அரண்மனை குடும்பம் - 43



அந்த வாழைப்பழத்துக்குள் சாதுர்யமாக தோலைக் கீறி உள்ளே வசிய மருந்தைச் செலுத்தியிருந்தாள் மஞ்சுளா. உற்றுப் பார்த்தால் கூட தெரியாது. கணேசனும் அதை உணரவில்லை. ரத்தி எதிரில் வாகாக தோலை உரித்து வாழைப்பழத்தை சாப்பிடத் தயாரானான்.ரத்தியும் ஜூஸ் குடித்தபடியே அவனைப் பார்க்க அவனும் சாப்பிட்டான்.
அழகாய் மென்றவன் “நல்ல டேஸ்ட்...” என்றபடியே விழுங்கியும் முடித்தான்.இன்னொரு வாழைப்பழமும் அதேபோல் தயாராக இருந்தது.“அத்தான்... இதையும் சாப்பிடுங்க...” மஞ்சுளா சொல்ல அதையும் எடுத்து சாப்பிட்டு முடித்தான்.
“குட்... ஆர்கானிக் ஃப்ரூட்டுங்கறது நல்லா தெரியுது...” என்று விமர்சனம் வேறு செய்தான்.

மஞ்சு முகம் பெரிதாய் மலர்ந்தது. தொலைவில் பார்ப்பது தெரியாதபடி பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சுவின் தாயான சுந்தரவல்லி. அவள் முகத்தையும் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது.

வேகமாய் திரும்பி நடந்து குலசேகர ராஜாவைப் பிடித்தாள்.“என்னங்க... நம்ம பொண்ணு சாதிச்சிட்டாங்க. கணேஷ் பழத்தை சாப்ட்டுட்டான்...” என்றாள் மிகப் படபடப்பாக.
பதிலுக்கு அவர் முகத்திலும் ஒரு சந்தோஷ ஜொலிப்பு.“ஏங்க... அந்த மருந்து நீங்க சொன்ன மாதிரி நல்லா வேலை செய்யும்தானே?” என்று உடனேயே சற்று சந்தேக தொனிப்போடும் கேட்டாள் சுந்தரவல்லி. “எனக்கு நம்பிக்கை இருக்கு சுந்தரம்...”

“உங்கள வெச்சு தாங்க நானே நம்பறேன்... இருந்தாலும் ஒரு மருந்து உடம்புல இருக்கற கிருமியைக் கொன்று குணப்படுத்தும். ஆனா, இதுவோ மனசு அதாவது அறிவு சம்பந்தப்பட்ட விஷயம். இதை எப்படி பண்ணும்னு ஒரு சந்தேகம் இருந்துகிட்டே தாங்க இருக்கு...”“இதை விட பெரிய கேள்விய நான் கேட்டவன்... என் பாக்கெட்ல இருக்கற ரூவா நோட்டுல இருக்கற நம்பரை ஒருத்தனால சொல்ல முடியும்போது இது முடியாதா?”“அது எப்படிங்க?”“அதான் வித்தை...”

“இப்படி எல்லாம் வித்தைங்க இருந்தா நீங்க நானுன்னு யார்வேணா கத்துக்கலாமே... அப்புறம் நாம வெச்சதுதானே சட்டம்?”
“இப்ப நீ முடிவா என்ன சொல்ல வரே சுந்தரம்..?”“கணேசன் மயங்கி நம்ம பக்கம் சாஞ்சிடுவான்தானே?”

சுந்தரம்மாள் திரும்ப சந்தேக தொனிப்போடு கேட்டிட கச்சிதமாய் மஞ்சுவும் அவர்கள் அருகில் வந்தாள். வந்தவள் ஒரு மாதிரி திமிராய் பார்த்தாள்.
“மஞ்சு கண்ணு... நீ சாதிச்சிட்டடா... நான் பாத்து கிட்டேதான் இருந்தேன்...”“ஆமாம்மா... சாதிச்சிட்டேன்! அப்பா சொன்னதை நம்பி இறங்கிட்டேன். ஆசை அத்தான் மட்டும் மனசு மாறல...’’ என்று சற்று இழுவையாக குலசேகர ராஜாவைப் பார்த்தாள்.அவள் இழுத்த விதமே கடூரமாய் இருந்தது.

