பாதி படத்தில் அமீருக்கும் எனக்கும் சண்டை வந்தது... பிறகு சமாதானமாகி முடித்தோம்!
பாலா, அமீர், சசிகுமார் வரிசையில் மதுரையிலிருந்து வந்துள்ளார் இயக்குநர் ஆதம் பாவா. சமீபத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான ‘ஆண்டி இந்தியன்’ படத்தைத் தயாரித்தவர். இப்போது அமீர் நாயகனாக நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படத்தை இயக்கி தயாரித்துள்ளார். ஆதம் பாவாவுக்கு ஒரு அறிமுகம் கொடுங்களேன்?
மதுரையில் நானும் அமீரும் எதிர் வீட்டுக்காரர்கள். வடிவேலு, பாலாவிடமும் பழகியதுண்டு. மதுரைக்காரர்கள் என்றாலே கொஞ்சம் சூடு பார்ட்டிகள் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படி நான் பார்த்து பழகியவர்கள் எல்லாம் சினிமாவில் ஜெயித்து வெற்றிக்கொடி பறக்க விட்டது எனக்குள் சினிமா தாக்கத்தை ஏற்படுத்தியது.
நாம் ஏன் சினிமாவில் டிரை பண்ணக்கூடாது என்ற முடிவுடன் கோடம்பாக்கத்துக்குள் அடியெடுத்து வைத்தேன். ஆனால், நான் நினைத்த மாதிரி சினிமா உலகம் இல்லை. மாமா, மச்சான் என்று பழகியவர்கள் நான் சினிமாவுக்கு ட்ரை பண்ணுகிறேன் என்றதும் அவர்களுடைய அப்ரோச் வேறு மாதிரி இருந்தது. எனக்கு பரிச்சயமான பாலா, அமீரிடம் எளிதாக உதவி இயக்குநராகச் சேர்ந்துவிடலாம் என்று நினைத்த எனக்கு ஏமாற்றம்தான் பரிசாகக் கிடைத்தது.
அது ஒரு விஜய் படம். பிரபல இயக்குநர் ஒருவர் அதன் இயக்குநர். ஒரு சண்டைக் காட்சியில் நியாயமான சஜஷன் சொன்னேன். அதனாலேயே ரிஜக்ஷன் நடந்தது. அப்படி நான் சந்தித்த பெரிய இயக்குநர்கள் அனைவரிடமும் ஒரே விதமான அணுகுமுறையைப் பார்க்க முடிந்தது. பிறகு, உதவி இயக்குநராக ஒரு சினிமா ஆபிஸ் திறந்தேன்.
அங்கு உலகின் பல படங்களைப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தினேன். ஃபெஸ்டிவலில் என்ன மாதிரியான படங்களைப் பார்க்கமுடியுமோ அதுமாதிரி உலக சினிமாவைப் பார்க்கும் இடமாக என்னுடைய ஆபிஸ் இயங்கியதை கேள்விப்பட்டு படம் பார்க்கப் பல இயக்குநர்கள் என்னுடைய அலுவலகத்துக்குப் படையெடுத்தார்கள்.
அந்த சமயத்தில் என்னைப் பெரிதும் பாதித்த இயக்குநர் மணிரத்னம். யாரிடமும் வேலை செய்யாமல் உலக சினிமாவை மட்டுமே பார்த்து அவரால் டைரக்டராக வரமுடிந்துள்ளது என்றால் என்னாலும் அப்படி வர முடியும் என்று துணிச்சலாக டைரக்ஷனில் இறங்கினேன்.
மறைந்த நடிகர் ஜே.கே.ரீத்திஷ் நடித்த ‘நாயகன்’ படத்தின் ஒரு பகுதியை இணை இயக்குநராக இயக்கும் வாய்ப்பை அதன் இயக்குநர் சரவண சக்தி கொடுத்தார். இதற்கிடையே ‘தப்பாட்டம்’, ‘ஆன்டி இண்டியன்’ படங்களைத் தயாரித்தேன். இப்போது ‘உயிர் தமிழுக்கு’ படம் வழியாக இயக்குநராக உங்கள் முன் நிற்கிறேன். வி.இசட். துரையின் ‘நாற்காலி’தான் ‘உயிர் தமிழுக்கு’ என்று மாறியுள்ளதா?
