விவசாயிகளின் நண்பனான ஆந்தைக்கு பகலில் கண் தெரியும்!
நடுங்கும் குளிரில், கொட்டும் மழையில் நடந்த பறவைகள் ஆராய்ச்சி
அவர்கள் அந்த மலைச்சரிவுகளில் ஓடிக்கொண்டும், நடந்து கொண்டும் இருந்தார்கள். அனைவரின் பார்வையும் மேகங்கள் பாவும் வானத்தையே அளந்திருந்தன. குறிப்பாக அவர்கள் கண்கள் வானளாவி நின்ற மரங்களையே கூர்ந்திருந்தன.‘‘ஹேய்... அதோ க்ரே ஹெட்டல் கேனரி ப்ளைக்கேட்சர்... அதோ அங்கேதான்... பாரு..!’’‘‘சார்... அதோ அந்த மரத்தில் இருக்கே அதுதானே ட்டிக்கில்ஸ் ப்ளூ ப்ளைகேட்ச்சர்?’’‘‘இல்லையில்லை... அது ஒயிட் அய் பிளைகேட்சர்...’’‘‘இது பேரு நீல்கிரி லாபிங்க் த்ரஷ்... ஒரு செகண்ட் கூட இங்கே, அங்கே நிற்காது..!’’
‘‘அதுவா... சாதாரண புல்புல் பறவைதான். இங்கே நிறைய இருக்கு. அது பாரு அப்படியே நின்னு நமக்கு எவ்வளவு நேரமா போஸ் கொடுக்குதுன்னு..!’’ இப்படி அவர்கள் பேசிய பேச்சுகளுக்கு அளவேயில்லை. மகாபாரத அர்ச்சுனனுக்கு எப்படி கிளியின் கழுத்துக்குறியோ அது போல இவர்கள் அத்தனை பேரின் கவனமும் சுற்றிலும் தென்படும் பறவைகளின் மீதே இருந்தன. எப்படியும் ஐம்பது பேருக்கும் குறையாது. அதில் எழுபது வயதுடைய வயோதிகர்களும் இருந்தார்கள். நடுத்தர வயதுப் பெண்களும் இருந்தார்கள். 2K கிட்ஸ் இளைஞர்கள், இளைஞிகளும் இருந்தார்கள். நான்கு பேர், ஐந்து பேர் கொண்ட குழு குழுவாக திக்குக்குப் பலராக அலைந்தார்கள்.
ஆம். சென்னையை மிரட்டிய மாண்டஸ் புயல் கரை கடந்த 10ம் தேதி. டிசம்பர் மாதக் குளிர் மைனஸ் டிகிரிக்கு தாவிக் கொண்டிருந்த நீலகிரி மலையில். சிறுதூறலும், சற்றே பெரிய மழையுமாய் மாறிமாறிப் பெய்து கொண்டிருக்க, அந்த குளிரிலும் மழையிலும் கூட ரெயின்கோட், ஸ்வெட்டர், ஜெர்கின் அணிந்துகொண்டு குன்னூரிலிருந்து இரண்டு மைல்தள்ளி உள்ள பிரவீன்குடில் காட்டேஜிலிருந்து ஸ்பிரிங் ஹில் கார்டன் அப்பர் மஞ்சில் எஸ்டேட், கன்னிமாரியம்மன் வீதி பண்ணைக்காடு பகுதியில் டெலஸ்கோப், ஹைரேஞ்ச் பைனாகுலர், 300, 500 டெலி ஜூம் கேமராக்கள் சகிதம் அலைந்துகொண்டிருந்தார்கள் அவர்கள்.
