அப்பாடா... இனி நிம்மதியா சாப்பிடலாம்!



ஆமாம்... தமிழகத்தையே கடந்த சில நாட்களாக உலுக்கி வந்த பிரச்னைக்கு முடிவு தெரிந்து விட்டதால் இனி நிம்மதியாக சாப்பிடலாம்; உறங்கலாம்.வேறொன்றுமில்லை... நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலிக்கிறார்களா இல்லையா என தலைமுடியை கலைத்தபடி தீவிர ஆராய்ச்சியிலும் யோசனையிலும் இருந்தோம்.
 ‘பொன்னியின் செல்வன்’ ஆடியோ ஃபங்ஷனுக்கு வேறு இருவரும் ஜோடியாக வந்து எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினார்கள்.ஆனாலும் ‘ஆமாவா இல்லையா’ என்ற ஊசலாட்டம் இருந்து கொண்டே இருந்தது. காரணம், திரையுலகின் டிராக் அப்படி. ஒரே வாக்கியத்தில் ‘நாங்கள் வெறும் நண்பர்கள்தான்’ என தோளை குலுக்கியபடி நடையைக் கட்டிவிடுவார்கள்.

இதுவும் அப்படி ஆகிவிடுமோ என பதற்றத்துடன் இருந்த நமக்கு இப்பொழுது முடிவு தெரிந்து விட்டது!சில நாட்களுக்கு முன் அதிதி ராவ் தன் பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் சித்தார்த் ஒரு வாக்கியத்தை பதித்திருக்கிறார்.அதுதான் திருவாக்கியமாக நம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.அந்த மகா வாக்கியம்...‘எனது இதய ராஜகுமாரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...’அப்படீன்னா அதுதானே?!

காம்ஸ் பாப்பா