225 ஆண்டுக்கால அதிசயம்!



மனநலக் காப்பகத்தில் மலர்ந்த காதலும், அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த திருமணமும்...

மகேந்திரன், தீபா காதல் திருமணம்தான் சமீபத்திய டாக் ஆஃப் த நியூஸ். காரணம், சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு வந்த இவர்கள் அங்கே சந்தித்து, காதலாகி திருமணம் செய்து தங்கள் வாழ்க்கைப் பயணத்தைச் சிறப்பாகத் தொடங்கியிருப்பதுதான்.
சென்னையைச் சேர்ந்தவர் மகேந்திரன். பி.காம், எம்பிஏ, எம்.ஃபில் பட்டதாரி. தாய், தந்தையை இழந்த இவர் மனஅழுத்தப் பிரச்னையால் அவதிப்பட்டார். இதனால், கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் சிகிச்சைக்காகச் சென்றார். சீக்கிரமே குணமடைந்தவர், மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தில் மனநல காப்பகத்திலேயே பராமரிப்பாளராக வேலைக்குச் சேர்ந்தார்.

இதேபோல வேலூரைச் சேர்ந்தவர் தீபா. எம்.ஏ, பி.எட் படித்தவர். தந்தையின் இழப்பால் மனஅழுத்தத்திற்கு ஆளாகி, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் வந்தார். அங்கே பணியிலிருந்த மகேந்திரன் தீபாவுக்கு உதவியிருக்கிறார். அவருக்கு தீபாவின் மீது தனிப்பாசம் ஏற்பட்டிருக்கிறது. பிறகு, அவருக்குள் காதல் மலர்ந்திருக்கிறது. அதை தீபாவிடம் தெரிவித்திருக்கிறார்.

மகேந்திரனின் உதவியால் நெகிழ்ந்துபோன தீபாவும் அவரின் காதலை ஏற்றுக்கொண்டார். பிறகென்ன? இருமனமும் ஒன்றிணைந்தன. இருவரும் மனநலக் காப்பகத்தின் இயக்குனர் டாக்டர் பூர்ணசந்திரிகாவிடமும், மற்ற மருத்துவர்களிடமும் தெரிவிக்க, திருமண பந்தத்தில் அவர்களை இணைத்து வைத்தனர். மனநலக் காப்பகத்தில் உள்ள கோயிலிலேயே மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாலியை எடுத்துக் கொடுக்க, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் முன்னிலையில் திருமணம் இனிதே நடந்தேறியது.

இந்நிலையில் காப்பக இயக்குநர் டாக்டர் பூர்ணசந்திரிகாவிடம் பேசினோம். ‘‘இங்க ரெண்டு ஆண்டுகளுக்கு முன்னாடி இருவரும் சிகிச்சைக்கு வந்தாங்க. பூரணமாக குணமடைஞ்சிட்டாங்க.

சுமார் 225 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் காப்பகத்தில், சிகிச்சைக்கு வந்து முதல்முறையாக திருமணம் செய்துகொண்ட ஜோடி இவங்கதான். அவங்க முடிவெடுத்திட்டு வந்து எங்ககிட்ட சொன்னதும் ஆச்சரியமாக இருந்தது.

அப்புறம், அவங்ககிட்ட பேசிப் பார்த்தோம். அவங்க பதில் ரொம்ப திருப்தியாக இருந்தது. இதன்பிறகே திருமணத்திற்குத் தயார் செய்தோம். எங்க காப்பகத்தில் உள்ள ஊழியர்களுக்கு இந்தச் செய்தி கிடைச்சதும் அனைவரும் அவங்க வீட்டுத் திருமணமாக நினைத்து வேலைகள் செய்தாங்க. இந்தத் திருமணத்தைப் பத்தி மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர்கிட்ட சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. நிச்சயம் வர்றேன்னு சொன்னதுடன் வந்து நடத்தியும் தந்தாங்க.

திருமணத்துல பேசினப்ப கூட, ‘நரிக்குறவர் திருமணத்தில் பங்கேற்கும் வாய்ப்பிற்கு அடுத்தபடியாக என் மனத்திற்கு நெருக்கமான திருமணமாக இது அமைந்திருக்கு’னு நெகிழ்வா குறிப்பிட்டாங்க. அத்துடன் அவங்க ரெண்டு பேருக்கும் முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் ஒப்பந்தப் பணியாளராக வேலை தந்திருக்காங்க. ஒருவேளை பின்னாடி தீபாவுக்கு ஆசிரியர் பணி கிடைச்சால் அதுக்கு அவங்க போகலாம். இல்லனா இங்கே பணியாற்றலாம். இருவரும் நல்லாயிருப்பாங்க...’’ என மகிழ்வாகச் சொல்கிறார் டாக்டர் பூர்ணசந்திரிகா.

பேராச்சி கண்ணன்