சாதி பிரச்னைக்கு தீர்வு சொல்லியிருக்கோம்!



சினிமா ஃபங்ஷன் என்றாலே அதன் மேடையை சினிமா பிரபலங்கள் அலங்கரித்திருப்பார்கள். இந்த நிலையில் சேரன் நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தூய்மைப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என உழைப்பாளிகள் கரங்களால் வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். இவர் ஏற்கனவே ‘பகிரி’,
‘பெட்டிக்கடை’ போன்ற படங்களை இயக்கியவர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எளிய மக்களை வைத்து வெளியிடும் ஐடியா எப்படி வந்தது?

இது மக்களுக்கான படம் என்பதால் மக்களை வைத்தே வெளியிடுவோம் என்று முடிவு செய்தோம். அப்படி உழைக்கும் வர்க்கம் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பல இடங்களிலிருந்து நல்ல வரவேற்பு கிடைச்சது.

தலைப்பு நல்லா இருக்கே?

நன்றி. இதை கதைக்கான தலைப்பாகவே பார்க்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள் கடைசிவரை ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்கவேண்டுமா என்ற கேள்வியை முன்வைக்கிறது படம். ஒடுக்கப்பட்ட மக்கள் உண்மையிலேயே ஒடுக்கப்பட்டார்களா அல்லது தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொண்டார்களா என்று சிந்தித்து போராடும் இளைஞனின் கதை இது.
தாழ்த்தப்பட்டவர்கள் என்று வரும்போது ஒரு சமூகம் மட்டுமே ஒடுக்கப்படுகிறது. மற்ற சமூகங்கள் மாமன், மச்சான் என்று பழகுகிறார்கள். தாழ்த்தப்பட்ட சமூகம் மட்டும் மற்றவர்களை சாமி என்று அழைக்கும் வழக்கம் இருக்கிறது.

இதை ஒழிக்கணும் என்று முயற்சிக்கிறார் ஹீரோ. தனிமனிதனாக இருக்கும் ஹீரோ எப்படி ஊர் மக்களை எதிர்த்து நியாயம் கேட்கிறார் என்பதை ஜனரஞ்சகமாக
சொல்லியிருக்கிறேன்.

சேரன் எப்படி கதைக்குள் வந்தார்?

ஆரம்பத்தில் இந்த கதையை சமுத்திரக்கனி பண்ண வேண்டியது. அவர் கால்ஷீட் ஒத்துவரவில்லை என்பதோடு கதைக்களத்துக்கும் கொஞ்சம் விலகிய முகமாக இருந்தார். ஏனெனில், கனி சாரின் கேரக்டர்களைப் பொறுத்தவரை அவருடைய வாய் பேசியதை விட கை பேசிய மாதிரிதான் அதிகம் நடித்திருக்கிறார்.

சேரன் சார், சண்டையிடாமல், பேசியே தன் பக்கம் இருக்கும் நியாயத்தை வெளிப்படுத்தும் இமேஜ் உடையவர். அந்த வகையில் சேரன் கதைக்கு பொருத்தமாக இருந்தார்.
சேரன் சாரை வைத்து படம் ஆரம்பிக்கும்போது ‘அவரிடம் ஏன் போறீங்க, அவரை திருப்திப்படுத்த முடியாது’ என்றார்கள். ஆனால், கதை கேட்டதும் சேரன் சாருக்கு பிடித்திருந்தது. ‘எல்லோரும் சாதிகளுக்கிடையே பகையை உண்டாக்குகிற மாதிரி எடுக்கிறார்கள். நீங்கள் சாதிப் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது’ என்று முழு மனதோடு நடிக்க வந்தார்.

இப்போது அவர் ஒரு  வெப் சீரிஸ் பண்றார். அதுல ஒரு டயலாக் பேசும்போது, சாதி ஒழியணும்னா ‘தமிழ்க்குடிமகன்’ மாதிரி படம் பண்ணணும் என்று டயலாக் பேசியதாக கேள்விப்பட்டேன். தேசிய விருது இயக்குநர் சேரன் சாரின் இந்த பாராட்டை என்னுடைய படைப்புக்குக் கிடைத்த பாராட்டாகப் பார்க்கிறேன்.

சேரன் சார் கேரக்டர் பேர் சின்னசாமி. படத்துல சலவைத் தொழிலாளி, நாவிதர், பண்டாரம் என்று பல தொழில் செய்பவராக வர்றார். இந்த மாதிரியான தொழில் செய்யும் ஒன்பது பிரிவுகளை அரசாங்கம் பட்டியல் இனமாக அறிவித்துள்ளார்கள். பட்டியலிலிருந்து எங்களை எடுத்துவிடுங்க என்ற வாதத்தையும் இந்தப் படம் முன் வைக்கிறது. அந்த மாதிரி எத்தனையோ சமூகங்கள் தங்களை பட்டியலிலிருந்து விடுவித்துக் கொண்டார்கள். அதையும் படத்தில் சொல்லியுள்ளோம்.

ஹீரோயின் யார்?

‘மிக மிக அவசரம்’ பிரியங்கா. இளம் ஜோடியாக துருவா, தீபிக்‌ஷா வர்றாங்க. இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், லால், ரவிமரியா, வேல ராமமூர்த்தி, அருள்தாஸ் இருக்கிறார்கள். லால் சார் பல படங்களை இயக்கியவர், பல படங்களில் நடித்தவர். அவர் இந்தப் படத்தை சிலாகித்து, ‘இந்த ஜானர்ல  நான் பண்ணல. இந்தப் படத்தோட அனைத்துவிதமான புரொமோஷனுக்கும் வர்றேன்’ என்று சொன்னார்.

ஒளிப்பதிவு ராஜேஷ் யாதவ். சேரன் சார் இயக்கிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். மண் சார்ந்த கதைக்கு என்ன தேவையோ அதை அழகாக படம் பிடித்துக்கொடுத்தார். சாம்.சி.எஸ்.மியூசிக். ஆறு பாடல்கள். லக்ஷ்மி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

எஸ்.ராஜா