நீங்கள் சைக்கோபாத்தா அல்லது சோஷியோபாத்தா.. ?



தில்லி அஃப்தாப் - ஷ்ரதா கொலை வழக்கு இன்றைய இந்திய சமூகத்தின் உளவியல் குறித்த அடிப்படை ஆய்வுக்கு விதை போட்டிருக்கிறது

தில்லியின் அஃப்தாப் - ஷ்ரதா கொலை வழக்கு பலரின் ரத்தத்தை உறைய வைத்திருக்கிறது. நவீன வாழ்க்கையின் லட்சணங்களான டேட்டிங் ஆப் மூலமான காதல், தாலி எனும் வேலி இல்லாத லிவிங் டு கெதர் குடும்பம் என இவர்களின் ஆரம்ப வாழ்க்கை ஒரு எடுத்துகாட்டான வாழ்க்கையாக இருந்தாலும் அதன் முடிவுதான் கோரமாக, கொடூரமாக முடிந்துவிட்டது.
மும்பையைச் சேர்ந்த இருவருமே நல்ல படிப்பு, வாழ்க்கையை சமாளிக்கக்கூடிய வேலை என்று இருந்தாலும் சண்டை வந்தால் சட்டை கிழியாதா... வாழ்க்கை என்றால் பிரச்னை வராதா... வந்தது. சச்சரவுகள் வெடித்தன.

தன்னைப் போலவே அல்தாப்புக்கு இன்னும் சில பெண்களுடன் பழக்கம் இருந்திருக்கலாம் என்று ஷ்ரதா பிரச்னையை ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறது. வாஸ்து சரியில்லாவிட்டால் எல்லாம் அப்படித்தான். சரி தில்லிக்கு போகலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். ஒரு நல்ல ஆரம்பத்துக்கு முன் ஒரு பார்ட்டி வேண்டாமா... டூர் போனார்கள்.
 டூர் முடிந்ததும் தில்லி வாழ்க்கை. ஆனால், பிரச்னை தில்லியிலும் தொடர்ந்தது. இது சரிப்பட்டு வராது. நான் போகிறேன் என்று ஷ்ரதா பிரியாவிடைக்காக மிரட்டல் விட்டிருக்கிறார். ஏற்கனவே சச்சரவுகள், கைகலப்புகள், அடி உதை... என்று இந்த ஒரு வருட வாழ்க்கையில் அஃப்தாப் கெத்து காட்டினாலும், ஷ்ரதாவின் பிரிவு எனும் வார்த்தை அல்தாப்பை வெறிகொண்ட மிருகமாக
மாற்றிவிட்டது.

கடந்த மே மாதம் ஷ்ரதாவை கொன்றிருக்கிறான் அல்தாப். ஆனால், பிடிபட்டது கடந்த வாரம்தான். இடையில் என்ன நடந்தது..? அதுதான் பலரை மிரள வைக்கும் எபிசோட்.
ஷ்ரதாவைக் கொலை செய்த அஃப்தாப், இறந்த உடலை 35 துண்டங்களாக கூறுபோட்டதாகச் சொல்லப்படுகிறது. வெட்டிய துண்டங்களை ஃபிரிட்ஜ் ஃப்ரீசரில் வைத்து ஒவ்வொரு துண்டாக தில்லியின் பல பாகங்களில் இரவு யாருக்கும் தெரியாத நேரங்களில் வீசியிருக்கிறான். அஃப்தாபின் வழக்கு தில்லி நீதிமன்றத்தில் சூடாக நடைபெற்று வருகிறது.

பொதுவாக கொலைகளை இரண்டு வகையாகப் பிரிப்பர். ஒன்று உணர்ச்சியில் கொலை செய்வது (crime of passion). இரண்டாவது ரூம் போட்டு யோசித்து கொலை செய்வது. அதாவது பிளான் போட்டு பண்ணுவது. பழிக்குப் பழி கொலை என்று இதை சொல்லலாம்.உணர்ச்சிக் கொலைகளில் தண்டனை குறைவு. ஆனால், ரூம் போட்டுக் கொலை செய்வது
அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தரும்.

