2300 ஆண்டுகள் பழமையான பெருவழி!
சேர நாடு to சோழ, பாண்டிய நாடுகள்... via கொங்கு நாடு...
ஓர் உயரமான குன்றின் வலதுபுறத்திலிருந்து தொடங்குகிறது அந்த வண்டிப்பாதை. உள்ளே செல்லச் செல்ல அது ஒற்றையடித்தடமாக மாறுகிறது. போகும்போதே வழியில் காய்ந்த, ஆவி பறக்கும் யானைச் சாணங்களையும் காண முடிகிறது. அழைத்துப் போன வனத்துறை ஊழியர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் நிதானிக்கிறார்கள். ‘எங்கோ பக்கத்தில்தான் காட்டு யானை நிற்கிறது!’ என்று சற்றே மூச்சை இழுத்துப் பிடித்து விடுகிறார்கள். பிறகு மெல்ல, மெல்ல அடியெடுத்து வைக்கிறார்கள். அடர்காட்டுக்குள் காய்ந்த சருகுகள் காலடியில் மிதிபடும் சப்தம் மட்டும் கேட்கிறது. சற்றேறக்குறைய நடந்த பாதையின் உச்சி அதுவாகத்தான் இருக்கும். அங்கிருந்து பார்த்தால் ஒன்றிரண்டு மைல் தூரத்தில் ஒரு ஊர் கீழே கிடக்கிறது. அங்கே பூச்சிகள் போல் வாகனங்கள் செல்வதைக் காணமுடிகிறது. நாம் நின்ற இடத்தில் நிறைய பாறைகள். குன்றுகள், மரங்கள், செடி, கொடிகள். அதன் மறைவில் அஞ்சுக்குப் பத்தடி நீள அகலத்தில் செதுக்கியெடுத்த பலகை போல ஒரு நீளப்பாறை. கறுத்து, பூஞ்சாணம் ஏறி இருக்கிறது. செடி, கொடிகளை விலக்கிவிட்டு, அந்தப் பாறையின் மேற்பரப்பைத் துடைக்கிறார்கள். தண்ணீர் ஊற்றிக் கழுவுகிறார்கள் நம்மை அழைத்துச் சென்ற தொல்லியல் ஆர்வலர்கள். ஆஹா, அந்தப் பாறையில் கறுப்புக் கோடுகளாய் மொழி புரிபடாத எழுத்துக்கள் தெரிகிறது. இதை ஒவ்வொரு எழுத்தாக புரிந்து படிக்கிறார் நம்மைக் கூட்டிப் போன தொல்லியல் ஆர்வலர். ‘திருநிழலும் மண்ணுயிரும் சிறந்தமைப்ப ஒரு நிழல் வெண்டிங்கல் போலோங்கி ஒரு நிழல் போல் வாழிய கோச்சோழன் வளங்காவிரி நாடன் கோழியர் கோக்கண்டன் குழவு...’ இந்த கல்வெட்டுக்கு வயது 2300 ஆண்டுகள். இது கோவை நகருக்கு வடமேற்கே 15 கிலோமீட்டர் தொலைவில் சுண்டக்காமுத்தூர் என்ற கிராமத்தைத் தாண்டி மதுக்கரை வனத்திற்குள் இருக்கிறது. இந்தக் கல்வெட்டை காட்சிப்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். அதன் மூலம் சேரநாடு, கொங்குநாடு இரண்டின் வழியே ரோமானியர்கள் சோழ, பாண்டிய நாட்டிற்குள் நடத்திய வரலாற்றுச்சுவடை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிறார்கள் தொல்லியலாளர்கள். இப்போது தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பதைப் போல பண்டைக் காலத்தில் வணிகம், போக்குவரத்து, படையெடுப்பு உள்ளிட்ட உபயோகங்களுக்காக மன்னர்கள் பெருவழிகளை அமைத்தார்கள். அப்படி அமைக்கப்பட்டதில் கொங்கு மண்டலத்தில் மட்டும் ராஜகேசரி பெருவழி, அசுர மலைப் பெருவழி, சோழமாதேவி பெருவழி, அதியமான் பெருவழி உள்ளிட்ட இருபது பெருவழிகள் இருந்ததாக வரலாறு சொல்கிறது. ஆனால், இப்போது இவற்றில் ஒன்றுகூட பயன்பாட்டில் இல்லை. குறிப்பாக கோவை மதுக்கரை வனப்பகுதியில் செல்லும் ராஜகேசரி பெருவழியானது சோழ - சேர நாடுகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருந்துள்ளது. மேற்குக் கடற்கரையையும் பூம்புகாரையும் இணைக்கும் இந்த பெருவழி மூலமாகத்தான் ரோமானியரும் கிரேக்கர்களும் வாணிபத் தொடர்புகள் வைத்திருந்தார்கள்.
