மழைக்கால நோய்கள்... தடுக்க என்ன செய்ய வேண்டும்?



தமிழ்நாட்டின் முக்கிய மழைக்காலமான வடகிழக்குப் பருவமழையை எதிர்பார்த்து அரசாங்கம் முதல் சாமானிய மக்கள் வரை இந்த மழைக் காலத்தை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். பஞ்சம் போக்கும் மழையை மகிழ்வுடன் வரவேற்பது நம் பழக்கம். அதேநேரம் மழைக்காலத்தில் பரவும் நோய்களுக்கும் பஞ்சம் இருக்காது என்பதுதான் பலரின் பயத்திற்குக் காரணம். மழைக்காலத்தின் முக்கிய நோய்களையும் அவற்றை தடுக்கும் முறைகளையும் இக்கட்டுரையில் காணலாம்.
 
மழைக்காலத்தில் பரவும் நோய்களைப் பொதுவாக மூன்று அணிகளாகப் பிரிக்கலாம். சுவாசப் பாதை நோய்கள், கொசு போன்ற கடத்திகளால் பரவும் நோய்கள், நீரினால்-உணவினால் பரவும் நோய்கள்.

சுவாசப்பாதை நோய்கள்

 இந்த அணிக்கு கேப்டனாக இந்த ஆண்டு பொறுப்பேற்று இருப்பவர் திருவாளர் ஃப்ளூ. சென்ற வருடம் ஆதிக்கம் செலுத்திய கோவிட் அவுட் ஆஃப் ஃபார்மில் இருப்பதால், இப்போது முழுக்க முழுக்க ஃப்ளூ காய்ச்சலின் ஆக்கிரமிப்புதான்.

H1N1 தொடங்கி பலவகை இன்ஃப்ளூயன்சா வைரஸ்கள் இப்போது பரவிக் கொண்டுள்ளன. இந்த ஃப்ளூ வைரஸ்களின் சிறப்பு அம்சமே வருடந்தோறும் தனது ஜீன்களை பட்டி - டிங்கரிங் செய்து மாற்றிக்கொள்வதுதான். இதனால்தான் அனைத்து வருட குளிர்காலத்திலும் மனித நோய் எதிர்ப்புத்திறனை மீறிப் பரவி தாக்கத்தை உண்டாக்கமுடிகிறது. இதே காரணத்தால்தான் வருடந்தோறும் ஃப்ளூ தடுப்பூசி எடுக்க வேண்டியதும் அவசியமாகிறது.

காய்ச்சல், மூக்கடைப்பு, சளி, தொண்டைவலி, உடல்வலி, இருமல், அசதி போன்றவை ஃப்ளூ காய்ச்சலின் அறிகுறிகள். கோவிட் பரவலின்போது பின்பற்றிய முகக்கவசம், தனிமனித இடைவெளி, சானிடைசர் போன்றவைதான் ஃப்ளூ காய்ச்சலுக்கும் தடுப்புமுறைகள். சிறுகுழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானோர், சர்க்கரை போன்ற இணை நோய் உடையோர்கள், கூட்டமான இடங்களில் பணிபுரிபவர்கள் போன்ற ‘அதிக ரிஸ்க் நபர்கள்’ ஃப்ளூ தடுப்பூசி எடுத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களும் எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை.

ஃப்ளூ காய்ச்சலின் அறி

குறிகள் தென்பட்டால் பிறருக்கு பரவா வண்ணம் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். முகக்கவசமும் அணியலாம். நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஓய்வு அவசியம். இவை வைரஸ்களினால் ஏற்படும் நோய்கள் என்பதால் பெரும்பாலும் ஆண்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படுவதில்லை. அமாக்ஸிசிலின், அசித்ரோமைசின் போன்ற மருந்துகளின் பெயர்கள் நமக்குத் தெரியும் என்பதால் அவற்றை ஃப்ளூ காய்ச்சலுக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை.

சுய மருத்துவத்தைத் தவிர்ப்பது நல்லது. பெரும்பாலும் ஆபத்தில்லாமல் சரியாகக் கூடிய நோய் என்றாலும் மூச்சு விடுவதில் சிரமம், குழப்பமான மனநிலை, ரத்த அழுத்தம் குறைதல், தலைசுற்றல், நினைவிழத்தல் போன்ற அபாய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும். ஃப்ளூ தவிர கொரோனா வைரஸின் கோவிட் நோயும் இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது. அதுவும் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. இவை இல்லாமல் வைரஸினால் பரவும் சாதாரண சளி போன்ற பிற நோய்களும் வரலாம்.