மலபார் ஃபைட் ஹார்ன்பில், நீல்கிரி ப்ளைக்கேட்சர், நீல்கிரி லாபிங் த்ரஷ், பிளாக் அன் ஆரஞ்ச் ப்ளைக்கேட்சர், க்ரே எட்டேட் கேனரி ப்ளைக்கேட்சர், ட்டிக்கில்ஸ் ப்ளூ ப்ளைக்கேட்சர், ஒயிட் அய்... இப்படி அவர்கள் உச்சரித்த பறவைகளின் பெயர்கள் வன விலங்குகள் மீது, இயற்கை மீது அவர்கள் காட்டிய ஆர்வத்தைக் காட்டியது.
மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கி விட்டதால் நீலகிரி வனப்பகுதிகள் பசுமைக்கு மாறி வருவதால் குன்னூரில் அரிய வகை பறவைகள் தென்படுகின்றன. அதனைப் புகைப் படம் எடுக்க பறவை ஆர்வலர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அதையொட்டி சென்னையில் உள்ள காக்கைக்கூடு, நீலகிரியில் உள்ள ஓங்கில் டிரஸ்ட் ஆகிய அமைப்புகள் இணைந்து பறவைக்காணல் என்றொரு முகாமை குன்னூரில் நடத்தியது.சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், நாகர்கோயில், கன்னியாகுமரி, மதுரை, கோயமுத்தூர், திருநெல்வேலி என தமிழகமெங்குமிருந்து ஏகப்பட்ட பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வந்திருந்த பலருக்கு இதுதான் பறவைக் காணலில் முதல் நிகழ்வு என்பது ஆச்சர்யமானது.
முதல்நாள் முதல் நிகழ்வில் புல்வெளிப் பறவைகள் குறித்துப் பேசிய கோயமுத்தூர் பறவைகள் பற்றி நூல் எழுதிய பாலாஜி, ‘‘நம் தேசியப்பறவை மயில் என்பதற்கு முன்பாக அந்தப் பட்டியலில் முதலாவதாக கானமயிலே (Great Indian bustard) இருந்தது. அது ஆங்கிலத்தில் உச்சரிக்கும்போது கெட்ட வார்த்தையாக உருமாற வாய்ப்புண்டு என்பதைக் காரணம் காட்டி அடுத்த நிலையில் உள்ள மயில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதில் இப்போது இந்தியாவில் மிகவும் அருகிவரும் பட்டியலுக்குச் சென்றுவிட்டது கானமயில். ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற பகுதிகளில் மட்டுமே இப்போது கண்களில்படும் கானமயில்கள் Wildlife Institute of India-வின் அறிவிப்பின் படி ஒவ்வொரு ஆண்டும் மின்சார கம்பிகளில் சிக்கி 18 வரை உயிரிழக்கின்றன.
நான் புல்வெளிப் பறவைகள் குறித்த ஆராய்ச்சியை சில ஆண்டுகள் முன்பு மேற்கொண்டது என் சொந்தக் கிராமமான கோவை சூலூர் அருகே உள்ள கலங்கல் கிராமத்தில்தான். எங்கள் விவசாய பூமியான இரண்டு ஏக்கரில் நான் சாதாரணமாக காகம், சிட்டுக்குருவி, மைனா, மயில் இப்படி விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பறவைகளை அறிந்திருந்தேன். ஆய்வு என்று இறங்கிய பிறகுதான் தெரிந்தது அதே நிலத்தில் 150க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து போவதை. அந்தப் பறவைகள் அனைத்துமே இயற்கைக்கும், நம் விவசாயத்திற்கும் எப்படியெல்லாம் துணைபுரிகின்றன என்பதை ஆய்வில் வெளிப்படுத்தினேன்.
அதில் எங்கள் நிலத்திலேயே கானமயில் வந்து போனதை அறிந்திருந்தேன். அப்படி என் சொந்த கிராமத்தில் புறப்பட்ட என் ஆராய்ச்சி கோவையில் உள்ள பறவைகள் குறித்த ஆய்வில் அதிகரித்து இப்போது மாநிலம் கடந்து இந்தியா முழுக்க விரிவடைந்துள்ளது!’’ என்பதைத் தனது புகைப்படங்கள், பயணங்கள் மூலம் விவரித்தார் பாலாஜி.