“மஞ்சு... நிச்சயம் அவன் மாறுவான்... எனக்கு நம்பிக்கை இருக்கு. உங்கம்மாதான் தொடர்ந்து சந்தேகப்பட்றான்னா நீயுமா?” என்று கேட்டு “கைகொடு... ஆல் த பெஸ்ட்...” என்றார்.
மஞ்சுவும் அவர் கை நீட்டியதற்காக பதிலுக்கு நீட்டினாள்.சேர்வராயன் மலையின் குகைப்பகுதி! ஒரு பாறைமேல் தலை கீழாக சிரசாசனத்தில் இருந்தார் மாரப்ப வாத்யார்.
கால்களை மடக்கி சப்பண மிட்டுக் கொண்டிருந்ததால் ஒரு மனித முக்கோணத்தைப் பார்ப்பது போல் இருந்தது ஜல்லிக்கு.

போதிமுத்துவுக்கோ இப்படி எல்லாம் நிற்பதால் பெரிதாக என்ன கிடைத்து விடப்போகிறது என்கிற நினைப்பு. அதைக் கேட்கவும் செய்தான்.
“ஏ ஜல்லி... எதுக்கு இப்படி நிக்காரு நம்ம குரு?”“எதுக்கா..? நல்லா கேட்டே போ! இப்படி எல்லாம் ஆசனம் போடாட்டி இந்த மலைல ஏறி இறங்கி ஒரு ஜோலியபாக்க முடியாது. உடம்பு உருக்கு கணக்கா இருந்தாதானே நல்லது...”“அப்ப நீ ஏன் இதை எல்லாம் பண்ணல?”
“இதெல்லாம் பிஞ்சுல இருந்தே வரணும். நடுவுல வந்தாலும் பிடிச்சிக்கறது கஷ்டம்...”

“அப்ப நம்ம குரு சின்ன
புள்ளைல இருந்தே இத எல்லாம் செய்யறாரா?”
“பின்ன... இவுங்க குடும்பமே மாயபண்டித குடும்பம்ல?”
“மாய பண்டித குடும்பமா... அப்படி ஒரு பேரா?”

“பொறவு... கம்பளத்தார், பண்ணாடியார் மாதிரி மாய பண்டிதருங்க! இவங்க தங்களோட ரத்த சம்பந்தம் இல்லாத யாருக்கும் தங்களோட வித்தையை சொல்லித்தர மாட்டாங்க...”
“அப்ப நம்ம வாத்யாருக்குப் பிறகு இது அவ்வளவுதானா?”“அப்படித்தான் எனக்கும் தோணுது. ஏன்னா... வாத்யாரோட மகன் எவ்வளவு சொன்னாலும் இதெல்லாம் எனக்கு வேணாம்னு சொல்லிட்டு இப்ப காலேசுல படிச்சிகிட்டு இருக்கான்...”“அட... வாத்யாருக்கு குடும்பம்லாம் இருக்குதா?”“நல்லா கேட்டே போ... இப்ப கூட 20 கோடிய கேட்டது நமக்காக மட்டுமில்ல. பையன், பொண்ணு, பொண்டாட்டிக்காகவும்தான்...”
“அப்படியா..?”

“அப்படியேதான்... வாத்யாரை சாதாரணமா நினைச்சிடாதே. அவர் மனசு வெச்சா தங்கமே செய்வாரு. ஆனா, அதுக்கு ஒரு விஷயம்தான் தடைன்னும் சொல்வாரு...”
“தங்கம் செய்யறதா... இது என்ன ஜல்லி புதுசா என்னென்னமோ சொல்றே?”
“ஏன் நீ ரசவாதம் பத்தி எல்லாம் கேள்விப் பட்டதில்லையா?”
“ரசவாதமா... இந்த உடம்புக்கு வருமே மூட்டுவாதம்... அந்த
மாதிரியா?”