ராஜகேசரி பெருவழியானது கி.பி 871 - 907 கால கட்டத்தில் ஆதித்த சோழன் காலத்தில் முப்பது அடி அகலத்துக்கு செப்பனிடப்பட்டதாக தகவல் உள்ளது. எனவே கல்வெட்டையும், பெருவழிப் பாதையையும் மீட்டெடுத்து, வருங்காலச் சந்ததிக்கு நம் வரலாற்றை புரியவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் கோவை மக்கள். இதற்கான பணிகளை இப்பகுதி மார்க்சிஸ்ட் கட்சியினர் முன்னெடுத்துள்ளனர்.
இதுகுறித்து மதுக்கரை மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகியான சண்முகத்திடம் பேசினோம். “இந்தப் பாதை கோவை பேரூர் செட்டிபாளையத்திலிருந்து சுண்டக்காமுத்தூர், அறிவொளி நகர் வழியாக அய்யாசாமி மலைகளை கடந்து எட்டிமடை, மாவூத்தம்பதி சென்று வாளையாறு, பாலக்காடு செல்கிறது.
மன்னர் காலத்தில் பெருவழியாக விளங்கிய இதன் ஒரு பகுதியான அய்யாசாமி மலை வனத்துறையிடம் வந்துவிட்டது. அதற்கு முன்னும் பின்னும் உள்ள நிலங்கள் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் ஆக்கிரமிப்புகளில் சிக்கிக் கொண்டுவிட்டன. இதனால், ராஜகேசரிப் பெருவழிக்கு ஆதாரமாக இருந்த எச்சங்கள் எல்லாம் அழிந்து விட்டன. மிச்ச அடையாளமாக உள்ளது இந்த கல்வெட்டு மட்டும்தான். இப்படியே விட்டால் இதுவும் அழிந்துவிடும்.
எனவே, ராஜகேசரிப் பெருவழியை திறந்துவிடுவதன் மூலம் ஆக்கிரமிப்பு நிலங்களையும் மீட்கலாம். இப்பகுதியில் மக்கள் புழக்கம் ஏற்பட்டால் இந்தக் கல்வெட்டு உள்ளிட்ட தொல்லியல் அடையாளங்களும் பாதுகாக்கப்படும். இதற்காக நாங்கள் பத்து ஆண்டுகளாக போராடியும் முந்தைய அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை.
திமுக அரசு வரலாறு, தமிழ்மொழி பேணும் அரசு. நிச்சயம் இதை செய்வார்கள் என்பதால் கோரிக்கை விடுக்கிறோம்!’’ என்கிறார் சண்முகம். இந்தக் கல்வெட்டை முதன்முதலாகக் கண்டறிந்தவரும், மூத்த வரலாற்று ஆய்வாளரும், முன்னாள் தொல்லியல் துறை அலுவலருமான பூங்குன்றனிடம் இது குறித்துப் பேசினோம். அவர் இதன் வரலாற்றையே சுவாரஸ்யமாக நமக்கு விளக்கினார்.
‘‘இந்த கல்வெட்டு எங்கள் பார்வைக்கு வந்ததே பெரிய கதை. ஈரோடு புலவர் ராசு, கோவை சுண்டக்காமுத்தூரில் பட்டிமன்றம் பேசப் போயிருக்கிறார். அங்கே இவரை அறிமுகப்படுத்தியவர்கள் கல்வெட்டு அறிஞர் என்று அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அந்த ஊரில் உள்ளவர்கள் இந்தக் கல்வெட்டைப் பார்த்திருக்கிறார்கள். ஏதோ எழுதியிருக்கிறது என்று தெரிகிறது. அதைப் படிக்க முடியவில்லை. அவர்களும் கிருபானந்தவாரியார் உட்பட சகலருக்கும் இதை புகைப்படம் எடுத்து அனுப்பியிருக்கிறார்கள். யாருக்கும் ஒண்ணும் தெரியலை.
