81 நிமிடங்களில் உருவான 3.6.9



கேமராக்கள் 24, கிரேன்கள் 3, நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர்கள் நடிகைகள் மற்றும் 450 கேமரா டெக்னீசியன்கள், அறிவியல் அடிப்படையிலான திரைக்கதை, அத்தனையும் சேர்த்து வெறும் 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்திருக்கிறது 3.6.9 திரைப்படம்.

உலக அளவில் மிகக் குறுகிய நேரத்தில் படமாக்கப்பட்ட திரைப்படமாக சாதனை படைத்திருக்கிறது. எப்படி சாத்தியம்? பகிர்ந்து கொண்டார் இயக்குநர் சிவ மாதவ்.

உங்களைப் பற்றி சொல்லுங்க! என்னுடைய முழுப் பெயர் சிவ மாதவ். இதுக்கு முன்னாடி சுமார் 9 வருடங்கள் நிறைய இயக்குநர்கள்கிட்ட அசிஸ்டெண்ட் டைரக்டரா வேலை செய்திருக்கேன்.

சொந்த ஊர் திருவாரூர். தாத்தா ராம அரங்கண்ணல் இதே சினிமா துறையில் தயாரிப்பாளராக இருந்திருக்கார். மூணு தடவை எம்எல்ஏவாவும் இருந்திருக்கார். அவருடைய சினிமா ஆர்வம்தான் என்கிட்டயும் வந்திருக்கு. சின்ன வயசுல இருந்து மேடை நாடகம், டிராமா எழுதுறது இப்படி நிறைய ஆர்வம் காட்டுவேன். அதுபோலவே சைன்ஸ் ரொம்ப பிடிக்கும்.

இதுதான் நான்.‘3.6.9’ - எதனால் இந்தப் பெயர்?

உலகமே இந்த மூணு எண்களை மையமாகக் கொண்டுதான் இயங்கிட்டு இருக்கு. இது யுனிவர்சல் டைம் ஃபார்முலா. நம்ம கட்டியிருக்கற வாட்ச்சில ஆரம்பிச்சு நம்மளுடைய வாழ்க்கை நேரம் காலம் அத்தனையும் இந்த அடிப்படையில்தான் நடந்துகிட்டு இருக்கு. இந்த ஃபார்முலாவை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட சைன்ஸ் ஃபிக்‌ஷன் படம்தான் ‘3.6.9’. அதனாலதான் இந்தப் பெயர்.

கதைக்களம் பற்றி சொல்லுங்க?

மொத்தக் கதையும் ஒரு சர்ச்சில்தான் நடக்குது. எனக்கு தெரிஞ்சு ஒரு சர்ச்சிலேயே நடக்கற முழு திரைப்படம் இதுதான். தமிழ்ல சொல்லப்படாத ஒரு கதை. சைன்ஸ் சார்ந்து நிறைய விஷயங்கள் ஆராய்ச்சி செய்துட்டே இருப்பேன். உலக அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் பற்றியும் நிறைய வாசிப்பேன். இந்தப் படத்தைப் பொறுத்த வரைக்கும் இது பொய்னு சொல்லவே முடியாது. அல்லது கற்பனைனு சொல்ல முடியாது. ஒண்ணு நடந்திருக்கலாம் அல்லது நடக்கப் போறதா இருக்கலாம். அப்படியான ஒரு கதைதான் இந்தப் படம்.
 
81 நிமிடங்களில் எப்படி படமாக்கப்பட்டது?

ரொம்ப ஷார்ட் பீரியட்ல படமாக்கப்பட்ட திரைப்படம் ஏதாவது இருக்கானு தேடினேன். நிறைய பேர் முயற்சி செய்திருக்காங்க. ரஷ்ய சினிமா உட்பட உலக சினிமாக்களில் நிறைய முயற்சிகள் நடந்திருக்கு. ஆனா, யாராலும் அந்த முயற்சியை முழுமைப் படுத்த முடியல. நாம ஏன் செய்து பார்க்கக் கூடாதுனு தோணிச்சு.

ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு ரெண்டு மாதங்களுக்கு முன்பு நடிகர்கள், டெக்னீசியன்கள் எல்லாரையும் தேர்வு செய்து தினமும் ரிகர்சல் செய்துட்டே இருந்தோம். தவறையெல்லாம் சரி செய்தோம். ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருக்கும்போது ஆர்ட்டிஸ்ட்களுக்கு மேக்கப் போடக்கூடாது, ஒரு கேமரா ரோலிங்ல இருக்கும்பொழுது இன்னொரு கேமரா ஃபிரேமுக்குள்ள வரக்கூடாது,  டெக்னீசியன்கள் வரக்கூடாது... இப்படி நிறைய சவால்கள் இருந்துகிட்டே இருந்துச்சு.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தவறை சரி செய்தோம். அதேபோல சிங்கிள் ஷாட் மூவியானு நிறைய பேர் கேட்கறாங்க. சமீபத்தில் பார்த்திபன் சார் எடுத்த ‘இரவின் நிழல்’ மாதிரியான படங்களைத்தான் சிங்கிள் ஷாட் மூவின்னு சொல்வோம். இது 81 நிமிடங்களில் படமாக்கப்பட்ட திரைப்படம். ஒரே நாளில் உருவான திரைப்படம்னு கூட சில படங்கள் இருக்கு. நம்ம தமிழிலேயே 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட ‘சுயம்வரம்’ அப்படியானதுதான்.அந்த லிஸ்ட்டுல இந்தப் படம் வராது. 81 நிமிடங்களில் முழுமையான படப்பிடிப்பு. அதுதான் இந்த சாதனை.

பாக்யராஜ் சார் உட்பட படத்தின் மற்ற நடிகர்கள், டெக்னீசியன்கள் யார் யார்..?

ஒன் மேன் ஆர்மியா முழுக் கதையையும் கொண்டு போகப் போறவர் பாக்யராஜ் சார்தான். ரொம்ப நாளைக்கு அப்புறம் அவருடைய டிரேட் மார்க் காமெடியோ அல்லது குறும்பு வசனங்களோ எதுவும் இல்லாம முழுக்க முழுக்க சீரியஸ் ரோல்ல நடிச்சிருக்கார். அவருக்கும் இது வித்தியாசமான படமா இருக்கும். அவர்தான்
கதாநாயகன்.

வில்லனா படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடிச்சிருக்கார். இந்தப் படம் உருவாக ஒரு பெரிய கருவி அவர்தான். அவருக்கு என் நன்றிகள். முக்கிய கதாபாத்திரத்தில் பிளாக் பாண்டி, அங்கயற்கண்ணன், சுகைல், சக்தி மகேந்திரா கோவிந்தராஜன், பிரபு, ஆழம் சா, நிகிதா, கார்த்திக், மாலினி, மெமோ பப்லு, ரிஷி... இன்னும் நிறைய பேர் நடிச்சிருக்காங்க.
ஒளிப்பதிவு மாரீஸ்வரன், எடிட்டிங் ஆர்.கே.ஸ்ரீநாத், இசை கார்த்திக் ஹர்ஷா, ஆர்ட் டைரக்‌ஷன் ஸ்ரீமன் பாலாஜி.

ஷாலினி நியூட்டன்