பயோடேட்டா-மெஸ்ஸி
பெயர் : லூயிஸ் லியோனெல் ஆந்ரேஸ் மெஸ்ஸி. சுருக்கமாக மெஸ்ஸி. ஓய்வு: இதுதான் மெஸ்ஸிக்குக் கடைசி உலகக் கோப்பையாக இருக்கும். இத்துடன் அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் ‘நான் ஓய்வு பெறப்போவதில்லை. ஒரு சாம்பியனாகத் தொடர்ந்து விளையாடப்போகிறேன்’ என்று உலகக் கோப்பையைக் கையில் ஏந்திய பிறகு சொல்லியிருக்கிறார் மெஸ்ஸி.
 உயரம் : 5 அடி, 7 அங்குலம்.
பிறந்த தேதி மற்றும் இடம் : அர்ஜெண்டினாவில் உள்ள ரொசாரியோ நகரத்தில் ஜூன் 24, 1987ல் பிறந்தார்.
 அடையாளம் : அர்ஜெண்டினா தேசிய கால்பந்து அணியின் கேப்டன்.
சமீபத்திய சாதனை : கத்தாரில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் கோப்பையை அர்ஜெண்டினா வெல்ல மூல காரணமாக இருந்ததே மெஸ்ஸிதான்.
 பாட்டி : மெஸ்ஸிக்குப் பாட்டி சீலியா என்றால் உயிர். அவரது அம்மாவின் பெயரும் சீலியாதான். மெஸ்ஸியின் கால்பந்தாட்டத்தில் முக்கியப்பங்கு வகிப்பதே அவரது பாட்டிதான். ஆம்; மெஸ்ஸிக்கு நான்கு வயதாக இருந்தபோதே வீட்டுக்கு அருகிலிருந்த கால்பந்து கிளப்புகளுக்கும், கால்பந்துப் போட்டி நடக்கும் இடத்துக்கும் பாட்டி அழைத்துச் செல்வார். அந்த கிளப்புகளில் மெஸ்ஸியின் சகோதரர்களும், உறவினர்களும் விளையாடுவார்கள்.
 அவர்கள் அனைவரும் மெஸ்ஸியை விட ஒரு சில வயதே மூத்தவர்கள். மெஸ்ஸியையும் கிளப்பில் சேர்த்துக் கொள்ளச் சொல்லி கிளப் நடத்து வரிடம் முறையிடுவார் பாட்டி. ரொம்ப குள்ளமாக இருக்கிறான், வயதுக்கு உரிய உயரம் இல்லை, உடலும் பலவீனமாக இருக்கிறது என்று அவர்கள் மெஸ்ஸியைச் சேர்த்துக்கொள்ள மறுத்தார்கள்.
இருந்தாலும் விடாப்பிடியாகத் தனது பேரனையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சுவார் பாட்டி. போனால் போகட்டும் என்று பாட்டிக்காக நான்கு வயது மெஸ்ஸியை கிராண்டோலி என்ற கிளப் சேர்த்துக்கொண்டது. அதற்குப் பிறகு நடந்தது வரலாறு. மூன்று வருடங்கள் அந்தக் கிளப்பில் விளையாடிய மெஸ்ஸியின் ஆட்டத்தைப் பார்த்து, ‘நியூவெல்ஸ் ஓல்டு பாய்ஸ்’ என்ற கிளப் அரவணைத்துக்கொண்டது.
இந்த கிளப்பில் ஆறு வருடங்கள் விளையாடிய மெஸ்ஸி 500 க்கும் அதிகமான கோல்களை அடித்திருக்கிறார். பிறகு பார்சிலோனா அணிக்காக விளையாடி புகழடைந்த மெஸ்ஸியை அர்ஜெண்டினா தேசிய அணி அரவணைத்துக்கொண்டது. அங்கேயும் தனது திறமையைக் காட்ட, கேப்டனாக உயர்ந்தார்.இப்படி அவரது கால்பந்து ஆட்டத்துக்கு மூல காரணமாக இருந்த பாட்டி இறந்தபோது மெஸ்ஸிக்கு வயது 11. உடைந்துபோய்விட்டார்.
பாட்டி இறந்ததற்குப் பிறகு அவர் கோல் அடிக்கும்போது எல்லாம் வானத்தை நோக்கி சில நொடிகள் பார்ப்பார். தன்னைப் பாட்டி வானத்தில் இருந்து பார்க்கிறார் என்பது மெஸ்ஸியின் நம்பிக்கை. உள்ளூர் போட்டிகளோ அல்லது உலகக்கோப்பையோ எங்கு கோல் அடிக்கும்போதும் வானத்தை நோக்கிப் பார்த்து அந்த கோலை பாட்டிக்கு அர்ப்பணிக்கிறார் மெஸ்ஸி.
குடும்பம் : எப்போதுமே ஒரு நல்ல குடும்பஸ்தனாக இருந்து வருகிறார் மெஸ்ஸி. இருபது வயதிலிருந்து அண்டோனெலா ரொக்கோசோ என்ற பெண் மீது காதலில் இருந்தார். லூகாஸ் என்ற நண்பரின் உறவினர் பெண்ணான ரொக்கோசோவை ஐந்து வயது முதலே மெஸ்ஸிக்குத் தெரியும். தங்களின் காதலை ஒரு ரகசியம் போலக் காத்துவந்தார்.
2009ம் வருடம் ஒரு நேர்காணலில்தான் ரொக்கோசோவைக் காதலிக்கும் விசயத்தைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்தார். திருமணம் செய்துகொள்ளாமல் இருவரும் பார்ட்டனர்களாக வாழ்ந்துவந்தனர்.
