அதிகரிக்கும் தியேட்டர்ஸ், எகிறும் பிஸினஸ், திரளும் மக்கள்… எங்கே விழித்துக்கொண்டது சினிமா?
ரீவைண்ட் 2022

2020 - 21 இரண்டு வருட காலமும் என்றும் இல்லாத அளவுக்கு திரையரங்கங்கள் மற்றும் சினிமா துறைதான் நினைத்துப் பார்க்க முடியாத சரிவைச் சந்தித்தன. இந்நிலையில் 2022 எப்படியிருக்குமோ என அனைவரும் பயந்த நிலையில், ‘வலிமை’ ரிலீசானது.
 திரைத்தொழிலுக்கும் புத்துயிர் அளித்தது.தொடர்ந்து ‘ஆர்ஆர்ஆர்’, ‘பீஸ்ட்’, ‘கே.ஜி.எஃப்’, ‘விக்ரம்’, ‘பொன்னியின் செல்வன் - 1’... இதோ இப்போது ‘அவதார் - 2’ என எப்போதும் இல்லாத அளவுக்குத் திரையரங்கங்களை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கி விட்டனர். இதன் விளைவு என்ன தெரியுமா..?
 அடுத்த சில ஆண்டுகளில் நாட்டின் கிராமப்புறங்களில் ஒரு லட்சம் புதிய திரையரங்குகளை உருவாக்க இந்திய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது! பொதுச் சேவை மையங்கள் மற்றும் சினிமா நிர்வாகங்கள் ஒன்றிணைந்து கிராமப்புறங்களில் நாடு முழுவதும் 1,00,000 திரையரங்குகளைக் கட்ட ஒப்புக்கொண்டுள்ளன. ஒவ்வொரு ஊரின் மக்கள்தொகையைப் பொறுத்து, இந்த திரையரங்குகளில் 100 - 200 பேர் அமரக்கூடிய வசதி இருக்கும்.
அந்த வகையில் 2023ம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 1500 திரையரங்குகள் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ம் ஆண்டின் இறுதியில் மேலும் 10,000 எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு தியேட்டருக்கும் 15 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்கிறது புள்ளிவிவரம்.
ஒரு லட்சம் புதிய திரையரங்குகள் நிறுவப்படுவதன் மூலம் திரைப்படங்களைப் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனும் கணிசமாக உயரும்.
கொரோனா தாக்கத்துக்கு முன்பு கூட இந்த அளவுக்கு சினிமா தொழில் அசுர வளர்ச்சியை அடையவில்லை. நிறைய திரையரங்கங்கள் மூடப்பட்டோ அல்லது திருமண மண்டபங்களாக, குடியிருப்புகளாக என மாற்றமடைந்தோ கொண்டிருந்தன. அப்படியிருந்த நிலை எங்கே எப்படி புத்துயிர் பெற்றது... மக்களிடமும் , சினிமா தொழிலிலும் என்ன மாறுதல் ஏற்பட்டது என்னும் கேள்வியுடன் தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் முக்கிய பங்குகள் வகிக்கும் முக்கியஸ்தர்களிடம் கேட்டோம்.
எஸ்.ஆர்.பிரபு (தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்): உலகத்திலேயே மிகவும் சீப்பான ஒரு பொழுதுபோக்கு சினிமாதான். ஆனால், அதனுடைய அருமை தெரிய நமக்கு 100 வருட சினிமா அனுபவம் கடந்து வர வேண்டியதா இருந்திருக்கு. 2010க்கு பிறகுதான் சென்னையிலே மல்டிபிளக்ஸ், தலையெடுக்கத் தொடங்குது. அடுத்து 2015லதான் சினிமா டெக்னாலஜிகள் அதிகரிக்குது, டால்பை அட்மாஸ், 3டி புரொஜக்டர், அடுத்தடுத்து ஐமேக்ஸ்... இப்படியான நவீன தொழில்நுட்ப வளர்ச்சி நமக்குக் கிடைக்க இத்தனை வருடங்கள் ஆனது.
