பிருத்வி
என் பெயர் பிருத்வி. அப்பா அம்மாவுக்கு அறிவியல் மீது இருந்த வெறியில் எனக்கு எங்கள் இந்திய ஏவுகணையின் பெயரை வைத்தார்கள். அக்னி, ஆகாஷ், பிரம்மாஸ் என்று எல்லாம் ஆண் ஏவுகணைகள். பிருத்வி மட்டும்தான் பெண் பெயர் கொண்ட ஏவுகணை. ஆனால், பிருத்வி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா..? பிருத்வி என்ற வடமொழிச் சொல்லுக்கு பூமி என்று பொருள். மூன்றாம் முறை பிருத்வி ஏவுகணை சோதிக்கப்பட்ட 2004 ஜனவரி 23 அன்று பிறந்தேனாம்.
 அம்மா அப்பா இருவருமே இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் வேலைபார்த்தவர்கள். அவர்களது ஒரே மகள்... எப்படி அறிவியல் ரத்தம் ஓடாமல் இருக்கும்? இப்போது நான் உங்கள் அர்த்தத்தில் மேலே இருக்கிறேன். உங்களை 92 நிமிடங்களுக்கு ஒரு முறை சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். யெஸ். நான் எப்படி விண்வெளி வீராங்கனை ஆனேன் என்பது தனிக்கதை.
 தரங்கம்பாடிக்கு அருகே தாழைப்பேடு எனும் இடத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதாக இருந்தால் தமிழ்ப்பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப மத்திய அரசு ஒப்புக்கொள்ளவேண்டும் என்று தமிழகமும் புதுவையும் ஒற்றுமையாக குரல் கொடுத்து அடம்பிடித்த மூன்றாண்டு கழித்து அதற்கு தேர்வான நால்வரில் ஒருத்தியாகி பிறகு கடும் பயிற்சி... வழக்கமான சாதி மத இன மொழி சிபாரிசு ஊழல் இத்யாதிகளான நமது மண்ணின் அடையாளங்களைக் கடந்து, சென்ற வருடம் விண்ணில் மிதக்க தேர்வானேன்.
சர்வதேச விண்வெளி ஆய்வுமையம்! அங்கே சென்று இணைய வாய்ப்பு கிடைத்தது. ரஷ்ய கூட்டாட்சி விண்வெளி நிறுவனமும், ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும், ஜப்பான், கனடா, பிரேசில், இத்தாலி ஆகிய நாடுகளும் ஒன்றிணைந்து உருவாக்கிய அந்த பன்னாட்டு விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 2020ல் ரஷ்யா விலகிக்கொண்டதால் நமக்கு அதிர்ஷ்டம் அடித்து, எல்லா நாடுகளிலும் நீக்கமற வாழும் உலகளாவிய தமிழர்களின் அழுத்தம் காரணமாக பிருத்வி எனும் நான் இப்போது அந்த விண்வெளி ஆய்வு மையத்தில் இருக்கிறேன்.
நாங்கள் பதினாறு நாடுகளின் விண்வெளி பிரதிநிதிகள் இங்கே இருக்கிறோம். ஆனாலும் நான் 242வது ஆள். ஒரே சமயத்தில் எல்லாரும் இங்கே இருப்பதாக கற்பனை செய்துவிடவேண்டாம். பலரும் வந்து போய்க்கொண்டு இருப்பார்கள்.நான் விண்வெளி வீராங்கனை ஆவதற்கு அப்பா அம்மா பச்சைக்கொடி காட்டினாலும் அத்தை, தாத்தா, பெரியப்பா எல்லாம் பதறிப் போனார்கள். ‘அது ஒண்ணும் ஆட்டோவில் ஸ்கூலுக்கு போவது போல கிடையாது’ என்று நவீனவாதியான ரமேஷ் மாமா கூட பேசினார்.