“சரியான கூமாலே நீ... ரசவாதம்கறது சித்த வித்தை! இரும்பு, கல்லு, மண்ணுன்னு எதையும் ரசவாதத்தால தங்கமா மாத்திட்லாம்...”
“நெசமாவா?”“நீ பாம்பு விஷம்னே புத்துக்குள்ளயே கிடந்துட்ட... பள்ளிக்கூட பக்கமும் போவல... அதான் நான் சொல்ற எல்லாமே உனக்கு பெருசா தெரியுது...”
“ஆமா ஜல்லி... நான் இங்க வந்து வாத்யாரை பார்த்த பிறகுதான் நான்லாம் பெரிய வேஸ்ட்டுன்னே புரிஞ்சிகிட்டேன். அது சரி... தங்கம் செய்ய ஏதோ தடைன்னு சொன்னியே... அது என்னா?”

“அது என்னன்னு கேட்டா... தன் உடம்பைக் காட்டி நான் தாண்டா அதுக்கு தடைன்னு சொல்வாரு... எப்படின்னு கேட்டா உனக்கு சொன்னா புரியாதுடா - நம்ம உடம்பு கூட ஒரு மூலிகை மாதிரிதான்... குணத்தை வெச்சுதான் இதுக்கு மதிப்பு.

நான் கறி மீனுன்னு தின்றவன்... என் உடம்பு வெறும் மாமிசம். ஆனா, பூமிக்கடியில வளர்ற கிழங்குகளைக் கூட மாமிசமா நினைச்சு அதை எல்லாம் தவிர்த்து, கீரை, பழம்னு சாப்பிட்டு உடம்பை சும்மா தங்கமா வெச்சிக்கிட்டிருக்கறவங்கதான் குணமுள்ள உடம்புகாரங்க. அவங்களால வேணும்னா ரசவாதம் பண்ண முடியும்னு சொல்வார்...”
“எம்புட்டோ இருக்கு... ஆனா, எதுவுமே தெரியாம இந்த புஸ்சுங்கள பிடிக்கறதையே நான் ஒரு பெரிய விசயமா நினைச்சுகிட்டிருந்துட்டேன். இனியாச்சும் விடிஞ்சா சரி. ஆமா... இருபது கோடி கேட்ருக்காரே... கிடைச்சிடுமா?”
“ஏன்லே... சந்தேகமா இருக்கா?”

“தப்பா எடுத்துக்காதே... நான்லாம் ஆயிரம் ரூவா நோட்டையே அப்பப்பதான் பாத்துருக்கேன். இந்த லட்சம், கோடிய நினைச்சுக் கூட பாத்ததில்ல... அதான்...”
“உனக்கிருக்கற அதே சந்தேகம் எனக்கும் உண்டு. ஆனா, வாத்யார் வித்தை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு...”“இல்ல... அந்த அரம்மணகாரன் ஒரு கோடீஸ்வரன். காரியம் முடியவும் நான் கொடுக்கறத வாங்கிக்க, இல்லாட்டி உன்னால முடிஞ்சதை பாத்துக்கன்னா என்ன பண்ணமுடியும் வாத்யாரால?”“அப்ப 20 கோடில்லாம் அவன் தரமாட்டாங்கிறியா?”

“திரும்பச் சொல்றேன்... தப்பா எடுத்துக்கிடாதே... அந்தாளை  என்னால நம்ப முடியல. சொந்த மருமகன் குடும்பத்தையே காலி பண்ணி சொத்தை அபகரிக்க ஒருத்தன் நினைக்கறான்னா அவன் எதைத்தான் செய்ய மாட்டான்?”“ஆமாம் போதி... நீ சொல்றதுலயும் ஞாயமிருக்கு...”“இதை நீதான் வாத்யார்கிட்ட சொல்லணும். வாத்யார் உஷாரா இல்லாட்டி அவ்ளோதான்...”போதியும் ஜல்லியும் பேசியபடி இருக்க ஆசனம் போட்டது போதும் என்பது போல பழையநிலைக்கு திரும்பி பாறைமேல் இருந்து ஒரு குதி குதித்து இருவரையும் நோக்கி வந்தார் வாத்யார். இருவரும் பேச்சை நிறுத்திக் கொண்டு அவரைப் பார்த்தனர்.

