அரண்மனை குடும்பம் -50
குலசேகர ராஜாவின் சஸ்பென்சான பேச்சைத் தொடர்ந்து காரை திரும்ப கிளப்பினான் மூர்த்தி. அவரும் சஸ்பென்சை உடைக்கத் தொடங்கினார்.“மூர்த்தி... இந்த மாரப்பவாத்தி, அப்புறம் இந்த போதிமுத்து, ஜல்லி... இவங்கல்லாம் பயங்கர தேர்ட் ரேட் பர்சன்ஸ். நான் சொல்ல வர்றது உனக்கு புரியும்னு நினைக்கறேன்...” “புரியுது பாஸ்... ஏவல், செய்வினைங்கற வேலைகளை நல்லா படிச்ச நாகரீகமானவன் செய்ய மாட்டானே?”
“என் தலையெழுத்து இவனை எல்லாம் நான் சந்திக்கும்படி ஆயிடிச்சு...” “இருந்தாலும் அதுல நமக்கு சக்ஸஸ்தானே பாஸ்..?”
“அங்கதான் எனக்கு சில விஷயங்கள் புரிய மாட்டேங்குது. இப்படி மருந்தால ஒரு மனச மாத்த முடியும்னா கோர்ட்ல விவாகரத்து கேஸ்களே நடக்காது தெரியுமா? அவ்வளவு ஏன்... நீதிபதிகளே கூட தங்களுடைய தீர்ப்புக்குப் பதிலா மருந்து வாங்கி கொடுத்து பிரச்னையை தீர்த்துடுவாங்க. நான் இந்த மாதிரி நிறைய விஷயங்களை சொல்லிக்கிட்டே போகலாம்...” “அப்ப நீங்க சந்தேகப்பட்றீங்களா..?”
“எனக்குள்ள எழும்பற கேள்விகள் உனக்குள்ள இல்லையா?”“இல்ல பாஸ்... அதான் அவனே சொன்னானே பாஸ்... என்னை பாக்க ஒரு விதி வேணும். எல்லாரும் பாத்துட முடியாது. எல்லாருக்கும் நான் இதை கொடுத்துடவும் முடியாதுன்னு...”“இப்படி சொல்றது ஒரு சாமர்த்தியம்... அப்புறம் நாம கேள்வியே கேட்க முடியாது பாரு...”
“அது சரி. 20 கோடி எனக்கு... அதுக்கு நான் ஏதோ செய்யணும்னு சொன்னீங்களே... அது என்ன பாஸ்?”“சொன்னா அதைக் கேட்டு அதிர்ச்சியடையக் கூடாது...” “முதல்ல சொல்லுங்க பாஸ்... எனக்குள்ள ஒரே படபடப்பா இருக்கு...”மூர்த்தி சொல்லும்போதே வழுக்குப்பாறைக்கு செல்லும் அடிவாரப் பகுதியின் சாலை முடியுமிடம் வந்து, அதற்கப்பால் கார் ஹெட்லைட் வெளிச்சத்தில் வாழை மரங்கள் ஒரு தோப்பாகத் தெரிந்தன.
“காரை நிறுத்து. விபரமா சொல்றேன்... மணி இப்ப எவ்வளவு?”
“7.20 பாஸ்...”“ரைட்... நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ. நாம இப்ப அந்த மூணு பேரையும் சந்திக்கும்போது நிச்சயம் அவன் பணம் கேப்பான். நானோ அந்த வடநாட்டுக்காரி செத்தாதான் தருவேன்னு சொல்லப்போறேன். அவளைக் கொல்ல... அதாவது அவ மனசால பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துக்கணும். அப்படி அவ மனசை பாதிக்கற மருந்து இருக்கான்னு கேட்கப் போறேன்.
அவன் அதுக்கு தனி ரேட்டுன்னு நான் போன்ல பேசினப்ப சொன்னான். சரின்னு சொல்லி மருந்தை வாங்கிக்க போறேன். அப்புறம் இந்த பசங்களுக்கு ஒரு லட்சமே அதிகம்... இவனுங்களுக்கு 20 கோடிங்கறதெல்லாம் டூ மச் இல்ல... டூடூடூ மச்! என்ன சொல்றே?”
“ஆனா, ஒத்துகிட்டீங்களே பாஸ்...”“அப்ப இருந்த மனநிலைல ஒத்துக்கிட்டேன். அப்பகூட போகப் போக பாத்துப்போன்னுதான் ஒப்புகிட்டேன்...” “சரி பாஸ்... இப்ப என்ன பண்ணப்போறோம்?”
