பயோடேட்டா-கிறிஸ்துமஸ்



பெயர் : நோயல், நேட்டிவிட்டி, இயர் ஆஃப் அவர் லார்டு, ஃபீஸ்ட் டே, ஹாலிடே... என நூற்றுக்கும் மேலான பெயர்களில் அழைக்கப்படுகிறது; பொதுவாக கிறிஸ்துமஸ்.

முதல் கிறிஸ்துமஸ் : கி.பி 336ம் வருடம், டிசம்பர் 25ம் தேதிஅன்று ரோம் நகரில் முதல் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டதாக தரவுகள் சொல்கின்றன.

கொண்டாட்ட நாள் : ஒவ்வொரு வருடமும் இயேசுவின் பிறந்த நாளான டிசம்பர் 25ம் தேதியன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் டிசம்பர் 25 முதல் ஜனவரி 5 வரையிலான 12 நாட்களும் கிறிஸ்துமஸைக் கொண்டாடுகின்றனர். ஆர்மீனியாவில் உள்ள சில கிராமங்கள் ஜனவரியின் முதல் வாரத்திலும், மத்தியிலும் கிறிஸ்துமஸைக் கொண்டாடுகின்றன.

ஜிங்கில் பெல்ஸ் : பிரபலமான கிறிஸ்துமஸ் பாடல், ‘ஜிங்கில் பெல்ஸ்...’ உலகமெங்கும் அதிக நபர்களால் பாடப்பெற்ற, அதிக நபர்களுக்குத் தெரிந்த ஒரே பாடல் இதுதான். அமெரிக்காவைச் சேர்ந்த பாடலாசிரியரான ஜேம்ஸ் லார்டு பியர்பான்ட் என்பவரால் 1857ம் வருடம் இந்தப் பாடல் இயற்றப்பட்டது. பொங்கலைப் போல அமெரிக்காவில் அறுவடை நாள் கொண்டாடப்பட்டது.

அதை இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக அமெரிக்கர்கள் கருதினர். இதற்காக எழுதப்பட்டதுதான் ‘ஜிங்கில் பெல்ஸ்’. 1870களில் அமெரிக்காவில் நடந்த கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சிகளில் ‘ஜிங்கில் பெல்ஸு’ம் பாடப்பட்டது. நாளடைவில் கிறிஸ்துமஸின் ஓர் அங்கமாகிவிட்டது இந்தப் பாடல். விண்வெளியில் பாடப்பட்ட முதல் பாடலும் இதுவே.

வசூல் : உலகளவில் வசூலை வாரிக்குவித்த 20 திரைப்படங்களில், 7 படங்கள் கிறிஸ்துமஸ் காலங்களில் வெளியானவை. உதாரணத்துக்கு ‘அவதாரை’யும், ‘டைட்டானிக்’கையும் சொல்லலாம். இந்த இரண்டு படங்களும் கிறிஸ்துமஸ்க்கு முந்தைய வாரங்களில் வெளியானவை.

எல்லா வசூல் சாதனைகளையும் முறியடிக்கப்போகிறது என்று எதிர்பார்க்கப்படும் ‘அவதார் : தி வே ஆஃப் வாட்டர்’ கூட கிறிஸ்துமஸ்க்கு முந்தைய வாரத்தில்தான் வெளியாகியிருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்கள் கைக்குக் கிடைத்தவுடன் குடும்பம், குடும்பமாக திரைப்படங்களுக்குச் செல்வதை ஒரு மரபு போல கடைப்பிடிக்கின்றனர்.

விநோதம்: ஐரோப்பாவில் உள்ள சில பழமையான கிராமங்களில் விநோதமான முறையில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். கிராம்பஸ் என்ற பேய் கதாபாத்திரத்தைப் போல வேடமிட்டவர்கள் கையில் சங்கிலி மற்றும் மணியுடன் கிராமங்களின் தெருக்களில் அலைந்து கொண்டிருப்பார்கள்.

குறும்பு செய்யும் குழந்தைகளைப் பயமுறுத்துவதற்காக இந்த ஏற்பாடு. பயப்படும் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் கேக்கைக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவார் கிராம்பஸ். கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டுமே அரங்கேறுகிறது இந்த திகில் நிகழ்வு.

அந்தஸ்து : இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் கிறிஸ்துமஸ் மாதத்தில் வீட்டில் நட்சத்திர மின்விளக்கையும், கிறிஸ்துமஸ் மரத்தையும் வைத்திருப்பது அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. அப்போது வசதி படைத்தவர்கள் கூட நட்சத்திர மின் விளக்கையும், கிறிஸ்துமஸ் மரத்தையும் வாடகைக்குத்தான் வாங்கி வந்து வீட்டை அலங்கரித்தனர்.

வாழ்த்து அட்டைகள் : லண்டனைச் சேர்ந்த சர் ஹென்றி கோல் என்பவர் 1843ம் வருடம் முதல் முறையாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை அச்சடித்து விற்பனைக்குக் கொண்டு வந்தார். ‘Wishing you a Merry Christmas and a Happy New Year’ என்ற வாசகங்களுடன் அலங்கரிக்கப்பட்ட அந்த அட்டை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த டிஜிட்டல் காலத்திலும் கூட தங்களின் அன்புக்குரியவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளைக் கொடுப்பதை ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் முன்பெல்லாம் வருடந்தோறும் 160 கோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் விற்பனையாகின. இப்போது 130 கோடியாகக் குறைந்துவிட்டது.

