Must Watch



விக்ராந்த் ரோனா

இந்தியத் திரைப்படத்துறையில் கன்னட சினிமாவுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் கன்னட சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் வெளியாகியிருக்கிறது ‘விக்ராந்த் ரோனா’. ‘ஹாட் ஸ்டாரி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.  ஒரு மலைக்கிராமம். அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு மர்ம வீட்டில் பிரம்மராட்சசன் வாழ்வதாக நம்பப்படுகிறது. அந்த கிராமத்துக்குள் வருகிறவர்கள் ஊருக்குள் நுழைவதற்கு முன்பே கொல்லப்படுகின்றனர். குறிப்பாக குழந்தைகள் கொல்லப்படுவது அதிகம்.

இந்நிலையில் அந்த மர்ம வீட்டுக்கு முன்பிலிருக்கும் கிணற்றில் ஒரு பிணம் கிடைக்கிறது. அந்தப் பிணத்துக்கு தலை இல்லை. இறந்தவர் இன்ஸ்பெக்டர் என்று கண்டுபிடிக்கப்படுகிறது.
இன்ஸ்பெக்டரைக் கொலை செய்தவனைக் கண்டுபிடிப்பவதற்காக அந்த கிராமத்துக்கு வருகிறார் புது இன்ஸ்பெக்டர் விக்ராந்த் ரோனா. அவரைக் கொல்வதற்கான முயற்சிகள் நடக்கின்றன. ஆனால், அவர் தப்பித்துவிடுகிறார்.

இன்ஸ்பெக்டர், குழந்தைகளைக் கொலை செய்தவர்களை ரோனா எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே திரில்லிங் திரைக்கதை. திரில்லிங், ஆக்‌ஷன், அட்வெஞ்சர் பிரியர்களுக்கு செம விருந்து வைத்திருக்கிறது இந்தப் படம். விக்ராந்த் ரோனாவாக கலக்கியிருக்கிறார் சுதீப். படத்தின் இயக்குநர் அனூப் பண்டாரி.

ஆல் கொயட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரன்ட்

முதல் உலகப்போரை அடிப்படையாக வைத்து ஏராளமான திரைப்படங்களும், நாவல்களும் வெளிவந்திருக்கின்றன. இதில் முக்கியமானது ஜெர்மானிய எழுத்தாளரான எரிக் மரியா ரிமார்க் எழுதிய ‘ஆல் கொயட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரன்ட்’. இந்த நாவலைத் தழுவிய ஜெர்மானியப் படம் இது. ‘நெட்பிளிக்ஸி’ல் ஆங்கிலத்தில் காணக்கிடைக்கிறது. முதல் உலகப்போரின் இறுதி நாட்கள். ஜெர்மனியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் முன் தலைமையாசிரியர் ஒருவர் போர் வீரர்கள் குறித்து பேசுகிறார்.

அவரது பேச்சில் மயங்கிய சில மாணவர்கள் ஜெர்மானிய ராணுவத்தில் சேர்ந்து போரில் கலந்துகொள்கின்றனர். ஓர் இன்ப சுற்றுலா போல் போருக்குச் செல்கின்றனர். போருக்குச் சென்ற மாணவர்கள் வீடு திரும்பினார்களா... அவர்களுக்கு என்ன மாதிரியான பாடத்தை போர் கற்றுக்கொடுக்கிறது... என்பதே திரைக்கதை.  

போரின் குரூரங்களை அருகிலிருந்து பார்ப்பதைப் போல படமாக்கியிருப்பது சிறப்பு. இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்குள்ளும் போர் மீதான வெறுப்பை உண்டாக்குவதே இதன் வெற்றி. மட்டுமல்ல, இந்த வருடத்துக்கான ஆஸ்கர் போட்டிக்கு ஜெர்மனியிலிருந்து அனுப்பப்படுகிறது இந்தப் படம்.  இதன் இயக்குநர் எட்வர்ட் பெர்ஜர்.

பிம்பிசாரா

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலைக் குவித்த தெலுங்குப்படம், ‘பிம்பிசாரா’. ‘ஜீ5’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த அரசன் பிம்பிசாரா. பெரிய போர் வீரன். ஆனால், அகங்காரம், ஆணவம்தான் அவனது அடையாளம். அவனை எதிர்த்து ஒரு வார்த்தை பேசினாலே தலையைத் துண்டித்துவிடுவான். குழந்தை என்று கூட பார்க்க மாட்டான்.

பல அரசர்களைக் கொன்று, தனது ராஜாங்கத்தை விரிவுபடுத்திக்கொண்டே சென்றான். அவனது அட்டூழியம் கட்டுக்கடங்காமல் போனது. இப்படிப்பட்ட பிம்பிசாரா ஒரு இக்கட்டான சூழலில், டைம் டிராவல் வழியாக  நிகழ்காலத்துக்கு வருகிறான். பிம்பிசாரா சந்திக்கும் மனிதர்கள், அவனுக்கு நிகழும் சம்பவங்கள் எல்லாம் பிம்பிசாராவை எப்படி மாற்றுகிறது என்பதுதான் ஃபேண்டஸி திரைக்கதை.

ஒரு கட்டுக்கதையைப் போல ஆரம்பிக்கும் படம், போகப் போக கதையின் சுவாரஸ்யத்தில் நம்மை அப்படியே கட்டிப்போடுகிறது. அகங்காரமும், ஆசையும் நம்மை எங்கு கொண்டு போய் நிறுத்தும் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்தப் படம். பிம்பிசாராவாக கலக்கியிருக்கிறார் நந்தமூரி கல்யாண் ராம். படத்தின் இயக்குநர் மல்லிடி வசிஸ்டா.

பந்த்ரண்ட்

விநாயகன், டாம் சாக்கோ, லால், தேவ் மோகன்... என பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கியிருக்கும் மலையாளப்படம், ‘பந்த்ரண்ட்’.‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. கேரளாவில் உள்ள ஒரு கடற்கரை கிராமம். அங்கிருக்கும் பன்னிரண்டு ரவுடிகள் ஒரு குழுவாக இயங்கி வருகின்றனர். பஞ்சாயத்து முதல் கொலை வரை என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். நகரத்தில் இருக்கும் பெரும்புள்ளி ஒருவருக்குத் தேவையான வேலைகளைச் செய்து தருவது இந்த பன்னிரண்டு பேர்களின் வேலை.

பப்பில் இருக்கும் ஒருவனை அடிக்கச்சொல்லி பெரும்புள்ளி சொல்கிறார். பன்னிரண்டு பேரும் பப்புக்குச் சென்று அங்கிருந்தவனையும், அவனது குழுவையும் பயங்கரமாகத் தாக்குகின்றனர். அப்போது காவல்துறை வந்துவிட, அவர்கள் தப்பித்து தங்களது வேனில் ஏறுகின்றனர். அந்த வேனுக்குள் பன்னிரண்டு பேருக்கும் சம்பந்தமில்லாத பதிமூன்றாவதாக ஒருவன் இருக்கிறான்.
அவன் யார்... இந்த பன்னிரண்டு பேர்களின் வாழ்க்கையில் அவன் என்னவிதமான மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறான் என்பதே மீதிக்கதை.இயேசுவையும், அவரது பன்னிரண்டு சீடர்களையும் சமகாலத்துக்குத் தகுந்த  மாதிரி மாற்றியமைத்திருப்பது அருமை. படத்தின் இயக்குநர் லியோ தடீயஸ்.

தொகுப்பு: த.சக்திவேல்