ஓ... மணமகனே!



சினிமா, சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் ஹரீஷ் கல்யாண். இப்போது ஹரீஷ் கல்யாண் இதயத்தில் திருமணம் எனும் பந்தம் மூலம் சொந்தம் கொண்டாட வந்துள்ளார் நர்மதா. திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்ற நிலையில் புதுமாப்பிள்ளை ஹரீஷிடம் பேசினோம்.

நர்மதா கழுத்தில் தாலி கட்டிய தருணம் எப்படி இருந்தது?

நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை. அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று உடன்பிறப்புகள் யாரும் இல்லாததால் அவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படி ஒரு லைஃப் ஸ்டைலில் இருந்த என்னுடைய வாழ்க்கையில் மனைவி நர்மதா சொந்தமாக வந்தபோது எனக்கு சின்ன வயதில் கிடைக்காத அந்த தோழமை உறவை புது வரவாக பார்க்கிறேன்.
இரண்டாவதாக, பொறுப்பு உணர்வு. என்னைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்த நிலையில் மனைவியைப் பற்றியும், மனைவியின் கோணத்திலிருந்தும் யோசிக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்திருக்கிறேன்.

பேச்சுலர் வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்தாத நிலை இருந்திருக்கும். திருமண பந்தத்துக்குள் வந்ததும் அப்படியில்லாமல் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாகவும் யோசிக்க வேண்டும். அந்த வகையில் என்னுடைய சிந்தனைகள் மனைவியையும் சேர்த்து விரிவடைந்துள்ளது. பேச்சுலர் வாழ்க்கையில் என்னுடைய விருப்பத்துக்கு உடைகளை அணிந்து செல்ல முடியும். மனைவி வந்தபிறகு மனைவியின் விருப்பத்துக்கும் கொஞ்சம் இடம் கொடுக்க வேண்டும்.

அதே மாதிரி நம்முடைய தமிழ் கலாசாரத்தின்படி குடும்பம் என்ற கட்டமைப்புக்குள் நுழைந்திருக்கிறேன். குழந்தைப் பருவம், படிப்பு, வேலை என்று பல நிலைகளைக் கடந்து குடும்பம் என்ற முழு வட்டத்துக்குள் வந்ததாக நினைக்கிறேன்.

திருமணம், என்னுடைய புரொஃபஷனில் இன்னும் பல மடங்கு கவனம் செலுத்த வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கியுள்ளது. எங்கள் வீட்டில் புதுவரவாக நர்மதா வந்திருக்கிறார். அது கொஞ்சம் பழக வேண்டும். காதல் திருமணமாக இருந்தாலும் சேர்ந்து வாழும்போது அந்த அனுபவம் கொஞ்சம் புதுசா இருக்கும் என்று சொல்வார்கள். லைஃப் இப்போதுதான் ஆரம்பித்துள்ளது. நாளடைவில் முழு குடும்பஸ்தனாக மாறிவிடுவேன் என்று நினைக்கிறேன்.

திருமதி ஹரீஷ் உங்கள் படங்களை பார்த்துள்ளார்களா? உங்கள் மனைவிக்கு கல்யாணப் பரிசு என்ன கொடுத்தீர்கள்?

நான் நடித்து கடைசியாக வெளிவந்த ‘ஓ மணப்பெண்ணே’ வரை பார்த்துள்ளார். ஒரு ரசிகையாக படம் பார்த்தவர், திரையில் பார்த்த அந்த நாயகன் வாழ்க்கை தலைவனாக வருவார் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார் என்றுதான் நினைக்கிறேன். நர்மதா என்ன மாதிரி கேரக்டர் என்றால், ரொம்பவும் எளிமையானவர். டவுன் டூ எர்த் எனுமளவுக்கு அவருடைய பழகும்விதம் இருக்கும். வாழ்க்கையில் இது வேண்டும், அது வேண்டும் என்ற டிமாண்டிங் பெர்சன் கிடையாது. குடும்ப உறவுகளை அதிகம் நேசிக்கும் பெண்மணி. மற்றபடி எனக்கு அவங்களும், அவங்களுக்கு நானும்தான் திருமணப் பரிசு.

உங்கள் மனைவியை எந்தக் கட்டத்தில் இவர்தான் லைஃப் பார்ட்னராக வரவேண்டும் என்று முடிவு செய்தீர்கள்?

எங்கள் திருமணம் நீண்ட காலம் ப்ளான் பண்ணி நடக்கவில்லை. குறுகிய காலத்தில் முடிவானது. முதல் தடவை சந்தித்து பேசும்போது, ‘நான் நடிகர் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்தக் கோணத்தில் பார்க்காமல் ஓர் ஆணாக என்னிடம் பிடித்தவைகளை சொல்லுங்கள்’ என்று கேட்டேன். அவரும் ‘உங்களை ஒரு நடிகராக பார்க்காமல் முதல் பார்வையிலேயே உங்களுடன் வாழ்ந்தால் என்னுடைய குடும்பத்தில் இருப்பதுபோல் வாழ முடியும் என்று உணர்ந்தேன்’ என்றார்.

நானும், ‘என்னுடைய வாழ்க்கையில் அம்மா, பாட்டி என்று இரண்டு முக்கியமான பெண்மணிகள் இருக்கிறார்கள். அவர்களுடன் பழகும்போது கிடைக்கும் அந்த தாய்மை உணர்வு உங்களுடன் பேசும்போது கிடைக்கிறது’ என்றேன். அந்த உணர்வுகள்தான் எங்களை இணைத்துள்ளது.