2012ல் தியாகோவும், 2015ல் மட்டேயோவும் பிறந்தனர். தனது பார்ட்டனர் கர்ப்பமடைந்ததைக் கொண்டாடும் விதமாக தனது ஜெர்ஸிக்குள் பந்தை வைத்து ஒரு போட்டியில் விளையாடினார் மெஸ்ஸி. இரண்டு மகன்கள் பிறந்த பிறகு ஜூன் 30, 2017ல் ரொக்கோசோவை திருமணம் செய்தார் மெஸ்ஸி. 2018ல் மூன்றாவது மகன் சிரோ பிறந்தான். குடும்பத்துடன் எப்போதுமே நெருக்கமாக இருப்பார் மெஸ்ஸி. குறிப்பாக அம்மா சீலியா மீது தனிப்பாசம். தனது இடது தோள்பட்டையில் அம்மாவுடைய முகத்தை டாட்டூவாகக் குத்தியிருக்கிறார்.
மெஸ்ஸியின் 14 வயதிலிருந்து அவரது தந்தை ஜோர்ஜ்தான் ஏஜெண்ட். மெஸ்ஸியின் அன்றாட நிகழ்வுகளை நிர்வகிப்பது அண்ணன் ரோட்ரிகோ. அம்மாவும், மற்ற சகோதர்களும் மெஸ்ஸியின் தொண்டு நிறுவனமான லியோ மெஸ்ஸி ஃபவுண்டேஷனைக் கவனித்துவருகின்றனர். வீட்டிலிருந்து 300 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் எங்கு இருந்தாலும் இரவு வீட்டுக்கு வந்து குடும்பத்துடன் சேர்ந்து இரவு உணவைச் சாப்பிடுவார்.
குடிமகன் : ஸ்பெயின், இத்தாலி, அர்ஜெண்டினா ஆகிய மூன்று நாடுகளின் குடிமகன் என்ற அடையாளத்தைத் தன்வசம் வைத்திருக்கிறார்.
இடது பாதம் : 90 சதவீத கோல்களை இடது பாதத்தாலும், மீதி கோல்களை வலது பாதத்தாலும், தலையில் தட்டியும் அடித்திருக்கிறார்.
சாதனைகள் : யூஇஎஃப் ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் வேகமாக 100 கோல்களை அடித்தவர், ஒரு வருடத்தில் அதிக கோல்களை அடித்தவர் என்ற கின்னஸ் சாதனை, சாம்பியன் லீக் போட்டியில் ஒரே ஆட்டத்தில் ஐந்து கோல்களை அடித்த முதல் வீரர், ஏழு முறை பலூன் டி’ஓஆர் விருதுகள், ஆறு முறை ஐரோப்பிய தங்கக் காலணிகள், மாரடோனாவால் கூட வெல்ல முடியாத கோபா அமெரிக்கா, பீலேவால் தட்ட முடியாத ஐரோப்பியன் டைட்டில், ரொனால்டோ, கிரையூப் போன்ற ஜாம்பவான்களால் வெல்ல முடியாத உலகக்கோப்பை, சர்வதேச போட்டிகளில் அதிக கோல்களை அடித்த தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஆண் கால்பந்து வீரர், கிளப் மற்றும் நாட்டுக்காக ஆடியதில் 750 க்கும் அதிகமான கோல்கள்... என சாதனைகள் நீள்கின்றன.
வருமானம் : கால்பந்து விளையாட்டின் மூலம் மட்டுமே சுமார் 8265 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருக்கிறார். விளையாட்டின் மூலம் பில்லியன் டாலர்கள் சம்பாதித்தவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் மெஸ்ஸி.
குழந்தைப் பருவம்: ஹார்மோன் பிரச்னையால் மெஸ்ஸியின் குழந்தைப்பருவம் ரொம்ப கடினமாகவே இருந்தது. ஹார்மோன் பிரச்னை அவரது உடல் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தது. இதற்குச் சிகிச்சை எடுப்பதற்கானச் போதிய வசதி இல்லாத நிலை வேறு. அவரது குள்ளமான உருவத்தை வைத்து மெஸ்ஸியால் கால்பந்து விளையாட முடியாது என்று ஏளனம் செய்தனர்.
அதிகமாக யார் கூடவும் பேச மாட்டார். அதனால் ஊமை என்றும் கூட நினைத்தனர். ஹார்மோன் பிரச்னைகளிலிருந்து மீண்டு உலகின் தலைசிறந்த கால்பந்து விளையாட்டு வீரராக மெஸ்ஸி விஸ்வரூபம் எடுத்தது தனிக்கதை.
நாப்கின் : 2000ல் பார்சிலோனோ அணியில் இடம்பிடிப்பதற்கான பயிற்சி ஆட்டத்தில் மெஸ்ஸி ஆடினார். அவரது ஆட்டத்தைப் பார்த்து வியந்துபோனார் பார்சிலோனா அணியின் இயக்குநர். உடனே ஒப்பந்தம் போட மெஸ்ஸியை அணுகினார். ஆனால், அருகில் காகிதம் கூட இல்லை. பேனா மட்டுமே இருந்தது. கை துடைக்கும் நாப்கினில் மெஸ்ஸியின் முதல் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டது.
பெயர் : லூயிஸ் லியோனெல் ஆந்ரேஸ் மெஸ்ஸி. சுருக்கமாக மெஸ்ஸி. ஓய்வு: இதுதான் மெஸ்ஸிக்குக் கடைசி உலகக் கோப்பையாக இருக்கும். இத்துடன் அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் ‘நான் ஓய்வு பெறப்போவதில்லை. ஒரு சாம்பியனாகத் தொடர்ந்து விளையாடப்போகிறேன்’ என்று உலகக் கோப்பையைக் கையில் ஏந்திய பிறகு சொல்லியிருக்கிறார் மெஸ்ஸி.
த.சக்திவேல்
|