அர்னால்ட் in! எலன் மஸ்க் out... உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இப்போது இவர்தான்!



ஆமாம். சிவனே என்று இருந்த பெர்னார்ட், இன்று உலகின் நம்பர் ஒன் பணக்காரராக மாறியதற்குக் காரணம் சாட்சாத் எலன் மஸ்க்தான்!எந்த நேரத்தில் டுவிட்டர் தளத்தை எலன் மஸ்க் வாங்கினாரோ தெரியவில்லை... அன்றிலிருந்து இறக்கத்தைச் சந்தித்துவருகிறார்.முதலில் டுவிட்டரில் ப்ளூ டிக்கை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார். டுவிட்டர்வாசிகளின் வெறுப்பைச் சம்பாதித்தார். பின்னர் டுவிட்டரில் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை நீக்கினார்; அவர்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்தார்; டுவிட்டரை வாங்கியதால் கடனாளியாகவும் ஆனார்.

விளைவு... கடனை அடைக்க டெஸ்லா நிறுவனத்தின் சில பங்குகளை விற்றார். அனைத்துக்கும் சிகரமாக இப்போது உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பெருமையை இழந்து நிற்கிறார்!
பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கத்தால் ஒரே நாளில் மட்டும் தனது சொத்தில் 4 பில்லியன் டாலர்களை எலன் மஸ்க் இழக்க... உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட். விலையுயர்ந்த ஆடை, அழகு சாதனப் பொருள்கள், ஹாண்ட் பேக்குகள் போன்ற பல பொருள்களைத் தயாரிக்கும் LVMH Louis Vuitton - லூயி விட்டான் - நிறுவனத்தின் தலைவரான பெர்னார்ட் அர்னால்ட்தான் இப்போது உலகின் நம்பர் ஒன் பணக்காரர்.

வர்த்தகம் சார்ந்த செய்திகளை வெளியிடும் முன்னணி பத்திரிகைகளான ‘ஃபோர்ப்ஸ்’, ‘புளூம்பெர்க்’ ஆகிய இரண்டும் இதை உறுதிசெய்திருக்கின்றன. தனது 73 வயதில் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற அந்தஸ்தை அடைந்திருக்கும் இந்த அர்னால்ட் யார்..?

தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான Ferret - Savinel construction company என்ற நிறுவனத்தில் ஒரு பொறியாளராக வாழ்க்கையைத் தொடங்கி படிப்படியாக முன்னேறி, 1978ல் அதே நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார் அர்னால்ட்.1984ம் ஆண்டில் நஷ்டத்தில் இயங்கிவந்த ‘Agache-Willot-Boussac’, என்ற நிறுவனத்தை வாங்கிய கையோடு அதில் பணியாற்றிவந்த சுமார் 9 ஆயிரம் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பினார். இது அவர் மீதான வெறுப்பை மக்களிடையே ஏற்படுத்தியது.

உள்ளூரில் அவர் ‘த டெர்மினேட்டர்’ என்று அழைக்கப்பட்டார். ஆனால், அதே நிறுவனத்தை லாபம் கொழிக்கும் நிறுவனமாகச் சில ஆண்டுகளிலேயே மாற்றிய அர்னால்ட், அதிலிருந்து வந்த பணத்தை வைத்து 1989ம் ஆண்டில் ‘LVMH Louis Vuitton’ நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கினார். அதன் வளர்ச்சிதான் இன்று அவரை உலகின் நம்பர் ஒன் பணக்காரராக்கி உள்ளது.

எலன் மஸ்குக்குச் சுய விளம்பரத்தில் ஆர்வம் அதிகமாக இருந்தது. அதற்கு நேர் எதிராக விளம்பரத்தில் கொஞ்சம்கூட விருப்பம் இல்லாதவர் அர்னால்ட். அர்னால்டுக்கு பிடித்த விஷயம் ஓவியங்கள். பிக்காசோ, ஹென்ரி மூர், ஆண்டி வாரெல் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் ஓவியங்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிக் குவித்துள்ளார். ஓவியங்களுக்கான ஒரு அறக்கட்டளையையும் அவர் தொடங்கி நடத்திவருகிறார். பியானோ வாசிப்பதிலும் இவருக்கு விருப்பம் அதிகம்.

எல்லோருக்கும் ஒரு ரோல் மாடல் இருப்பார். அந்த வகையில் ஸ்டீவ் ஜாப்ஸும், வாரன் பஃபெட்டும்தான் அர்னால்டின் ரோல் மாடல்கள். ஃபிரான்ஸ் நாட்டின் முன்னாள் - இந்நாள் அதிபர்களுக்கு மிக நெருக்கமானவர் அர்னார்ல்ட். அவர்களின் தேர்தல் பிரசாரங்களுக்கு பெருமளவு நிதியுதவி வழங்கியுள்ளார். முன்னாள் அதிபர் சர்கோசியின் திருமணத்தையும் முன்னின்று நடத்தியுள்ளார். தற்போதைய அதிபர் மெக்ரானின் மனைவி, அர்னால்டின் மகனுக்கு ஆசிரியராக இருந்தவர்!

1990ல் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார். மறுவருடம் கனடாவை சேர்ந்த பியானோ இசைக்கலைஞரான ஹெலன் மெர்சியரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.பஹாமஸ் தீவுகளில் 3.5 கோடி டாலர் மதிப்பில் தனக்கென்று சொந்தமாக ஒரு தீவை வாங்கி வைத்திருக்கிறார் அர்னால்ட். சாதாரண மக்கள் அங்கு சென்று ஒரு வாரம் தங்குவதற்கு 3 லட்சம் அமெரிக்க டாலர்களை கட்டணமாக வாங்குகிறார்.

என்.ஆனந்தி