அஜித் என்றால் துணிவு!இயக்குநர் ஹெச்.வினோத் Open Talk



பொங்கல் ரிலீஸ், துப்பாக்கியுடன் மாஸ் ஆக்‌ஷன் அவதாரில் அஜித், ‘சில்லா சில்லா...’ பாடல் டிரெண்டிங்... என ஏகே ரசிகர்கள் இப்போதே திருவிழாவுக்கு ரெடியாகிவிட்டனர்.
நாங்களும் ரெடியாதான் இருக்கோம்... என நம்பிக்கையுடன் புன்னகைக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத்.

‘துணிவு’ யாருக்கான படம்?

‘இது இவங்களுக்கான படம்’னு சுருக்க முடியாது. ஆக்‌ஷன் படமா? குடும்பங்களுக்கான படமா? பேங்க் கொள்ளையா... எல்லாமேதான்! வயது வித்தியாசம் இல்லாம எல்லோருக்குமான படம்.

அஜித் சார் இந்தப் படத்துல துணிச்சலான சில ஆக்‌ஷன் காட்சிகள்ல நடிச்சிருக்கார். அந்த ஆக்‌ஷன் மோட் ஏன், எதற்கு என்பதுதான் ‘துணிவு’ கதை.
அஜித் கேரக்டர் எப்படி வந்திருக்கு..?

சார் திரைல மட்டுமில்ல... நிஜத்திலும் துணிச்சலானவர். இந்த படத்துல இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு துணிச்சலான கேரக்டர்ல அவரைப் பார்க்கலாம். இந்த படத்துல அவர் நல்லவரா... கெட்டவரானு பலரும் கேட்கறாங்க. ரெண்டுமேதான்! படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும். இந்த படம் முழுக்க முழுக்க பணத்தை சுற்றி நடக்கற கதை.

கதையை கேட்டுட்டு அஜித் என்ன சொன்னார்..?

‘வலிமை’ ஷூட் அப்ப சார்கிட்ட இந்தக் கதையை சொன்னேன். இது ஒரு பெரிய ஐடியாவாகவோ, ஒரு திரைக்கதையாகவோ ஸ்டார்ட் பண்ணவே இல்ல. ஒரு சீன்... ஒரேயொரு சீன்ல இருந்துதான் இந்தக் கதை ஆரம்பிச்சது. அந்த சீனை மட்டும்தான் சார்கிட்ட சொன்னேன். ‘இன்ட்ரஸ்டிங்கா இருக்கு... நானே பண்றேன்’னு ஆன் த ஸ்பாட் சொல்லி, போனி கபூர் சார்கிட்ட பேசினார். இப்படித்தான் ‘துணிவு’ டேக் ஆஃப் ஆச்சு.

தொடர்ந்து சில வருடங்களா அஜித் கூட பயணம்... எப்படி இருக்கு?

நிறைய புரிதல், நிறைய விவாதங்கள், கருத்து ஷேரிங்... எல்லாம் எங்களுக்குள்ள இருந்திருக்கு. அதையெல்லாம் தாண்டி எங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஒரு பெரிய நம்பிக்கை உருவாகி இருக்கு.

தனக்கான ஹீரோயின் குறித்து அஜித் உங்ககிட்ட பேசியிருக்காரா..?

ஆக்சுவலி இது என்கிட்ட இருக்கற பிரச்னை. கதைக்குள்ள ஒரு கதாபாத்திரமா இருக்கணும்னுதான் ஹீரோயின் குறித்து யோசிப்பேன். அதாவது ஹீரோவுக்கு சப்போர்ட் செய்யாம, கதைக்கு ஹீரோயின் சப்போர்ட் செய்யணும். அப்படித்தான் ஃபிக்ஸ் பண்ணுவேன்.யாரெல்லாம் நடிக்கிறாங்க... என்ன கேரக்டர் செய்யறாங்கனு சார் எப்பவும் கேட்டதோ தலையிட்டதோ இல்ல.

