உணவின் கடவுளை சப்ளை செய்யும் மெஸ்மேன்!



கேக், பேஸ்ட்ரிஸ், பிரவுனி, குக்கீஸ்... விரும்பாதவர்களே இருக்க முடியாது. இந்த உணவைப் பொறுத்தவரை வயதானவர்கள் கூட குழந்தைகளாக மாறிவிடுவார்கள். கேக் என்றதும் நம்முடைய நினைவிற்கு முதலில் வருவது பிளாக்ஃபாரஸ்ட், சாக்லெட் கேக்தான். ஆனால், அது எல்லா கடைகளிலும் கிடைக்கும்.
அப்படி இல்லாமல் மாறுபட்ட சுவை மற்றும் ஃபிளேவர்களைக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார் மும்பையைச் சேர்ந்த கெய்னாஸ் மெஸ்மேன். பார்சி குடும்பத்தில் பிறந்த இவர், மும்பையில் 2004ம் ஆண்டு ‘தியோபுரோமா’ என்ற பெயரில் ஒரு கேக் ஷாப்பினை தொடங்கினார். இப்போது, மும்பை மட்டுமில்லாமல் பூனா, தில்லி, ஹைதராபாத், பெங்களூரு என பல இடங்களில் இவரின் கிளைகள் விரிந்துள்ளன.

அந்தவகையில் கடந்த மாதம் தனது 100வது கிளையை பெங்களூரில் ஆரம்பித்தவர் சென்னை, நாசிக், மொகாலியிலும் தன் கிளைகளைத் தொடங்கியுள்ளார். ‘‘என்னுடைய இந்த பயணம் 2003ம் ஆண்டு முதல் ஆரம்பித்தது...’’ புன்னகைக்கிறார் கெய்னாஸ். ‘‘எங்களுடைய குடும்பம் உணவுத் தொழில் சார்ந்த குடும்பம். என் கொள்ளுத் தாத்தா கப்பலில் கேன்டீன் ஒன்றை நடத்தி வந்தார். அதற்கு மெஸ் என்று பெயர். அப்படித்தான் எங்களின் குடும்பப் பெயர் மெஸ்மேன் என்றானது.

எங்கள் வீட்டில் எப்போதும் நண்பர்கள் சூழத்தான் சாப்பாடு இருக்கும். கொள்ளுத் தாத்தாவைத் தொடர்ந்து, நான் ஐந்தாவது தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபடுகிறேன்.
எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். அந்த வகையில் நான் உணவுத் தொழிலில் இறங்கியுள்ளேன்.படித்தது ஹோட்டல் மேனேஜ்மென்ட். அதை முடித்ததும் ஓபராய் ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்குதான் பல விதமான கேக்குகளை உருவாக்கினேன். ஆனால், என்னால் அங்கு தொடர்ந்து பணிபுரிய முடியவில்லை.

2003ம் வருடம் ஒரு நாள் நிற்க முடியாத அளவுக்கு முதுகு வலி. டாக்டரைப் பார்த்தேன். என் தண்டுவடத்தில் உள்ள டிஸ்க் வீங்கி இருப்பதாகவும், அதனால் என்னை இனி அந்த வேலையில் ஈடுபட வேண்டாம் என்றும் டாக்டர் கண்டிப்பாகச் சொன்னார்.என் நிறுவனம் எனக்கு அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் வேலை தருவதாகக் கூறினார்கள். ஆனால், கிச்சனில் வேலை செய்வதுதான் எனக்குப் பிடித்தமானது. அதுவே சந்தோஷத்தைத் தரக் கூடியது.

