குந்தவைக்கு குரல் கொடுத்த எழுத்தாளர் சுபாவின் மகள்!



இசைக் கலைஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்... எல்லாவற்றுக்கும் மேல் பிரபல இரட்டை எழுத்தாளர்கள் ‘சுபா’வில் (சுரேஷ் - பாலகிருஷ்ணன்) எழுத்தாளர் சுரேஷின் மகள் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர் கிருத்திகா நெல்சன். ‘பொன்னியின் செல்வன்-1’ படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் எங்கும் ஒலிக்கும் ‘சொல்...’ பாடலுக்கு பாடலாசிரியர் மற்றும் ‘பொன்னியின் செல்வன் - 1’ படத்தில் மணிரத்னத்தின் துணை இயக்குநர்... என பட்டையைக் கிளப்பிய கிருத்திகாதான் த்ரிஷாவின் குந்தவை பாத்திரத்துக்கு டப்பிங்கும் பேசியிருக்கிறார்!

‘‘‘நான் யார்’ என்பதற்கு பதிலே இந்த வருஷம்தான் கிடைச்சிருக்கு. நான் என்ன செய்வேன்... எப்ப செய்வேன்னு எனக்கே புரியாது. மணி சாருடன் என் பயணம் ‘கடல்’ படத்திலேயே ஆரம்பிச்சிடுச்சு. அங்கேயே மறைமுகமா ஏ.ஆர்.ரஹ்மான் சாருடனும் என் பயணம் ஆரம்பிச்சிடுச்சு.படிச்சது எலெக்ட்ரானிக் மீடியா. அது விஸ்காமுக்கு தங்கச்சி மாதிரினு வச்சுக்கோங்க. அதை முடிச்சிட்டு ரேடியோ, டிவினு ஏழு வருஷம் ஒர்க் பண்ணினேன். சுட்டி டிவியோட புரோகிராமிங் ஹெட்டா இருந்திருக்கேன்.

அப்புறம் இ-காமர்ஸ் கம்பெனி ஆரம்பிச்சேன். மார்க்கெட்டிங், மீடியா லைன்ல இருந்தேன். பேஸிக்கலி நான் ஒரு சிங்கர். வெஸ்டர்ன் கிளாசிக்கல் தெரியும். வருஷத்துக்கு ரெண்டு தடவை ஷோ பண்ணுவேன். ‘பாரிஜாதம்’ படத்துல ‘ஏதோ நடக்குது...’ பாட்டு நான் பாடினதுதான். டப்பிங் பேச ஆரம்பிச்சது ஆக்சிடெண்ட்.அப்பா ‘கோ’ படத்துல ஒர்க் பண்ணிட்டிருந்த டைம்... அதுல நடிச்ச பியாவுக்கு டப்பிங் பேச எந்த வாய்ஸும் செட் ஆகலைனு அப்பா சொன்னார். ‘நான் வேணா பேசட்டுமா’னு அப்பாகிட்ட விளையாட்டா கேட்கப் போக, ‘சரி... ட்ரை பண்
ணேன்’னு சொல்லிட்டார்.

என் வாய்ஸ் பியாவுக்கு பக்காவா செட் ஆயிடுச்சு. அதுதான் எனக்கு ஃபர்ஸ்ட் படம். அப்புறம் டப்பிங் யூனியன்ல மெம்பராகி, கார்டு எடுத்து, முறைப்படி டப்பிங்கை தொடர்ந்திட்டிருக்கேன்...”
என்னும் கிருத்திகா, ‘கோ’ படத்துக்குப் பிறகு ‘உறுமி’ல வித்யா பாலனுக்கு, ‘கடல்’ல துளசிக்கு, ‘ஆதிபகவன்’ல நீது சந்திராவுக்கு, ‘தகராறு’ படத்துல பூணத்துக்கு... என வரிசையாக ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார்.‘‘‘கடல்’ படத்தோட டப்பிங்கும், ‘ஆதிபகவனோ’ட டப்பிங்கும் ஒரே டைம்ல நடந்தது. ‘கடல்’ல துளசிக்கு குழந்தைத்தனமான வாய்ஸ்ல பேசணும். ‘ஆதிபகவன்’ல நீதுவுக்கு வில்லத்தனமான வாய்ஸ்ல பேசணும். இப்படி சவால்கள் கூட நடந்திருக்கு.

