ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி…
நெகிழ்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை…
அன்று காலைதான், போபாலில் நடந்த தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று கோவை திரும்பியிருந்தார் நிவேதிதா.
அதற்குள் விளையாட்டு மேம்பாட்டுத் துறையிலிருந்து சென்னைக்கு வருமாறு அவசர அழைப்பு.
எதற்காக, ஏன் என எதுவும் தெரியாமல் வந்தவருக்கு தலைமைச் செயலகத்தில் காத்திருந்தது சர்ப்ரைஸ்! கடந்த வாரம் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டபோது மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான நிவேதிதாவிற்கு ரூ.4 லட்சத்திற்கான ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வும் அடங்கும். அதற்காகவே நிவேதிதா சென்னைக்கு அழைக்கப்பட்டார். அமைச்சர் உதயநிதியிடமிருந்து காசோலையைப் பெற்றுத் திரும்பியவரிடம் பேசினோம். ‘‘எனக்கு எப்படி சொல்லனு தெரியல. எதுக்காக அழைச்சாங்கனு தெரியாமலயே வந்தேன். இங்க வந்தபிறகுதான், ‘உதய் சார் அமைச்சராகப் பொறுப்பு எடுக்கிறாங்க. முதல் ஊக்கத்தொகை உங்களுக்குத்தான் கொடுக்குறாங்க’னு சொன்னாங்க.
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது. உள்ள போனதும், ‘எங்க பயிற்சி எடுக்குறீங்க’னு அமைச்சர் கேட்டாங்க. சொன்னேன். உடனே, ஊக்கத்தொகையை கொடுத்து பாராட்டினாங்க. இது இன்னும் என்னை ஊக்கப்படுத்தும். சிறப்பாகக் செயல்பட உதவியாகவும் இருக்கும்...’’ என நெகிழும் நிவேதிதா, சர்வதேசப் போட்டிகளில் மூன்று பதக்கங்கள் வென்றவர்.
‘‘நான் பிறந்தது வளர்ந்ததெல்லாம் சென்னைதான். அப்பா சரவணன், சிஆர்பிஎஃப்ல துணை கமாண்டன்ட்டா இருந்தவர். அம்மா கிரிஜா, தனியார் நிறுவனத்துல வேலை செய்றாங்க.
எங்க பூர்வீகம் கேரளா. ஆனா, மூணு தலைமுறையா நாங்க தமிழ்நாட்டுல இருக்கோம். அப்பா, அம்மா பிறந்ததும் இங்கதான். நான் பத்தாம் வகுப்பு வரை சென்னையில் படிச்சேன். அப்போது அப்பா கோவையில் பணி செய்திட்டு இருந்தாங்க. அம்மாவும் நானும் சென்னையில் இருந்தோம். 11ம் வகுப்பு படிக்கும்போது கோவைக்கு வந்திட்டோம். ஏன்னா, துப்பாக்கிச் சுடுதல்ல பயிற்சி எடுக்கவே இங்க வந்தோம்.
நான் ஒன்பதாம் வகுப்பு முடிச்சப்ப கோடை விடுமுறையில் அப்பாவைப் பார்க்க கோவை வந்தேன். அப்ப துப்பாக்கிச் சுடுதல் சம்பந்தமா ஒரு கேம்ப்ல கலந்துகிட்டேன். அதை கோவை ரைஃபிள் கிளப் நடத்தினாங்க. அதுவரை எனக்கு துப்பாக்கிச் சுடுதல் பற்றி எதுவும் தெரியாது. அந்த கேம்ப்க்குப் பிறகு ஆர்வமாகிடுச்சு.
