அந்த ஏழு நாட்கள்… நடிகர் தலைவாசல் விஜய்யின் கத்தார் உலகக் கோப்பை அனுபவங்கள்
சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்தவர் ‘தலைவாசல்’ விஜய். தவிர மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்திந்திய மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர். ‘கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்’டாக சினிமாவில் ஜொலிக்கும் ‘தலைவாசல்’ விஜய்க்கு விளையாட்டு வீரர், கால்பந்து ரசிகர் என இன்னொரு முகம் இருப்பது நமக்கெல்லாம் தெரியாதது.
சமீபத்தில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை கத்தாருக்கே போய் ரசித்துவிட்டு திரும்பியிருக்கிறார் ‘தலைவாசல்’ விஜய்.
‘‘ரொம்ப ரொம்ப சந்தோஷமான அனுபவம் அது. எனக்கு இப்ப 61 வயசாகுது. சின்ன வயசுல இருந்து எட்டு உலகக் கோப்பைகள் வரை பார்த்திருப்பேன். அவை எல்லாமே டிவியில் ரசிச்சதுதான். இப்பதான் முதல்முறையா நேர்ல பார்க்கிறேன்...’’ என உற்சாகம் பொங்கச் சொல்கிறார் விஜய்.
‘‘இந்தச் சம்பவம் ஒரு விபத்துதான்னு சொல்லணும். சந்தோஷ்னு என்னுடைய உறவினன் ஒருத்தன் கொல்கத்தாவுல இருக்கான். என்னை மாதிரியே அவனும் தீவிர ஃபுட்பால் ரசிகன். கண்காட்சிப் போட்டிக்காக மாரடோனா கொல்கத்தா வந்தப்ப அந்த ஏற்பாட்டுக் குழுவுல அவனும் வேலை செய்தான். அவன் கடந்த ஆகஸ்ட் மாசம் எனக்கு போன் பண்ணினான். ‘இந்த உலகக் கோப்பை போட்டிகள் கத்தார்ல நடக்குது. இது நமக்கு கொஞ்சம் பக்கத்து நாடு. அதனால, நம்மால் போகமுடியும். கத்தார் என்பதால் பணம், தங்குமிடம் எல்லாம் ஐரோப்பாவை விட குறைவு. வர்றீங்களா’னு கேட்டான்.
‘டிக்கெட் கிடைச்சால் கண்டிப்பா வர்றேன்டா. எவ்வளவு செலவாகும்’னு கேட்டேன். அவன் எட்டு நாட்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை வரும்னு சொன்னான். சரி போகலாம்னு சொல்லிட்டு வழக்கம்போல் என்னுடைய ஷூட்டிங் வேலையைப் பார்த்திட்டு இருந்தேன்.
திடீர்னு அக்டோபர் முதல்வாரம் போன் பண்ணி டிக்கெட் ஓகே ஆகிடுச்சுனு சொன்னான்! உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கி பத்து நாட்கள் கழித்து நவம்பர் 30ம் தேதிதான் அங்க போனேன். அன்னைக்கு இரவே ஆஸ்திரேலியா- டென்மார்க் போட்டியை ரசித்தேன். உள்ளே போகும்போதே சிலிர்த்திட்டேன். கண்ல தண்ணீர் வந்திடுச்சு. நான் பார்த்து பார்த்து பூரிச்ச விஷயம். இப்ப என் கண்ணெதிரே நடக்குது.
அந்த ஸ்டேடியத்துல 70 ஆயிரம் ரசிகர்கள் உட்கார்ந்திருக்காங்க. நம்மளும் அவங்களுடன் பார்க்கிறது அற்புதம்தான்னு சொல்வேன். மொத்தமாக மூணு போட்டிகளுக்குதான் டிக்கெட் எடுத்திருந்தேன். எனக்கு இங்க ஷூட்டிங் இருந்ததால ரொம்ப நாட்கள் இருக்க முடியல. அப்புறம், குரூப் போட்டிகளுக்குப் பிறகு டிக்கெட் விலையும் எகிறிடுச்சு. அதனால, பிரான்ஸ் - போலந்து இடையே நடந்த ஒரு நாக்அவுட் போட்டியை மட்டும் ரசிச்சிட்டு கத்தார்ல இருந்து வந்தோம்...’’ என்கிறவர், அந்த சூழ்நிலைகளைச் சிலாகித்தார்.