அல்தாப் செய்த கொலையை இந்த இரு பிரிவுகளுக்குள்ளும் வராத கொலையாக சொல்லலாம்.  இந்தக் கொலைகளை சைக்கோபாத் கொலை (psychopath murderer) என்று சொல்கிறார்கள். சைக்கோபாத் கொலைகள் பலவும் கொடூரமாக செய்யப்படுபவை. உதாரணமாகக் கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் உடலுறுவு வைத்துக்கொள்ளல் அல்லது சீரியல் கில்லர்கள்... இவை எல்லாமே ஒருவகையில் சைக்கோபாத் கொலைகள் எனும் வகைக்குள்தான் வரும்.

இந்தியத் தண்டனைச் சட்டங்களில் ஒருவன் கொலை செய்யும்போது சித்தசுவாதீனமாக இல்லாமல் அந்தக் கொலையைச் செய்திருந்தால் அவனை அந்தக் கொலையில் இருந்து காப்பாற்றப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

இதில் உணர்ச்சி கொலை என்றாலும் சரி பழிக் கொலை என்றாலும் சரி. ஆனால், சைக்கோபாத் கொலைகள் பலவும் திட்டம் போட்டு தீர்த்துக்கட்டும் வகையாக இருப்பதுடன் அது மேலும் கொடூரமான கொலைகளாக இருப்பதால் இதை சட்டத்தைக் கொண்டு தண்டிப்பது பெரிய சிக்கலாகவே இருக்கிறது. காரணம் சட்டத்தில் இந்த கொலைகள் பற்றி சரியான விளக்கம் இல்லை.

இத்தோடு சைக்கோபாத் கொலையாளிகள் நம்மைப் போலவே ஒரு நார்மலான வாழ்க்கையை வாழ்பவர்கள். சித்தசுவாதீனம் பிடித்தோ அல்லது அந்தக் கொலையை செய்யும் தருவாயில் கொலையாளிகளாகவோ இல்லாமல் ஒரு தனிப்பிரிவாக சைக்கோபாத் கொலையாளிகள் இருப்பதால் அவர்களின் குற்றச் செயல்களை வைத்து அவர்களை சட்டத்தின் முன் கொண்டு வருவது ஒரு கடினமான செயல்.

இச்சூழலில் சைக்கோபாத் கொலையாளிகள் எப்படி உருவாகுகிறார்கள் என்று தேனி அரசு மருத்துவமனை  கல்லூரியின் கிளினிக்கல் சைக்கா லஜிஸ்டான சஃபியிடம் பேசினோம்.
‘‘எல்லோருக்கும் ஏதோ ஒரு பிரச்னை இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்தப் பிரச்னைகளை ஒருவர் எப்படி அணுகுகிறார், ரியாக்ட் செய்கிறார் என்பதில்தான் வேறுபாடுகள் உள்ளது.
உதாரணமாக காதல் தோல்வி என்பது எல்லோருக்குமே ஓர் உளவியல் பிரச்னையை ஏற்படுத்தும். ஆனால், தமிழ் சினிமா இதையும்கூட மீறிவிட்டது. ஒன்று இல்லாவிட்டால் அடுத்தது என்று சினிமா பேச ஆரம்பித்துவிட்டது.  

உதாரணமாக ஒருவர் காதல் தோல்வியால் கையை பிளேட்டை கொண்டு அறுத்துக் கொள்வதை பல இடங்களில் பார்க்க முடியும். சிலர் இதையே சீரிஸாக எடுத்துக் கொள்வதும் நடக்கிறது.

மனநோயை 3 வகையாக பிரிக்கிறார் லெக்கான் எனும் ஃபிரெஞ்சு அறிஞர். ஒன்று நியூராசிஸ் (neurosis). இரண்டு சைக்கோசிஸ் (psychosis). மூன்று பெர்வேஷன் (perversion).
முதலாவதாக நரம்பு மண்டலப் பிரச்னைகளால் ஏற்படுவது. உதாரணமாக ஹிஸ்டீரியா போன்ற பிரச்னைகள்.

