சிறுகதை - நேசக் கடல்



ஒன்பது மணிக்கு முகூர்த்தம். எட்டு மணிக்கே கோவிலுக்கு வந்தாகி விட்டது. இன்னும் மாப்பிள்ளை பாலு வரவில்லை.ஒரு காரில் அகிலா, அம்மா, அண்ணியும் வர; பின்னாடி ஒரு வேனில் அண்ணா மற்றவர்களை அழைத்து வருவதாக ஏற்பாடு. முகூர்த்தம் முடிந்து புது வீட்டில் அகிலா பால் காய்ச்சியதும் அம்மா வீட்டில் மதியம் விருந்து. வீடு மாப்பிள்ளை பாலு புதிதாக வாங்கியது. திருமணம் நிச்சயம் ஆனதுமே வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுத்து, புக் செய்து விட்டான்.

போன வாரம் பேசி, முடிவு செய்து இதோ இன்று திருமணம். ஆனால், பாலு இரண்டு வருடங்களாகப் பழக்கம்தான். ஏற்கனவே அகிலாவை மணக்க விருப்பம் தெரிவித்தும், அகிலாதான் சரியான முடிவு எடுக்காமல் இருந்தாள். அவளின் மாமனார்தான் வற்புறுத்தி இந்தக் கல்யாணத்திற்கு அவளைச் சம்மதிக்க வைத்தது.‘மாமனார்? மாமனார் எங்கே? காணவில்லையே?’ அகிலாவினுள் கேள்வி பிறந்தது. “என் மாமனார் எங்கம்மா?”‘‘அவர் கல்யாணத்துக்கு வரலைன்னு சொல்லிட்டார்...”“அப்படிச் சொல்ல மாட்டாரே..?”

“அப்போ நாங்க பொய் சொல்றோமா?” அம்மா சீறினாள்.“அகிலா, இனி சும்மா மாமனார், மாமனார்னு சொல்லாதே. அந்த சொந்தம் முடிஞ்சது. இனி பாலுதான் உனக்கு சகலமும்...” - அண்ணி.“ஆனா, என்னை ஏழு வருஷம் வச்சு காப்பாத்தினது என் மாமனார்தானே?”“அப்போ நாங்க உன்னை தெருவுல விட்டுட்டோமா?”அதுதானே உண்மை. மனசு நினைத்தாலும் அகிலா எதுவும் பேசவில்லை. இந்த ஏழு வருஷம் அவளைக் காப்பாற்றி, படிக்க வைத்து, வேலையும் வாங்கிக் கொடுத்தது அவர்தான். அவர்தான் பாலுவையும் நிச்சயம் செய்தது. அவர் இல்லாமல் தன் கல்யாணமா?

அகிலாவுக்கு மனம் நடுங்கியது. எதோ ஒரு குற்ற உணர்ச்சி. ஒரு வாரமாகவே அவரைப் பார்க்கவில்லை. கல்யாணம் என்று நிச்சயம் ஆனதுமே அம்மா அவளைத் தன்னிடம் அழைத்து வந்து விட்டாள். “கல்யாணம் ஆகப் போறது. நீ என்கிட்டே வந்து ஒரு வாரம் இரு...” என்றாள் அம்மா.“ஆமாம்மா. நீ ஒருவாரம் அவங்களோடு போய் இருந்துட்டு வா...” என்றார் மாமனார்.
இந்த ஒரு வாரத்தில் அவ்வப்போது போனில் பேசுவார். நலம் விசாரிப்பார். ஆனால், கல்யாணத்திற்கு வர மாட்டேன் என்று சொல்லவில்லையே? மனம் குழம்பியது.

இந்த ஏழு வருஷம் அவளுக்காகவே வாழ்ந்தவர் மாமனார். அவரின் மகன் ரவியைத் திருமணம் செய்து வந்த போது அகம் பூரிக்க, ‘நீ என் மகம்மா’ என்றவர் அதன்படியே நடந்தார்.
நான்கே மாதத்தில் ஒரு விபத்தில் ரவி இறந்து விட, மாமனார், ‘அகிலா எங்ககிட்ட இருக்கட்டும். அவ வாழ்வில் ஒரு முன்னேற்றம் வேணும்’ என்றார். அண்ணாவும் அவளைத் தன்னிடம் ஏற்கத் தயங்கினான். அண்ணிக்கும்  விருப்பமில்லை. அண்ணாவை எதிர்த்து அகிலாவின் பொறுப்பை ஏற்க அம்மா, அப்பாவுக்கு விருப்பமில்லை. நல்லது என்று ஒப்புக் கொண்டார்கள்.