கொசுக்கள் / கடத்திகளால் பரவும் நோய்கள்

நீண்டகாலமாக இந்த அணிக்கு கேப்டனாக இருந்து வருபவர் டெங்கு. ஏடிஸ் எஜிப்டி எனப்படும் கொசுக்களின் மூலமாகப் பரவும் டெங்கு வைரஸ் இந்நோயை உண்டாக்குகிறது.
இந்த வகை ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் தேங்கி நிற்கும் நல்ல தண்ணீரில் பல்கிப் பெருகுபவை, பகலில் கடிக்கும் தன்மை உடையவை. கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் டெங்குவில் ஏற்படும். சிலசமயம் ரத்தத் தட்டணுக்களைக் குறைத்து இறப்பையும் உண்டாக்கக் கூடியது டெங்கு நோய்.

டெங்கு வைரஸினால் தாக்கப்பட்ட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்கும் போது இந்நோய் கொசுக்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. டெங்கு நோயை தடுப்பதற்கென தடுப்பூசிகள் புழக்கத்தில் இல்லாத நிலையில், கொசுக்கள் கடிப்பதை தவிர்ப்பதுதான் நம்முன்னே இருக்கும் ஒரே வழி. கொசுவலைகளைப் பயன்படுத்துதல், தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுதல், கொசு விரட்டிகள் போன்றவை பலனளிக்கலாம்.  பகலிலும் கொசுக்கடியை அலட்சியப்படுத்தக்கூடாது.

மிக முக்கியமாக குழந்தைகளை கொசுக்கடியில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இவை தவிர மழைக்காலத்தில் சிறு சிறு பூச்சிகளும் படுக்கை அறைக்குள் நுழையலாம். அவை கடிப்பதால் அரிப்பு, தடிப்பு மற்றும் சில பிரச்னைகள் வரலாம். படுக்கச் செல்லும் முன் படுக்கைகளை உதறி பரிசோதித்துச் செல்வது நல்லது.  

நீரினால் / உணவினால் பரவும் நோய்கள்

சாதாரண வைரஸ் வயிற்றுப்போக்கு தொடங்கி டைஃபாய்டு, மஞ்சள் காமாலை, லெப்டோஸ்பைரோசிஸ் போன்ற கடுமையான நோய்கள் வரை மாசுபட்ட நீரின் மூலம் பரவக்கூடியவை.

சமீபத்தில் கேரளாவில் ஷிஜெல்லா எனப்படும் பாக்டீரியத் தொற்று கண்டறியப்பட்டது. மழைநேரங்களில் தேங்கி நிற்கும் மழைத்தண்ணீர் குடிநீருடன் கலப்பதால் கூட இவை ஏற்படலாம். வெளியிடங்களில் சட்னி போன்ற சமைக்காத பொருட்களைத்  தவிர்ப்பது நல்லது.

வீட்டில் இருக்கும் ஆர்.ஓ போன்ற தண்ணீர் சுத்திகரிப்பான்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். கொதிக்க வைத்து ஆறவைத்த குடிநீரைப் பயன்படுத்தலாம். சமையல் பாத்திரங்களைக் கழுவப் பயன்படுத்தப்படும் தண்ணீரும் தூய்மையானதாக இருக்கவேண்டும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். கடுமையான காய்ச்சலும் சேர்ந்து வந்தால் தாமதமின்றி மருத்துவரைக் காண வேண்டும்.

இவை தவிர இளைப்பு, ஆஸ்த்துமா நோய் உடையவர்கள் சற்று கவனத்துடன் மழைக்காலத்தை அணுக வேண்டும். குளிர் வெப்பநிலை இளைப்பை உண்டாக்கலாம். எனவே அவற்றிற்கு உரிய மருந்துகளை கைவசம் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற இணை நோய் உடையவர்கள் அன்றாடம் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வதில் மழையினால் தடங்கல் நேரலாம். அவற்றையும் கவனத்தில் கொண்டு விழிப்புடன் நடந்தால் நோய்களின் பாதிப்பின்றி இந்த மழைக்காலத்தை எளிதில் கடக்கலாம்.

டாக்டர் சென்பாலன்