எனவே, அவர்களது மாற்று ஏற்பாட்டை மறுத்துவிட்டு என் வேலையை ராஜினாமா செய்தேன். வீட்டில் ஓய்வில் இருந்தபோது சொந்தமாக ஒரு தொழிலைச் செய்தால் என்னஎன்று தோன்றியது.அதற்குக் காரணம்  என் அம்மா அப்பா மற்றும் என் சகோதரி டீனா. என் அம்மா வீட்டில் ஆர்டரின் பேரில் கேக், சாக்லெட் எல்லாம் செய்து  கொடுப்பார்கள். நானும் டீனாவும் அவங்களுக்கு உதவி செய்வோம். அதையே ஏன் ஒரு தொழிலாக மாற்றக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது.

அப்படித்தான் 2004ம் ஆண்டு ‘தியோபுரோமா’ உருவானது...’’ என்ற கெய்னாஸ் மெஸ்மேன், இந்தப் பெயர் வைத்ததற்கான காரணத்தையும் கூறினார்.‘‘சாக்லெட், பிரவுனிஸ், கேக்... எல்லாம் இருக்கிற டெசர்ட் டெஸ்டினேஷன் ஆரம்பிக்க முடிவு செய்தாகிவிட்டது. அதற்கு சரியான பெயர் வைக்க வேண்டுமே!முதலில் என் பெயரையும் டீனாவின் பெயரையும் சேர்த்து வைக்க நினைத்தோம். அந்த சமயத்தில் எங்களுக்கு சர்க்கரை கொடுப்பவர்தான் இந்தப் பெயரை வைக்கலாமே என்று யோசனை சொன்னார்.

‘தியோபுரோமா’ என்பது கிரேக்க வார்த்தை. ‘தியோ’ என்றால், கடவுள், ‘புரோமா’ என்றால் உணவு. அதாவது ‘உணவின் கடவுள்’ என்று அர்த்தம். 2004ம் ஆண்டு சின்ன இடத்தில் நான்கு டேபிள்கள் மட்டுமே போடக்கூடிய அளவில் எங்களின் டெசர்ட் டெஸ்டினேஷன் ஆரம்பமானது. பல பிரச்னைகளை நாங்கள் சந்தித்தோம். காரணம், ஒரு பேக்கரி துவங்கினாலும், அதை சரியாக நடத்த முடியுமா, லாபம் பார்க்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.

ஆரம்பத்தில் மக்கள் மனதில் இடம் பிடிக்கக் கஷ்டமாக இருந்தாலும், நாளடைவில் நாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு உணவும் அடுத்த நிமிடமே காலியாகும் அளவுக்கு கூட்டம் கூடத் தொடங்கியது. இதன் பிறகு ஆர்டரின் பேரிலும் செய்து கொடுக்க ஆரம்பித்தோம். நான், என்னிடம் பயிற்சி பெற்ற ஒரு செஃப் மற்றும் உதவிக்கு ஒன்று இரண்டு ஆட்கள்... என ஒரு சிறு குழுவாகத்தான் ஆரம்பத்தில் இயங்கினோம்.

தினமும் எட்டு மணி நேரம் நாங்கள் வேலை பார்த்தாலும், இன்னும் நிறைய வேலை இருப்பது போல் இருந்தது. சொல்லப்போனால் ‘தியோபுரோமா’தான் எங்களின் முழு மூச்சாக மாறியது...’’ என்ற கெய்னாஸ் மெஸ்மேன், இப்போது 100 ‘தியோபுரோமா’ கிளைகளை நிர்வகிக்கிறார்.‘‘2014ல் மும்பையில் மட்டுமே நான்கு கிளைகளைத் தொடங்கினோம். அதனைத் தொடர்ந்துதான் மற்ற ஊர்களிலும் கிளைகளை ஆரம்பித்தோம்...’’ என்று பேச ஆரம்பித்தார் தலைமை நிர்வாக அதிகாரியான ரிஷி கவுர்.