கல்யாணத்தின்போது அகிலா கல்லூரி இறுதியாண்டு. அப்பாவுக்கு சாதாரண தனியார் கம்பெனி வேலைதான். சம்பளம் கம்மி. பெண்ணைத் தட்டி விட்டால் போதும் என்று இருக்கும்போதுதான், பாட்டிக்கு தூரத்து உறவு என்று ரவி வந்தான். பிஇ முடித்து வேலைக்குச் சேர்ந்திருந்த நேரம். ஒரே பையன்.மாமனாருக்கு ஸ்வீட் போடும் வேலை. மாலை நேரம் வீட்டு வாசலில் இனிப்பு, காரம் கடை போடுவார். எட்டு மணிக்குள் எல்லாம் விற்றுத் தீர்ந்து விடும். அடுப்பில் வெந்துதான் மகனைப் படிக்க வைத்தார். அவரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவளின் ஆசையை நிறைவேற்ற திடீரென்று நிச்சயம் ஆனது திருமணம்.

அழகான வாழ்க்கைதான். அன்பான வீடு. “எனக்காக நெருப்பில் வெந்தவர் எங்கப்பா. அவரை நல்லா வச்சுக்கணும். சொந்த வீட்டில் அவரை வச்சுப் பாக்கணும்...” என்று விரும்பினான் ரவி.
ஆனால், காலம் வேறு மாதிரி கணக்கு போட்டது. ஒரு விபத்தில் ரவி இறந்து போக தன் துக்கத்தை மறந்து அவளை அரவணைத்துக் கொண்டது ரவியின் வீடு.அகிலாவின் பிறந்த வீடும்  பிரச்னை முடிந்தது என்று ஒதுங்கி விட, மாமனார் மீண்டும் அடுப்பை மூட்டினார். பகலில் சாப்பாடு. மாலை ஸ்வீட் கடை. அகிலா கல்லூரிப் படிப்பு முடித்தாள். வங்கித் தேர்வு எழுதி அதில் செலக்ட் ஆனதும் பிறந்த வீடு அகிலாவை எங்களுடன் அழைத்துப் போகிறோம் என்றது.

“உன் இஷ்டம்மா...” மாமனார்.“நான் இங்கியே இருக்கேன் மாமா...”பிறந்த வீடு திட்டியது, ஊரைக் கூட்டி நியாயம் கேட்டது. அகிலா பிடிவாதமாக மாமனார் வீட்டில்தான் இருப்பேன் என்று கூறி விட்டாள். உங்களுக்குத் தேவை பணம் என்று சம்பளத்தில் ஒரு பகுதியைத் தருவதாகக் கூறியதும் சற்று அமைதியானது அவள் வீடு.பாலு உடன் வேலை செய்தவன். இரண்டு வருடமாக நல்ல நண்பன்.

அவளுடன் கண்ணியமாகப் பழகினான். தன் விருப்பத்தை அவளிடம் கூறிய போது அகிலா மறுத்து விட்டாள்.மாமனாரை விட்டுப் பிரிய மனமில்லை. அவள் வாழ்வில் விளக்கேற்றியவர். சுயமாக நிற்க, தைரியமும், தன்னம்பிக்கையையும் தந்தவர். அகிலா மறுத்ததால் பாலுவும் ஒதுங்கி விட்டான். சென்ற வருடம் மாமியார் இறந்த பின் மாமனார் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்.

“உன் முதுமைக் காலத்துல உனக்குன்னு ஒரு துணை வேணும்மா. நான் எத்தனை காலம்?”  என்று கல்லாய்க் கரைத்தார். பிறந்த வீட்டை அழைத்தார்.
“அவளுக்கு எதுக்கு கல்யாணம். போதும். ரவி என்ன கூடவேயா இருந்தான். நாங்க இருக்கோம்...” என்றது அவள் குடும்பம்.மாமனாருக்கும் மறதி நோய் தொற்றிக் கொள்ள, அவர் அழுதார், கெஞ்சினார். “நீ சந்தோஷமா வாழணும்...” என்று அழுதார்.