“சிம்பிள்... நீ லோடட் கன்னோட கூட வா. ஆனா, அந்த முனியப்பன் மந்தைக்குள்ள வந்துடாதே. அங்க ஒரு மரம் பின்னால ஒளிஞ்சிக்கோ. நான் மருந்தை வாங்கினவுடனேயே பாத்துட்டே இரு... மூணு பேரையும் பொட்டு பொட்டுன்னு போட்டுத் தள்ளிடு...” “பாஸ்ஸ்ஸ்... நானா?”
“பயப்படாதே. அவனுக்கு தரதா சொன்னதை நான் உனக்கு தரேன். இந்த பில்லக்கா பசங்க உயிரோட இருக்கறதும் எனக்கு நல்லதில்ல. நாளைக்கே அந்த ரத்தி செத்துட்ட பிறகு, கணேச ராஜாவும் மஞ்சுவும் சந்தோஷமா வாழும்போது இவங்க நடுவுல வந்து பிளாக் மெயில் பண்ணமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?” “என்ன பாஸ்... எப்படி எப்படியெல்லாமோ யோசிக்கிறீங்க?”
“யோசிக்கணும் மூர்த்தி... பணம், உயிர், சொத்து, ரகசியம்னு நாலு விஷயங்கள் மிக்ஸ் ஆகியிருக்கற மேட்டராச்சே இது..?”
“இருக்கலாம் பாஸ்... ஆனா, கொலை செய்யற அளவுக்கு தைரியம் எனக்கு இல்ல பாஸ்...”“மாட்டிக்குவோம்கற பயமா? இது சைலன்சர் கன்! சப்தம் வெளிய கேட்காது. அது மட்டுமில்ல... இவங்க மூணு பேரும் சமூகத்துல நெருங்கி வாழறவங்க இல்ல. இந்த சேர்வராயன் மலைக் காட்ல ஒளிஞ்சிருந்து வாழறவங்க. இவங்க செத்தா கேட்க நாதி இல்ல.
இந்த மலைச் சரிவுலயே எங்கையாவது குழிய தோண்டி புதைச்சிட்டு போய்க்கிட்டே இருப்போம்... இதுவரை இவங்கள நாம சந்திச்சதுக்கும் சாட்சி இல்லை... இப்ப செய்யப்போற சம்பவத்துக்கும் சாட்சி கிடையாது...”“வேண்டாம் பாஸ்... அந்த மாரப்ப வாத்தி நம்ம மனசுல இருக்கறத அப்படியே கண்டுபிடிச்சு சொல்றவன்! இந்த திட்டத்தையும் மோப்பம் பிடிச்சுடுவான். அப்புறம் அவன் வேற மாதிரி நம்மள எதிர்க்க ஆரம்பிச்சா நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது...”“நான் அது எப்படின்னு கண்டுபிடிச்சிட்டேன் மூர்த்தி.
அது ஒருவிதமான ஃபேஸ் ரீடிங்தான்! அப்புறம்... அதுக்கு ஒரு ரேடியஸ் இருக்கு. அதாவது அவன் எதிர்ல நேருக்கு நேரா அதிகபட்சம் 2 மீட்டர் சுற்றளவுல நாம இருக்கணும். நான் இப்ப அவனை கிட்டயே விடப்போறதில்ல. போன்ல பேசுவோம்னு சொல்லித்தான் பேசப்போறேன். நடுவுல பத்து மீட்டர் இடைவெளி நிச்சயமா இருக்கும். நீ பயப்பட்ற மாதிரி எதுவும் ஆயிடாது...” “பாஸ்... இப்படி டிஸ்டன்ஸ்ல நின்னாலே அவன் சந்தேகப்பட்டு கண்டு பிடிச்சிடுவான் பாஸ்...”“சரி... அவன பார்க்கவே வேண்டாம். நாம தூரயே நிப்போம். அவங்க மந்தைக்கு வந்து நிற்கும்போது போட்டு தள்ளிடுவோம். ரத்தியை நான் வேற ஐடியா பண்ணி காலிபண்றேன். ஆனா, இவங்கள மட்டும் விட்டு வைக்கக் கூடாது. அது எனக்கு எந்த வகைலயும் நல்லது இல்ல...” “பாஸ்ஸ்...”
“என்ன மூர்த்தி உனக்கு 20 கோடி வேண்டாமா?”