‘துணிவு’ படத்தையே எடுத்துப்போம். மஞ்சு வாரியர் மேம் ரொம்ப வித்தியாசமான ஒரு கேரக்டரில் நடிச்சிருக்காங்க. பேசிக்கலி அவங்க ஜீனியஸ். படத்திலும் அப்படியான கேரக்டர்லதான் வர்றாங்க.

இவங்க தவிர சமுத்திரக்கனி, பாவ்னி, அமீர், சிபி, ஜான் கொக்கென், மகாநதி சங்கர், பக்ஸ், பால சரவணன்... இப்படி நிறைய பேர் தங்கள் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்காங்க. பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம், இந்தப் படத்துல நடிகரா அறிமுகமாகிறார். அதேபோல ஜி.பி.முத்து, டான்சர் ரமேஷ், யுடியூபர் பிரபலங்கள் பலர் நடிச்சிருக்காங்க.
ஷூட் எங்க நடந்தது..?

50% படத்தை சென்னைலதான் எடுத்திருக்கோம்! ஹைதராபாத்ல 30% படம். பேங்காக்ல சில காட்சிகள் இருக்கு. சென்னையின் முக்கிய சாலையை செட் போட்டு ஷூட் செய்திருக்கோம். செட்னா அந்த சாலை, அதிலிருக்கும் பில்டிங்... இப்படி எல்லாமே ரியலா காட்சித் தரும்.

தொடர்ந்து பெரிய படங்கள்... பெரிய புராஜெக்ட்ஸ்... பெரிய ஹீரோ... இதனால் கிடைத்த ப்ளஸ் அண்ட் மைனஸ்..?

மக்கள்கிட்ட ஈசியா ரீச் ஆக முடிஞ்சுது. பெரிய ஹீரோக்கள் குறைந்தது 20 வருஷங்கள் போராடி இந்த மாஸ் நிலைக்கு வந்திருக்காங்க. அவங்களோடு டிராவல் செய்யும்போது அந்த 20 வருஷ பயணம் சுலபமா நமக்கு கைகொடுக்கும். நாம சொல்ல நினைச்சதை மாஸ் ஹீரோவை வைச்சு சொல்லலாம். மக்கள் ஏத்துப்பாங்க.

இதெல்லாம் ப்ளஸ்.மைனஸ்ன்னா... இந்த ஒப்பீடுதான். பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்... படம் ஹிட்டா தெறி ஹிட்டா ப்ளாக்பஸ்டரா மாதிரியான கேள்விகள். இந்த ஹீரோவை விட அந்த ஹீரோ அதிக கலெக்‌ஷனா என்ற கம்பேரிசன்... இதெல்லாம் மொத்த படக்குழுவுக்கும் தொடக்கம் முதலே அழுத்தத்தை கொடுத்துடும். படம் தொடர்பான முக்கிய முடிவுகளை உடனடியா எடுக்க முடியாது. இது எல்லாத்தையும் யோசிக்கணும். இதுதான் மைனஸ்.

சினிமா இப்ப எப்படியிருக்கு..?

ரொம்ப ஆரோக்கியமா. முன்னாடி தியேட்டர்ல பார்ப்பது மட்டும்தான் சினிமா. சின்ன வயசுல ஃபேமிலியோடு படம் பார்ப்பதே பெரிய விஷயம். அந்தச் சூழல்ல ஒரு படம் எப்படியிருக்குனு கூட நம்மால் கருத்து சொல்ல முடியாது; தெரியாது.இப்ப அப்படியில்ல. தியேட்டரை தாண்டி பல மீடியம் சினிமா பார்க்க வந்தாச்சு. டெக்னிக்கல் விஷயங்களை எல்லாருமே இப்ப அக்குவேறு ஆணி வேறா விவாதிக்கறாங்க. டெக்னாலஜி பத்தி கூகுள்ல பார்த்து தெரிஞ்சுக்கறாங்க.