மறுமணத்திற்குச் சம்மதித்தாள். பாலுவுக்கு பெற்றோர் இல்லை. மாமா தயவில் படித்து வேலைக்கு வந்தவன். மாமாவும் இப்போது இல்லை. மாமனார்தான் முன் நின்று திருமணத்தைப் பேசி முடிவு செய்தார் போன வாரம். இப்போது எங்கே?“அவரை முதியோர் இல்லத்துல சேர்த்தாச்சு...” - அண்ணி.

அதிர்ந்தாள் அகிலா.“இங்க பாரு. இது உனக்கு மறுமணம். இதை காப்பாத்திக்கப் பாரு. சும்மா மாமனார், ரவியோட அப்பான்னு டயலாக் பேசி கிடைச்ச வாழ்வில் நிம்மதி இழந்து, வாழ்வை இழந்துடாதே. அவன் உதறிட்டுப் போனா என்ன பண்ணுவே? அவன் மனசறிஞ்சு நடந்துக்க...” - அம்மா.கூசிப் போனாள் அகிலா. அழுகை பொங்கி வந்தது. வாழ்க்கை வேண்டும் என்பதற்காக மனதில் ஈரம் இல்லாமல் இருக்க வேண்டுமா? நியாயம், நேர்மை என்பதற்கு அர்த்தம் இல்லையா?‘‘இது பாலுவுக்கும் தெரியும்...” - அப்பா.

“எ... எப்போ...?’’ அதிர்ச்சியுடன் கேட்டாள்.“ரெண்டு நாளைக்கு முன்னாடி. உனக்கு தாலி செஞ்சு வாங்கப் போறப்போ கேட்டார். சொன்னோம்...”
“என்ன சொன்னார்?”“அப்படியா, சரி. நல்ல விஷயம்தான்னு சொன்னார். நான்தான் கொண்டு போய் விட்டேன்...” - அண்ணா.

குப்பென்று நெஞ்சடைத்தது. பாலு, பாலு நீ அவ்வளவுதானா? என்னை விரும்பியது என் வேலை, அழகு இதற்கா? குமுறியது. ஏற்றிவிட்ட ஏணியை உதறிவிட்டு இந்த வாழ்க்கை தேவையா? அல்சீமர் நோய் பாதித்தவரை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு, தான் எப்படி அவனுடன் நிம்மதியாக வாழமுடியும்? மாலையைக் கழற்றி எறிந்துவிட்டு ஓடிவிடலாமா என்று இருந்தது. கண்ணீர் திரண்டது.“மாப்பிள்ளை வந்தாச்சு, மாப்பிள்ளை வந்தாச்சு...” குரல்கள் வேகமாக ஒலித்து அடங்கின.

ஆவேசத்துடன் திரும்பிய அகிலா, “அம்மாடி அகிலா...” என்ற குரலில் நிதானித்தாள்.இ... இது அவளின் மாமனார் குரல்லல்லவா?“மாமா...” என்று அவரிடம் ஓடினாள். பேச முடியாமல் குமுறி அழுதவளின் தலையை மாமனார் வருடிவிட்டார். அவள் முகத்தின் மகிழ்ச்சி, சிலிர்ப்பை ரசித்தபடி பாலு அருகில் வந்தான்.“இப்போ திருப்தியா?”பதில் சொல்ல முடியாமல் தொண்டை அடைத்தது. சிரித்தாள். அழுகையாக வந்தது.

“எதுக்கு அழுகை. நான் உன் மனசை மட்டும் இல்லை, அதுல இருக்கற சகல உணர்வுகளையும் சேர்த்துதான் விரும்பினேன். உன் மனசு எனக்குப் புரியும் அகிலா. காதல்ங்கிறது புரிதல். விஷயம் தெரிஞ்சப்போ, வேதனையா இருந்தது. ஆனா, எதையும் சொல்லாம செய்யணும்...”   
சுற்றிலும் உறவுகள் வாயடைத்துப் போய் நின்றன.

“பேசறதை விட செயல்ல அன்பைக் காண்பிக்கணும். அதுதான் ஆழமானது. இனி மாமா நம்ம கூடதான் இருப்பார். போதுமா?”அகிலா மெல்ல பாலுவை நெருங்கி, அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். கண்ணீருடன் அவன் முகத்தை ஏறிட்டாள்.“ஏதானும் சொல்ல விரும்பறியா?”தலையாட்டினாள்.“என்ன சொல்லு...”“ஐ லவ் யூடா...” என்றாள் அகிலா.

 - ஜி.ஏ.பிரபா