‘‘ஆந்தைக்கு பகலில் கண்தெரியாது என்பது பொய். ஆந்தையைப் பலி கொடுத்தால் தீவினைகள், செய்வினைகள் அகலும்; கூகை (ஆந்தை) உட்கார்ந்த தென்னையில் தேங்காய் பொல்லாயாய் போனது, ஆந்தை வீட்டுக்கு அருகில் அலறினால் துக்கம் நிகழும்... என்பதெல்லாம் மூடநம்பிக்கை. உண்மையில் பாவப்பட்ட பறவை ஆந்தை. அது விவசாயியின் உற்ற நண்பன். வயல் எலிகள், பயிர்களை அழிக்கும் பூச்சிகள்தான் இதற்குப் பிரதான உணவு!’’ என்பதை நிறுவினார் திருச்சியிலிருந்து வந்திருந்த ஆந்தை ஆராய்ச்சியாளர் டி.சிவா.
சூழலியல் கவிஞர் கோவை சதாசிவம், ‘‘இலக்கியத்தில், குறிப்பாக நவீன, தற்கால இலக்கியவாதிகள் பறவைகள் வனவிலங்குகள் குறித்தெல்லாம் தவறான கருத்துக்களை தன் படைப்புகளில் நிறுவுகிறார்கள். அதுவே மக்களை இப்படிப்பட்ட மூட நம்பிக்கையாளர்களாக மாற்றுகின்றன. சங்க இலக்கியத்தில் அன்னச்சேவல் என்று ஒன்று வருகிறது.
அதை முழுமையாக வாசிக்கும்போது அது தற்கால பூநாரை என்று கொள்ள முடிகிறது. அந்தப் பூநாரை இப்போதும் வலசை வரும் பறவையாக உள்ளது. அதற்கு பாலையும், தண்ணீரையும் பிரித்து உண்ணும் சக்தி எதுவும் கிடையாது என்பது அறிவியல் உண்மை. ஆனால், நம் படைப்புகளில் அது பாலையும், தண்ணீரையும் பிரிக்கும் ஆற்றல் பெற்றது எனச் சொல்லிச் சொல்லியே மக்களை மூடநம்பிக்கைக்குள் தள்ளியிருக்கிறார்கள்!’’ என்றார். சுதாமதி என்பவர் நாகர்கோயிலிருந்து வந்திருந்தார். அவர் உப்பளப் பறவைகள் குறித்த ஆராய்ச்சியில் கரை கடந்திருந்தார். அதைப் பற்றி நிறைய பேசினார். பாரதி என்பவர் தன் 20 மாதக் கைக்குழந்தையை எடுத்துக் கொண்டு கோவை சூலூரிலிருந்து வந்திருந்தார். அவரிடம் பேசியபோது, ‘‘குழந்தையாக இருந்தாலும் அவங்களுக்கு நம் அசைவுகள் நுட்பமாக உள்ளுக்குள் ஏறும். அதனால் நாம் இந்த நேரத்தில் ட்ராவல் பண்ணீட்டே இருக்கணும். இந்த பறவை பார்த்தல், கேட்டல் என்பது ஒரு நல்ல டிராவல். அதற்காகவே நான் இங்கு வந்தேன்!’’ என்றார். கன்னியாகுமரியிலிருந்து வந்திருந்த ரிஸ்வானா, பாத்திமா ஏசானா சகோதரிகள் பேசுகையில், ‘‘10 வருஷம் முன்பு ஒரு நாவல் படிச்சோம்.