‘‘அங்க நான் விமான நிலையத்துல இருந்து வெளியே வர்றப்பவே ரெண்டு பேர் செல்ஃபி எடுக்கலாமா சார்னு கேட்டாங்க. அவங்க ஏர் இந்தியா ஊழியர்கள். இலங்கைத் தமிழர்கள். நான் வர்றதை யாருக்குமே சொல்லல. உங்களுக்கு எப்படி தெரிஞ்சதுனு கேட்டேன். அவங்க ‘ஹய்யா கார்டுல பார்த்தோம்’னு சொன்னாங்க. இந்த ஹய்யா கார்டுதான் (Hayya Card) விசா. அந்த ஹய்யா கார்டுல நம்ம போட்டோ, பாஸ்போர்ட் நம்பர்னு எல்லா விவரங்களும் வந்திடும்.
இதற்கு நாம் ஆன்லைன்ல புக் பண்ணி அனுப்பணும். அவங்க ஏத்துக்கிட்டு அப்ரூவ் பண்ணி அனுப்புவாங்க. நாம் சாஃப்ட் காப்பி எடுத்திட்டு போய்க் காட்டினாலே ஏர்போர்ட்ல விட்டுடுவாங்க. இம்மிகிரேஷனுக்கு ஒன்றரை நிமிடம்தான் ஆனது. இவ்வளவு கூட்டத்தை சமாளிக்க கத்தார் அரசு அவ்வளவு அழகா ஏற்பாடு செய்திருந்தாங்க. நாம் யார்கிட்டயும் எதையும் கேட்க வேண்டியதில்ல. அங்கங்க மார்க் போட்டு வச்சிருந்தாங்க. 70 ஆயிரம் பேர் ஒரு ஸ்டேடியத்துல உட்கார்ந்து பார்க்கிறாங்க. ஒரு சீட்டு மாறி இன்னொருத்தர் உட்கார்ந்தார்னு சண்டை சச்சரவுனு எதுவும் வரல. அந்தளவுக்கு பக்காவாக இருந்தது.
அங்க ஃபேன் வில்லேஜ்ல தங்கினோம். இந்த ஃபேன் வில்லேஜ் பற்றி சொல்லணும். அது ஒரு பாலைவனம். அங்க சுமார் நான்காயிரம் கன்டெய்னர்களை அறையா மாற்றியிருந்தாங்க. ஒரு அறையில் ரெண்டு படுக்கைகள், ஒரு குளியலறை, ஒரு ஏசி, சின்னதாக ஒரு ஃபிரிட்ஜ்னு அவ்வளவு வசதிகள் செய்திருந்தாங்க. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எட்டாயிரம் பேர் அங்க தங்கியிருந்தோம். ஒருநாள் கூட தண்ணீர் பிரச்னை வரல. கழிவுநீர் பிரச்னையும் இருக்கல.
நாங்க காலையில் ரூம்ல டீ சாப்பிட்டுட்டு வெளியில் உட்காருவோம். எதிரே ஜப்பானிஸ், இந்தப் பக்கத்துல அமெரிக்கன்ஸ், அந்தப் பக்கம் போர்த்துகீஸ்னு மற்ற நாட்டு ரசிகர்கள் இருப்பாங்க. அவங்க கூட எட்டு மணி வரை பேசிட்டு, அப்புறம் ஒரு குளியலைப் போட்டுட்டு பேக்கை எடுத்திட்டு கிளம்பிடுவோம். நாங்க தங்கியிருந்த ஃபேன் வில்லேஜ் அருகேயே மெட்ரோ ரயில். அப்புறம், எல்லா ஸ்டேடியத்திற்கும் எளிதாக போயிட்டு வர வசதிகளும் இருந்தது.
அங்கிருந்து ஒவ்வொரு ஸ்டேடியமாக சுற்றினோம். அங்க கார்னீஸ்னு ஒரு இடத்தின் அருகே சூக்னு நம்ம பனகல் பார்க் மாதிரியான இடமிருக்கு. அங்க எல்லா நாட்டு மக்களும் அவங்க நாட்டு அணியின் டிரஸ்ஸைப் போட்டு பேண்ட் வாசிக்கிறது; பாட்டுபாடுறது; அவங்க நாட்டைப் பத்தி பேசுறதுனு ஜாலியா ஆடிப்பாடி மகிழ்ந்தாங்க. இதனுடன் அந்தந்த நாட்டு சேனல்ஸ் இன்டர்வியூ பண்றதுனு ஒரு விழா மாதிரி செமயா இருந்தது.
