ஜீன்ஸ், பேண்ட், டி சர்ட், ஃப்ராக்... எல்லாம் கலந்து கட்டி சேலை அணியலாம்!



வண்ண வண்ண ஆடைகளில் கல்லூரிப் பெண்கள் சாலையில் நடந்து போனாலே ஏதோ கலர்ஃபுல் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் இமைக்காமல் பார்க்கச் சொல்லும். அதிலும் இந்த நவீன காலத்தில் சேலையுடுத்திச் செல்லும் இளைஞிகளைப் பார்த்தால் பேராச்சர்யமாகத் தோன்றும்.

அதுவே ஒட்டுமொத்த கல்லூரியும் விதவிதமாய் சேலை கட்டி ஃபேஷன் பேரேடு நடத்தினால் எப்படியிருக்கும்?

இது ஏதோ மேற்கத்திய கலாசாரத்தை ஒட்டிய ஆடை அணிவகுப்பு அல்ல. சாட்சாத் நம்ம ஊர் சேலையை வைத்து பேண்ட், டிசர்ட், ஜீன்ஸ், சுடிதார் இப்படி அணிந்து கொண்டு அத்துடன் சேலையை எப்படி அணியலாம் என்பது குறித்து ஜகஜ்ஜாலம் காட்டிய ஃபேஷன் பாரேடு என்றால் நம்ப முடிகிறதா?

கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முதுகலை மாணவிகள்தான் இப்படியொரு சிறந்த அணிவகுப்பை நடத்தி அசத்தினார்கள். பக்கத்தில் உள்ள பொதுமக்களும், முதியோர் இல்ல வாசிகளுமே இதில் பார்வையாளர்கள். வித்தியாசமான இந்த நிகழ்ச்சியில் வந்த ஒவ்வொரு மாணவியும் ஒவ்வொரு விதமாக ஆடை அணிந்து சேலை கட்டி அசத்தியிருந்தார்கள். கிட்டத்தட்ட 60 மாணவிகள், அறுபது விதமான மாடர்ன் டிரஸ் வித் சேலை காம்பினேஷனில் ஜொலித்தார்கள்.

‘‘நான் இப்ப வெஸ்டர்ன் ஸ்டைல்ல சேலை கட்டியிருக்கேன். ‘இப்ப சேலைகளுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்கறதில்லை. அதை எல்லோரும் கட்டற மாதிரி மாறுபட்ட வெஸ் டர்ன் ஸ்டைல்ல கொண்டு வரணும்... அதுக்குதான் இப்படி ஒரு முயற்சி’னு எங்க மேடம் சொன்னாங்க. எங்களுக்கும் பிடிச்சிருந்தது. இதுவரைக்கும் நான் அதிகமா சேலை கட்டியதில்லை. இப்ப இந்த சேலை ஃபேஷன் ஷோ மூலம் அடிக்கடி சேலை கட்டிக்கலாம்னு தோணுது..!’’ கண்களைச் சிமிட்டுகிறார் ரோஷிணி.

ஆனால், ரேவதி சற்றே மாறுபட்டார், ‘‘இதுவரைக்கும் சேலை கட்டினதேயில்லை. இதுதான் முதல் முறை. இது ஃபிராக் மாடல் சேலை. நான் பொதுவாகவே ஃபிராக் போடுவேன். அதுதான் ரொம்பப் பிடிக்கும். மேம்கிட்ட சொன்னேன். அதனால் என்னன்னு சொல்லி ஃபிராக்லயே சேலை எப்படிக் கட்றதுன்னு சொல்லிக் கொடுத்து கட்டவும் வச்சுட்டார்!’’ என்று கண்களை விரித்து மகிழ்ச்சி காட்டினார்.

அடுத்து அனுப்ரியா பெரிய லெக்சரே கொடுத்தார். ‘‘சேலை கட்டியிருக்கேன். ஆனா, ரெகுலரா கட்டினதில்லை. எனக்கு மாடலிங்ல ரொம்ப இன்ட்ரஸ்ட். சேலையே வித்தியாசமாக கட்ட முடியுமான்னு யோசிப்போம். அதைத்தான் இப்ப செஞ்சிருக்கோம். இந்த தலைமுறையில் ஜீன்ஸ், டி சர்ட்தான் ஃபேமஸா இருக்கு.

அதனால ஜீன்ஸ், டி சர்ட் வித் சேலைன்னு நான் முயற்சி பண்ணினேன். இதுவும் நல்லா இருக்கு. டிவி, சோஷியல் மீடியாவில் எல்லாம் இண்டோ வெஸ்டர்ன் ஃபேஷன் ஷோ நிறைய வருது. ஆனா, அதுல சேலை பயன்படுத்தறதில்லை. முதன் முறையாக நாங்க பயன்படுத்தியிருக்கோம். அது எங்களுக்குப் பெருமையாவும் இருக்கு. இதுக்கு முன்னாடி அவ்வளவா சேலை பிடிக்காது. இப்ப டிஃபரன்ட்டா ட்ரை பண்ணினதுல ரொம்பவுமே சேலை பிடிச்சுப் போச்சு!’’  