‘லிஃப்ட்’ ஹாரர் படத்திலே ‘ஹேய் புரோ...’ பாடல்ல என் குரலும் கேட்கும். அடுத்து ‘ஆதித்யா வர்மா’ படத்தில் ‘கனா...’ பாடல் பாடியிருக்கேன். இசைக்கு அப்பறம்தான் எனக்கு எழுத்து பரிச்சயமாச்சு. மியூசிக் நோட்ஸ் படிக்கும் போது கூடவே எனக்குத் தெரிந்த வரிகளை நானே போட்டு பாட ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் என்னுடைய பாடல்களுக்காகத்தான் நான் எழுத ஆரம்பிச்சேன்...’’ புன்னகைக்கும் கிருத்திகா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘சொல்...’ பாடலுக்கு வரிகள் எழுதியது புது அனுபவமாக இருந்ததாகச் சொல்கிறார்.

‘‘டீமா உட்கார்ந்து பேசிட்டு இருக்கும்போது ஒரு டியூன் கொடுத்தாங்க. இந்த பாடல் எப்படி இருக்கலாம்... என்ன மாதிரியான வரிகள் வந்தால் நல்லா இருக்கும்... அப்படின்னு பேசிட்டு இருந்தோம். பாட்டு டியூன் கேட்டுட்டு மணி சார் கிட்ட ‘இந்தப் பாட்டுக்கு வரிகள் நான் முயற்சி செய்யட்டுமா’னு கேட்டேன். மணி சாரும் ஓகே சொன்னார். வரிகள் எழுதி அனுப்பினேன். அதுவும் ஓகேவாகிடுச்சு! சாங் ரெக்கார்டிங் போகப் போறதா சொன்னாங்க.

எனக்கு நம்பிக்கையே இல்ல. அடுத்து பாடல் வரிகளை எப்படி உச்சரிக்கணும்னு பாடகி ரக்‌ஷிதாவுக்கு சொல்லிக் கொடுக்கக் கூப்பிட்டாங்க. அப்பகூட எனக்கு நம்பிக்கை வரல.
அடுத்து பாடல் ரெக்கார்டிங் முடிஞ்சு ஷூட்டிங் முடிஞ்சு பாடல் காட்சிகளும் படமாக்கிட்டோம். இப்ப வரைக்கும் என்னால அந்தத் தருணத்தை மறக்கவே முடியல. காரணம், அது மணி சார் + ரஹ்மான் சார் காம்போ!’’ என்னும் கிருத்திகா, மணிரத்னத்தின் இன்வால்வ்மென்ட் தன்னை எப்பொழுதும் பிரமிக்க வைப்பதாகக் குறிப்பிடுகிறார்.

‘‘டப்பிங் பேசும்போது பக்கத்துல வந்து நின்னுக்கிட்டு, மணி சார் நடிச்சுக் காட்டுவார். அந்த கேரக்டரை ஃபீல் பண்ணிப் பேசச் சொல்வார். ஜோக் அடிப்பார். என்கூட எனக்குப் பக்கத்துல நின்னு டீ குடிப்பார். அந்த சிலிர்ப்பை அவர்கிட்டயே சொல்லியிருக்கேன்...’’ கண்களைச் சிமிட்டியபடி சொல்லும் கிருத்திகா, தன் அப்பாவின் ரியாக்‌ஷனை நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.
‘‘அப்பா பாடல் கேட்டார். வரிகளையும் படிச்சுப் பார்த்தார். எதெல்லாம் நல்லா இருக்குன்னு சொன்னார். எதெல்லாம் நல்லா இல்லைங்கறதையும் சொன்னார். எப்படி எழுதி இருக்கலாம் அப்படின்னு கூட சொன்னார்.

ஆனா, அப்பா ஒரு வார்த்தை மட்டும் ரொம்ப எமோஷனலா சொன்னார்... ‘உன்னை நினைச்சு ரொம்ப பெருமைப் படறேன்ம்மா!’ ஒரு மகளா இதைவிட வேற என்ன வேணும்.
மணிரத்னம் சாருக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியல. அந்த அளவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கொடுத்திருக்கார். என் டார்கெட் எல்லாமே இசை, எழுத்து... இதிலேதான். தனி இசைப் பாடல்கள் நிறைய உருவாக்கணும்னு ஆசை இருக்கு.

ஆர்.கார்த்திக் இயக்கத்தில் வெளியான ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் எல்லா பாடல்களும் நான்தான். தியேட்டர்லயும், ஓடிடிலயும் அந்தப் படத்தைப் பார்த்த எல்லாரும் என் பாடல்களை குறிப்பிட்டுப் பேசறாங்க. இதெல்லாமே மணி சாரால கிடைச்சது.

இப்ப சில புராஜெக்ட்ஸ்ல கேட்டுட்டு இருக்காங்க. அதுபோக ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாக வேலைகளும் ஆரம்பமாகியிருக்கு. அதுலதான் அசிஸ்டெண்ட் டைரக்டரா முழு கவனமும் செலுத்தறேன்...’’ என்னும் கிருத்திகாவுக்கு வித்தியாசமான டிவி சீரியல்களை உருவாக்கும் ஆசை இருக்கிறதாம்.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்