“அது இல்ல பாஸ்... உங்க அறிவோ தைரியமோ சத்யமா எனக்கு இல்லை. பேசாம நீங்களே...” “மூர்த்தி... நான் இவ்வளவு சொல்லியும் நீ பயப்பட்றேன்னா நீ என் உதவியாளனா இருக்கவே தகுதியில்லாதவன்னு அர்த்தம். கடைசியா சொல்றேன். இப்ப நீ நான் சொல்றபடி கேட்பியா... மாட்டியா?”
குலசேகர ராஜா குரலில் கொடூரம் தொனிக்க ஆரம்பித்தது. மூர்த்தியையும் அது ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. மிக தயங்கி “சரிங்க பாஸ்...” என்றான். “குட்... டேக் த கன்...” என்ற அடுத்த நொடி காரில் இருந்த கன்னையும் எடுத்தான் மூர்த்தி.
“மறைவா முதுகு பக்கம் வெச்சுக்கோ. அப்படியே கூடவா...”சொல்லிவிட்டு இருவரும் வாழைத் தோப்பை ஒட்டிய பத்தடிக்கும் குறைவான மந்தைக்குச் செல்லும் பாதையில் நடக்கத் தொடங்கினர். மினி டார்ச் அரைமீட்டர் டயாவுக்கு மெர்க்குரி வெளிச்ச வட்டமாய் வழியினை காட்டிற்று.ஏற்காட்டின் பதினான்கு டிகிரி அளவிலான இறங்கு குளிர் காதுமடல்களை விடைக்க விட்டு கைகளிலும் முறுக்கேற்றிற்று.
மணி 7.50! வெகு வெகு தூரத்தில் ஒரு காரை ஓட்டு வீடு இருந்து அதன் முன் இன்னமும் ஒழிந்திராத ஒரு குண்டு பல்ப் எரிந்தபடி இருந்தது. மற்றபடி ஆளரவமே இல்லை. “பயப்படாம வா... இப்ப நம்ம சுத்தி நூறு மீட்டர் சுற்றளவுக்கு யாரும் இல்லை. அப்படி யாராவது இருந்தா காட்டிக் கொடுக்கற டிடெக்டர் என் செல்போன்ல கனெக்ட் ஆகியிருக்கு. அது காட்டிக் கொடுத்துடும்...” என்று சொல்லிக் கொண்டே நடந்தார் குலசேகர ராஜா.
மூர்த்தியும் ஒட்டியே நடந்தான்.“போட்டுத்தள்ளின உடனேயே சுருண்டு விழுவாங்க. உடனேயே நீ போய் கார்ல இருந்து கடப்பாரை மண்வெட்டிய எடுத்துகிட்டு வா. நான் பாடி கிட்டயே இருப்பேன். அப்படியே பாடிகளை இழுத்துகிட்டு எவ்வளவு தூரம் போக முடியுமோ போய் குழிய தோண்டி புதைச்சிடுவோம்.மிளகா பொடி ஒரு கிலோ வாங்கிட்டு வந்துருக்கேன். தண்ணில கரைச்சு புதைச்ச இடத்தை சுத்தி தெளிச்சிட்டா எந்த நாயாலயும் கிட்ட வரமுடியாது...” “அப்ப போலீஸ் வரும்கற பயம் இருக்கா பாஸ்?”
“முட்டாளே... நான் காட்டு நாய்கள சொன்னேன். பொணத்தை இழுத்து போட்டு குதறிடக்கூடாதுதானே?” “சாரி பாஸ்... நான் நாய்ன வுடனே போலீச நினைச்சிட்டேன்...”“இதோ பார்... நான் இதுக்கு மேல யோசிக்க முடியாதுங்கற அளவுக்கு யோசிச்சு திட்டம் போட்டு இங்க வந்துருக்கேன். நான் சொல்றத மட்டும் கேள்... இனி யாரை நம்பியும் இறங்கக் கூடாதுன்னுதான் நானே இறங்கியிருக்கேன். எந்த தப்பும் வந்துடாது... வரவும் விட மாட்டேன்...” நடந்தபடியே குலசேகர ராஜா சொன்ன வார்த்தைகளில் ஒரு மலையளவு அழுத்தம்.