கிறிஸ்துமஸ் மரம் : பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து கிறிஸ்துமஸ் மரம் என்பது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

உலகிலேயே மிகப்பெரிய கிறிஸ்துமஸ் மரம் இத்தாலியிலுள்ள கப்பியோ நகரில் 1991ம் வருடம் நிறுவப்பட்டது. உயரம் 750 மீட்டர், அகலம் 450 மீட்டர், 300 மின் விளக்குகள் என ஜொலிக்கிறது இந்த கிறிஸ்துமஸ் மரம்.

எண்ணிக்கை : கிறிஸ்துவ மதத்தின் முக்கிய திருநாளான கிறிஸ்துமஸை சுமார் 300 கோடிப்பேர் கொண்டாடுகின்றனர். இதில் கிறிஸ்து மதத்தைச் சேராதவர்களும் அடக்கம். தவிர, 160 நாடுகளில் கிறிஸ்துமஸ் தினத்தன்று அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. உலக அளவில் அதிக நபர்களால் கொண்டாடப்படும் திருவிழாவும் இதுவே. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், புரூணே உள்ளிட்ட 14 நாடுகளில் மட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவது இல்லை; விடுமுறையும் இல்லை.

வரலாறு : கிறிஸ்துவ மதம் தொடங்கிய முதல் இருநூறு வருடங்களில் மதத்துக்காக உயிர் நீத்தவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கும், அங்கீகரிப்பதற்கும் மதத்துக்குள்ளேயே எதிர்ப்புகள் இருந்தன. அதனால் இயேசு பிறந்த நாள் கூட அப்போது யாருக்கும் தெரியாது. அதைப்பற்றிய பதிவுகளும் இல்லை. பைபிளின் புதிய ஏற்பாட்டில் கூட டிசம்பர் 25ம் தேதிதான் இயேசு பிறந்தார் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

இந்நிலையில் கி.பி 221ம் வருடம் கிரேக்கத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியரும், கிறிஸ்துவப் பயணியுமான செக்ஸ்டஸ் ஜூலியஸ் ஆப்ரிகனுஸ் என்பவர், டிசம்பர் 25ம் தேதிதான் இயேசுவின் பிறந்த நாள் என்பதைக் கண்டறிந்தார். பிறகு அந்த நாளே இயேசுவின் பிறந்தநாளாக கிறிஸ்துவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால், நான்காம் நூற்றாண்டில்தான் இயேசுவின் பிறந்த நாளைக் கொண்டாட ஆரம்பித்தனர். அந்தக் கொண்டாட்டமும் ரோம் நகரின் சில பகுதிகளில் மட்டுமே நிகழ்ந்தது.
ஒன்பதாம் நூற்றாண்டில்தான் உலகளவில் பரவலாக கிறிஸ்து மஸ் கொண்டாட்டம் ஆரம்பித்தது; இன்றும் தொடர்கிறது.

சான்டா கிளாஸ் : நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்துவ அருட்தொண்டர், செயின்ட் நிக்கோலஸ். ஏழைகளுக்குப் பரிசுப்பொருட்களை அள்ளி அள்ளி வழங்கிக்கொண்டே இருந்தவர் நிக்கோலஸ். இவரை மையமாக வைத்து ஐரோப்பாவில் பல நாட்டுப்புறக் கதைகள் இயற்றப்பட்டன.

அந்தக் கதைகளில் வரும் முக்கிய கதாபாத்திரத்துக்கும் செயின்ட் நிக்கோலஸ் என்றே பெயர்.
டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் செயின்ட் நிக்கோலஸ் நாள் வரும். அப்போது பரிசுப்பொருட்களுக்காக குழந்தைகள் காத்திருப்பார்கள்.

மாலை அல்லது இரவு நேரத்தில் குழந்தைகள் இருக்கும் வீட்டுக்கு வருவார் நிக்கோலஸ். அவர்கள் உறங்கிக்கொண்டிருக்கும்போது தலையணைக்கு அடியில் பரிசுப்பொருட்களை வைத்துவிட்டுச் சென்றுவிடுவார். இந்தக் கதாபாத்திரத்தின் நிஜ வடிவம்தான் சான்டா கிளாஸ். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அமெரிக்கா மற்றும் கனடாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று குழந்தைகளுக்குப் பரிசுகளை வழங்குவதற்காக சான்டா கிளாஸ் வருகை புரிவார். இப்போது சான்டா கிளாஸ் இல்லாமல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முழுமை பெறுவதில்லை.

கிறிஸ்துமஸ் கேக் : பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்து வாசிகள் கிறிஸ்துமஸ் தினத்தன்று மாலை நேரத்தில் கஞ்சி அருந்துவார்கள். நாளடைவில் பழங்கள், வாசனைப் பொருட்கள், தேன் கலந்த கஞ்சியை கிறிஸ்துமஸ் தினத்தன்று அருந்த ஆரம்பித்தனர். கிறிஸ்துமஸ் கஞ்சி புட்டிங்காக மாறி, பழங்களால் செய்யப்பட்ட கேக்காக பரிணமித்தது. 1700களிலிருந்து கொண்டாட்டத்தில் முக்கிய அம்சமாக கிறிஸ்துமஸ் கேக் நிலைத்துவிட்டது.

த.சக்திவேல்