புரட்சி செய்யும் தலைவன்!



‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘நண்பேன்டா’ போன்ற காமெடி படங்களில் நாயகனாக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்த உதயநிதி ஸ்டாலின் மெல்ல ‘மனிதன்’, ‘கண்ணே கலைமானே’, ‘சைக்கோ’, ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற அழுத்தமான படங்களில் சீரியஸ் வேடம் ஏற்று சிந்திக்க வைக்கும் சிறந்த நடிகராக மாறினார்.
அந்த ரகத்தில் இவர் நாயகனாக நடித்து வெளிவரவுள்ளது ‘கலகத் தலைவன்’. இதன் இயக்குநர் மகிழ்திருமேனி. ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’, ‘தடம்’ போன்ற படைப்புகள் வழியாக தனக்கான அடையாளத்தைப் பதித்தவர்.

‘கலகத் தலைவன்’ என்ற தலைப்பை வில்லங்கம் என்று சொல்வதா, குதர்க்கம் என்று சொல்வதா..?

இரண்டுமல்ல. வீரம் செறிந்த தலைமைப் பண்பு கொண்ட ஒரு தலைப்பு. கலகம் என்ற வார்த்தைக்கு தமிழில் நிறைய பொருள்கள் உண்டு. அதில் ‘போர்’ என்ற அர்த்தம் முக்கியமானது. இன்னொன்று என்ன வென்றால் கிளர்ச்சி அல்லது புரட்சி. நாங்கள் புரட்சியாளர் அல்லது புரட்சித் தலைவன் என்ற கண்ணோட்டத்தில் பயன்படுத்தியுள்ளோம்.  தந்தை பெரியார் தன்னைப்பற்றி குறிப்பிடும்போது ‘நான் ஒரு கலகக்காரன்’ என்று அறிவித்திருக்கிறார்.

‘கலகத் தலைவன்’ பொருளாதாரம் சம்பந்தப்பட்ட கதையா..?

உங்கள் கேள்வி சரி. உங்களுக்கு எப்படி இந்த தகவல் தெரிந்தது என்று யோசிக்கிறேன். இது நேரடி அரசியல் படம் கிடையாது. இது ஆக்‌ஷன் த்ரில்லர். சமுதாயத்தில் பல விஷயங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. பணம், மொழி, சாதி, பதவி, அரசியல், பொருளாதாரம் என்று பல கூறுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இன்று நாம் சரியான புரிதலில் இல்லையென்றாலும் எந்த ஒரு கதையை எடுத்துக்கொண்டாலும் அரசியல், சமூகவியல், பொருளியல் என்று அதன் பின்புலம் தானாக மனதில் பதிந்துவிடும். அந்தமாதிரி இதில் மறைமுக அரசியல் இருக்கலாமே தவிர நேரடி அரசியல் கிடையாது.

கதைக்களம் பைனான்ஸை பின்னணியாகக் கொண்டது. படத்தில் சொல்லப்படும் கதை நம் வாழ்க்கையில் தொடர்புடையதாக இருக்கும். இந்தமாதிரியான நிகழ்வுகளை சிலர் உணர்ந்திருப்பார்கள். உணராதவர்களும் இருப்பார்கள். ஆனால், நம் எல்லோருடைய வாழ்க்கையோடும் தொடர்புடைய கதை.

கதைக்காக உதயநிதியா... உதயநிதிக்காக கதையா?

கதைக்காக உதயநிதி. இந்தப் படம் ஆரம்பித்த விதத்தை விரிவாகச் சொன்னால்தான் கதைக்குள் உதயநிதி சார் எப்படி வந்தார்னு புரியும். ‘தடம்’ கதையை முதன்முதலில் உதயநிதியிடம்தான் சொன்னேன். அவருக்கு அந்த ஸ்கிரிப்ட் பிடித்திருந்தது. என்னுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு வலுவாக இருந்தது. அந்த சமயத்தில் சில காரணங்களால் அது சாத்தியப்படவில்லை.

அருண் விஜய் என்னுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் நண்பர். மீண்டும் நாம் எப்போது சேர்ந்து படம் பண்ணுவோம் என்ற கேள்வி அவரிடம் அடிக்கடி வரும். அவரிடம் ‘தடம்’ கதையைச் சொல்லி அதில் ‘சண்டை இருக்காது’ என்றேன். ஆக்‌ஷன் ஹீரோவான அவருக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தாலும் என் மீது இருந்த நம்பிக்கையில் ஓகே சொன்னார்.