அப்புறம் 2016ல் ரைஃபிள் பிரிவை தேர்ந்தெடுத்து கத்துக்கிட்டு இருந்தேன். ஆனா, ஏன்னு தெரியல. ஒருகட்டத்துல எனக்கு அதுல ஆர்வம் குறைஞ்சு போச்சு. அதனால, விலகிட்டேன். அந்நேரம் அப்பா சரவணன்தான் பிஸ்டலை பரிந்துரைச்சார். ‘அது நல்லாயிருக்கும். உனக்கு நிச்சயம் பிடிக்கும்டா’னு நம்பிக்கை தந்தார். அப்புறம், பிஸ்டல்ல பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். அப்பா சொன்னது உண்மைனு தெரிஞ்சது. எனக்கு பிஸ்டல்ல ஆர்வம் அதிகமானது. பொதுவா துப்பாக்கிச் சுடுதலில் ரைஃபிள், பிஸ்டல், ஷாட் கன்னு மூன்றுவித துப்பாக்கிகளில் 10மீ, 25மீ, 50மீ என வெவ்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்துவாங்க. இதுல சிறிய கைத்துப்பாக்கியான பிஸ்டலை நான் தேர்ந்தெடுத்து பயிற்சி மேற்கொண்டேன்.
அப்பாவும் என் ஆர்வத்தைப் பார்த்திட்டு 2017ம் ஆண்டு எனக்காக சிஆர்பிஎஃப்ல இருந்து விஆர்எஸ் வாங்கினாங்க. எனக்கு பிஸ்டல்ல தீவிர பயிற்சி அளிச்சாங்க. அந்த ஆண்டே மாநில அளவுல போட்டிகள்ல பங்கேற்று நிறைய பதக்கங்கள் வாங்கினேன். அப்புறம், தேசிய போட்டிகளில் கலந்துகிட்டேன். அங்க ‘Renowned shot’ சான்றிதழ் வாங்கினேன். இதை வாங்கினதும் எனக்கு இன்னும் ஆர்வம் வந்திடுச்சு. அப்ப நான் 11ம் வகுப்புதான் படிச்சிட்டு இருந்தேன்.
ஆரம்பத்துல 10 மீட்டர் பிரிவுல பயிற்சி எடுத்தேன். 2018ல் 25 மீட்டர் ஈவென்ட் இருக்குனு தெரிஞ்சது. அதுக்கு முயற்சி செய்தேன். எனக்கு பத்து மீட்டரை விட 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் நல்லா வந்துச்சு. அதனால, என் கவனத்தை 25 மீட்டர் பிரிவின் பக்கம் திருப்பினேன். 2018ல் ஜிவி மவலங்கர் துப்பாக்கிச் சுடுதல் போட்டி வந்தது. அதை ஆரம்பக்கட்டமா இருக்கிறவங்களுக்கு தேசிய அளவு போட்டினு சொல்லலாம். இதுல 25 மீட்டர் பிரிவுல கலந்துகிட்டு சீனியர், ஜூனியர் ரெண்டுலயும் தங்கப்பதக்கம் வாங்கினேன். தவிர, தேசிய அளவுல ரிக்கார்ட்டும் பண்ணினேன். அதை இப்பவரை யாரும் பீட் பண்ணல.
அடுத்து, பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பிபிஏ சேர்ந்தேன். கல்லூரியிலிருந்து நிறைய சப்போர்ட் செய்தாங்க. 2019ம் ஆண்டு ரொம்ப சீரியஸா பயிற்சி செய்தேன். முதல்முறையாக சர்வதேசப் போட்டியில் கலந்துகிட்டேன்.கத்தார்ல நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் டீம் ஈவென்ட்ல வெண்கலப் பதக்கம் வென்றேன். அப்புறம், 2021ல் பெருவில் நடந்த ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வாங்கினேன். அப்ப ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிச்சிருந்தேன்.
இப்ப உதயநிதி சார் பொறுப்பு எடுத்த முதல்நாளே எனக்கான ஊக்கத்தொகை வழங்கும் கோப்பும் இருந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இன்னும் நிறைய சாதிக்கணும்னு தோணுது...’’ என உற்சாகத்துடன் நிவேதிதா நிறுத்த, அப்பா சரவணன் தொடர்ந்தார். ‘‘நான் ரைஃபிள் ஷூட்டரா இருந்தேன். தேசிய பாதுகாப்புப் படையில் இருந்ததால எல்லா துப்பாக்கிகளும் கையாளத் தெரியும். அதனால நிவேதிதாவிற்கு ரைஃபிள்ல இருந்து தொடங்கினேன்.