“ஒகே பாஸ்... ஒகே பாஸ்...” “சரி மந்தை வந்திடிச்சி பார்... நான் முன்ன போறேன். நீ போய் ஒளிஞ்சுக்கோ... மிக அதிகபட்சம் 3 மணி நேரம். இந்த மூணுபேர் சேப்டரையே குளோஸ் பண்ணிட்டு போய் நாம அடுத்த வேலையை பாக்க தொடங்கிட்றோம். ரைட்?”“ரைட் பாஸ்...” என்ற மூர்த்தி அப்படியே அங்கே ஏதாவது மரம் இருக்கிறதா என்று தனது செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தேடியபடியே சென்று ஒரு கடம்ப மரம் பின்னால் ஒளியவும் செய்தான்!குலசேகர ராஜா மந்தைக்குள் கால் வைத்து, முனிசாமிக்கான பலி மேடை கடந்து ஒற்றை ட்யூப் வெளிச்சத்தில் தெரிந்த சமதளம் மேல் போய் நின்றார். பின்னர் நாலாபுறமும் பார்த்துவிட்டு செல்போனை எடுத்து போதிமுத்துவுக்கு போன் செய்ய முயன்றார். ஆனால், நாட் ரீச்சபிள் என்றே வந்தது. டென்ஷனும் எகிற ஆரம்பித்தது. மணியும் எட்டைத் தொட்டு அப்படியே எட்டு ஒன்று, இரண்டு என்று ஓடத் தொடங்கிற்று.அவர்கள் வரும் அரவமே இல்லை. குளிர்காற்றின் குலாவல் - ஈசல் பூச்சிகளின் உலாவல்! இதனிடையே மூர்த்தி 8.30 மணிக்கு ஒளிந்தது போதும் என்று குலசேகரராஜாவை நோக்கி வந்தான்.
“என்ன மூர்த்தி... வராம கழுத்தறுத்துட்டாங்க...” “இல்ல பாஸ்... உங்க பிளானை வாத்தி கண்டு பிடிச்சிட்டார் பாஸ்...” “என்ன உளற்றே... நம்பள அவன் பாக்காத நிலைல எப்படி கண்டு பிடிக்க முடியும்?” “இல்லேன்னா வராம இருப்பானா பாஸ்... அதுவும் 20 கோடி...”
“இம்பாசிபிள்... அவனோட ஃபேஸ் ரீடிங்குக்கு நாம இப்ப இடமே கொடுக்கல...” “போன் பண்ணீங்களே..?”“நாட் ரீச்சபுள்னே வருது...” “சரி பாஸ்... இனியும் இங்க நிக்கறது வேஸ்ட். நாம கிளம்புவோம்...”
“ஒரு வேளை வர்ற வழியில இருட்டுல எங்கையாவது தடுக்கி கிடுக்கி விழுந்து...” “சான்ஸே இல்ல... அப்படி இருந்திருந்தா போன் பண்ணி சொல்லிடுவானே?” “ஆமாம்ல...”“ஆமாம் பாஸ்... இப்ப நாம போவோம். எப்படியும் அவன் நம்மள விட மாட்டான். நிச்சயம் பணத்துக்காக போன் பண்ணுவான். அப்ப வெச்சுப்போம் பாஸ் கச்சேரிய...” “ஆமாம்... இப்ப அதுதான் நமக்கிருக்கற வழியும் கூட...” என்ற குலசேகர ராஜா வந்தது போலவே மெர்க்குரி வெளிச்ச வட்டத்தை உருட்டிக் கொண்டு திரும்பி நடக்கத் தொடங்கினார். மூர்த்தியும்.
அதே எட்டு மணி முப்பது நிமிட நேரம். ஏற்காடு பங்களாவினுள் கணேச ராஜாவின் கார் போர்டிகோவுக்குள் புகுந்து நின்றது. ஓடி வந்தார்கள் நாச்சி முத்துவும், பங்கஜமும்.மெல்ல பின் சீட்டில் இருந்து இறங்கினாள் ரத்தி. தியாவும். முன்னிருந்து இறங்கிய கணேசராஜா, நாச்சி முத்துவை பார்த்து “லக்கேஜை எல்லாம் கொண்டுபோய் உள்ள வைங்க...” என்றபடியே ரத்தி பக்கம் திரும்பினான்.
அவள் தியாவை தனக்கு முன்னால் இரு கால்களுக்கு நடுவில் அணைத்தபடியே அவனை கலங்கிய விழிகளுடன் ஏறிட்டாள்.“நீ ஆசைப்பட்டபடி உன்னை இங்க கொண்டு வந்து விட்டுட்டேன்... இனி உன் உலகம் இதுதான். எதாவது தேவைப் பட்டா மெஸேஜ் பண்ணு. உடனே உனக்கு அது கிடைச்சிடும்...” என்று பட்டும் படாமல் பேசினான். ‘‘மெஸேஜா..? ஏன் பேசக் கூடாதா நான்?”ரத்தி மிடறு விழுங்கிக் கொண்டே கேட்டாள்.“சரி பேசு... என்ன இப்ப... யார் யார் கூடவெல்லாமோ பேசறேன். உன் கிட்டயும் பேசிட்டு போறேன்...” “ஜீ... நான் உங்க மனைவி. மூணாம் மனுஷி மாதிரி பேசறீங்களே..?”