அங்க சுத்திட்டு மாலையில் டிக்கெட் இருந்தால் மேட்ச் பார்ப்போம். இல்லனா ஃபேன் வில்லேஜ் போயிடுவோம். அங்கே ஒன்றரை ஏக்கரில் ஒரு பெரிய இடத்துல எண்ணூறு ஈசி சேர் மாதிரி போட்டிருந்தாங்க. சோபா மாதிரி இருக்கும். அங்க ஒரு பெரிய ஸ்கிரீன் வச்சிட்டாங்க. அந்த ஸ்கிரீன்ல ஃபுட்பால் மேட்ச்ச ஒளிபரப்பினாங்க. அங்க உட்கார்ந்து மேட்ச்சை ரசிச்சோம். அந்த ஏழு நாட்களும் இப்படிதான் பொழுதுகள் கழிந்தது.
இதுல ஜெர்மனி - கோஸ்டாரிகா போட்டியை நான் கோல் போஸ்ட் பின்னாடி நான்காவது வரிசையில் உட்கார்ந்து பார்த்தேன். இந்தப் போட்டியில் முதல்முறையா நடுவர்கள் மூன்று
பேருமே பெண்களாக இருந்ததைப் பார்த்தப்ப ஆச்சரியமா இருந்தது. நான் ஜெர்மனிதான் ரவுண்ட் 16க்கு போகும்னு நினைச்சேன்.
ஆனா, அதேநேரம் ஜப்பானுக்கும் ஸ்பெயினுக்குமான போட்டி இன்னொரு ஸ்டேடியத்துல நடந்திட்டு இருந்துச்சு. அந்த போட்டியின் முடிவை ஜெர்மனி போட்டி நடக்கும்போது பெரிய ஸ்கிரீன்ல ஃப்ளாஷ் பண்ணிட்டாங்க.
ஜப்பான் ஜெயிச்சதைப் பார்த்ததும் ஸ்டேடியமே அமைதியாகிடுச்சு. இனி ஜெர்மனி ஏழு கோல் போட்டா தான் ரவுண்ட் 16க்கு போகலாம். ஏன்னா, ஸ்பெயினுக்கும் கோஸ்டாரிகாவிற்கும் நடந்த முதல் போட்டியில் 7 - 0னு ஸ்பெயின் ஜெயிச்சிருந்தாங்க.
அதனால, இந்த கோஸ்டாரிகாவுடனான போட்டியில் ஜெர்மனி ஏழு கோல்கள் அடிக்கணும். ஆனா, நான்கு கோல்கள் போட்டாங்க. முதல்ல ஜப்பான் ஜெயிச்ச செய்தி வந்ததுமே ஜெர்மனி வீரர்கள் சோர்வாகிட்டாங்க. கோஸ்டாரிகாவும் தடுப்பு ஆட்டத்துல ஈடுபட்டு ஜெர்மனி கோல் போடுவதை ப்ளாக் பண்ணிட்டே இருந்தாங்க. இந்த உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து ஜெர்மனி வெளியேறியது என்னைப் போல பலராலும் ஜீரணிக்க முடியல.
நான் ஜெர்மனி அணியின் தீவிர ரசிகன். ஏன்னா, பொதுவா எல்லா அணியுமே ஏதாவது ஒரு நட்சத்திர வீரரை நம்பியிருக்கும். ஆனா, ஜெர்மனி அணியில் எல்லோருமே நட்சத்திர வீரர்கள் மாதிரிதான் ஆடுவாங்க. எல்லா வீரர்களும் பேசப்படுவாங்க. ஜார்கன் கிளின்ஸ்மன், க்ளோஸ், முல்லர், பெக்கன்போர், ரூடி வோலர், ஆலிவர் கான்னு பல வீரர்களை எடுத்துக்கிட்டா தெரியும். ஜெர்மனி அணியின் டெக்னிக்கல் கேம் ரொம்ப பலமாக இருக்கும். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
அதனால, ஜெர்மனி தோற்றதும் எனக்கு இரவு தூக்கமே வரல. இதுவே நான் ஊர்ல இருக்கும்போது ஜெர்மனி வெளியேறியிருந்தால் அப்புறம் உலகக் கோப்பைப் போட்டிகளைப் பார்த்திருக்கவே மாட்டேன். ஆனா, அங்க இன்னும் மூணு நாட்கள் தங்க வேண்டியிருந்தது. அப்ப மற்ற நாட்டு ரசிகர்களிடம் பேசிட்டு இருந்ததால ஓகே ஃபைன்னு அடுத்த போட்டிகள் மீதும் நாட்டம் வந்தது.அப்புறம், பிரான்ஸ் - போலந்து போட்டியில் பிரான்ஸ் வீரர் பாப்பே விளையாட்டு அப்ளாஸ்னு சொல்லணும். அவர் ரொம்ப அருமையான வீரர். இனி கால்பந்து உலகில் பெரிய நட்சத்திர வீரரா வலம் வரப்போறவர் அவர்தான்...’’ என்கிறவர், நிதானமாகத் தொடர்ந்தார்.