தயாரிப்பாளர் முடிவாகி டேக் ஆஃப் ஆகும் சமயத்தில் உதயநிதி சாரிடமிருந்து ‘‘தடம்’ பண்ணலாம். ஆபீஸுக்கு வந்து அட்வான்ஸ் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று அழைப்பு வருகிறது. 

‘சாரி சார்... வேறு கம்பெனிக்கு வாக்கு கொடுத்துவிட்டேன்’ என்று சொன்னதும் என் சூழ்நிலையைப் புரிந்து ‘நாம் நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணலாம்’ என்று சொல்லிவிட்டார்.
பிறகு ‘தடம்’ வெளியானது. மீண்டும் உதய் சாரிடமிருந்து ஆபீஸ் வந்து அட்வான்ஸ்  வாங்கிக்கொள்ளுங்கள் என்று அழைப்பு வந்தது. ‘கலகத் தலைவன்’ எனது நீண்ட நாள் திட்டம். அதற்கு உதயநிதி பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அப்படித்தான் உதயநிதி சார் கதைக்குள் வந்தார்.

என்ன சொல்கிறார் உங்கள் ஹீரோ உதயநிதி?

இந்தப் படத்தோட நான்கு வருடம் டிராவல் பண்ணுகிறேன். முதல் நாள் பார்த்தபோது எப்படி பழகினாரோ அதே மாதிரிதான் இன்றளவும் அவருடைய பழக்க வழக்கம் இருக்கிறது. நடுவில் தேர்தலில் ஜெயித்து சட்டமன்ற உறுப்பினராகவும் மாறிவிட்டார். ஆனால், அவருடைய குணத்திலோ, பழகும் விதத்திலோ எந்த மாறுபாட்டையும் என்னால் பார்க்க முடியவில்லை.
நடிகர் உதயநிதி இயக்குநரின் ஆர்ட்டிஸ்ட். இயக்குநர் என்ன சொல்கிறாரோ, இயக்குநர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதை அப்படியே செய்யக்கூடியவர். உதாரணத்துக்கு ஒரு நிகழ்வை குறிப்பிடுகிறேன்.

ஒரு நாள் ஒரு உயர்ந்த கட்டடத்தின் மொட்டை மாடியில் நல்ல வெயிலில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது ஒளிப்பதிவாளர், நண்பர் பாலசுப்ரமணியெம் வந்தார். அது டே, நைட் படப்பிடிப்பு. பாலு சிறிது நேரம் இருந்துவிட்டு புறப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு பாலுவிடமிருந்து ஃபோன் வந்தது. ‘மகிழ்... ஒரு நாள்  உதய் சாருடன் தொகுதிக்கு போனேன். அங்கு கூட்டம் முண்டியடிக்கிறது. ஆனால், நீங்கள் அவரை கடும் வெயிலில் உட்கார வைத்து படமாக்கிக்கொண்டிருந்தீர்கள். இந்தக் காட்சியை என்னால் நம்பமுடியவில்லை’ என்றார்.

மக்கள் செல்வாக்கு மிக்க உதய் சார் படப்பிடிப்புக்கு வரும்போது அதையெல்லாம் வெளிப்படுத்தாமல் இயல்பாக வந்து கதைக்கு என்ன தேவையோ அதைக் கொடுப்பார். அவருடைய அந்த சுபாவம் எப்போதும் என் மனதில் இருக்கும். சினிமாவில் நீங்கள் 12 ஆண்டுகாலமாக இயங்கி வருகிறீர்கள்! உதயநிதியின் நடிப்பில் மாற்றங்கள், முதிர்ச்சி தெரிகிறதா..?

நாலைந்து வருடங்களுக்கு முன் உதயநிதி சார் காமெடி கதைகள் நிறைய பண்ணினார். நடிகராக அவர் எப்போதோ முதிர்ச்சி அடைந்திருந்தாலும் ஏன் இன்னும் அந்த டிராக்கை மாற்றவில்லை... மாற்றினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நானும் அவரிடம் அதைச் சொல்லியிருக்கிறேன்.

இந்தப் படத்தை பண்ணும்போது அவருடைய புரொஃபைல் மாறவேண்டும் என்ற நோக்கத்தில் பண்ணினேன். ‘தீவிர கதாபாத்திரங்கள் உங்களுக்கு பொருந்தும். ரசிகர்கள் மத்தியில்
உங்களுக்கு என்று ஒரு பிம்பம் இருக்கிறது. அதை பிரதிபலிக்கும்விதமாகத்தான் இனி வரும் படங்கள் இருக்கணும்’ என்று சொன்னேன். அதற்கு ஏற்றமாதிரி திரு என்ற கேரக்டருக்கு
அழகாகப் பொருந்தியிருக்கிறார்.