அப்படி இவர்கள் ராசுவிடமும் சொல்லியிருக்கிறார்கள். அவரும் போய்ப் பார்த்துட்டு தொல்லியில்துறை அலுவலகம் வந்து என்னைக் கூட்டிட்டுப் போனார். 1976 டிசம்பரில் இது நடந்தது. அப்போதுதான் தொல்லியல் இலாக்காவுக்கே இந்தக் கல்வெட்டு இருப்பது தெரிய வந்தது. இந்தியாவிலேயே இது பழைய பெருவழி. அந்த வழி அப்படியே இருக்கு. அந்தக் கல்வெட்டில் இருந்தது ஒரு வெண்பா.
‘திருநிழலும் மண்ணுயிரும் சிறந்தமைப்ப ஒரு நிழல் வெண்டிங்கல் போலோங்கி ஒரு நிழல் போல் வாழிய கோச்சோழன் வளங்காவிரி நாடன் கோழியர் கோக்கண்டன் குழவு...’ இதில் கடைசி வார்த்தையை படிக்கறதுக்கு 20 வருஷம் ஆச்சு. இப்படியிருக்குமோ, அப்படியிருக்குமான்னு ஆராய்ச்சி. இந்த எழுத்து வட்டெழுத்து. மற்ற சொல் எல்லாம் எப்படியோ படிச்சிட்டு புரிஞ்சுட்டோம். இந்த கடைசி குழவு என்றால் புகழ்ன்னு அர்த்தம். கோக்கண்டனுடைய புகழ் வாழ்த்தற மாதிரியான வரிகள்.
முதலாம் ஆதித்தசோழன் காலத்தில் இந்தக் கல்வெட்டு எழுதியிருக்காங்க. எங்க துறைத் தலைவர் முதலில் இது ராஜராஜன் கல்வெட்டுன்னு பத்திரிகைகளுக்கு கொடுத்துட்டார். பின்பு படிக்கப் படிக்கத்தான் கோக்கண்டன் என்கிற பேரு யார் யாருக்கு வருதுன்னு பார்த்தால் ஆதித்தனுக்கும், இரண்டாம் ராஜராஜன் (12 ம் நூற்றாண்டு) ஆகிய ரெண்டு பேருக்கு மட்டும்தான் வருதுனு தெரியவந்தது.
இந்த எழுத்து 9ம் நூற்றாண்டு. ஆகவே ஆதித்தனுக்குரிய கல்வெட்டுங்கிற முடிவுக்கு கிட்டத்தட்ட 1996க்குப் பிறகுதான் ஆய்வில் உறுதியாகியது. அவனை தில்லைசாணன் கல்வெட்டுல சொல்லும்போது ‘தொண்டைநாடு பாவிய பல்யானை கோக்கண்டனாயி ன ராஜகேசரி’ன்னு வரும். அவன் தொண்டைநாடு பாவிய (வெற்றி கண்ட) மன்னன். இதுல புதுசா ‘பல்யானை கோக்கண்டனாயின ராஜகேசரி’ன்னு வரும். இவன் பல்யானை கோக்கண்டன். இந்த கோக்கண்டன்தான் இவனை ஐடண்டிட்டி செய்யுது. இந்த பெருவழி இரண்டாயிரம் வருஷங்களா இருக்கு. ஆனால், அதைப் புதுப்பித்து இவன் பெயரை வைத்துக் கொள்கிறான். அவன் காலம் 12ம் நூற்றாண்டு. ரோமானியர்கள் வந்த வழி அது. மேற்குக்கடற்கரையிலிருந்து இந்த வழியாகத்தான் வந்திருக்காங்க. மேற்குக் கடற்கரைக்கும், கிழக்குக் கடற்கரைக்கும் (நாகப்பட்டினம் அல்லது பூம்புகார்) இணைப்பு சாலையாகவே இது இருந்திருக்கு. ரோமானியர்கள் நேரா கொங்குநாட்டில் பேரூருக்குத்தான் வந்திருக்காங்க. அங்கிருந்து நொய்யல் கரையைப் பிடிச்சுட்டுதான் வெள்ளலூர், சூலூர், கொடுமணல், கரூர் எல்லாம் போறாங்க. அதற்கு ஆதாரமாக வெள்ளலூர்ல மட்டும் 1500 ரோமானியர் காசுகள் கிடைத்துள்ளது. இரண்டு நாட்டுக்கும் திறை வசூலிக்கறவங்க, சாலை அமைத்தவர்கள் என்கிற பெருமையை இந்தக் கல்வெட்டு மூலம் ஆதித்தசோழன் நிலைநாட்டிக்கொள்கிறான். இதில் முக்கியமான