காசி தாத்தா, ‘டேய் ராமசாமி (அப்பா பெயர்) அப்புறம் பிருத்வியை யாருடா கட்டிப்பாங்க? யோசிச்சு செய்...’ என்றபோது நான் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்க நேர்ந்தது.வானத்தில் பாருங்கள். சந்திரன், வெள்ளி கிரகத்திற்கு அடுத்த படியாக எங்கள் விண்வெளி ஆய்வு நிலையம் பிரகாசமாக இரவில் தெரியும். இது விண்வெளியில் இருக்கும் ஓர் ஆய்வுக்கூடம். புவி ஈர்ப்பே இல்லாத இடத்தில் சில ஆய்வுகளைச் செய்வது வேதியியல் நவீன நேனோ தொழில் நுட்பம் முதல் மருத்துவம் வரை பலவகையில் உதவுகிறது. பல மைல்கள் கீழே நீலப்பந்தாக நம் புவி.
‘பீக்... பீக்...’ சரி எனக்கு வேலை இருக்கிறது. கீழ் ஜன்னல் வழியே வெளியே பார்க்கிறேன். பக்கவாட்டு சிலைடு - தகட்டு சூரிய ஆற்றல் வில்லைகளை மூன்றுபேர் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள். இடப்பக்கம் - தெர்மோஸ் உடற்பயிற்சிக் கூடத்தில் ஆறு பேருக்குமேல் இருந்தார்கள். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது தசை எலும்பு எடை சேர்க்கவும் மரத்த தன்மையிலிருந்து மீளவும் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்யவேண்டும்.
நாங்கள் சிலைடு - தகட்டு சூரிய ஆற்றல் வில்லைகளை ஏக்கர் கணக்கில் பொருத்தவேண்டி உள்ளது. அதில் இருந்துதான் தேவையான மின் சக்தியை நாங்கள் பெறமுடியும். இன்று என் பிறந்தநாள். அதனால் சற்றே தாமதமாகிவிட்டது. பூமி மாதிரி எப்போது பகல், எப்போது இரவு என்பதெல்லாம் இங்கே கிடையாது.
ஆனால், எங்களை புவியிலிருந்து ஒரு கட்டுப்பாட்டு அறையில் 3,50,000 சென்சார்கள் மூலம் கண்காணிக்கிறார்கள். இன்று கண்விழித்தபோது விதவிதமான சென்சார்கள் வழியே பிறந்தநாள் வாழ்த்து கேட்டது. எனக்கு புது அனுபவம்.
‘பீக்... பீக்...’ மீண்டும் சத்தம் எழும்பிய அந்த மைய கட்டுப்பாட்டு அறை தொடர்பிக்கு அருகே நான் மட்டுமே இருந்தேன். ‘யெஸ்.. 242 வணக்கம் பிளீஸ்’ என்றேன்.
‘சாட்டிலைட் கண்ட்ரோல் ரூம்... எங்களது ரேடாரில் சரியாக இரண்டு மைல் தொலைவிலிருந்து சிரியஸ் நட்சத்திரத்தின் வடக்கே 5 டிகிரி பாகை கோணத்தில் ஒளி எக்கோ போல விட்டு விட்டு வருகிறது... 242 பி உங்களால் ஒரு நேரடி காட்சி ரிப்போர்ட் அனுப்ப முடியுமா?’எங்களது விண்வெளி ஆய்வுக்கூடத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று புவி நோக்கி எரிகற்கள் வருவதைக் கண்காணித்து காட்சி ரிப்போட் அனுப்புதல். நான் என் பைனாகுலரை எடுக்கிறேன்.
