மூன்று நாட்கள் தீபாவளி கொண்டாடிய கிராமம்



ஒரு நாள் பட்டாசு... மறுநாள் தூரி விளையாட்டு...அடுத்த நாள் கறி விருந்து...

ஒரு வழியாக இந்த ஆண்டும் தீபாவளியைக் கொண்டாடி முடித்து விட்டோம். எத்தனை எத்தனை செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த ஆண்டு ஜவுளி முதற்கொண்டு பலகாரம் வரை ஒன்றுக்கு மூன்று மடங்கு விலை. கொரோனாவுக்குப் பிறகு உலகப்பொருளாதாரமே தலைகீழாகி விட்ட பின்பு நம் உள்ளூர் தீபாவளி மட்டும் எப்படி தப்பிக்க முடியும்..? ஒரு தீபாவளிக்கே இப்படி என்றால் ஒரு கிராமம் மொத்தம் மூன்று நாள் தீபாவளி கொண்டாடியிருக்கிறது என்றால் எப்படித்தான் தாங்கியிருக்கும்.
அதுவும் முதல் நாள் பட்டாசு, பலகாரம்; இரண்டாம் நாள் பொரி, கடலை, கரும்பு, ராட்டின விளையாட்டு என திருவிழாக்கோலம்; மூன்றாம் நாள் வீட்டுக்கு வீடு கோழி, மட்டன், பிரியாணி, கொத்துக்கறி, குடல்கறி வறுவல் என்றால் எப்படியிருக்கும்?
அப்படியான கொண்டாட்டத்தில் மூழ்கித் திளைத்திருக்கிறது கோவை அருகே உள்ள வடசித்தூர் கிராமம். இது அநேகமாக உலகில் வேறு எங்குமில்லாத அதிசயம்.  

கோவையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த வடசித்தூர் கிராமம். பொள்ளாச்சி கிணத்துக்கடவு அருகே உள்ள இந்த ஊரில் ஆண்டுதோறும் இரண்டு நாட்கள் தீபாவளி கொண்டாடுவது வழக்கம். இங்கு வசிக்கும் குறிப்பிட்ட பெரும்பான்மை சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் செம்மங்கூட்டம் என்ற குலத்தினர். இவர்கள் அமாவாசை அன்று அசைவம் சாப்பிடுவதில்லை. அதேபோல் செவ்வாய்க்கிழமைகளில் அசைவம் தொட்டுக் கொள்ளக்கூட மாட்டார்கள்.

தீபாவளிப்பண்டிகை அமாவாசைதோறும் வருவது. அந்த நாளில் எல்லா ஊர்களிலும், வீடுகளிலும் கறி விருந்துதான் அமர்க்களப்படும். முந்தினநாள் நடு இரவு தொடங்கியே ஆடு, கோழிகளை வெட்டித் தொங்க விட்டு விடுவார்கள். காலையிலும், மதியமும், இரவும் கூட அசைவ உணவே சாப்பிடுவது பெரும்பாலான வீடுகளில் நடைமுறையாகவே இருக்கிறது.
ஆனால், நம் வடசித்தூர் செம்மங்கூட்டத்தினர் அமாவாசையன்று கறி விருந்து சாப்பிடக்கூடாதே... கறிச்சோறு சாப்பிடாமல் என்ன பெரிய தீபாவளி... பார்த்தார்கள் இவர்களின் முன்னோர்கள். தீபாவளிக்கு அடுத்தநாளை தீபாவளிக்கான கறிவிருந்து நாளாக அறிவித்து விட்டார்கள். அதற்கு ‘மயிலந்தீபாவளி’ என்ற பெயரும் சூட்டி விட்டார்கள்.

அந்த நாளில் ஊர் பஞ்சாயத்து மன்றம் உள்ள மைதானத்தில் கூடும் பொதுமக்கள் அங்கே திருவிழாவைப் போல்  விரித்திருக்கும் கடைகளில் வேண்டிய அலங்காரப் பொருட்கள் வாங்குவதும்; கரும்பு, காய், கனி, பலகாரம் வாங்கிச் சாப்பிடுவதும்; ஜெயிண்ட் வீல், வட்டதூரி ஆடுவதும்; இரவில் அங்கேயே வாணவேடிக்கை, பட்டாசுகள் கொளுத்துவதும் வழக்கமாக இருந்திருக்கிறார்கள்.
அந்த இரண்டாம்நாளில் ஒவ்வொரு வீட்டிலும் மட்டன் கறிக் குழம்பு மணக்கும். அதனால் முந்தினநாள் மற்ற ஊர்களில் தீபாவளி கொண்டாடிய உறவுக்காரர்கள் எல்லாம் அடுத்தநாளும் தீபாவளி கொண்டாட இந்த ஊருக்கு படையெடுத்து வருவார்கள்.