அடுத்து 2017ல் டிக்கெட் விலைகள் எல்லாமே சீராக்கப்பட்டு தயாரிப்பாளர்கள், அரசு, வினியோகஸ்தர்கள்னு எல்லோருக்கும் சரியான வருவாய் கிடைக்க வழி செய்யப்பட்டது. மக்களுக்கும் இதுதான் சரியான டிக்கெட் விலை என்கிற சார்ட் கிடைத்தது. அப்புறம் ஆன்லைன் புக்கிங், வரிசைல நிற்க வேண்டாம்... இப்படி வளர்ச்சிப் பாதைல போகும்போதுதான் பெரிய அடி விழுந்தது. அதுதான் கொரோனா. ரெண்டு வருடங்கள் எழுந்திருக்கவே முடியாம போனது. ஆனா, 2022ல கொரோனா பயம் குறையவும், வெளிய போக ஏதேனும் வழி இருக்காதா எனக் காத்திருந்த மக்களுக்கு 2022ல வந்த படங்கள் சரியா தீனி போட்டது. தியேட்டர்ல வந்து படம் பார்க்கும் அருமையும் மக்களுக்குப் புரிந்தது.
குறிப்பா ‘கே.ஜி.எஃப்’, ‘விக்ரம்’, ‘பொன்னியின் செல்வன் - 1’ போன்ற படங்கள் தியேட்டர்ல பார்த்தா மட்டுமே அதை ரசித்துக் கொண்டாட முடியும் என்னும் உண்மையைப் புரியவைத்தது. அதேபோல இனி யார் நடிகர்கள் என்ற கேள்விக்கெல்லாம் இடமே இல்ல என்ற நிஜத்தையும் உணர வைச்சது. கதையும் கன்டென்ட்டும்தான் முக்கியம். ஓடிடி வருகையால உலகம் முழுக்க இருக்கும் படங்களை மொபைல்ல பார்க்கமுடியுது. இது சினிமாவைப் பார்க்கும் மனநிலையை வேறு விதமா மாற்றியிருக்கு.நல்ல கதை, நல்ல படம், நல்ல பொழுதுபோக்குக்கு நிச்சயம் மக்கள் ஆதரவு தருவாங்கனு இண்டஸ்டிரிக்கு புரிய வைச்சிருக்கு.
அதேபோலத் திரையரங்குகளை தேடி வரும் மக்களுக்கு சில வசதிகளும் தேவைப்படுது. ஃபுட் மற்றும் ஸ்னாக்ஸ், இருக்கை வசதிகள், தியேட்டர் அரங்கங்களோட உள்கட்டமைப்பு, சுகாதாரம்... இப்படி எல்லாவற்றிலும் தியேட்டர்ஸ் கவனம் செலுத்த தொடங்கிட்டாங்க. திருப்பூர் சுப்ரமணியம் (தலைவர் தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம்): ஒரு காலத்துல 4000க்கும் மேலான திரையரங்கள் இருந்த மாநிலம் இது. இன்று வெறும் ஆயிரத்தில்தான் இருக்கு.
ஒவ்வொரு காலகட்டத்திலும் சினிமா தொழில் மட்டுமல்ல எல்லா தொழிலிலும் ஒரு மாற்றம் உண்டாகும். அல்லது போட்டியாக வேறு ஏதேனும் நவீனத்துவம் நடக்கும். அப்படி தியேட்டர்கள் எல்லாம் திருமண மண்டபமாச்சு.ஆனா, 2022ல இந்த நிலை மாற ஆரம்பிச்சது. இதைத் தொடங்கி வைச்சது ‘வலிமை’, ‘கே.ஜி.எஃப்’, ‘விக்ரம்’ போன்ற திரைப்படங்கள். அதேநேரம் திரையரங்குகளும் மல்டிபிளக்ஸுக்கு நிகரா தங்களோட சிங்கிள் ஸ்கிரீன் இடத்துல நான்கைந்து தியேட்டர்களைக் கொண்டு வந்தது.