சந்திரன் என்ற ரைட்டர் ‘உயிர் தமிழுக்கு’ மூலக் கதையை கொடுத்தார். அந்த கதைக்குத் திரைக்கதை, வசனம் எழுதி அமீரை வைத்து டைரக்ஷன் பண்ண ஆரம்பித்தேன். அறுபது சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படம் ஓவர் பட்ஜெட் காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. படம் தாமதமானது. அதனால் அமீருக்கும், எனக்குமிடையே சிறிய கருத்து வேறுபாடு வந்தது.
மீண்டும் படம் ஆரம்பித்தபோது வி.இசட்.துரை, நட்பின் அடிப்படையில் உதவி செய்ய வந்தார். அவர் வந்த சமயம் லாக்டவுன் அறிவித்தார்கள். அவருக்கும் சில கமிட்மென்ட் இருந்ததால் அவராலும் தொடரமுடியவில்லை. பழையபடி நானே இயக்கி முடிக்க முடிவு செய்தபோது எனக்கும் அமீருக்குமிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் கானல் நீராக மறைந்து, படத்தை ஜெட் வேகத்தில் முடித்துவிட்டோம்.
‘உயிர் தமிழுக்கு’ அரசியல் நையாண்டி படமா?
ஒவ்வொரு படத்துக்கும் ஒரு ரெபரன்ஸ் இருக்கும். ‘சவாலே சமாளி’, ‘மன்னன்’ மாதிரியான படங்களில் ஹீரோ, ஹீரோயின் மோதிக்கொள்வார்கள். அதுமாதிரி இதுல ஹீரோ, ஹீரோயினுக்கிடையே மோதல் வரும். அதனிடையே ஊடல் இருக்கும். பொலிடிக்கல் பேக்டிராப்பில் காதல் சொல்லியிருக்கிறேன். லவ், ஆக்ஷன், பொலிட்டிக்கல் சட்டையர் கலந்த குவாலிட்டி எண்டர்டெயினராக இருக்கும்.
அமீர் உங்கள் நண்பர் என்பதால் ஹீரோவாக நடிக்க வைத்தீர்களா?
கதை பிடித்திருந்த காரணத்தால் அமீர் நடிக்க வந்தார். அமீர் படப்பிடிப்புக்கு வரும்போது ஒரு நடிகர் என்ற மைன்ட் செட்டில்தான் வருவார். செட்ல டைரக்டர் சொல்றதை அப்படியே செய்வார்.
சில சமயம் அவருக்குள் இருக்கும் இயக்குநர் அமீர் எட்டிப்பார்ப்பார். அதைநான் முழுமனதுடன் அங்கீகரிப்பேன். அவர் சொல்லும் ஐடியாக்கள் நியாயமாக இருக்கும். சில இடங்களில் எங்களுக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். எடைத் தட்டு எந்தப் பக்கமும் சரியாதபடி இருவரும் பேலன்ஸ் பண்ணி ஒர்க் பண்ணினோம்.
அமீர் ஒரு வழிகாட்டியாக என்னை கைட் பண்ணிய இடங்களும் உண்டு. எந்த அமீரிடம் உதவி இயக்குநராக சேர ஆதம்பாவா ஆசைப்பட்டாரோ, அதே அமீரை பக்கத்தில் வைத்து ஒரு இயக்குநராக டைரக்ஷன் பாடம் கற்றுக்கொண்டார். படத்துல அமீர் கேரக்டர் பேர் எம்ஜிஆர் பாண்டியன். எம்ஜிஆர் ரசிகனாக வர்றார். படத்தில் வேற யாரெல்லாம் இருக்கிறார்கள்?
ஹீரோயின் சாந்தினி ஸ்ரீதரன் மலையாளம், தெலுங்குல பல படங்கள் பண்ணியவர். தமிழில் ‘555’ பண்ணியவர். வழக்கமான டூயட் பாடும் ஹீரோயினாக இல்லாமல் ஹீரோவுக்கு இணையான ரோல். அதைப் புரிந்து நடித்தார்.ஆனந்தராஜ் கதையின் மையப் புள்ளியாக வர்றார். காமெடி ஏரியாவை அமீர், இமான் அண்ணாச்சி, சரவண சக்தி ஷேர் பண்ணிக்கொண்டார்கள்.