பலமடங்கு சக்தி வாய்ந்த நேனோ லேசர் பொருத்தப்பட்ட விண் பைனாகுலர். இப்படி நடப்பது உண்டு. அது எரிகல்லாக இருக்கலாம். நமது விண்வெளி ஆய்வுக் கூடத்தில் இருந்தே துண்டாகி மிதக்கும் முக்கிய உதிரிப் பாகமாக இருக்கலாம். ‘அது ஒரே இடத்தில் நிற்கிறது. அல்லது ரொம்ப நகரவில்லை...’ கண்ட்ரோல் ரூமின் குரல். நான் ஓரியான் நட்சத்திரக் கூட்டம் நோக்கி என் பைனாகுலரைத் திருப்புகிறேன். இப்போது அதை பார்த்துவிட்டேன். ‘ஓகே. அது மனிதனால் வடிவமைக்கப்பட்ட ஒன்று. எரிகல் அல்ல. 1970களின் மாடல் சோதனை சாட்டிலைட். கூம்பு வடிவம். அப்படி பலவற்றை அனுப்பி இந்தியா உட்பட பல நாடுகள் தொடர்பு அறுந்து கைவிட்டதில் ஒன்று...’ என்றேன்.
இந்த 2025ல் அந்த பழங்கால தகரங்களைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்? கட்டுப்பாட்டு அறையில் யாரோ சிரிக்கிறார்கள். ‘அப்படியே விட்டுவிடலாமா...’ என்றேன்.‘நோ. யாருக்குமே அது உபயோகப்படாது என்றாலும் நமது இந்த சுற்றுப் பாதையில் அது இருப்பது நல்லது கிடையாது...’ சட்டென்று குரல் வந்தது. பிறகு மவுனம்.ஆறு ஏழு நிமிடங்கள். கட்டுப்பாட்டு அறையில் ஆலோசனை நடக்கிறது என்று புரிந்தது.
‘பீக்... பீக்...’‘லைனில் இருக்கிறேன்...’‘ஓகே. யாராவது சென்று அதை நமது சுற்றுப் பாதையில் இருந்து அப்புறப்படுத்தி விண்ணில் தள்ளிவிட்டுவிடலாம். வேறு எங்காவது மிதக்கட்டும்...’ என்கிறார்கள்.அந்த ‘யாராவது’ என்பது நான்தான் என்று தீர்மானிக்கிறேன். இந்தப் பணியை வெளியே சூரிய ஆற்றல் வில்லைகள் பதிக்கும் குழுவில் யாரிடமாவது தர மனம் ஒப்பவில்லை. ஏற்கனவே நாங்கள் முடிக்க வேண்டிய தேதி கடந்து தாமதப் பணியாளர் ஆகிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாள் தாமதமாவதும் மில்லியன் கணக்கான டாலர் பணத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த விண் மையம் மூலம் உபரி தகவல் தொடர்பு அமைப்பு பெற்று வானொலி - தொலைக்காட்சி - கைபேசி இத்யாதி சேவைகளை நிஜமான சர்வதேச சேவையாக்கிட அரசுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன.‘நான் சென்று அதை அப்புறப்படுத்துகிறேன்’ என்று ஒலி தாங்கியில் அறிவித்தேன். எனது 242 பி எண்ணிடப்பட்ட அடையாள அட்டையை ஸ்கானிங்கில் காட்டி பதிந்தேன். இந்த வேலையைச் செய்திட எனக்கு பதற்றமே இல்லை. விண் மையத்தைவிட்டு வெளியே மிதந்து இரண்டு வாரம் ஆகிவிட்டது. எனவே ஒரு அவுட்டிங் தேவைப்பட்டது.
இருக்கையை விட்டு வெளியே வந்தபோது அங்கே யாருமில்லை. விண்வெளி உடை பராமரிப்பு அறை நோக்கி நடந்தபோது கண்ணில் பட்ட ஒரே க்ரூ உறுப்பினர் பெலிதான். எங்கள் விண்-ஆய்வகத்தில் வசித்த பூனை. பொதுவாக செல்லப் பிராணிகளை வரவழைத்து விண்-வாழ்வின் வளர்சிதை மாற்றங்களைப் பரிசோதிப்பது தொடர் வழக்கமாக இருக்கிறது.