அதில் பறவைகள் காணுதல் குறித்து இருந்தது. அதைப் படிச்ச காலத்திலிருந்து இதை நம்ம தெரிஞ்சுக்கணும்ன்னு ஆசை இருந்தது. இப்படியொரு அறிவிப்பு பார்த்தவுடனே வரணும்ன்னு தோணுச்சு. வந்தோம். இங்கே வந்து இத்தனை பறவைகளை, இத்தனை பறவை ஆர்வலர்களைப் பார்த்தவுடனே எங்களுக்குள்ளே இருந்த இண்ட்ரஸ்ட் இம்ப்ரஸா மாறிடுச்சு!’’ என்றனர். தர்மபுரியிலிருந்து தனியாக வந்திருந்த இளைஞி பிரபா பேசும்போது, ‘‘ஆறுமுக மங்கலம் பேர்டு கவுண்டிங்கிற்காக நான் ஒரே ஒரு முறை போயிருக்கேன். அங்கேதான் பறவைகளை அடையாளம் எல்லாம் கண்டுகொண்டேன். அது ரிலேட்டட்டா நிறைய ஃபிரண்ட்ஸ் கிடைச்சாங்க. அதன் மூலமாக இங்கே குன்னூரில் இது நடக்குதுன்னு தெரிஞ்சுட்டு வந்தேன்.
இங்கே வுட்பேக்கர் பார்க்கணும்ன்னு நினைச்சேன். அதுல ரெண்டு டைப் பார்த்துட்டேன். டிட்டுல ரெண்டு டைப் பார்க்க நினைச்சேன். அதுல ஒண்ணு பார்த்துட்டேன். வெர்னல் ஹேங்கிங் பாரட் எல்லாம் வீடியோவுல, படத்துலதான் பார்த்திருக்கேன். இங்கே வந்து நேரா பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது!’’ என்று பறவைகள் குறித்து நிறைய பேசினார். திருச்சியிலிருந்து வந்திருந்த வினோத். எஃப் எம் வானொலி ஒன்றின் பொறுப்பாளர். தமிழில் ‘குயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகிறாய்...’, ‘அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்...’, ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா...’ என்றெல்லாம் வரிசையாக பறவைகள் குறித்த பாடல்களாய்ப் பாடி உற்சாகமூட்டினார்.
தன் மனைவி குழந்தைகளுடன் குமாரவேல் என்பவர் பாண்டிச்சேரியிலிருந்து வந்திருந்தார். ‘‘பறவைகள் பார்த்து நாம் வாழக் கத்துக்கறோம். அதைக் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கிறோம். அதை முழுமையாக நம் குழந்தைகள் தெரிந்து கொள்ளட்டுமே என்று அழைத்து வந்திருக்கிறோம். பாண்டிச்சேரியில் நாம் பார்ப்பது சமவெளிப்பறவைகளை. இங்கே நாம் பார்ப்பது மலைக்காடுகள் சார்ந்து வாழும் பறவைகளை. மூன்று நாளும் பெரிய சந்தோஷமாக இருந்தது!’’ என்றார்.
‘‘நாங்கள் இப்படியொரு நிகழ்வை ஜவ்வாது மலையில் சில மாதங்கள் முன் நடத்தினோம். இது முழுக்க முழுக்க இயற்கை ஆர்வலர்களுக்காக ஏற்பாடு செய்யும் தன்னலமற்ற செயல்பாடு. அதற்காக இங்குள்ள காட்டேஜ் பொறுப்பாளர்களிடம் பேசுகிறோம். ஒட்டுமொத்தமாக ஐம்பது அறுபது பேருக்கு இத்தனை அறைகள் தேவை. அதற்கு சலுகை விலையில் ஒரு ரேட் பேசுகிறோம்.
அதே போல் நண்பர்களின் வீடுகளில் உணவு தயாரிக்க குறைந்தபட்ச செலவு என பேசுகிறோம். இங்கே ஓங்கில் அமைப்பின் பொறுப்பாளர் மலைநாடன் அதையெல்லாம் எங்களுக்குச் செய்து தந்தார். அதனடிப்படையிலேயே இதை எங்களால் செய்ய முடிகிறது!’’ என்கிறார் இந்த முகாமை நடத்திய காக்கைக்கூடு செழியன்.
கா.சு.வேலாயுதன்
|