென்றார்.
இரண்டு ப்ளேட் 14 இட்லிகளைக் கொண்டு வைத்தார் சப்ளையர்.“இன்னா... சொல்டியா ஆர்டர்?” கேட்டபடி வந்தமர்ந்த பெண் அந்த கைபேசி மனிதனின் மனைவியாகத்தான் இருக்க வேண்டும். குரலின் தொனி அப்படித்தான் இருந்தது! என்னையே பார்த்துக்கொண்டிருந்த குழந்தையைத் தூக்கித் தன் மடியில் அமர்த்திக்கொண்டு, தன் முன் இருந்த தட்டிலிருந்து ஒரு குட்டி இட்லியை ஸ்பூனால் எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள்.“நெய் நிறைய விட்டீங்களா?” - அவன் கேட்டான்.“ஆமாம் சார்...” சொல்லியபடி, கதவைத் தள்ளி, உள்ளே சென்றார் சப்ளையர்.
மடியிலிருந்த குழந்தை, முதுகை வளைத்து அழத்தொடங்கியது. அம்மாவின் கைகளிலிருந்து திமிறியபடி‘வீல்... வீல்...’ என்று கத்தியது. நான் பரிதாபமாக அந்தக் குழந்தையைப் பார்த்தேன். “அதுக்கு, வீடு மாதிரி இங்கேயும் ஊட்டி விடணும் போல...” இட்லிகளை சாம்பாரில் முக்கியபடி சொன்னான் கணவன்.“ம்க்கும்... வூட்றாங்க... அவனுக்குத் தனி சீட் வேணுமாம், அழுவறான்...”இது குழந்தைகளுக்கான பிரத்தியேக உயர நாற்காலிகள் இல்லாத சாதாரண ஹோட்டல்.
“பரவாயில்ல, நீ சாப்பிடு. அவனுக்குக் கையில பார்சல் மாதிரிக் கட்டி எடுத்துட்டுப் போயிடலாம்; வீட்ல குடுத்துக்கலாம்...”பேச்சைக் கேட்டு விட்டு, மீண்டும் ‘வீல்’ என்றலறியது குழந்தை. அழுதபடியே நான் சாப்பிடுவதைப் பார்த்தது. அழுவதையும், என்னைப் பார்ப்பதையும் மாறி மாறிச் செய்தது. எனக்குத் தோசை தொண்டையில் இறங்கவில்லை. தண்ணீர் குடித்தேன்.திடீரென்று குழந்தையின் அழுகை நின்று விட்டது. தலை நிமிர்ந்து பார்த்தேன்.
அம்மாவும் அப்பாவும் நிம்மதியாக இட்லிகளை முழுங்க, குழந்தை கையில் ஒரு செல்போன்! ஏதோ ஒன்றை - கார்டூனாகத்தான் இருக்க வேண்டும் - போட்டு, கையில் கொடுத்திருந்தாள்! குழந்தை, இட்லி, அம்மா, அப்பா, தனி நாற்காலி, நான் தின்னும் தோசை எல்லாவற்றையும் மறந்து, செல்லில் மூழ்கிப்போனது!நான்கு மேசை தள்ளி, தாத்தாவும், பாட்டியும் ஏதோ பேசிச் சிரித்தபடி மேசையில் பாதியை அடைத்திருந்த சோலே பதுராவுடன் ஐக்கியமாகியிருந்தார்கள்!குழந்தை பசியுடன் கைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தது.
‘‘வேற என்ன சாப்பிடறீங்க..?” என்ற சப்ளையரிடம், காற்றில் பில் என எழுதிக் காட்டினேன்.“ரெண்டு ஸ்பெஷல் நெய் தோசை...” என்றான் எதிரில் இருந்தவன். “கூட ரெண்டு கப் சாம்பார்...” என்றாள் அவன் மனைவி. குழந்தை குனிந்த தலை நிமிராமல் கார்டூன் பார்த்துக்கொண்டிருந்தது.பில் பணத்தைக் கொடுத்துவிட்டு, வெளியே வந்தேன்.
புதிய நடைபாதை போட்டிருந்தார்கள் - அதில் புதியதும் பழையதுமான பிச்சைக்காரர்கள் நான்கு பேர் கையில் அலுமினியத் தட்டுடன் நின்று கொண்டு பிச்சை கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒருத்தி, தன் கிழிந்த அழுக்குச் சேலையை மாரின் குறுக்காகத் தூளிபோலக் கட்டி, அதில் தன் இரண்டுவயதுக் குழந்தையை அமர்த்தியிருந்தாள். அது பரட்டைத் தலையுடன், அம்மணமாக இருந்தது. சிணுங்கியபடி, அம்மாவின் அழுக்குச் சேலையை வாயில் வைத்துக் கடித்துக்கொண்டிருந்தது. பசி போலும், அழுவதற்குக் கூட சீவன் இல்லாத குழந்தை.
ஹோட்டலை விட்டு வெளியே வந்த ஒருவன், தான் சாப்பிட்ட மீதியை ஒரு பார்சலாகக் கட்டிக்கொண்டுவந்திருந்தான். வழக்கமாக உணவை வீணடிக்காமல், ஏழைகளுக்குக் கொடுத்துவிடுவது அவனது வழக்கமாக இருக்கலாம்! என்ன நினைத்தானோ, சிணுங்கிய குழந்தையைப் பார்த்துவிட்டு, பார்சலை அந்தப் பிச்சைக்காரியின் கையில் வீசிவிட்டுப் போனான்.ஓடி வந்த மற்ற பிச்சைக்காரார்கள் முறைக்க, அவள் அவசர அவசரமாக அந்தப் பார்சலைப் பிரித்தாள். இட்லி, பிய்ந்த பூரி, சட்னி, சாம்பார் எல்லாம் கலந்த ஒரு பதார்த்தம்.
ஒரு கையால் கொஞ்சம் எடுத்து, சிணுங்கிக் கொண்டிருந்த குழந்தையின் வாயில் ஊட்டினாள்! இரண்டு மூன்று முறை ஊட்டிய பிறகு, தானும் இடையிடையே ஒரு விள்ளல் போட்டுக்கொண்டாள்! காலடியில் வாலாட்டி நின்று கொண்டிருந்த நாய்க்கும் சிறிது உணவைப் போட்டாள். அம்மாவின் தூளியில் குழந்தை சிரித்துக்கொண்டிருந்தது!திரும்பிப் பார்த்தேன். உள்ளே அந்தக் குழந்தை இன்னும் செல்லையே பார்த்தபடி இருந்தது. அப்பா, அம்மா இருவர் முன்னும் கூம்பு வடிவத்தில் நெய் தோசை மணந்துகொண்டிருந்தது.
ஜெ.பாஸ்கரன்
|