ஹீரோயின் சிரித்த முகமா இருக்கிறார்களே?

நிதி அகர்வால். தெலுங்கில் பெரிய நடிகை. தமிழில் ‘பூமி’, ‘ஈஸ்வரன்’பண்ணியவர். அவருக்கு கவர்ச்சி லேபிள் இருக்கிறது. ஆனால், இதில் பெர்ஃபார்ம் பண்ணக்கூடிய கேரக்டர். அவருடைய கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். கலையரசன், ஆரவ் முக்கியமான கேரக்டரில் வருகிறார்கள்.

மியூசிக் டைரக்டர் மாறியது ஏன்?

மியூசிக் டைரக்டர் மாறவில்லை. அரோல் கரோலிதான் மியூசிக். அவருடைய கரியரில் மிகவும் பேசக்கூடிய படமாக... பாடல்கள் இளமை ததும்பும் விதமாக வந்துள்ளன.
பின்னணி இசை ஸ்ரீகாந்த் தேவா. அனுபவம், திறமை  உள்ளவர். அவருடைய பின்னணி படத்துக்கு வலு சேர்க்கும். ஒளிப்பதிவு தில்ராஜ்.

என்னுடைய பத்தாண்டு கால நண்பர். எம்.எஸ்.பிரபு தயாரிப்பு. ‘தடையறத் தாக்க’ பண்ணவேண்டியவர். சின்சியர் கேமராமேன். ஏற்கனவே இரண்டு மூன்று படங்கள் பண்ணியுள்ளார். என்னுடைய எண்ணத்தை நிறைவேற்ற அதிகம் மெனக்கெடுவார். ஸ்ரீகாந்த், எடிட்டர். என்னுடைய படங்களில் ரெகுலராக ஒர்க் பண்ணுபவர். ஆர்ட் டைரக்‌ஷன் ராமலிங்கம்.  

பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் கதை விவாதத்தில் கலந்துகொண்டதாக ஒரு செய்தி வந்ததே?

சந்திப்பு நடந்தது உண்மை. சில கேள்விகளை முன்வைத்தேன். அது ஒரு பொதுவான சந்திப்பு. படத்தில் வரும் தரவுகள் நானே சேகரித்தவை. சார் சொல்லி எந்த தகவலும் இதில் வைக்கவில்லை. எங்கள் சந்திப்பு ஒரு நட்பு ரீதியான சந்திப்பு மட்டுமே.

‘கலகத் தலைவன்’ படம் பார்க்க ஒரு காரணம் சொல்லுங்களேன்?

இரண்டேகால் மணி நேரப் படம். ஆடியன்ஸுக்கு சலிப்பு வரக்கூடாது. தியேட்டரை விட்டு செல்லும்போது ஏதோ ஒன்றை எடுத்துச் செல்லவேண்டும். அப்படி ஒரு விஷயம் இதில் இருக்கிறது. கமர்ஷியலில் இது அடுத்த லெவல்.   

12 வருட பயணத்தில் 5 படங்கள் இயக்கியுள்ளீர்கள். இந்த எண்ணிக்கை போதுமா?

அதிகமாக இருந்திருக்க வேண்டும். அதுதான் நியாயம். என்னுடைய நலம் விரும்பிகள், நண்பர்கள் எல்லோரும் சொல்வது ‘கொஞ்சம் சீக்கிரமாக படம் பண்ணு’ என்பதுதான். தாமதம் புறக் காரணங்களால் ஏற்பட்டுள்ளது.

‘தடம்’ பண்ணியபோது சினிமா ஸ்டிரைக் நடந்தது. சமீபத்தில் இரண்டு லாக்டவுன் வந்தது. என் சைடிலிருந்து எந்த தாமதமும் நடந்ததில்லை.  என்னுடைய கதையை நானே எழுதுகிறேன். அதற்கு கொஞ்சம் டைம் எடுத்துக்கொள்வேன். மற்றபடி தயாரிப்பாளரிடம் உறுதியளிக்கும் கால்ஷீட்டை மீறி கூடுதலாக ஒரு நாள் கூட படப்பிடிப்பு நடத்தியதில்லை.

எஸ்.ராஜா