செய்தி, ‘நிழல், நிழல்’ன்னு மூணு இடத்தில் வருது. நாங்க முதல்ல என்ன நினைச்சோம்ன்னா அசோகர் வாழ்க்கையைப் படிச்சுப் படிச்சு, இங்கேயும் நிழலுக்கு மரம் வச்சிருப்பாங்கன்னு நினைச்சுகிட்டோம். அப்புறம்தான் யோசனை. இதுவே பெருங்காடு, இதில் நிழல் தர மரநிழல் தர்றதுல என்ன அதிசயம் இருக்க முடியும்ன்னு யோசிச்சோம். அதை ரெக்கார்டு பண்ணலை. அப்புறம்தான் கேரள கல்வெட்டுல ‘நிழல்’ன்னு ஒரு சொல் வருது. அது என்னன்னா ‘ஷேடோ ஆர்மி’. அதாவது நிழல்... உளவுப்பிரிவு. ராஜா போகும்போது மஃப்டியில் பாதுகாப்பாக வருவாங்க. அதுக்குத்தான் நிழல்னு பேரு. இந்த இடத்தில் ஷேடோ ஆர்மி வருதுன்னா, இது மலைப் பிரதேசம். ஆறலைக் கள்வர் நிறைய கொள்ளையர்கள் உண்டு. சுந்தரர், தன்கிட்டவே கொள்ளையடிக்கிற மாதிரியெல்லாம் பாடறார் இல்லையா? குடிசையப் போட்டுட்டு, அங்கங்கே வேட்டையாடற மாதிரி... அதனால்தான் அந்த சொல்லைப் பயன்படுத்தியிருக்காங்க!’’ என்ற பூங்குன்றனிடம், ‘இந்த ராஜ கேசரிப் பெருவழியைப் பொது மக்கள் பார்வைக்கு கொண்டு வருவதில் என்ன சிக்கல் இருக்கிறது’ என்று கேட்டோம். ‘‘சிக்கல் நம்ம சட்டம்தான். நம்ம நாட்டில் எல்லாம் அப்படியே சட்டத்தை புடிச்சுகிட்டே நிற்பாங்க. அதை இங்கே சில நேரங்களில் தேவைக்கேற்ற மாதிரி தளர்த்தலாம். இந்த பெருவழியைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடுவதன் மூலமோ, அவர்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தறதன் மூலமோ வனம் பெரிசா அழியப் போறதில்லை. அதை இங்குள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொல்லியல் அறிஞர்கள் பலரும் முதலமைச்சருக்கு விண்ணப்பம் கொடுக்கலாம். இது இந்தியாவிலேயே பழைய பெரிய பெருவழி, கிமு4-ம் நூற்றாண்டிலேயே பயன்பாட்டில் இருக்கு. அதைப்பற்றி மக்கள் வரலாறு தெரியணும். அங்கே ஒரு அருங்காட்சியகம் வைக்கணும். அப்படி வைக்கும்போது வழியில் சங்ககாலத்தில் வந்து போன ரோமானியர்கள், வணிகர்கள் பற்றியெல்லாம் காட்சிப்படுத்தலாம். இப்போதைக்கு ரொம்ப பழமையான பெருவழி எனக்குத் தெரிந்து இந்த ராஜகேசரிப் பெருவழிதான். இந்த எழுத்துக்குத்தான் வயது ஆயிரம் வருடம். அதுக்கு முன்னே பெருவழி ரெண்டாயிரம் வருஷமா இருக்கு. கி.மு 4ம் நூற்றாண்டிலேயே இதன் வழியே வணிகப்போக்குவரத்து நடந்திருக்கு. என்எச் 7 இருக்கே... அதுக்குத் ‘தக்ஷணப்பதம்’ன்னு பேரு. கெளடில்யரின் நூலிலேயே அது வருது. அந்தப் பெருவழி இதை விட நிச்சயம் இருநூறு, முந்நூறு வருஷம் அதிகம். அதை நவீனப் பெருவழியாக மாற்றிட்டாங்க. அதுபோல இதையும் செஞ்சா நம்ம சந்ததிகள் நம்ம வரலாறு புரிஞ்சு நடப்பாங்க!’’ என்கிறார் பூங்குன்றன். கா.சு.வேலாயுதன்
|