அடுத்து நம்மிடம் பேசியவர் பவித்ரா: ‘‘சேலை எனக்கு ட்ரடிஷனலாவே கட்ட ரொம்பப் பிடிக்கும். இப்ப இது ஒரு புது எக்ஸ்பீரியன்ஸாகஇருக்கு. இதுவரைக்கும் சேலையை ட்ரடிஷனலாகவே பார்த்துட்டிருந்தோம். இப்ப இப்படியும், எப்படியும் பயன்படுத்தலாம்ன்னு எல்லோருக்கும் காட்டியிருக்கோம். இப்படி சேலைய வித்தியாசமாக கட்ட ஏற்கனவே டிபார்ட்மெண்ட்ல சொல்லிட்டாங்க. நாங்களா யோசிச்சு நேத்துதான் இப்படி கட்ட முடிவு செஞ்சோம். ஆளாளுக்கு வந்த ஐடியா இது. மேடம்க்கு ரொம்பவுமே பிடிச்சுப் போச்சு!’’ என்றார்.

பவித்ரா பாதி பேசிக் கொண்டிருக்கும்போதே இன்னொரு மாணவி பெயர் சொல்லாமலே குறுக்கிட்டு பேச ஆரம்பித்தார்...‘‘நான் எம்.ஏ இங்கிலீஷ். எங்க  மேம் டாக்டர் ஜெயப்ரியாதான் இதை என்கரேஜ் பண்ணினாங்க. பொதுவாகவே எங்களுக்கு சேரீஸ் சூட்டபிள் ஆகாது. இப்ப இருக்கிற கல்ச்சர்ல புடவையா என்று முகஞ்சுளிப்பதுதான் நடக்கும். நான் கூட அப்படித்தான். ஆனா, எங்க மேம் வந்து எனக்கு இந்த சேரியைக் கட்டி டிராப் பண்ணி விடும்போது நானே ஃபீல் பண்ணினேன் ஐ லுக் குட்ன்னு.

தவிர நம்ம தமிழ்நாட்டோட பாரம்பர்ய சின்னம் சேலை. அதைக்கட்டுவதை பெருமையா நினைக்கணும். முன்னெடுக்கணும்!’’ என்று நீண்டதொரு உரையை நிகழ்த்திவிட்டு, நாம் பெயர் கேட்கும் முன்னரே காணாமல் போனார். ஏசுலின்பிரின்டி ரொம்ப நிதானமாகப் பேசினார்: ‘‘எம்.ஏ இங்கிலீஷ் படிக்கிறேன். நான் திருமணமானவள். இப்ப பிரக்னன்ட்டா இருக்கேன். ஆனாலும் எனக்கு சேலை ரொம்பப் பிடிக்கும். வீட்ல இப்படி ஃபேஷன் பரேடுல கலந்துக்கறதை அனுமதிப்பாங்களான்னு தெரியலை. மேம்தான் எனக்கு ஏற்றமாதிரி இப்படி சேலையை கட்டி விட்டாங்க. அவங்களுக்குத்தான் முதல்ல தேங்க் பண்ணணும்!’’

ஷானிகாவும், சிநேகாவும் முற்றிலும் தமிழ் தெரியாத மலையாளப் பெண்கள். தத்தித் தத்தி தமிழும் மலையாளமும் கலந்து பேசினார் ஷானிகா. ‘‘நானும் எம்.ஏ இங்கிலீஷ். இது மோகினி ஆட்டத்துக்குரிய சேலை ஃபேஷன். இதுவரைக்கும் நான் கட்டினதில்லை.

மேடம்தான் எங்க கலாசாரத்திற்கு ஏற்ற மாதிரி கட்டி விட்டாங்க...’’சிநேகாவோ ஒவ்வொரு வார்த்தைக்கும் சிரிப்பு, பூரிப்பு, வெட்கம், கூச்சம் என சதிராடினார். ‘‘நான் கட்டியிருப்பதை நார்மலா கேரளாவில் பாவாடைன்னு சொல்லுவாங்க!’’ என்று ஆரம்பித்ததுமே அநியாயத்திற்கு கூச்சப்பட்டார்.

தனக்குள் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு தொடர்ந்தார்: ‘‘கேரளத்தில் இப்ப எல்லாம் முந்தி மாதிரி முண்டு, சேலை எல்லாம் கட்டறது பெண்களிடம் குறைஞ்சு போச்சு. சுடிதார், ஜீன்ஸ், சல்வார்ன்னுதான் எல்லாம் கட்டறாங்க. நான் இப்பத்தான் இதைக் கட்டிப்பார்த்தேன். எனக்கே என் வயசு குறைஞ்சு ஸ்கூல் பொண்ணு மாதிரியான எண்ணம் வந்துடுச்சு!’’
சங்கீதா சேலையை டெக்னிக்கலாகவே பார்க்கிறார்.