இதனால வார இறுதில மட்டுமே கூட்டம் வரும் என்ற நிலை மாறி, வார நாட்கள்லயும் மக்கள் தியேட்டருக்கு வர ஆரம்பிச்சாங்க. இதனால வார நாட்கள்ல தியேட்டர் பராமரிப்பையும், மின்சாரக் கட்டணத்தையும் கட்ட தவிச்ச நிலை மாறிச்சு. ஒரே தியேட்டர் வளாகத்துல 4 - 5 படங்கள் என்பது நிச்சயம் மக்களுக்கு வரப்பிரசாதம்தான்.தியேட்டர்கள் அதிகரிச்சிருக்கானு கேட்டா அதிகமா திரைகள் அதிகரிக்குதுனு சொல்லலாம். இன்னொரு விஷயம், இந்த வருஷம் இந்தில வெளியான படங்கள் எதுவும் சரியான வசூலை கொடுக்கலை. அதனால எல்லா மொழிரசிகர்களும் தென்னிந்திய படங்களுக்கு - குறிப்பாக தமிழ்ப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சாங்க.
அதே மாதிரி வரிசைல நிற்க மாட்டேன்... 30 ரூபா அதிகமானாலும் பரவாயில்லை... குடும்பத்தோடு படம் பார்க்கணும்னு நினைச்ச மக்களுக்கு ஆன்லைன் புக்கிங் பெரிய ஆறுதலை தந்திருக்கு. இதெல்லாம் 2022ல ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள். அதுவும் ஆரோக்கியமான மாற்றங்கள். தனஞ்செயன் (தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்): பொதுவா மனிதர்கள் கூட்டமா, குடும்பமாக வாழ்ந்தவங்க. இடைல தனிக்குடித்தனம், வேலை, வாழ்க்கைனு சிறு சிறு குடும்பங்களா பிரிஞ்சாங்க. அந்த நேரம் கொரோனா வந்து இரண்டு வருடங்கள் மக்களை முடக்கிச்சு. அப்பதான் கூட்டமா, குடும்பமா வாழற தேவையை, முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்தாங்க.
எப்ப கொரோனா பயம் நீங்கிச்சோ அப்ப மக்கள் சினிமா மட்டுமில்ல... எல்லா இடங்களுக்கும் கூட்டமா, குடும்பமா போக விரும்பினாங்க. சில மணிநேரமாவது குடும்பமா சந்தோஷமா இருக்கணும்னு முடிவு செய்தாங்க. இந்த மனநிலைக்கு மலிவான விலைல கிடைக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமாதான். அதனாலயே மக்கள் அதிகமா தியேட்டர்ஸுக்கு வர ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்கு ஏற்றமாதிரி படங்களும் பொழுதுபோக்கு அம்சங்களோடு வர ஆரம்பிச்சது. மிகப்பெரிய படங்கள் வரிசையா வரத் தொடங்கினதும் தியேட்டர்ஸும் அதிகரிச்சது. நவீன டெக்னாலஜியும் தியேட்டர்களின் முகத்தை மாத்திச்சு.
சுரேஷ் காமாட்சி (தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் இயக்குநர்): திரையரங்கங்கள் அதிகரிப்பு என்பது இப்போதைக்கு அறிவிப்பாதான் இருக்கு. உண்மைல ஆயிரம் பேர் உட்கார்ந்து பார்க்கக் கூடிய தியேட்டர், 200 பேர் பார்க்கக் கூடிய 5 திரையரங்கா மாறியிருக்கு. இதுதான் உண்மை.அதேநேரம் இதனால தியேட்டர்ஸும், விநியோகஸ்தர்களும் பெரிய அளவுல நஷ்டத்தை சந்திக்கலை. இதுவும் உண்மைதான்.இப்ப ஆயிரம் பேர் அமரக் கூடிய திரையரங்குனா வார இறுதில கூட்டம் வரும். மற்ற நாட்கள்ல 20 - 30 பேர் மட்டுமே வருவாங்க. இவங்களுக்காக ஆயிரம் பேர் அமரும் தியேட்டருக்கான மின்சாரத்தை ஓட விட்டா என்ன ஆகும்..?