குறிப்பாக இங்கிருந்து வேறு ஊருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண்கள் தலை தீபாவளிக்கு மட்டுமல்ல, காலம் முழுக்க தன் புகுந்த வீட்டில் தீபாவளி கொண்டாடினாலும், அடுத்தநாள் ‘மயிலந்தீபாவளி’க்கு இங்கே வந்து விடுவது வழக்கம். அதனால் இங்கே எல்லோருடைய வீடுகளிலும் ஒரு பங்குக்கு மூன்று மடங்கு இறைச்சி வேகும். பல குடும்பங்கள் ஒரு ஆட்டுக்கிடாயே பிடித்து கசாப்பு ஆக்கி, அவர்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதும் உண்டு.

இப்படி செம்மங்குலத்துக்காரர்கள் செய்து பண்டிகை கொண்டாடும்போது மற்றவர்கள் சும்மாயிருப்பார்களா? அவர்களும் ‘மயிலந்தீபாவளி’யை செம்மங்
குலத்தவர்கள் போலவே கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். இந்த ஊரில் இஸ்லாமியர்களும் நிறைய வசிக்கிறார்கள். அவர்களும் தங்கள் பங்குக்கு தங்கள் வீட்டில் பிரியாணி விருந்து ஆக்கி அசத்தி விடுவார்கள்.

எனவே அன்றைய தினம் வடசித்தூர் போனவர்கள் கறி விருந்து சாப்பிடாமல் திரும்பியதில்லை. இப்படியான நிலையில் தீபாவளி திங்கட்கிழமை வந்து விட்டால் போச்சு. செவ்வாய்க்கிழமையும் செம்மங்கூட்டத்துக்காரர்கள் கறி சாப்பிட  முடியாதல்லவா? எனவே, புதன் கிழமை கறி விருந்து தீபாவளி கொண்டாடப்படும். அன்றையதினம்தான் ஊரே கறி மணக்கும். அதற்காக இரண்டாம் நாளில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லையா என்றால் அதுதான் இல்லை. முதல் நாள் தீபாவளி கொண்டாடியவர்கள், இரண்டாம்நாள் ‘மயிலந்தீபாவளி’யைத் திருவிழா போல் பஞ்சாயத்து மன்ற மைதானத்தில் பொரி, கடலை, கரும்பு, ராட்டின தூரி சகிதம் கொண்டாட மறப்பதில்லை.

இதனால் இங்கே கடை விரிக்கப்படும் ராட்டினம், ஜெயிண்ட் வீல் உள்ளிட்ட விளையாட்டுகள் மூன்று நாட்களும் ஊரில் கடை விரிக்கப்பட்டிருக்கும். இந்த ஆண்டு உலகத்துக்கே திங்கட்கிழமை தீபாவளி வந்து விட்டது. செவ்வாய்க்கிழமை சூரிய கிரகணம் வேறு. ‘மயிலந்தீபாவளி’யைக் கறி விருந்துடன் கொண்டாட முடியவில்லை. எனவே, புதன்கிழமை கறி விருந்து தீபாவளி கொண்டாடியிருக்கின்றனர் ஊர் மக்கள். ஆக மொத்தம் இந்த ஊரில் இந்த ஆண்டு மட்டும் மூன்று நாட்கள் தீபாவளி.

‘‘எங்க அப்பாரு, பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே இந்தக் கொண்டாட்டம் இருக்குதுங்க. ஒரு அமர்க்களமா கறி விருந்துதான். பக்கத்துல நாலஞ்சு ஊர்ல இருந்தெல்லாம் சொந்தக்காரங்க வந்துடறது வழக்கம். இது இந்தியாவிலேயே எங்கேயும் இல்லாத வழக்கம்!’’ என்கிறார்கள் தங்கவேலுவும், பொன்னுசாமியும். சாம்பக்காட்டுக்காரர் ராமசாமி என்பவர், ‘‘இது மாரியம்மன்கோயில் திருவிழா மாதிரின்னு வச்சுக்குங்க. சாதி, சமயப் பாகுபாடில்லை. இஸ்லாமிய மக்கள் கூட அண்ணன் தம்பி மாதிரிதான். ஒரு வீட்டுக் கறி விருந்து இன்னொரு வீட்டுக்குப் போகும். கறி இல்லாத வீடே இருக்காது. இந்த மாதிரி நோம்பு பழக்கம் வந்து நூற்றியறுபது வருஷம் ஆச்சுங்கறாங்க. அது யாரு கண்டாங்க. எங்க அப்பா தாத்தா காலத்திலிருந்து இதை நாங்க கொண்டாடிட்டு இருக்கோம்!’’ என்றார்.

முன்னாள் வடசித்தூர் பஞ்சாயத்து தலைவர் தங்கம்மாளுக்கு மூன்று பெண்கள். அவர்களில் மூத்தவர் தம் ஊரில் திங்கட்கிழமை தீபாவளி கொண்டாடி விட்டு தாய் வீட்டு ‘மயிலந்தீபாவளி’க்கு செவ்வாய்க்கிழமையன்றே வந்து விட்டார். அடுத்த இரண்டு பெண்களின் வருகையை எதிர்பார்த்திருந்தார். அவர் பேசுகையில், ‘‘எப்பவுமே மூணு பொண்ணுகளும் வருஷந்தவறாம வந்துடுவாங்க. பேரன், பேத்திகள் எல்லாம் மாலை தூரி விளையாட்டுக்குப் போயிடுவாங்க.

முந்தியெல்லாம் எங்க  ஊர்ல சோளியாத்தா, மாரியாத்தா, மாகாளியாத்தான்னு எந்த நோம்பியுமே சாட்டறதில்லை. கொண்டாடறதும் இல்லை. அதை முன்னிட்டுத்தான் எங்க ஊர்ப் பெரியவங்க தீபாவளிக்கு அடுத்தநாள் இந்த ‘மயிலந்தீபாவளி’யை கோயில் திருவிழா மாதிரி கொண்டாடறதுக்கு ஏற்பாடு பண்ணியிருப்பாங்க போல
யிருக்கு. அதே ஸ்டைல்லதான் இது நடக்குது!’’ என்றார்.

இந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவரும், இந்தப் பண்டிகைக்கு இந்த ஊருக்கு வந்தவருமான முன்னாள் துணை கலெக்டரும் (ஓய்வு), கலை இலக்கியப் பெருமன்ற நிர்வாகியுமான வி. சுப்பிரமணியம் கூறும்போது, ‘‘அர்த்தமில்லாமல் நம் முன்னோர்கள் பண்டிகைகள் வைப்பதில்லை. திருவிழாக்கள் கொண்டாடுவதில்லை. எல்லாவற்றுக்கும் ஏதாவது ஒரு காரணம் வைத்துத்தான் கொண்டாடியிருப்பார்கள்.

இந்த ‘மயிலந்தீபாவளி’ பெயர்க்காரணம் கூட இப்படியிருக்கலாம்ன்னு எனக்குத் தோணுது. மயில்சாமி என்றால் மயிலான்னு கூப்பிடறது, வேலுச்சாமி என்றால் வேலா என்று கூப்பிடுவது கொங்கு மக்களிடையே சரளமாக உள்ள வழக்கு. அப்படி மயில்சாமி என்பவரோ, மயிலான் என்பவரோ இந்த ஊருக்கு ரொம்ப தலைக்கட்டுக்கு முந்தி ஏதோ நல்லது செய்திருக்க வேண்டும். அவர் நினைவாக இப்படியொரு தீபாவளியைக் கொண்டாடச் சொல்லி முன்னோர்கள் சொல்லியிருக்க வேண்டும்.

மயிலான் என்பதுதான் மருவி மயிலன்தீபாவளியாகி இருக்க வேண்டும். எது எப்படியாகினும் இதை வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதன் மூலம் இதற்கான காரணம் தெரிய வரலாம்!’’ என்கிறார்.நாம் சென்றிருந்த மூன்றாம் நாள் காலையே இந்த ஊரின் வீதிதோறும் மிளகுசாறு (கறிக்குழம்பு) மணந்தது. பலரும் நம்ம வீட்டுக்கு சாப்பிட வாங்க என்று அழைத்தார்கள். பஞ்சாயத்து அலுவலகக் கட்டடம் முன்பு இருந்த மைதானத்தில் இளவட்டங்கள் பெரிய ஜெயிண்ட் வீல் தூரி ஆடிக் கொண்டிருந்தார்கள்.

விளையாட்டுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் கடை கண்ணிகள் நிறைய. அதன் நடுவே கரும்புக்குவியலும், பொரிகடலை, முறுக்கு, மிக்சர் மூட்டைகளும் கூட தென்பட்டன. இது தீபாவளி, பொங்கல், மற்றும் கிடாவிருந்து கலந்த கலவையான விழா போலும். ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

கா.சு.வேலாயுதன்