Must Watch



பினோக்கியோ

அப்பா - மகன் உறவைக் குறித்த தலைசிறந்த படங்களில் ஒன்றாக நிச்சயம் ‘பினோக்கியா’ இடம்பெறும். ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது இந்த அனிமேஷன் படம்.  
இத்தாலியில் தச்சர் வேலை செய்து வருகிறார் கெப்பட்டோ. அவருடைய செல்ல மகன் கார்லோ. அப்பாவும், மகனும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக, மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் போர் வருகிறது.

குண்டு வெடிப்பில் கார்லோ இறந்துவிடுகிறான். மகனின் மரணத்தை தாங்க முடியாமல் குடித்துக்கொண்டே இருக்கிறார் கெப்பட்டோ. இருபது வருடங்கள் கடந்தாலும் மகனின் இழப்பில் இருந்து அவரால் மீள முடிவதில்லை. அதனால் ஒரு மரத்தில் கார்லோவைப் போலவே ஒரு பொம்மையை செய்துவிட்டு மது போதையில் உறங்கிவிடுகிறார்.

அப்போது அவரது வீட்டுக்கு வரும் ஆன்மாக்கள் அந்த மரப்பொம்மைக்கு உயிர் கொடுத்து, பினோக்கியா என்று பெயர் வைக்கின்றனர். அடுத்த நாள், தான் செய்த பொம்மை குழந்தையைப் போல் பேசுவதைக் கண்டு ஆச்சரியமடைகிறார் கெப்பட்டோ. கார்லோவின் இழப்பிலிருந்து கெப்பட்டோவைப் பினோக்கியோ எப்படி மீட்டெடுக்கிறது என்பதே நெகிழ்ச்சியான திரைக்கதை.
குடும்பத்துடன் கண்டு களிக்க அற்புதமான ஒரு படத்தைப் படைத்திருக்கிறார் இயக்குநர் கில்லெர்மோ டெல் டோரோ.

டாக்டர் ஜி

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளியதோடு, பார்வையாளர்களின் பாராட்டுகளையும் தன்வசமாக்கிய இந்திப்படம், ‘டாக்டர் ஜி’. ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது. எம்பிபிஎஸ் முடித்துவிட்டு முதுகலையில் எலும்பியல் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற இலக்குடன் இருக்கிறான் உதய். எலும்பியல் மருத்துவம் படிப்பதற்காக சீட் கிடைக்கவில்லை. மாறாக மகப்பேறு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கிறது.  

மகப்பேறு மருத்துவம் என்பது பெண்களுக்கானது; ஆண்களுக்கானது இல்லை என்றிருப்பவன் உதய். அதனால் அந்தப் படிப்பில் சேரத் தயங்குகிறான். மகப்பேறு மருத்துவம் படித்துக்கொண்டே அடுத்த வருடம் தேர்வெழுதி எலும்பியல் மருத்துவம் படிக்கலாம் என்று அவரது உறவினர் ஒருவர் சொல்கிறார். அவர் எலும்பியல் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவை உறைக்குள் விதைத்தவர்.

வேண்டா வெறுப்புடன் மகப்பேறு மருத்துவம் படிக்கச் கல்லூரிக்குச் செல்கிறான். அவன் வகுப்பில் எல்லோருமே பெண்கள். உதய் மட்டுமே ஆண். அப்புறமென்ன... நகைச்சுவையாகச் செல்லும் திரைக்கதை மகப்பேறு மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும், சமூகத்தில் வெளியே தெரியாமல் நடக்கும் ஒரு பிரச்னையையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
உதய்யாக கலக்கியிருக்கிறார் ஆயுஷ்மான் குரானா. படத்தின் இயக்குநர் அனுபுதி காஷ்யப்.

ஸ்ரீ தன்யா கேட்டரிங் சர்வீஸ்

‘தகிரேட் இந்தியன் கிச்சன்’ பட இயக்குநர் ஜியோ பேபியின் சமீபத்திய படைப்புதான் ‘ஸ்ரீ தன்யா கேட்டரிங் சர்வீஸ்’. ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது இந்த மலையாளப்படம். நண்பர்களுடன் சேர்ந்து கேட்டரிங் சர்வீஸ் நடத்திக் கொண்டிருப்பவன் சினோ. பிசினஸ் சரியாக இல்லை. அவனுடைய குழந்தைக்குப் பிறந்த நாள் வருகிறது. வீட்டிலேயே பிரியாணி செய்து குழந்தையின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடலாம் என்று திட்டமிடுகிறான் சினோ.

கையில் காசு இல்லாத நேரத்தில் எதுக்கு இதெல்லாம் என்று சினோவின் மனைவி கடிந்துகொள்கிறாள். இந்த திட்டத்தை நண்பர்களிடம் சொல்ல , எல்லோரும் குஷியாகிவிடுகின்றனர். பிறந்த நாளுக்கு முந்தைய இரவில் ஓர் இடத்தில் சினோவும், நண்பர்களும் கூடி பிரியாணி செய்கின்றனர்.

ஆண்கள் எல்லோரும் சேர்ந்து சமைக்கும்போது என்னவாகிறது என்பதை நகைச்சுவையாகச் சொல்கிறது திரைக்கதை. பிரியாணி சமைக்கும் ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு எந்த இடத்திலும் சலிப்பு தட்டாமல் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. முக்கியமாக சமூகத்தில் நிலவும் ஆண்கள், பெண்களின் நிலையையும் சுட்டிக்காட்டுகிறது இந்தப் படம்.

ஜகமே மாயா

‘ஹாட் ஸ்டாரி’ல் வெளியாகியிருக்கும் தெலுங்குப் படம் ‘ஜகமே மாயா’.  பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருபவன் ஆனந்த். பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி, ஐபிஎல் மேட்சில் பந்தயம் கட்டுகிறான். ஆனால், அவன் பந்தயம் கட்டும் அணி தோற்றுவிடுகிறது. கடன்காரர்கள் அவன் வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் பிரச்னை செய்கின்றனர். கோபமடையும் தந்தை ஆனந்தை வீட்டைவிட்டு வெளியேற்றிவிடுகிறார்.

கடனை அடைக்க இன்னொரு மோசடியில் ஈடுபடுகிறான். அதாவது மற்றவர்களின் ரகசியங்கள் வீடியோவாக்கி, ரகசியங்களை வெளியில் விட்டுவிடுவேன் என்று மிரட்டி பணம் பறிக்கிறான். தனியாக இருக்கும் பெண்களிடமும் தன் வேலையைக் காட்டுகிறான். இந்நிலையில் சித்ரா என்ற பெண்ணைச் சந்திக்கிறான். ஒரு விபத்தில் கணவனை இழந்தவள் சித்ரா. கணவன் விபத்தில் இறந்ததால் இன்சூரன்ஸ் பணம் அவளுக்குக் கிடைக்கப்போகிறது என்பதை அறிகிறான் ஆன்ந்த்.

தனது வலையில் சித்ராவை வீழ்த்தி , திருமணம் செய்துகொண்டால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என்று திட்டமிடுகிறான் ஆனந்த். அவனது திட்டம் என்ன மாதிரியான விளைவுகளைக் கொண்டு வருகிறது என்பதே மீதிக்கதை. ஜாலியாகப் படம் பார்ப்பவர்களுக்கு நல்ல சாய்ஸ் இந்தப் படம். இதன் இயக்குநர் சுனில் பாப்பாலா.   

தொகுப்பு: த.சக்திவேல்