இந்த பெலி பூனையை நான் கல்யாணி என்றுதான் அழைப்பேன். இது பிரான்ஸ் நாட்டின் வீதியில் திரிந்த பூனை. 1963ல் மற்ற நாடுகள் நாய், குரங்கு, எலி என்று விண்ணிற்கு அனுப்பிக் கொண்டிருந்தபோது ஃபிரான்ஸ் நாடு பெலிசெட் எனும் பூனையை விண்ணிற்கு அனுப்பியது. அது பழையகதை. எத்தனையோ வருடங்களுக்கு விண்ணில் பறந்த ஒரே பூனை எனும் பெருமையோடு அது இருந்தது. பிறகு எங்கள் தற்காலத்தில் மற்றொரு பெலி. ஆனால், அது எங்கள் வீட்டு கல்யாணி பூனையின் அதே கருப்பு வெள்ளை என்பதால் எனக்கு ரொம்ப பெட். கல்யாணி எனும் பெலி என் காலைச் சுற்றி வட்டமிட்டு கொஞ்சி மியாவ் மியாவ் என்று கத்தியதை ரசித்தபடி என் விண் உடையை அணிகிறேன்.
விண் உடை காலங்காலமாக மாறி பரிணாம வளர்ச்சி பெற்று வந்துள்ளது. எங்கள் விண் உடை என்பது இப்போது பறக்கும் குட்டி ஜெட் ராக்கெட் போல. அதில் மழைக் கோட்டு போல உள் நுழைந்து குப்புறப் படுத்தால் போதும் - கட்டுப்பாட்டு கைப்பிடி மூலம் விண்ணில் ஒரு ஸ்கூட்டர் மாதிரி வலம் வரலாம். எல்லாம் சரியான இயக்கத்தில் உள்ளதை ஒரு முறை சரிபார்த்தேன். கல்யாணி பூனையைப் பார்த்து கட்டைவிரல் உயர்த்திவிட்டு புறப்பட்டேன்.
விண்வெளியில் இரண்டு மைல்கள் பயணிக்க 17 முதல் 20 நிமிடம் ஆகலாம். சரியான இலக்கு. கச்சிதமான திசையில் சாலைகள் இல்லாத வெற்று இருள் வழியே புள்ளிகளை மட்டுமே கணித்து முழு கவனத்தோடு செல்வதற்கு தனிப் பயிற்சி பெற்றிருந்தேன். பிராணவாயு அளவீட்டைத் தாண்டி ஏனைய ஆறு அளவுருக்களும் ஒத்துழைக்க வேண்டும். மற்றபடி வேலை சுலபமானது. லேசாக லேசர் பிளேடை எதிர் இலக்கு மீது திருப்பி விட்டால் போதும். சுற்றுப்பாதையில் இருந்து அந்தப் பழங்கால சோதனை சாட்டிலைட் விலகி விட்டது. வேலை முடிந்தது.
நான் விண்-உடை ஊர்தியைத் திருப்புகிறேன். அந்த நிமிடத்தில் இருந்து பிரச்னை தொடங்கியது. முதலில் செவிகளில் விழுந்த அந்த உபரி சத்தம் என் கவனத்தை ஈர்த்தது. வழக்கமாக பிராணவாயுவின் விடுவிப்பு சத்தம் புஸ் என்று கேட்கும். அதை விட்டால் விர் என்று என் விண் ஊர்தியின் நேனோ மோட்டார்களது இதமான இயக்கம். ஆனால், தொப் தொப்பென்று ஏதோ இங்கும் அங்கும் விழுந்து என்னை இழுப்பதைப்போல நான் உணரத்தொடங்கினேன்.
சட்டென்று மனம் திக் திக் என்று அடித்து ஒருவகை நடுக்கம் உள்ளத்தில் குடி கொண்டது. பிராணவாயு மற்றும் ஆறு வகை அளவுருக்களும் சரியாக இருப்பது போல அளவீட்டு டிஜிட்டல் குட்டி திரை காட்டியது. ஆனால், என்னவோ நடக்கிறது. அசையக் கூட அந்த விண் - உடை ஊர்தியில் என்னால் முடியாது. யாரோ பிடித்து என்னை கீழே அழுத்துகிறார்கள் என்று உணர என்னால் முடிந்தது. நாக்கு வறண்டு நடுக்கம் என்னை ஆட்கொண்டது.