இருவர் பேச்சின் இடையே சூட்கேஸ் பேக்குகள் உள் சென்று முடிந்திட நாச்சி முத்துவும் பங்கஜமும் திரும்பி வந்து சற்று தொலைவில் அடுத்து என்பது போல நின்றனர்.
“நாச்சிமுத்து... இனி ரத்தி இங்கதான் இருப்பா. நீயும் உன் பொண்டாட்டியும்தான் பாத்துக்கணும். புரியுதா?”“அதுக்கென்னங்க... ரொம்ப சந்தோஷங்க...” “எது கேட்டாலும் இல்லேங்காம வாங்கிக் கொடு. மேனேஜர் உன்கிட்ட பேசுவார். உனக்குத் தேவையான பணத்தை அவர் கொடுப்பார்...”
“அதெல்லாம்தான் தெரியுங்களே... பேசறத பார்த்தா நீங்க இங்க இருக்கப் போறதில்லீங்கற மாதிரி தெரியுதுங்களே..?”
“ஆமாம். நான் இப்பவே கிளம்பியாகணும். எனக்கு நிறைய வேலை இருக்கு. சரி நானும் புறப்பட்றேன்...”“மொதலாளி உள்ள வந்து ஒரு காபி கூட குடிக்காம போறேங்கறீங்களே..?”“இவங்களுக்கு போட்டு கொடு...” என்று ரத்தி பக்கம் கை காட்டியவன் அதே வேகத்தில் காரை கிளப்பிக் கொண்டு பறக்க ஆரம்பித்தான்.அவன் வேகம் ரத்தி கண்களில் கண்ணீராய் கொட்டிற்று. பார்த்த பங்கஜத்திற்கு பக்கென்றது.
“அம்மா என்னம்மா... மொதலாளி ஏன் இப்படி ஒரு மாதிரி பேசிட்டு போறாரு... உங்களுக்குள்ள எதாவது சண்டையாம்மா...” என்று கேட்டபடியே அருகில் வந்தாள். “நான் என்னன்னு சொல்வேன் பங்கஜம்... வா உள்ள போய் பேசுவோம்...” என்று ரத்தி தியாவோடு உள்நோக்கி நடந்தாள்.
அதேசமயம் கேட்டுக்கு வெளியே ஒரு மங்கி கேப் அணிந்த ஒருவன் கைலாச ராஜாவுக்கு போன் செய்தவனாய் “அய்யா... அம்மாவும் பொண்ணும் வந்துட்டாங்க. கணேஷ்சார் வந்த வேகத்துல உள்ள கூட போகாம திரும்பிட்டாரு...” என்றான். (தொடரும்)
மண்ணாங்கட்டியார் மறுத்ததைக் கண்ட அசோகமித்திரனுக்குள்ளேயும் ஆச்சரியங்கள். குற்றங்களையும் குறைகளையும் தொழிலாகக் கொண்டவர்களிடம்தானே இன்று கோடிகள் கொட்டிக்கிடக்கின்றன? அவர்களால் சட்டத்தையே கூட வளைக்க முடிகிறது. அப்படி இருக்க அவர்களை சிலர் எதை வைத்து மறுக்கிறார்?
தன் மனதில் தோன்றிய கேள்வியை கண்களில் பிரதிபலித்தார் அசோகமித்திரன்.“என்ன அசோகா... தப்பானவன் சந்தோஷமா இருக்கறதை நான் மறுக்கறது ஆச்சரியமா இருக்கா? இம்மட்டுல உன்னால் அவன் படகு கார்ல போறதையும், அவனுக்கும் அவன் அதிகாரத்துக்கும் எல்லாரும் பயப்பட்றதையும்தான் நீ காட்ட முடியும்.