‘‘கத்தார்ல நடந்த உலகக் கோப்பை மாதிரி இதுவரை நடந்ததில்லனுதான் நினைக்கிறேன். இனியும் நடக்காதுனு தோணுது. ஏன்னா, பத்து ஒலிம்பிக்ஸிற்கு செலவிடும் தொகையை இந்த ஒரு உலகக் கோப்பைக்காக செலவிட்டாங்கனு செய்தி பார்த்தேன். அது உண்மைதான்னு அங்க போனபிறகே தெரிஞ்சது. பெண்கள் இரவு ஒரு மணிக்குக் கூட தனியாகப் போகலாம். அந்தளவுக்கு பாதுகாப்பு இருந்தது. நான் ஒரு ஆஸ்திரேலிய பெண்மணிகிட்ட பேசிட்டு இருந்தப்ப சொன்னாங்க... ‘நான் இங்க வந்து மூணு நாட்களாச்சு. தனியாதான் சுத்துறேன். இதுவரை யாரும் போன் நம்பர் கேட்குறதோ, கலாட்டா செய்றதோ, மோசமாக நடக்குறோ இல்ல. ரொம்ப அருமையா இருக்கு. மற்ற இடங்களைவிட பாதுகாப்பா இருக்கு’னாங்க.
இந்த முறை பீர் பாட்டில்களை உள்ள கொண்டுவர தடைவிதிச்சிட்டாங்க. ஐரோப்பியர்களுக்கு உலகக் கோப்பை கால்பந்து என்பது ஒரு திருவிழா மாதிரி. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருது. அதற்காக திட்டம் போடுவாங்க. பணம் சேர்த்து ஒட்டுெமாத்தமாக நாற்பது ஐம்பது பேராகப் போய் போட்டிகளைக் கண்டுகளிக்கலாம்னு நினைப்பாங்க.
பொதுவா, போட்டிகள் சம்மர்லதான் வரும். சம்மர்னாலும் அங்க ரொம்ப அருமையான கிளைமேட்டா இருக்கும். ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு ஆண்கள், பெண்கள்னு சேர்ந்து பீர் அடிச்சிட்டு என்ஜாய் பண்ணுவாங்க. இங்க பீர் இல்லன்னதும் முதல்ல சலசலப்பு இருந்தது. அப்புறம், யாரும் அதைப்பற்றி பேசல. உற்சாகமாக போட்டிகளைக் கண்டுகளிச்சாங்க. நாங்க ஒரே ஒரு நாள் மட்டும்தான் செலவு செய்து சாப்பிட்டோம். மற்ற நாட்கள் தமிழ், மலையாள, தெலுங்கு நண்பர்களும், ரசிகர்களும் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய் விருந்து தந்தாங்க...’’ என்கிறவர், ‘‘இப்ப ஷூட்டிங் போயிட்டு இருக்கேன். விஷாலின் ‘லத்தி’ முடிச்சேன். அடுத்து, ‘காசேதான் கடவுளடா’ படமும், விஜய் ஆண்டனியின் ‘மழையைப் பிடிக்காத மனிதன்’ படமும் ரிலீஸ் ஆகணும்.
அப்புறம், வித்யா பாலனுடன் ஒரு இந்திப் படம் முடிச்சிருக்கேன். அதுவும் ஜனவரியில் ரிலீஸாக இருக்கு. இப்ப, ‘சிங்கப்பூர் டீஸ்டால்’னு ஒரு படமும், பாலாஜி மோகன் இயக்குத்துல ‘காதல் கொஞ்சம் தூக்கலா’னு ஒரு படமும், ஆர்ஜே பாலாஜி இயக்குற ‘சிங்கப்பூர் சலூன்’ படத்துலயும் நடிச்சிட்டு இருக்கேன்...’’ என ரிலாக்ஸாகச் சொல்கிறார் ‘தலைவாசல்’ விஜய்.
பேராச்சி கண்ணன்
|