‘‘நாங்கள் பிரான்சைசி கொடுக்க விரும்பவில்லை. எங்களைப் பொறுத்தவரை உணவின் சுவையில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது. இப்போது எங்களிடம் 13 செஃப்கள் உள்ளனர். தவிர மும்பை, பெங்களூர், சண்டிகர், தில்லி, ஹைதராபாத் போன்ற இடங்களில் சென்ட்ரல் கிச்சன் அமைத்துள்ளோம். சென்னையைப் பொறுத்தவரை தினமும் காலை மூணு மணிக்கு பெங்களூரில் இருந்து ரெஃப்ரிஜிரேட்டர் அடங்கிய டிரக் கிளம்பும். சரியாக காலை ஒன்பது மணிக்கு சென்னையை வந்தடையும். அதிகபட்சம் இரண்டு நாட்கள் மட்டுமே. அதன் பிறகு புது ஸ்டாக் வந்து இறங்கும்.

இது முழுக்க முழுக்க வெஸ்டர்ன் டெசர்ட்கள் என்பதால், இதில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளும் மிகவும் தரமானது. சொல்லப்போனால், நாங்கள் காம்பவுண்ட் சாக்லெட் பயன்
படுத்துவதில்லை. கோகோ பீன்களில் இருந்து நேரடியாகத்தான் சாக்லெட்களை தயாரிக்கிறோம். அதே சாக்லெட் எங்களின் கேக்கு களிலும் இடம் பெறுவதால், ஒரு முறை சுவைத்தாலே அதில் உள்ள கோகோ சுவையினை உங்களால் காலம் முழுக்க மறக்க முடியாது...’’ என்றவர் டெசர்ட்களைப் பற்றி விவரித்தார்.

‘‘எங்களின் பெஸ்ட் செல்லிங் பிரவுனிகள்தான். நாங்கள் பத்து விதமான பிரவுனிகளை தயாரிக்கிறோம். இந்த பிரவுனிகளை பத்து செகண்ட் சூடு செய்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் அது தொண்டையில் கரைந்து செல்வதை உணர முடியும். பொதுவாக மற்ற கடைகளில் அடைப்பது போல் பிரவுனிகள் இருக்கும். இங்கு அப்படியே கரையும் தன்மையில் நாங்க கொடுக்கிறோம்.

இதைத்தவிர சாக்லெட் டிரபில், சாக்லெட் சிப் குக்கீஸ், மாவா கேக், பைனாப்பிள் கேக், கப் கேக், சாண்ட்விச், சோர் பிரட், குரோசண்ட், டீ கேக்ஸ், மூஸ், மக்ரூன், டார்ட், ஆப்பிள் பை, பாப்கா, சீஸ் பிஸ்கெட், லெமன் சீஸ் கேக், ஓவர்லோட் பிரவுனி... என அனைத்தும் இங்கு உண்டு. தவிர தீபாவளி போன்ற விசேஷ தினங்களுக்கு தனியாக கிஃப்ட் பாக்ஸ்களும் உண்டு.
இப்படி பல வகையான கேக், பேஸ்ட்ரி மற்றும் டெசர்ட் வகைகள் இருந்தாலும், எங்களின் மாவா கேக் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். முழுக்க முழுக்க பாலில் இருந்து மாவாவை தயாரித்து அதில் கேக் வடிக்கிறோம். இதனை வெனிலா, பிஸ்தா, ஏலக்காய் சுவைகளிலும் தருகிறோம்.

இது கெய்னாஸ் குடும்பத்தின் பாரம்பரிய உணவு! அவர்கள் மூன்று தலைமுறைகளாக இதனைத் தயாரித்து வருகிறார்கள். இது அவர்கள் பாட்டியின் ரெசிபி!’’ என்று சொல்லும் தலைமை நிர்வாகியான ரிஷி கவுர், சென்னையில் இப்போதிருக்கும் இரண்டு கிளைகள் தவிர்த்து மேலும் பல கிளைகளைத் தொடங்கும் எண்ணம் இருப்பதாகத் தெரிவித்தார். l

செய்தி: ப்ரியா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்