‘நூறுகோடி வானவில்’ எந்தளவில் இருக்கிறது?

போஸ்ட் புரொடக்‌ஷன் வேகமாக நடந்து வருகிறது. இது சமகால காதலை இயக்குநர் சசி சார் ஸ்டைலில் சொல்லும் படமாக இருக்கும். சசி சாரின் பலமே எமோஷனலை
ஆழமாக  வெளிப்படுத்துவது. அது இந்தப் படத்தில் பிரமாதமாக வந்திருக்கு.‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் அக்கா, தம்பி, அக்கா கணவருக்குமிடையே உள்ள எமோஷனல் ப்ளேவை சிறப்பாக காண்பித்தார். இதுல அந்த மாதிரி எனக்கும், ஹீரோயின் சித்தி இதானிக்குமிடையே இருக்கும் எமோஷனலை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஃபேமிலி, சென்டிமென்ட் கலந்த ஜனரஞ்சகமான படமாக இருக்கும். வேறு மாநிலத்தில் நடை பெறுகிற கதைக்களம் என்பதால் ஆடியன்ஸுக்கு ஃப்ரெஷ் ஃபீல் கொடுக்கும்.

வேறேன்ன படங்கள் செய்கிறீர்கள்?

‘டீசல்’ படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளது. எனக்கு ஜோடியாக அதுல்யா வர்றார். முதன் முறையாக ஒரு முரட்டுப் பையன் வேடம் பண்றேன். இந்த மாதிரி வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகவும் இருந்தது. வினய், சாய்குமார், கருணாஸ், தங்கதுரை இருக்கிறார்கள். ‘நெஞ்சுக்கு நீதி’ திபு நினன் மியூசிக். எம்.எஸ்.பிரபு சார் கேமரா. சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். கன்டன்ட் கலந்த ஆக்‌ஷன் படம். இந்தப் படம் என்னுடைய கேரியரில் முதன் முறையாக பிரம்மாண்ட படைப்பாக வெளிவரவுள்ளது.

இது தவிர, நான்கைந்து படங்கள் வரிசையாக கமிட் பண்ணிவைத்துள்ளேன். அதன் அறிவிப்புகளை புரொடக்‌ஷன் தரப்பிலிருந்து வெளியிடுவார்கள். நானும், ஒரு படம் முடித்த பிறகுதான் அடுத்த படம் ஷூட் போக வேண்டும் என்ற பக்குவத்துக்கு வந்திருக்கிறேன்.

ஹரீஷ் எல்லோருக்கும் தெரிந்தவர். அவருடைய பெயருக்கு அடுத்துள்ள அப்பா கல்யாண் யார்?

அப்பாவுக்கு சினிமாதான் பிசினஸ். ஆனால், எனக்கு அவர் சினிமா கற்றுக்கொடுக்கவில்லை. அப்பா எனக்கு கற்றுக்கொடுத்தது வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும், எதையெல்லாம் மறக்கக்கூடாதோ அதைத்தான் சொல்லிக் கொடுத்து வளர்த்தார். அப்பா சொன்னதெல்லாம், ‘பத்து ரூபாய் சம்பாதித்தால் ஐந்து ரூபாய் சேமித்து வை. மூன்று ரூபாய் செலவு பண்ணு. இரண்டு ரூபாய் தர்மம் செய்’ போன்ற நெறிகளை சொல்லிக்கொடுத்தார். இதெல்லாம் உட்காரவைத்து கிளாஸ் எடுக்காமல் போகிற போக்கில் சொல்லிக் கொடுத்துவிடுவார். அதை நான் இப்போதும் கடைப்பிடித்து வருகிறேன்.

சினிமாவில் எனக்கான இடம் என்பது நான் அடிபட்டு கற்றுக்கொண்டவை. இப்போது தேவா என்ற நல்ல உள்ளம் என்னுடைய நலம்விரும்பியாக இருந்து என்னுடன் டிராவல் பண்ணுகிறார். நான் யோசிப்பதைவிட எனக்காக பத்து மடங்கு யோசிப்பார்.

சோஷியல் மீடியாவுல உங்களுக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். சோஷியல் மீடியா மக்கள் மத்தியில் விரிசலை ஏற்படுத்துகிறதா அல்லது பலம் சேர்க்கிறதா?
பலமா, பலவீனமா என்று கேட்கிறீர்கள். நம்முடைய துறை ரீதியான அண்மைச் செய்திகளைப் பகிர்ந்துகொள்ள சோஷியல் மீடியா அற்புதமான தளம். ஆனால், அதை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். மற்றவர்களை புண்படுத்தும்விதமாக கருத்து பகிர்வது, புகைப்படங்கள் ஷேர் பண்ணுவது போன்ற செயல்கள் பலவீனம்.

ஒருசிலர் சோஷியல் மீடியாவுக்கு அடிமையாகி அதில் உள்ளவைகளை கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். அந்த செய்தியின் உண்மைத்தன்மையை அறியாமலேயே எதிர்வினையாற்றுவார்கள். அது தவிர்க்கப்பட வேண்டும். பாசிட்டிவ்வான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளலாம். இழிவுபடுத்துதல் கூடாது. முகம் அறியாத பலர் என்னுடைய திருமண புகைப்படங்களைப் பார்த்துவிட்டு வாழ்த்து கூறுவது மாதிரியான செயல்களை பலமாக நினைக்கிறேன்.

எஸ்.ராஜா