இந்த சூழல்ல தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸுக்கான படத்தைத்தான் திரையரங்குல பார்க்க மக்கள் ஆர்வம் செலுத்தறாங்க. ‘பாகுபலி’ ,‘கேஜிஎஃப், ‘ஆர்ஆர்ஆர்’ படங்கள் அப்படியானது. அதனாலதான் கலெக்‌ஷன்ல இந்தப் படங்கள் பட்டையைக் கிளப்புது. இப்ப பாருங்க ‘அவதார்’ மாதிரியான ஒரு படத்துக்காகவே புதுசா ஐமேக்ஸ் திரையரங்கங்கள் ஓபன் ஆகுது. இதெல்லாமே சினிமா ரசனை மேம்பட்டிருப்பதற்கான காரணங்கள்.

மீண்டும் ஜிப்ரானுடன் கூட்டணி... பாடல்கள், இசை எப்படி வந்திருக்கு?

‘துணிவு’ல மொத்தம் நாலு பாட்டு இருக்கு. ஏற்கனவே ‘சில்லா சில்லா...’ மிகப்பெரிய ஹிட். அடுத்தடுத்த  பாடல்களும் ரிலீசாகி ஹிட் ஆகும்னு நம்பறோம்.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ முதல் ஜிப்ரான் எனக்குப் பழக்கம். ‘துணிவு’ கதைக்குத் தேவையான இசையை ரொம்ப அற்புதமாக கொடுத்திருக்கார். ஒரு தர லோக்கல் பாட்டு, அடுத்து படத்தினுடைய ப்ரோமோ பாடல் இருக்கு. இப்ப ரீரெகார்டிங் வேலைகள் போயிட்டு இருக்கு.

அப்புறம் அஜித் சாரை விட அதிகமா நான் பயணம் செய்யறது  நிரவ்ஷா சார் கூடதான். இந்த படத்துக்கும் அவர்தான் டிஓபி. என்னை விட சீனியர். சில விஷயங்கள் அவர் சொன்னா சரியா இருக்கும். விஜய் வேலு குட்டி எடிட்டிங், மிலன் ஆர்ட் டிபார்ட்மெண்ட். தயாரிப்பு போனி சார். மொத்தத்துல ரொம்ப நல்ல டீம். பல பேர் கூட பல வருஷமா டிராவல் செய்துட்டு இருக்கேன். எல்லாருடைய உழைப்பும் சேர்ந்து இந்த படமும் நல்லா வந்திருக்கு.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய், அஜித் இருவரின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ்..?

இதுல வேடிக்கை என்னன்னா அவங்க ரெண்டு பேருடைய ரசிகர்களுமே ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல ஃபிரெண்ட்ஸா இருப்பாங்க. ஒரு ஆபீஸ்ல உட்கார்ந்துட்டு வேலைக்கு நடுவில விஜய் சார் - அஜித் சார் பத்தி பேசிக்கிட்டு சோசியல் மீடியாவிலும் சண்டை போட்டுக்கிட்டு இருப்பாங்க. இது அவர்களுடைய கேம். ரிலீசுக்கு அப்பறம் இந்த கேம் அடுத்த கட்டத்துக்கு போகும்.

யாருக்கு என்ன கலெக்‌ஷன்... யார் படம் ஹிட்டு... இப்படி விட்டுக் கொடுக்காம பேசிட்டு இருப்பாங்க. அதுவும் இன்னைக்கு இன்டர்நெட் தாக்கம் அதிகமா இருக்கறதால ரெண்டு பக்கமும் தகுந்த ஆதாரமெல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.

ஆனா, ரெண்டு பேருமே ஒரே ஏரியாக்காரர்களா இருப்பாங்க. ஒரே ஆபீஸ், காலேஜ், ஸ்கூல் இப்படிதான் இருப்பாங்க. இது அவங்களுக்கு ஒரு சின்ன ரிலாக்ஸ் டைம். அவ்வளவுதான்.
இந்த கேம் சினிமாவா பார்த்து சண்டையிடுற வரை பிரச்னை இல்ல. தனிமனித தாக்குதல் நடக்கும்போதுதான் எல்லாருக்குமே சங்கடங்களும் வருத்தங்களும் உண்டாகுது. இது மட்டும் வேண்டாம்.

இரு நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியீடு... உங்களுக்கு அந்த அழுத்தம் இருக்கா?