அவன் மனநிலையை உன்னாலயும் பாக்க முடியாது. அதை எனக்குக் காட்டவும் முடியாது. ஒரு உயிரோட வாழ்வுங்கறது உடல் சார்ந்ததேயல்ல... அது முழுக்க முழுக்க மனம் சார்ந்தது! குற்ற உணர்ச்சியில்லாத, அச்சமேயில்லாத, குழப்பமேயில்லாத ஆகாசத்தைவிட அகன்றும், சூரியனை விடவே ஒளி மிகுந்தும் ஒரு மனம் இருந்துட்டா அதுக்கு பேர்தான் சொர்க்கம்! நான் சொன்ன இது எதுவும் அந்த தப்பான கோடீஸ்வரர்கள் கிட்ட இருக்காது. அவர்களுக்காக பல பேர் யோசிப்பாங்க... அவர்களுக்காக பல பேர் செயல்படுவாங்க.
ஆனா, அவர்களால சுயமா ஒரு நிஜ சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது. எப்பவும் ஒரு எச்சரிக்கை உணர்ச்சி, எப்பவும் ஒரு பயம்... எப்பவும் எதைப்பற்றியாவது ஒரு கவலை... எதுக்கு பிறந்திருக்கோம்னே தெரியாத ஒரு ஓட்டம்... இதெல்லாம்தான் அந்த மனிதர்கள் நிலை. என் வரைல அவனை விட ஒரு பரிதாபகரமான மனிதன் உலகத்திலேயே கூடாது. பணம், பதவி, அதிகாரம் எல்லாம் வரம்னு யார் சொன்னது? அதெல்லாமே சாபங்கள்! சாபம்னு சொல்லி இதை கொடுத்தா யார் வாங்கிக்க முன்வருவா? அதனாலதான் இதெல்லாமே அதிர்ஷ்டம்னும், அசாத்யம்னும் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கு.
நான் சொல்றது ஒரு பேருண்மை... இது அறிவாளிக்கு புரியாது. ஆனால், ஞானிக்கு மட்டும்தான் புரியும். அறிவு நிதர்சனமானதை அதாவது புலப்படுவதை வைத்துதான் எடை போடும்... ஞானம் புலப்படாததையும் தனக்குள் புலப்படச்செய்து எடை போடும்!”மண்ணாங்கட்டியார் விளக்கத்தை அசோகமித்திரனால் மறுக்க முடியவில்லை. ஏற்கவும் தயக்கமாய் மேலும் சில கேள்விகள் முளைத்தன.
“குரு... பணம், பதவி அதிகாரம்லாம் உண்மைல சாபம்னா நம் முன்னோர்கள் ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ன்னு எதுக்காக வாழ்த்தணும்? அந்த பதினாறுல இந்த பணம் பதவி எல்லாம் இருக்கே? அவ்வளவு ஏன்... இதுக்குன்னு மகாலஷ்மின்னு ஒரு தெய்வமே இருக்கே?”அசோகமித்திரனின் கேள்வியை கேட்டு சற்று பலமாகவே சிரிக்கத் தொடங்கிவிட்டார் மண்ணாங்கட்டியார். “நான் முட்டாள்தனமா கேட்டதா நினைக்கல. சரியான கேள்வியதான் கேட்ருக்கேன். சிரிச்சா என்ன அர்த்தம்?”
“நான் என்னப்பா பண்ணுவேன்? சிரிப்பு வந்துடிச்சி... சிரிச்சிட்டேன். இந்த சிரிப்பு, அப்புறம் கோபம், அப்புறம் இந்த தலைமுடி வியர்வை, மூத்திரம், மலம்... இதெல்லாமே கொஞ்சம் தன்னிச்சையானவைப்பா. இதை நம் கட்டுப்பாட்டுல வெச்சிருக்கறது கஷ்டம். போகட்டும்... உன் கேள்விக்கு வரேன். வாழறதுக்கு பணம் காசும் வேணும். ஆனா, அது மட்டும்தான் வேணும்னு நினைக்கும் போதுதான் எல்லா சங்கடங்களும் வரத் தொடங்குது.
இந்தப் பணம் காசும் வேணும்கறவங்களுக்குன்னு வடிவானவதான் மகாலட்சுமி. அது ஒரு அழகான உருவகம். நாம் இப்ப அவள தொட்டு புராணங்களுக்குள்ள போக வேண்டாம். நீ சொன்ன அந்த பதினாறு பேறு எதுக்கு தெரியுமா? அந்த பதினாறு பேறுகள் முதல்ல என்னன்னு தெரியுமா?” மண்ணாங்கட்டியார் ஒரு பெரிய விஷயத்திற்கு அஸ்திவாரம் போடுவது அசோகமித்திரனுக்குப் புரிந்தது!
இந்திரா செளந்தர்ராஜன்
ஓவியம்: வெங்கி
|