படப்பிடிப்புல அமீர், சிங்கம், சிறுத்தை சீறுகிற மாதிரி தெரியும். சினம் கொண்ட அந்த முகம் சினிமாவுக்கு மட்டும்தான். தனிப்பட்ட விதத்தில் அவருடன் பழகியவர்களுக்கு அவர் எவ்வளவு ஹியூமர் பர்சன்னு தெரியும். அந்தவிதத்தில் அமீரோட காமெடி பிரமாதமா ஒர்க்கவுட்டாகியிருக்கு. மொத்தத்தில் ஆச்சர்ய அமீராக இருப்பார். வித்யாசாகர் மியூசிக்ல என்ன ஸ்பெஷல்?
இசை நுட்பம் தெரிந்த சிலரில் வித்யாசாகர் முக்கியமானவர். பழமை, புதுமை கலந்து பிரமாதமான பாடல்கள் கொடுத்திருக்கிறார். எம்ஜிஆர் வாழ்க்கையை ஒரு பாடலில் சொல்லியுள்ளோம். பா.விஜய் எழுதியுள்ளார். அந்தப் பாடலில் தமிழ்நாடு முழுவதும் எம்ஜிஆர் வேஷம் போடும் கலைஞர்களை நடிக்க வைத்துள்ளோம். தேர்தல் பாடல் ஒன்று வருகிறது. அது இனி வரும் தேர்தல்களில் ஒலிக்கும் பாடலாக இருக்கும். பின்னணி இசையிலும் பின்னியெடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவு தேவராஜ். அமீரின் ‘யோகி’ பண்ணியவர். சூப்பர் ஹிட் படமான ‘புஷ்பா’வுல வேலை பார்த்தவர். ஃபாஸ்ட் அண்ட் குவாலிட்டியோடு கதைக்குத் தேவையான ரிசல்ட் கொடுத்திருக்கிறார்.
படத்துல என்ன கருத்து சொல்லப்போறீங்க?
‘உயிர் தமிழுக்கு’ என்ற டைட்டில் மற்ற மொழிக்கு எதிரான படமோ, அரசியல் கட்சிகளுக்கு எதிரான படமோ இல்லை. படத்துல எந்த கருத்தும் சொல்லவில்லை. பிரசாரமும் பண்ணவில்லை. நாங்கள் தமிழுடன் விளையாடி கொஞ்சி மகிழ்ந்து உள்ளோம். என்னுடைய மொழியின் சிறப்பை சொல்லியுள்ளேன். இது குடும்பமாக ஜாலியாக பார்க்கக்கூடிய படம். ‘அமைதிப்படை’ மாதிரி சில இடங்களில் பஞ்ச் இருக்கும். நீங்கள் பல படங்களை விநியோகம் செய்த விநியோகஸ்தர்.
அப்படியிருக்கும்போது விநியோகத்துக்காக ‘மாநாடு’ சுரேஷ் காமாட்சியிடம் போனது ஏன்?
எங்கள் இருவருக்குமிடையே பல ஆண்டுகள் நட்பு தொடர்கிறது. என்னுடைய படத்தை பெரிய ரீலிஸாக எடுத்துச் செல்ல நினைத்தேன். ஒரு முறை தற்செயலாக சுரேஷ் காமாட்சி என்னுடைய அலுவலகத்துக்கு வந்தார். அப்போதுதான் என்னுடைய டேபிளுக்கு படத்தோட டபுள் பாசிடிவ் வந்தது.
என்னுடன் சேர்ந்து நட்பு ரீதியாக படம் பார்த்த சுரேஷ் காமாட்சி முதல் பாதி முடிந்ததும் ‘என்ன ரேட் சொல்றீங்க’னு கேட்டு இரண்டாம் பாதி முடிவதற்குள் தன் மானேஜருக்கு ஃபோன் பண்ணி அக்ரிமெண்ட்ல சைன் பண்ணிட்டார்.