எனக்கு மட்டுமில்ல... ரெண்டு பட டீமுக்கும் கண்டிப்பா இருக்கு. தளபதியே சொல்லி இருக்கார் ‘ரெண்டு படங்களும் நல்லா ஓடட்டும் நண்பா...’ அப்படித்தான் இரண்டு படங்களுமே நல்லா ஓடி கலெக்‌ஷன் பார்க்கணும்னு விரும்பறேன். பொங்கலுக்கு நிறைய லீவு இருக்கு. ‘துணிவு’ பார்த்துட்டு ‘வாரிசு’ பார்த்தாலும் சரி... ‘வாரிசு’ பார்த்துட்டு ‘துணிவு’ பார்த்தாலும் சரி... ரெண்டு படங்களும் ஜெயிக்கணும் அவ்வளவுதான்.

அஜித்தின் கண்ணும் அவர் கையில் இருக்கும் கன்னும் கதையில் என்ன செய்யப் போகுது?

‘துணிவு’ல ஆக்‌ஷனுக்கு பஞ்சமே இல்ல. அவ்வளவு வெரைட்டி இருக்கு. என்ன மாதிரியான ஆக்‌ஷன் இருக்குனு ஒரு லீட் கொடுக்கத்தான் சார் கைல துப்பாக்கி இருக்கறா மாதிரி போஸ்டர் ரிலீஸ் செய்தோம்.

பணத்தைச் சுற்றித்தான் நம்ம வாழ்க்கையும் ஓடிக்கிட்டு இருக்கு. அந்தப் பணம் இந்தப் படத்துல பிரதானமா இருக்கும். அதைச் சுற்றி நடக்குற கதைல சார் என்ன செய்யப் போகிறார் என்கிற கேள்விகளுக்கான விடை கிளைமாக்ஸ்ல தெரியும். பொங்கலுக்கான ஆகச்சிறந்த என்டர்டெயின்மெண்ட்டா ‘துணிவு’ இருக்கும்.

நெகட்டிவ் விமர்சனங்களையும் செய்திகளையும் எப்படி பார்க்கிறீங்க..? குறிப்பா அஜித் ட்ரிப் போனதால் படம் தாமதம் செய்திகள் வந்ததே..?

எல்லாமே ஃபேக் நியூஸ்தான். என்னன்னு சொல்றது... சினிமாக்காரனா இருக்க இன்னைக்கு மிக பெரிய சகிப்புத்தன்மை தேவை. அதைத்தான் நான் கத்துக்கிட்டேன். எப்ப நம் வாழ்க்கை வட்டமும், லைஃப் கேமும் பெருசாகுதோ அப்ப இப்படியான எதிர்மறை விமர்சனங்களையும் செய்திகளையும் தவிர்க்கவே  முடியாது. என்னையே எடுத்துக்கோங்க... முதல் படம், ரெண்டாவது படம் செய்யும்போது தவறு செய்தா ‘பரவாயில்லைடா தம்பி... அடுத்த படத்துல திருத்திக்கோ’னு சொல்லிடுவாங்க.

ஆனா, ஒரு பெரிய ஹீரோ... பெரிய ப்ராஜெக்ட்னு என் பயணம் பெருசாகும்போது... போட்டிகள் நிறைந்த உலகத்துக்குள்ள காலடி வைக்கும்போது... நிச்சயமா இப்படியான விமர்
சனங்கள் வரத்தான் செய்யும். இதை நான் ஃபேஸ் பண்ணிதான் ஆகணும். 

நல்ல விமர்சனங்களா இருந்தா நிச்சயமா அதை ஏத்துக்கிட்டு திருத்திக்குவேன். ஆனா, வேணும்னு நெகட்டிவ் தாக்குதல் செய்யும்போது அதை ஒண்ணுமே செய்ய முடியாது. அப்படியே விட்டுடணும். உங்க அடுத்த பட வேலைகளைத் தொடங்கிட்டீங்களா?
இந்த முறை எந்த திட்டமும் கிடையாது. முதல்ல ‘துணிவு’  ரிலீஸ்... அப்புறம்தான் அடுத்த பிளான்.

ஷாலினி நியூட்டன்