முதலில் எனக்கு கேட்ட உபரி சத்தத்தை ஆராய முற்பட்டேன். என் இதயம் வேகமாக அடிப்பது எனக்கே இடிபோல கேட்டதால் அந்த உபரி சத்தத்தின் மீது மனம் செல்ல மறுத்தது. பிறந்த நாளிலேயே மரணம் சம்பவிக்கப் போகிறது என்று தோன்றியபோது வியர்ப்பதையும் உணர முடிந்தது.கல்பனா சாவ்லா முதல் எஸ்டினா கிரேட் வரை விண்வெளி மரணம் புதிதல்ல. சும்மா ஒரு குட்டி சுவிட்ச் வேலை செய்யவில்லை என்றாலும் அம்போதான்.
நான் இப்போது தாத்தாவை நினைக்கிறேன். ‘இறந்த உடலை விட்டு ஆன்மாக்கள் நடமாடுவது விண்வெளியில்தான் பிருத்து... துர்ஆத்மாக்களிடம் சிக்கிக் கொள்ளாதே...’ என்னைப் போட்டு அழுத்துவது எந்த துர் ஆத்மாவோ என்று கூட நினைத்து கண்களை இறுக மூடினேன்.‘தீபாவளி புஸ்வாணம் ராக்கெட் மாதிரிதான்... எல்லாமேவா வெடிக்கிறது... ஒன்றிரண்டு புஸ் ஆவது போலத்தான் அதுவும். அப்படி உனக்கு ஆகாதவரை ஓகே. எதற்கும் யோசித்து செய்...’ என் மாமாவின் குரல் கேட்டு அப்போது சிரித்தேன். இப்போது ஏனோ அது என் நினைவிற்கு வந்து கலங்க வைக்கிறது.
‘எத்தனை நாள் கூடி எடுத்த சரீரம் அத்தனையும் மண் தின்பதில்லையோ’பள்ளிக்கூட நாட்களில் பேச்சுப்போட்டிகளில் நான் முழங்கிய பட்டினத்தார் பாட்டு நினைவில் வந்து போனது. விண்ணில் இறந்தால் மண்கூட தின்னாது என்று யோசித்தபோது ஊர்தியே அதிர்ந்தது.யாரோ இங்கும் அங்குமாக என் விண்-உடை ஊர்தியை அசைக்கிறார்கள் ‘என் விண் ஊர்தியைப் பரிசோதிக்க வேண்டுகிறேன்... ஏதோ சம்திங் ராங்...’ நான் ஒலிதாங்கியில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஏறக்குறைய அலறினேன்.
ஆனால், விண் ஆய்வு மையமான என் வானத்து இருப்பிடம் இருபது தப்பிடியில் நெருங்கியபோது என்னை ‘மீட்புக் குழு’ இழுத்து விட்டது.அடுத்த ஒரு மணி நேரத்தில் எனக்கு நினைவு திரும்பிய போது என் படுக்கை மூலையைச் சுற்றி இரண்டு பிரேசில் மருத்துவக் குழு உறுப்பினர்கள். ‘மியாவ் மியாவ்...’ ஒருத்தர் லேசாகச் சிரித்தார். ‘மூன்று குட்டிகள்...’ என்றார். ‘நல்லவேளை... உங்களுக்கு எதுவும் ஆகவில்லை...’‘அட கல்யாணி... பெலி... பூனை லூசே... உனக்கு குட்டிபோட என் விண்வெளி ஆடைதான் கிடைத்ததா?’ நான் போட்ட கூச்சலில் எல்லாரும் சிரித்தார்கள்.
ஆயிஷா இரா.நடராஜன்
|