இதை இந்த ஸ்மால் ஸ்கிரீன் கல்சர் மாற்றியிருக்கு. தியேட்டர் தொழிலும் வளர்ச்சிப் பாதைல செல்ல ஆரம்பிச்சிருக்கு. இதை தக்க வைக்க எல்லா தியேட்டர்ஸும் இப்ப சுகாதாரம், மக்களின் வசதில கவனம் செலுத்தி தங்களை மேம்படுத்திக்கறாங்க. நிச்சயம் இது ஆரோக்கியமான மாற்றம். ராகேஷ் கௌதமன் (சென்னை ‘வெற்றி’ திரையரங்கின் உரிமையாளர்): சொந்த இடத்துல தியேட்டர் வைச்சிருந்தவங்க கொரோனா காலத்துல நஷ்டத்தை சந்திக்கலை. வாடகை நிலம் அல்லது லீசுக்கு எடுத்த நிலத்துல தியேட்டர் கட்டியிருந்தவங்க அதிகமா கொரோனா காலத்துல பாதிக்கப்பட்டாங்க. கிட்டத்தட்ட மூடும் நிலைக்குப் போனவங்க இவங்கதான்.
இந்த சூழல்ல தியேட்டர்ஸை காப்பாற்றினது சர்வ நிச்சயமா 2022ல வந்த படங்கள்தான். அதுவும் தியேட்டர் அட்மாஸ்ஃபியரை மனசுல வைச்சு உருவான இந்தப் படங்கள்தான் சினிமா தொழிலை காப்பாற்றியிருக்கு.இந்தப் போக்கு வரும் ஆண்டுகள்ல அதிகமாகும். ஆனால் இருக்கும் சிலர் தியேட்டர்களையும் காப்பாற்றியது இந்த வருடம் வெளியான சில படங்கள். தியேட்டருக்காகவே பிரத்யேகமாக வெளியான படங்கள்தான் சினிமா தொழிலை காப்பாற்றின. மக்களும் இந்தப் படங்களை தியேட்டர்கள்ல அவசியம் பார்த்தே ஆகணும்னு நினைச்சு வந்தாங்க.
இந்த நிலை இனி வரும் வருடங்கள்ல அதிகமாகும். தியேட்டருக்கான படங்கள் பிரமாண்டமா தயாரிக்கப்படும். மக்களும் அந்தப் படங்களை திரையரங்குல பார்க்க குவிவாங்க.இந்த ரகசியம் திரையரங்க உரிமையாளர்களுக்கும் திரைத்துறையினருக்கும் புரிஞ்சுடுச்சு. மக்களும் வீட்ல பார்க்க வேண்டிய படங்களை ஓடிடில பார்த்தா போதும்னு நினைக்கத் தொடங்கிட்டாங்க. ஆக, சினிமா எடுக்கும் பிராசஸ்ஸே 2022 முதல் மாற ஆரம்பிச்சிருக்கு.
இதுக்கு தகுந்த மாதிரி தியேட்டர்ஸும் தங்கள் கட்டமைப்புல கவனம் செலுத்தி மக்களோட கொண்டாட்ட மனநிலைக்கு தகுந்த மாதிரி நவீனமாக்க தொடங்கிட்டாங்க. குழந்தைகள், பெரியவர்கள்னு எல்லாருக்குமான கம்ஃபோர்ட் ஸோனா தியேட்டர்ஸ் மாறியிருக்கு; மாறிட்டு வருது. வரும் ஆண்டுகள்ல நிச்சயம் சினிமா துறை பெரிய வளர்ச்சியை நோக்கி நகரும்.
ஷாலினி நியூட்டன்
|