சைக்கோசிஸ்ஸுக்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். டெல்யூஷன் எனும் தீவிர கற்பனை நோய், ஸ்கிசோஃபிரினியா எனும் மனச்சிதைவு இதில் முக்கியம். அடுத்து பெர்வேஷன் என்பது வக்கிரம் தொடர்பான நோய். ஆனால், சைக்கோபாத்தை பொறுத்தளவில் இதை ஆளுமைக் குறைபாடு உடைய நோய் என்றுதான் உளவியலாளர்கள் வரையறுக்கிறார்கள்.

இதை ஆங்கிலத்தில் ஏ.எஸ்.பி.டி என்று அழைக்கிறார்கள். அதாவது ‘ஆன்டி சோஷியல் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்’ (aspd) என்று சொல்லலாம்...’’ என்று சொல்லும் சஃபியிடம் ‘எல்லோரிடமும் முழுமையான ஆளுமைகள் இருப்பதில்லை. அப்படியிருக்க ஆளுமைக் குறைபாட்டால் இந்த நோய் எப்படி உண்டாகலாம்’ என்றோம்.

‘‘சரியான கேள்வி. எல்லோருமே ஒருவிதத்தில் - சில விகிதங்களில் மன நோயாளிகளாக இருக்கிறோம் என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால், உள
வியல் துறையைப் பொறுத்தளவில் எல்லாவற்றையுமே ஒரே குட்டையில் போட்டு விளக்குவது சரியல்ல. உதாரணமாக இன்று டிப்ரசனை(depression) ஒருவித மனநோய் என்றுதான் சொல்கிறோம். ஆனால், டிப்ரஷன் எனும் மன அழுத்தம் இல்லாத ஒருவரை நாம் பார்க்கமுடியுமா..?

மனநோயை மிகக் குறைந்த அளவு பிரச்னைகள் உடைய மனநோய், மிகத் தீவிரமான மனநோய் என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். இந்த வகைமைகளுக்கு ஏற்பத்தான் உளவியல் துறை
சில தீர்வுகளை சொல்கிறது. தீர்வுகள் என்பதைவிட இந்தப் பிரச்னைகளின் ஆழத்தைப் புரிந்துகொள்ள இந்தவித பிரிவுகள் கைகொடுக்கின்றன என்று சொல்லலாம்...’’ என்ற சஃபியிடம்,
ஆளுமைக் குறைபாடுகள் பலருக்கும் பலவித விகிதங்களில் இருக்க ஒரு சைக்கோபாத் கொலையாளியை இந்த ஆளுமை பிரச்னை எப்படி உருவாக்குகிறது என்று கேட்டோம்.

‘‘ஆளுமை பிரச்னை பலபேரிடம் இருந்தாலும் அந்தக் குறைகளை மறைக்க எல்லோருமே முயற்சிப்பதில்லை. ஆனால், சைக்கோபாத்கள் இந்தக்  குறைகளை மறைப்பதில் புத்திசாலிகள்.
ஆம். பொதுவாக சைக்கோபாத்கள் புத்திசாலிகள், மற்றவர்களைச் சந்தர்பத்துக்கு ஏற்ப கையாளக்கூடியவர்கள், மற்றவர்கள் மேல் இரக்கமோ, அன்போ அல்லது அக்கறையோ இல்லாதவர்கள்.

உதாரணமாக சீரியல் கில்லர் சோப்ராஜை எடுத்துக் கொள்வோம். யாராவது அவனைப் பார்த்தால் சைக்கோ கில்லர் என்று சொல்வார்களா? கோட் சூட் அணிந்து, ஆங்கில நாவல்களைப் படித்து, மிகவும் புத்திசாலியாகத்தானே இருந்தான்..? இதுதான் ஒரு சாதாரண மனநோயாளியையும், சைக்கோபாத்தையும் வித்தியாசப்படுத்துகிறது.

அஃப்தாப்பின் சில மாறுபட்ட குணங்களை லிவிங் டு கெதர் வாழ்க்கையில் ஷ்ரதா பார்த்திருக்கலாம். அப்பொழுதே அந்தப் பெண் கொஞ்சம் உஷாராக இருந்திருக்க
வேண்டும். உதாரணமாக பிரிவு என்று சொன்னதுமே அவனால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. இதற்கு முன்பே அவனது பெண் பற்றிய பிம்பங்கள், அல்லது நடத்தையில் ஷ்ரதாவுக்கு சந்தேகம் வந்திருக்கவேண்டும்.

ஒருவன் தொடர்ந்து ஒரு விஷயத்தைப்பற்றி வெறுப்புடன் கூடிய வகையில் பேசுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அது அவனது ஆளுமையின் குறைபாட்டுக்கான குறியீடாக ஆகிவிடும்.
இன்று பல பெண்கள் முரட்டு ஆண்களை திருத்துகிறேன் என்று கிளம்பியிருக்கிறார்கள். இந்தப் ‘புதிய பாதை’ சீதாக்களை எப்படி ஒரு சமூகம் உண்டாக்கியது என்று நாம் ஆராயவேண்டும்.
சினிமா பார்த்து அஃப்தாப் இந்தக் கொலையைச் செய்தான் என்று சொல்வது எல்லாம் பாதி உண்மைதான். ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’ படம் ஒரு நிஜ சம்பவத்தின் செய்தியை வைத்து உண்டாக்கிய படம்தான். அதேபோல ‘24 மணிநேரம்’ படத்தைப் பார்த்து தமிழ்நாட்டில் ஒருவன் கொலை செய்தான் என்று சொல்வதும் ஒரு பாதிதான் உண்மை.

நிஜம் திரைப்படத்திலும், அந்தத் திரைப்படம் வாழ்க்கையில் பிரதிபலிப்பதிலும் இருக்கிறது. இதுதான் வாழ்க்கையும் கலையும் சந்திக்கும் இடங்கள். கோடார்ட் எனும் ஃபிரெஞ்சு திரைப்பட மேதை, ‘Gunனும் பெண்ணும் இல்லாத திரைப்படம் சலிக்கும்’ என்ற புகழ்பெற்ற வாசகத்தை சொன்னார். ஆகவே ஆளுமைக் குறைபாடோ அல்லது முழுமையான ஆளுமையோ... இருப்பதை வைத்து சமூகத்துடன் ஒத்து வாழ்வதே இதுமாதிரியான கொலைகளைத் தடுக்கும்.

இந்த இடத்தில் ‘சைக்கோபாத்’தையும் ‘சோஷியோபாத்’தையும் நாம் துல்லியமாக புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஆளுமைக் குறைபாடுதான் சோஷியோபாத்துக்கு வித்திடுகிறது. இதைப் புரிந்து கொள்ள ஹிட்லரின் வாழ்க்கை உதவும்.ஹிட்லரையும், அவரின் நாஜி கட்சி புரிந்த கொலைகளையும் பிரித்துப்பார்க்கமுடியுமா. இதிலிருந்துதான் ‘சோஷியோபாத்’ எனும் ஒரு கருத்து உளவியலில் உருவானது.

தனிப்பட்ட ரீதியில் ஹிட்லர் எப்படி ஒரு ஆளுமைக் குறைபாடுடைய நபர் என்பதற்கான பல ஆய்வுகள் இருக்கின்றன. அந்த ஆளுமைக் குறைபாட்டை ஒரு சமூகத்தின் மொத்த ஜனத்தொகை மேல் ஏற்றி யூதர்களை அழித்தொழித்தான். இதில்தான் ‘சோஷியோபாத்’ வெளிப்பட்டது.இன்று இந்தியாவில் ஒருவன் செய்தால் அது கொலை. பத்துபேர் கூடி செய்தால்..? இந்த மாப் லின்சிங் எனும் கும்பல் கொலைதான் இன்று அரங்கேறுகிறது. இதுவும் சமூகக் கொலைதான்...’’ என்கிறார் சஃபி.  

டி.ரஞ்சித்