“என்னலே... பணம் வருமா வராதான்னு சந்தேகமா இருக்குதா?” கச்சிதமாய்க் கேட்டார் வாத்யார்.“ஆமாங்க ஆசானே... அந்த பணக்காரன் எதையும் செய்யத் துணிஞ்சவனா இருக்கான். அதான் போதிக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு...”“அவன் துணிஞ்சவன்னா அப்ப நான் யாரு?”சற்று திமிராகவே கேட்ட வாத்யார் “பொறுத்திருந்து பாருங்களே...’’ என்றார் முத்தாய்ப்பாக. அப்படிச் சொன்னவர் முகத்தில் வேகமாய் ஒரு மாற்றம். வாத்யார் பார்வையும் சற்று தொலைவில் அமைதியாக ஒரு ஒற்றையடிப் பாதை மேல் நடந்தபடி இருந்த பூபால்தாஸ் சாமியார் மேல் சென்றதில்தான் அந்த மாற்றம்.

பூபால் தாஸ் சாமியாரும் ஒரு அர்த்தமுள்ள பார்வையை வாத்யார் மேல் வைத்தபடி நடப்பதும் நன்கு தெரிந்தது.போதி முத்துவுக்கும், ஜல்லிக்கும் அவர் யார் என்பதில் இருந்து ஒரு குழப்பம்!
அரண்மனை பங்களாவில் டிவி முன் அமர்ந்து பார்த்தபடி இருந்த மஞ்சுளாவை நோக்கி “மஞ்சு... மஞ்சு... மை டியர்...” என்றபடியே வந்து கொண்டிருந்தான் கணேச ராஜா!
‘டியரா..?’ மஞ்சுவுக்குள் ஒரே தித்திப்பு!  

(தொடரும்)

பொழுது புலர்ந்து கரிக்குருவிகள் சப்தம் கேட்டு அசோகமித்திரன் கண்விழித்த போது ஒரு ஆச்சரியத்தை முதலில் உணர்ந்தார். இரவில் தூக்கத்தின்போது எப்படியும் சிறுநீர் கழிப்பதற்காக இருமுறையாவது எழுந்துவிடுபவர் அன்று இரவு எழவேயில்லை!அதோடு, எழுந்தாலும் ஒரு வகை அசதி சில நிமிடங்கள் படுக்கையிலேயே உட்காரும்படி அவரை வைத்திருக்கும்.

அப்படியும் இல்லை. தேள் கடிபட்ட தொடைப்பகுதியில் மட்டும் ஒரு இறுக்கத்தை உணர்ந்தவர் உற்சாகமாக எழுந்தார். அதே உற்சாகத்தோடு கொல்லைப்புரம் சென்றபோது கனபாடிகள் எழுந்து குளித்து முடித்து சந்தி செய்தபடி இருந்தார்.அசோகமித்திரனுக்கு அவரைப் பார்க்கவும் சற்று வெட்கமாகக் கூட இருந்தது.

பேச்சுக் கொடுத்து அவரைக் கலைக்காமல் தண்ணீர் இறைத்து முகம் கழுவிக்கொண்டு தன் காலைக் கடன்களைக் கழிக்கத் தொடங்கினார்.கனபாடிகளும் சந்தி முடித்துவிட்டு வரவும் குடிப்பதற்கு காபி வந்தது. அருமையான ஃபில்டர் காபி! கறந்த பசுவின் பாலில் போடப்பட்டதை நாக்கினால் துல்லியமாக உணர முடிந்தது.“இது ஒரு தனி ருசிதான்... ஆனா, வேத தொடர்புங்கற பழமையான விஷயங்கள விடாத நீங்க காபி சாப்பிட்றதுதான் எனக்கு ஆச்சரியமான விஷயம். உங்க ஆசாரம் இதை அனுமதிக்குதா?” என்று சற்று வில்லங்கமான கேள்வியையும் கேட்டார்.
கனபாடிகளிடம் ஒரு பெருமூச்சு. பிறகே பேசலானார்.“சரியான கேள்வியதான் கேட்ருக்கீங்க நீங்க... இந்த காபிங்கறது ஒரு தாவர வகைங்கறதால சாஸ்த்ரப்படி தோஷமில்லை.

