உலகின் முதல் தமிழ் வரலாற்றுக் கண்காட்சி!



கண்காட்சி வரும் மே 2023 வரை ஜெர்மனியில் நடைபெறுகிறது

‘‘உலகம் முழுவதும் அவ்வப்போது இந்தியக் கண்காட்சிகள் என்று பெயருக்கு இடம்பெறும். அதில் தமிழர்களின் பண்பாடு என்று சில பொருட்களும் இருக்கும். ஆனால், எல்லா கண்காட்சி

களிலுமே தமிழர்கள் சார்பாக இடம்பெறுவது ஒரு நடராஜர் சிலையோ அல்லது சோழர் கால சிற்பமாகவோ மட்டுமே இருக்கும்.
இச்சூழலில் ஸ்டட்காட்டில் (Stuttgart) இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழர் வரலாறு எனும் பிரத்தியேகமான கண்காட்சியில் சங்ககாலம் முதல் நவீன காலம் வரை, தமிழரின் வரலாற்றில் பின்னிப் பிணைந்த பண்பாட்டு, வரலாற்றுப் பொருட்களை பார்வையாளர்கள் வெறும் 3 மணிநேரத்தில் கண்டு களித்து கற்று பெருமிதம் கொள்ளலாம்...’’ அழுத்தமாக சொல்கிறார் கவிஞரும், எழுத்தாளரும், கோட்பாட்டாளரும், நவீன நாடகங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி வருபவருமான எம்டிஎம் என்று அன்புடன் அழைக்கப்படும் எம்.டி.முத்துக்குமாரசாமி.

சென்னையில் இயங்கும் தேசிய நாட்டுப்புறக் கலை உதவி மையம் எனும் தன்னார்வ நிறுவனத்தின் இயக்குனராக இருக்கும் எம்டிஎம் இந்த ஸ்டட்காட் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் என்பதாலும் இந்தக் கண்காட்சி உலகத் தமிழர்களிடையே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
‘‘ஐரோப்பிய நாடுகளிலேயே தமிழர்களுக்காக மட்டும் இவ்வளவு விரிவான ஒரு கண்காட்சி நடப்பது தமிழர்களுக்கு கிடைத்த ஒரு நல்வாய்ப்பாகவே கருதுகிறேன். 2005ம் ஆண்டு முதலே ஜெர்மன் நாட்டில் இருந்த பல்வேறு பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவு ஆற்றி வந்திருக்கிறேன். அதுபோல 2017ம் ஆண்டு ஐயனார் வழிபாடும் அது தொடர்பான சுடு பொம்மைகள் குறித்தும் ஒரு ஆய்வுரை செய்துவிட்டு மேடையில் இருந்து கீழ் இறங்கியபோதுதான் ஜார்ஜ் நோஹாக் என்பவரைச் சந்தித்தேன்.

ஜெர்மனியில் இருந்த ஸ்டட்காட் நகரத்தின் லிண்டன் (linden) மியூசியத்தின் ஆசியாவுக்கான அரங்கின் தலைவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் நோஹாக். பிற்பாடு ஸ்டட்காட் அண்மைக்காலங்களில் தமிழகத்துடன் வியாபாரம், கல்வி, தொழில்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கணிசமான தமிழர்கள் அங்கே வாழ்வதாகவும் அதனால் தமிழர்கள் தொடர்பான ஒரு கண்காட்சியை அங்கே பிரத்தியேகமாக நடத்தமுடியுமா என்றும் என்னிடம் கேட்டார்.

ஈழத் தமிழர்களும் அந்நகரத்தில் கணிசமாக இருப்பதால் இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நினைத்த நான் அந்த திட்டதுக்கு ஒப்புக்கொண்டேன்...’’ என்று சொல்லும் எம்டிஎம் கடந்த 5 வருடங்களாக இந்த திட்டத்துக்கான ஒருங்கிணைப்பாளர்களில் (curator) ஒருவராக இருந்து செயல்பட்ட விதத்தையும் பகிர்ந்தார்.

‘‘ஒரு கண்காட்சி என்றால் கையில் கிடைக்கும் அல்லது எல்லோருக்குமே தெரிந்த பொருட்களைக் கொண்டு நடத்துவது அலுப்புத்தட்டக் கூடியது. ஒரு நல்ல கண்காட்சி என்றால் அதற்கு ஒரு அடிப்படையான கருத்து (ஐடியா), அந்தக் கருத்தை சொல்ல ஒரு வரலாறு, வரலாற்றைச் சொல்ல ஒரு கதை, கதையைச் சொல்ல பொருட்கள் அவசியம்.

நான் இப்படிச் சொன்னபோது நோஹாக் என் கருத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால், கருத்துக்கு எங்கே போவது..? யோசித்துப் பார்த்ததில் நான் 90களில் ஒரு கருத்தரங்கில் பேசிய பேச்சும், அந்த பேச்சு ஒரு இதழில் பிரசுரிக்கப்பட்டு விமர்சகர்களால் விவாதிக்கப்பட்டதும் நினைவுக்கு வந்தது. அந்தக் கட்டுரையை  நோஹாக்குக்கு எடுத்துரைத்தேன். நோஹாக்கும் ஒப்புக்கொண்டார்...’’ என்று சொல்லும் எம்டிஎம் அந்தக் கருத்தையும் அது எவ்வாறு இந்தக் கண்காட்சியில் உருவம் கொண்டது என்பது பற்றியும் விவரித்தார்.

‘‘தமிழர் வரலாறு மிக நீண்ட நெடியது. சுமார் 3000, 4000 ஆண்டு பழமையானது. ஆனால், இந்த நீண்ட வரலாற்றில் ஒரு பொதுமையைக் காணலாம். 3000 ஆண்டுக்கால பழமையான தமிழர் வரலாற்றில் மிக முக்கிய வரலாற்றுக் கட்டங்களாக சங்க காலம், பக்திக் காலம், தமிழ் மறுமலர்ச்சிக் காலம், திராவிட போராட்டக் காலம், இந்திய விடுதலைக் காலம், நவீன காலம் என்று பிரித்துவிடலாம்.

இவை எல்லாமே ஒரு வெகுஜன இயக்கம். இந்த வெகுஜன இயக்கத்தில் எல்லாமே தமிழர்களின் தலையாய தேவையாக ஒன்று மட்டுமே பொதுமையாக இருந்தது. அது சாதி, வர்க்கமற்ற ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது. இத்தோடு பெண் விடுதலையும் ஒரு முக்கியமான குறிக்கோளாக இருந்தது. சங்க காலம் இருவகையான இலக்கியங்களைப் படைத்தது என்பது பற்றி நமக்குத் தெரியும். ஒன்று அகம். மற்றது புறம். அகம் என்றால் காதல்; புறம் என்றால் போர். இப்படி பார்க்கும்போது சங்க காலத்துக்குப் பின் வந்த பக்தி இயக்கம் கடவுளை காதலனாக, காதலியாகக் கொண்டது. மறுமலர்ச்சி இயக்கமும் அதனை ஒட்டி எழுந்த திராவிட இயக்கமும் தமிழை காதலாகக் கொண்டது. விடுதலைப் போராட்டம் நாட்டை, தேசத்தை காதலாகக் கொண்டது.

ஆகவே தமிழரின் ஒவ்வொரு  வரலாற்றுக் காலக் கட்டத்திலும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த தேவை எதுவோ அதுவே ஓர் அகமாக, காதலாக மலர்ந்தது. தொல்காப்பியம் அகத்தை ஒரு யுனிவர்சல் தீமாக பார்க்கிறது. இதனால்தான் அகப்பாடல்களில் தலைவன், தலைவி பெயர்கள் வருவதில்லை. ஆனால், புறப் பாடல்களில் பெயர்கள் உண்டு. புறம் அல்லது போர்கள் விரைவில் மறக்கப்படுவது.

சேர, சோழ, பாண்டியர்கள் போர் புரிந்தனர் என்ற வரலாறு உண்டு. ஆனால், இவை இப்போது பயன்படுமா..? ஆகவேதான் இந்தக் கண்காட்சியை ஒரு அகத்தைத் தூண்டும் நிகழ்வாக மாற்ற முயற்சித்தோம்...’’ என்ற எம்டிஎம் சங்கம், பக்தி, மறுமலர்ச்சி, திராவிட மற்றும் நவீன வரலாறு என்ற பிரிவுகளில் அகம் சார்ந்த கருத்துக்களில் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்ற பல்வேறு பொருட்களை பலருடன் சேர்ந்து சேகரித்த அனுபவத்தையும் பகிர்ந்தார்.

‘‘சங்ககாலத்தைப் பொறுத்தளவில் இப்போதைய கீழடி ஆய்வுக்கு முன்னர் ஆதிச்சநல்லூர் அகழாய்வுதான் தமிழரின் ஆகப் பழமையான வரலாற்றைச் சொன்னது. ஆதிச்சநல்லூர் தொடர்பான பல்வேறு கண்டுபிடிப்புகளைச் சேகரித்தோம். பிறகு சோழர் காலச் சிற்பங்கள், திருவள்ளுவர் சிற்பம், பக்தி காலத்து ஆண்டாள் வரலாறு, மறுமலர்ச்சிக் காலத்தில் சீகன்பால்க் தமிழ் அட்சரங்களை எழுதி அதை ப்ளாக் செய்து தரும்படி ஜெர்மனிக்கு அனுப்பிய கடிதம், அதைத் தொடர்ந்து தமிழின் முதல் அச்சுக்கூடம் வந்தது, உ.வே.சா சங்க நூல்களை அச்சிட்டது, திராவிட இயக்கத்தின் திரைப்படப் போஸ்டர்கள், விடுதலைப் போராட்டக் காலத்தில் ருக்மணி அருண்டேல் சதிரை பரதநாட்டியமாக கண்டுபிடித்தது... என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை பல நாடுகளுக்கு சென்று இந்தக் குழு சேகரித்தது.

இத்தோடு பாண்டிச்சேரியில் உள்ள ஒரு அமைப்பின் பழங்கால புகைப்பட சேகரிப்பு, கால்டுவெல்லின் ஒப்பியல் இலக்கணத்தின் வரலாறு, தமிழர்களின் சமையல், உடைகள், மருத்துவ முறைகள் என்று பல்வேறு விதமான பொருட்களும் இதில் அடக்கம். இத்தோடு உணவு நறுமணமூட்டிகளுடன் இஸ்லாம் தமிழகத்தில் பரவிய முறை, தமிழகத்தின் பொம்மைகள், மரவேலைப்பாடுகள், சித்திரங்கள், ஓவியக் கலையின் வரலாறு, சிற்பக் கலையின் வரலாறு... என இந்தக் கண்காட்சி குறிப்பிட்ட அந்தந்த தலைப்புகளில் இடம்பெறுகிறது...’’ என்ற எம்டிஎம் இந்தக் கண்காட்சியை ஒட்டி தமிழக அளவிலும், உலகளவிலும் பல்வேறு அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளை கண்காட்சி மலராக வெளியிட்டிருக்கிறார். கண்காட்சி வரும் மே 2023 வரை நடைபெறுவதாகவும் கூறும் எம்டிஎம் தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத சரித்திரமாக இந்தக் கண்காட்சி இருக்கும் என்கிறார்.

செய்தி: டி.ரஞ்சித்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்