‘ஆண்டி இந்தியன்’ எதிர்பார்த்த வெற்றியடைந்ததா?
அந்தப் படத்துக்கு 100 ஸ்கிரீன் எதிர்பார்த்தேன். சென்சார் போர்டிடம் எங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்லியும் அனுமதி தரலை. நீதிமன்றம் தலையீட்டுக்கு பிறகே படம் வெளியானது. அதுவே எனக்கு வெற்றி. படம் வெளியானதும் தியேட்டரின் எண்ணிக்கை படிப்படியாக பல மடங்கு அதிகமானது. பட்ஜெட்டுக்கான வசூல் கொடுத்தது. டிஜிட்டல், ஓடிடி உரிமை என்னிடம்தான் இருக்கிறது. புளுசட்டை மாறன் படம் என்பதாலேயே பல மறைமுகத் தடைகள் சினிமா இண்டஸ்ட்ரியிலிருந்து வந்தது.
உங்கள் விழா மேடையில் அமீர் தன்னைக் கதையின் நாயகன் என்கிறார். நீங்கள் கதாநாயகன் அமீர் என்று சொல்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு?
மேடையில் கதாநாயகன் பிம்பத்தை உடைப்போம் என்று அமீர் பேசினார். சினிமா என்பது இயக்குநரின் மீடியம். அதனால் கதாநாயகன் என்ற பிம்பத்தை உடைப்போம் என்று அவருடைய கருத்தைப் பதிவு செய்தார். கதாநாயகர்களுக்கு சமூகப் பொறுப்பு முக்கியம்.
சமூக அவலங்களுக்கு அவர்கள் குரல் கொடுக்கணும். அதைத் தவிர்த்துவிட்டு திரையில் மட்டுமே குரல் கொடுக்கிறார்கள். அதை நிஜமாகவே பேசுபவர் என்னுடய ஹீரோ அமீர். நிஜவாழ்விலும் உரிமைக்குரல் எழுப்புபவரே ஹீரோவாக இருக்கமுடியும் என்பது என்னுடைய கருத்து. அந்த வகையில் ஹீரோ என்ற இமேஜ் அமீருக்கு பொருத்தமானது. சமூகவலைத்தளங்களில் உங்கள் பதிவுகளில் கோபம் கொப்பளிக்கிறதே?
இளைஞர்களை அரசியல், சமூகம் போன்ற ஆக்கபூர்வமாக சிந்திக்கவிடாமல், நடிகர்களின் பின்னாடி சென்று சண்டையிடுகிறவர்களாக வைத்திருக்கிறார்கள். ஹீரோக்கள் சினிமாவுக்காக சாகசம் செய்ய ரிஸ்க் எடுக்கிறார்கள். அதை புரிந்துகொள்ள ரசிகர்கள் தங்களையும் ஹீரோக்களாக நினைத்துகொண்டு ஆபத்துகளில் சிக்கிக்கொள்கிறார்கள். ஹீரோக்கள் சமூக வலைத்தளங்களில் பொறுப்புணர்வுடன் கருத்துக்களை பகிர வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமாக இருக்கும்.
எல்லா இயக்குநர்களும் அஜித், விஜய் படம் பண்ண ஆசைப்படுவார்கள். நீங்கள் அஜித், விஜய் எனக்குத் தேவையில்லை என்று சொல்லி வருகிறீர்களே?
நான், கதையை நம்பி படம் எடுக்க நினைக்கிறேன். ஹீரோக்களுக்கு பலநூறு கோடி சம்பளம் கொடுக்கும்போது அந்த சுமை ரசிகர்கள் தலைகள் மீது வைக்கப்படுகிறது. ஹீரோ ஜெயித்துக்கொண்டே இருப்பார், ஹீரோ சாகமாட்டார் போன்ற கதையில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால்தான் மாஸ் ஹீரோ இலவசமாக கால்ஷீட் கொடுத் தாலும் எனக்கு வேண்டாம் என்று சொன்னேன். சினிமாவில் கதைதான் ஜெயிக்கும். அந்த மாதிரி படங்களால் பேசப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.
எஸ்.ராஜா
|