ஆனா, ஆரோக்யம்கற அடிப்படைல பார்த்தா இது தப்புதான். இதை குடிக்கறதும் ஒரு கெட்ட பழக்கம்தான். எப்படியோ இந்த பழக்கம் வெள்ளக்காரன் கிட்ட இருந்து எங்ககிட்ட ஒட்டிண்டுடுத்து..! காஞ்சி மகா சுவாமிகள் கூட இதை தப்புன்னு வலியுறுத்தி இதை கூடாதுன்னும் சொல்லியிருக்கார்.

 இதுக்கு சுக்கு ஜலம் ரொம்ப மேல்!
நானும் சிலசமயங்கள்ல இதுல இருந்து விலகி நிற்பேன். அப்புறம் எப்படியோ ஒட்டிண்டிடும். சுருக்கமா சொன்னா இது ஒரு தப்புதான். இதுக்காகவும் நான் காயத்ரியை கூடுதலா ஜெபிச்சு பரிகாரம் செய்துட்றது வழக்கம்...”என்று ஒரு நெடிய விளக்கமளித்தார் கனபாடிகள்.

அந்த பதிலில் பரிகாரமாக காயத்ரியை ஜெபிப்பதாக அவர் கூறியதை அடுத்து அதைத் தொட்டும் ஒரு கேள்வி முளைத்தது.“ஓ... தப்பு பண்ணிட்டா பரிகாரமா காயத்ரி ஜெபிச்சா சரியாயிடுமா?”“ஆமாம். ஆனா, அது எல்லா தப்புக்கும் பொருந்தாது. சரீரம், வாக்கு, மனசுன்னு மூணாலதான் காரியங்கள் உருவாறது.

இதுல நாக்கை கட்டுப்படுத்தாம விட்றது ஒரு தப்பு. அடுத்து மனசால பொறாமைபட்றது, தப்பா பேசிட்றதுன்னு எவ்வளவோ இருக்கு. அதை உணரும் போது இப்படி காயத்ரி சொல்லி பரிகாரம் பண்ணிக்கலாம்...”“பரிகாரம் பண்ண வழியிருக்கறதாலயே தொடர்ந்து தப்பு பண்ணத் தோணுமில்லியா?” அசோகமித்திரன் விடுவதாயில்லை.

“உண்மைதான் அசோகமித்திரன்... பரிகாரம் பண்றதுக்கு, தப்பே பண்ணாத மன உறுதிதான் பெருசு. எப்ப நீங்க இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டேளோ இனி நான் காபி குடிக்கக் கூடாது. இப்ப சொல்றேன்.. இதான் என் கடைசி காபி...” என்றார் கனபாடிகள்.“என்ன தப்பா எடுத்துக்காதீங்க. ஏதோ தோணினதை கேட்டேன்...”“நிச்சயமா இல்லை அசோகமித்திரன்.

 நீங்க இப்படி கேட்கலன்னா எனக்கும் இப்பிடி ஒரு உறுதி தோணியிருக்காது. உங்களால என்வரைல நல்லதுதான் நடந்திருக்கு...” மிக சகஜமாய் எடுத்துக்கொண்டார் கனபாடிகள்.அப்போது வாசல்புரமாய் சங்கு ஊதிக்கொண்டு மணி அடித்தபடி யாரோ செல்லும் சப்தம் கேட்டது.
“என்ன சப்தம்?”

“கோயில் நடை திறக்கப் போறா... கிரகணம் முடிஞ்சு திறக்கறதால விஸ்வரூப தரிசனத்துக்கு கூட்டம் நிறையவே வரும். நாமளும் போகலாமா?”