ஆனா, அவளுக்கு பிஸ்டல் எளிதா தெரிஞ்சது. அதில் ஆர்வம் காட்டினாள். தமிழ்நாடு சாம்பியன்ஷிப்ல நிறைய மெடல் வாங்கியிருக்கிறாள். கடைசி ரெண்டு ஆண்டுகள் மாநில அளவுல போகல. தேசிய அளவுல கலந்துகிட்டாள். மூணு சர்வதேச போட்டிக்குப் போய் பதக்கங்கள் வென்றிருக்கிறாள். பொதுவா, இந்த விளையாட்டு ரொம்ப காஸ்ட்லியானது. நிவேதிதா எங்களுக்கு ஒரே பொண்ணு. நானும், என் மனைவியும் வேலை செய்றோம். அதனால எங்களால் மேனேஜ் செய்ய முடியுது. இல்லனா, இந்த விளையாட்டை மேனேஜ் செய்றது ரொம்பக் கஷ்டம்.
ஏன்னா, துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக்கு தேவையான எல்லா பொருட்களும் ஐரோப்பாவுல இருந்து இறக்குமதி செய்றோம். அதனால, பெரு நாட்டில் நடந்த ஜூனியர் உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதும் நம் முதல்வரைச் சந்திச்சு கோரிக்கை வச்சோம். உடனே, ஊக்கத்தொகைக்கு விண்ணப்பம் கொடுங்கனு சொன்னாங்க. இப்ப அமைச்சர் உதயநிதி சார் கையில் பெற்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. தமிழக அரசுக்கு நன்றி சொல்லிக்கிறேன். இதனுடன் இன்னும் ரெண்டு பேருக்கு நாங்க நன்றிக்கடன்பட்டவங்க. முதல்ல கோவை ரைஃபிள் கிளப். அவங்கதான் நிவேதிதாவிற்கு மாணவர் கட்டணம் மட்டுமே வாங்கி பயிற்சி அளிக்க உதவினாங்க. அடுத்து, பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் கல்லூரி பிபிஏ படிக்க இலவச கல்வி தந்தாங்க. இவங்க இல்லனா இவ்வளவு தூரம் நிவேதிதாவால் வந்திருக்க முடியாது. அதனால, அரசு இந்த விளையாட்டை நிறைய ஊக்கப்
படுத்தணும். கார்ப்பரேட் நிறுவனங்களும் ஸ்பான்சர்ஷிப் தந்து உதவணும். அப்பதான் பலரும் இந்த விளையாட்டுல ஈடுபாடாக உள்ள வருவாங்க...’’ என்கிறவரை தொடர்ந்தார் நிவேதிதா. ‘‘இந்த ஆண்டு ஜெர்மனியில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பையில் வெண்கலம் வாங்கியிருக்கேன். இன்னும் நிறைய போக வேண்டியதிருக்கு. எல்லோருக்கும் ஒலிம்பிக் போகணும் என்பதுதான் கனவாக இருக்கும். ஆனா, எனக்கு அது ரெண்டாவதுதான். ஏன்னா, என் முதல் கனவு வரலாற்றுச் சாதனை படைக்கணும் என்பதே!
அதாவது, ஒரு போட்டிக்கு 60 ஷாட்ஸ் இருக்கும். இதுல ஒரு ஷாட்ல பத்து புள்ளிகள் எடுத்தால் அதுவே அதிகபட்ச ஸ்கோர். ஓவர் ஆல் 600 ஸ்கோர்னு வரும். இதுவரை யாரும் இதை அடிச்சதில்ல. இருக்கிற ரிக்கார்டே 594தான். நான் 600 ஸ்கோரை எடுக்கணும்னு ஆசைப்படுகிறேன். இந்த ப்ராசஸ்ல எனக்கு ஒலிம்பிக் கிடைச்சால் சந்தோஷம்...’’ என இயல்பாக சொல்லும் நிவேதிதா, இப்போது எம்பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார்.
பேராச்சி கண்ணன்
|