ஏனென்றால் அவர் படிப்பது டெக்ஸ்டைல் கிளாத்திங். ‘‘இப்ப இருக்கிற காலகட்டத்தில் யாரும் சேலையை யூஸ் பண்றது இல்ல. திருமண விழாக்கள், பண்டிகைகளுக்கு மட்டும் கட்டும் ஆடையா மாறிட்டிருக்கு. எங்க யுனிவர்சிட்டியில் ட்ரைகலர், ஃபியூஷன் ஸ்டைல்ல எப்படியெல்லாம் இப்ப இருக்கிற டிரெண்டுக்கு மேட்ச்சா சேலை கட்டலாம்... ஃபியூஷனாவும் கட்டலாம்ன்னு சொல்லித் தர்றாங்க. இப்ப இருக்கிற பெண்கள் சேலை ஃபியூஷனையே ரொம்ப விரும்பறாங்க!’’

அடுத்து வந்த கிருத்திகாவும் டெக்ஸ்டைல் கிளாத்திங் மாணவிதான். ‘‘ சேலைன்னா சேலையாகவே கட்டணும்ன்னு அவசியமில்லை. ஷர்ட் வேணுமா? ஷார்ட்ஸ் வேணுமா... எந்த மாதிரி வேணும்ன்னாலும் கட்டிக்கலாம் என்கிற நம்பிக்கையை இந்த ஃபேஷன் பேரேடு எங்களுக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கு. நான் ட்ரை கலர்ல ட்ரை பண்ணியிருக்கேன்!’’ என்றார்.

இன்னும் பலரிடம் பேசிவிட்டு, இந்த ஃபேஷன் பேரேடை முன்னின்று நடத்திய அன்னைத் தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மைய மனையியல் துறைத் தலைவர் முனைவர் சா.கவிதாவைச் சந்தித்தோம்.

‘‘எங்களுடைய பல்கலைக்கழகத்தின் தலைமையகம் கொடைக்கானலில் உள்ளது. அதனுடைய கிளைகள் கோவை ஆர்.எஸ்.புரத்திலும், மதுரை கீழகோயில் குடியிலும், சென்னை சைதாப்பேட்டையிலும் இருக்கு. கோவையில் ஐந்து பாடப்பிரிவுகள் முதுகலை மாணவிகளுக்காக உள்ளது. எம்எஸ்சி மேத்தமேடிக்ஸ், எம்எஸ்சி ஃபுட் சயின்ஸ், எம்.ஏ இங்கிலீஷ், எம்காம், எம்.எஸ்சி டெக்ஸ்டைல்ஸ் அண்ட் கிளாத்திங். நம்ம வழக்கமா ஃபேஷன் ஷோ பண்ணுவோம்.

இந்த வருஷம் சேலை என்பது கலாசாரத்திற்கான ஆடை என்கிற வகையில் நம்ம மாநிலங்களில் சேலையை எப்படி எல்லாம் அணிகிறார்கள் என்பதைக் காட்டுவதோடு, அதே சேலையை வேற முறையில் எப்படியெல்லாம் அணியலாம் என்றும் புதிது புதிதான வகையை உருவாக்கியுள்ளோம்.

வேற, வேற ஆடையில் கூட சேலையை அழகா அணியலாம் என்பதுதான் இதன் நோக்கம். இதன் மூலம் சேலை பயன்பாட்டை அதிகரிக்க முடியும். இங்கே மட்டுமல்ல, மேல்நாட்டுக் கலாசாரத்திற்கு ஏற்ற வகையில் இதை அணிவகுக்க வைத்திருக்கிறோம்!’’ என்ற கவிதா, சற்றே மூச்சு விட்டுத் தொடர்ந்தார்.‘‘எத்தனை வகையான சேலைகள்... கைத்தறி சேலைகள் உட்பட நம் இந்திய நாட்டில் உற்பத்தியாகும் அத்தனை வகையான சேலைகளையும் பயன்படுத்தியிருக்கிறோம்.

‘சேலை உடுத்துவது தனி ஒரு கலை. அது கஷ்டமான காரியம்’ என்ற எண்ணம் சமகாலத் தலைமுறை இளம்பெண்களிடம் உள்ளது. அதே சமயம் சேலை கட்டணும் என்கிற ஆசையும் கூடுதலாகி உள்ளது. அப்படியான தலைமுறைக்கு நாம் சேலை இப்படித்தான் கட்டணும் என்றில்லாமல் எப்படி வேண்டுமானாலும் அணியலாம் என்ற நம்பிக்கையை ஊட்டுவதுதான் இந்த சேலை அணிவகுப்பின் நோக்கம். நம்ம ஃபேஷனுக்கு தகுந்த மாதிரி வடிவமைக்க முடியும் என்பதுவும் இதன் அடிப்படை.

இப்ப இதை செஞ்சு முடிச்சவுடனே நம்ம பொண்ணுங்க எல்லோர்கிட்டவும் ‘மிஸ் இப்படியொரு ஐடியா இருக்கறதே தெரியலை. இனி நான் சேலையை எப்படி வேண்டுமானாலும் கட்டிக்குவேன்’னு உற்சாகத்தோட சொல்றதைப் பார்த்தேன். இதைவிட இதற்கான வெற்றி வேறென்ன வேண்டும்!’’ என்கிறார் கவிதா.

கா.சு.வேலாயுதன்