“என்ன கேள்வி... வந்ததே அதுக்குதானே?” என்றவர் அடுத்த அரை மணியில் கொல்லைப்புரக் கிணற்றடியில் குளித்து தயாராகிட இருவருமே கோயிலுக்கு புறப்பட்டனர்.
கோயிலில் நல்ல கூட்டம்! இறந்து விட்ட குருக்களுக்கு பதிலாக தீட்சை பெற்றிருக்கும் ஒருவர்தான் வந்திருந்து கதவைத் திறந்தார். கூடவே மணியடித்தபடி உதவியாளர்.
கனபாடிகளும், அசோகமித்திரனும் வந்திருந்த நிலையில் கர்ப்பக்கிரகம் முன்னால் ஒரு சிவலிங்கம் பதிக்கப்பட்ட திரைச்சீலை மூடப்பட்டிருந்தது - அதை குருக்கள் கையால் விலக்கி உள்ளே மூலலிங்கத்தைப் பார்த்தபோது குபீர் என்றானது அவருக்கு!

சிவலிங்கத்தின் மேல் மாலை போல் பன்னிரண்டு அடி நீளத்துக்கு ஒரு பாம்புச் சட்டை! லிங்கத்தின் தலைப் பாகம் மேல் சில வில்வ இலைகள் அர்ச்சிக்கப்பட்டவை போலக் கிடந்தன!
அந்தக் காட்சியை குருக்கள் மட்டுமின்றி எல்லோருமே பார்த்து ஒரு பரபரப்பும் சலசலப்பும் உருவாகிற்று. குருக்கள் திரும்பி கனபாடிகள் முன் வந்தவராய் “அண்ணா... பாத்தேளா? கிரகணம் விட்ட நிலைல, ராத்திரி இந்த பூஜை நடந்திருக்காட்டமிருக்கு! நாமதான் யாரும் பாக்கலியேயொழிய  நடக்க வேண்டிய பூஜை நடந்துருக்கு...” என்றார் பரவசமாய்.

கனபாடிகளிடமும் மௌனமாய் ஆமோதிப்பு. அப்படியே அசோகமித்திரனைப் பார்த்தார். அசோகமித்திரன் உள்பக்கமாய் உற்றுப் பார்த்தபடி இருக்க குருக்கள் போய் அந்த சட்டையை எடுத்து வந்து ஒரு தட்டின் மேல் வைத்து பிடித்தபடி வர எல்லோரும் தட்டைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டனர்.நீண்ட சட்டை... முகத்தில் இருந்து வால் நுனிவரை மிகத் துல்லியம்... உள்ளே மட்டும் வெறும் கூடு!அசோகமித்திரனை ஆச்சரியம், அதிர்வு என்று கலவையாக பல உணர்வுகள் ஆட்கொள்ளவும் செய்தது.

“என்ன அசோகமித்திரன்... இதை எப்படி எடுத்துக்கறதுன்னு தெரியலியே?”“ஆமாம்... இருண்ட இடத்துல நடமாட்ற ஒரு பாம்பு சட்டை உரிக்கறது இயற்கை... கர்ப்பக்கிரகம் இருண்ட ஒரு இடம் தானே? அதனால இருக்கலாமோன்னும் ஒரு எண்ணம்...”“அப்படியே இருந்தாலும் தன் உடம்பை மாலைபோல போடுமா ஒரு சர்ப்பம்..?”கனபாடிகள் கேள்விக்கு உடன் ஒரு பதில் கூறமுடியாத நிலையில் ஒரு சலனம் உண்டாயிற்று.

அப்போது அந்தக் கூட்டத்தில் ஓரிடத்தில் அவரையே பார்த்தபடி மண்ணாங்கட்டி சித்தர் திரும்பவும் கண்ணில் படவும் சுரீர் என்றது அசோகமித்திரனுக்கு...
இந்த முறை இவரை விட்டுவிடக்கூடாது என்றும் புத்திக்குள் ஒரு சிவப்பு விளக்கு எரியத் தொடங்கியது!

இந்திரா செளந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி