ஒரே வீடு... இரு வேறு மாநிலங்களுக்கு சொந்தம்!



மகாராஷ்டிரா - கர்நாடகா எல்லைப் பிரச்னை சற்று தீவிரமடைந்து, இரு மாநிலத் தலைவர்களும் உள்துறை அமைச்சரைச் சந்தித்து இதற்குத் தீர்வு காண முனைப்புடன் இருக்கும் நேரத்தில் -சத்தமில்லாமல் மகாராஷ்டிரா - தெலங்கானா இடையே எல்லைப் பிரச்னை வந்துவிடும் போல இருக்கிறது!காரணம், ஒரு வீடு.
ஒரேயொரு வீடு.மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மகராஜ்கூடா கிராமத்தில்தான் இந்த வீடு அமைந்திருக்கிறது. இது மகாராஷ்டிரா - தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லையில் அமைந்திருப்பதுதான் ஹைலைட்.ஆனால், எல்லைப் பிரச்னை குறித்தெல்லாம் இந்த வீட்டின் உரிமையாளர் அலட்டிக் கொள்ளவேயில்லை. காரணம், மகாராஷ்டிரா - தெலங்கானா என இரு மாநிலங்களிலும் அறிவிக்கப்படும் நலத்திட்டங்களை ஹாய் ஆக அனுபவிக்கிறார்.

இந்த வீட்டின் உரிமையாளர் பெயர் உத்தம் பவார். அவரது வீட்டில் மொத்தம் 8 அறைகள் உள்ளன. அதில் நான்கு அறைகள் தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ளது. அதில் சமையல் அறையும் அடங்கும். மீதமுள்ள அறைகள் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தது.‘‘12, 13 பேர் இந்த வீட்டில் வாழ்கிறோம். என் வீட்டின் சமையலறை தெலங்கானாவில் உள்ளது! 1969ல் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில்தான் இந்த வீட்டின் ஒரு பாதி மகாராஷ்டிராவில் அமைந்துள்ளதும், மற்றொரு பாதி தெலங்கானாவில் அமைந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் இத்தனை ஆண்டுகளில் எங்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. நாங்கள் இரு மாநிலக் கிராம பஞ்சாயத்துக்கும் வரி செலுத்தி வருகிறோம்! மேலும் தெலங்கானா அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களை அதிகமாகவே அனுபவித்துவருகிறோம்!’’ என்கிறார் உத்தம் பவார்.

என்.ஆனந்தி