ராமன் எத்தனை ராமனடி!



‘விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் யார்னு கேட்டா சித்தப்பான்னு சொன்னானாம்...’ என ஒரு சொலவடை உண்டு. இது உண்மையாகவும் இருக்கலாம் என்பது போல் அவ்வளவு ராமாயணங்கள் உலகெங்கும் பரவிக்கிடக்கின்றன. பாலி, கம்போடியா, சீனா, குஜராத், ஜாவா, கன்னடா, காஷ்மீர், மலேசியா, மராத்தி, ஒரியா, பிராகிருதம், சமஸ்கிருதம், சந்தால், சிங்களம், தமிழ், தெலுங்கு, தாய்லாந்து, திபெத்... என்று ராமாயணக் கதைகள் பலவித நிறங்கள் காட்டி ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளில் பரவிக் கிடப்பதாக ஆதாரம் காண்பித்த ஏ.கே ராமானுஜன் எனும் அறிஞரின் ‘முந்நூறு இராமாயணம்’ (Three Hundred Ramayanas) எனும் புத்தகம் 2008ல் தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது.

சீதைக்கு ராமன் சித்தப்பாகூட இல்லை…. ராவணனின் தங்கை சீதை என்றுகூட இந்தப் பிரதேசங்களில் கதைகள் வழங்கப்படுகிறது. சில காத்திரமான தமிழ் ஆய்வாளர்களைப் பிடித்து நாமும் இந்தப் பலப்பல ராமாயணம் (Many Ramayanas) கதை பற்றிக் கேட்டோம்.‘‘ராமாயணம் மட்டுமல்ல... மகாபாரதக் கதைகளும் பலப்பல இந்தப் பிரதேசங்களில் உலாவு
கிறது...’’ என்று இண்ட்ரோ கொடுக்கும் சீனிவாச ராமானுஜம் மேலும் தொடர்ந்தார்.‘‘பேச்சு மொழிகளாக மட்டுமே இருந்த இந்தியாவின் பல்வேறு மொழிகள் 10ம் அல்லது 11ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட பக்தி இயக்கத்தால் இலக்கிய மொழிகளாக பரிமாணம் அடைய ஆரம்பித்தன. இப்படி இலக்கிய மொழிகளாக மாறியபோதுதான் இந்தியாவில் ராமாயணமும் அந்தந்த மொழிகளில் உருவானது.

ஆதிகவியாக சொல்லப்படும் வால்மீகியின் ராமாயணமும் ஒரு மூலம் என்று எடுத்துக்கொள்ளமுடியாது. காரணம், ஏ.கே.ராமானுஜனே சமஸ்கிருதத்தில் கூட பலப்பல ராமாயணம் இருப்பதாகக் கூறுகிறார். ஆகவே வால்மீகி ராமாயாணம்கூட ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் ஒரு அரூபமான வடிவம் என்றுதான் சொல்லவேண்டும்.

அப்படி ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் உருவாகிய வால்மீகியின் ராமாயணத்தை ஒட்டியும் அல்லது வெட்டியும் இந்தியாவிலும் மற்ற பிரதேசங்களிலும் காணக்கிடைப்பது வால்மீகி ராமாயணத்துக்கு ஒன்றும் இழுக்கல்ல...’’ அழுத்தமாகச் சொல்லும் சீனிவாச ராமானுஜம் இந்தியாவில் காணப்படும் பலப்பல ராமாயணங்கள் பற்றி மேலும் விளக்கினார்.
‘‘பக்தி இயக்கத்தின்போது தோன்றிய ராமாயணங்களோடு இந்தியாவின் பழங்குடிகளிடமும் பல்வேறு ராம கதைகள் உண்டு. ஒவ்வொரு இந்திய சமூகமும் தன் பண்பாட்டுக்கு ஏற்ப ராம கதைகளைச் சொல்லி வந்திருக்கிறது.

உதாரணமாக, பவுத்த ராமாயணத்தில் ராமனும் சீதையும் சகோதர சகோதரிகள். இதுபோலத்தான் சமண மத ராமாயணமும். கேரளத்தில் மாப்பிளா முஸ்லிம் சமூகத்திடமும் ஒரு ராமாயணம் உண்டு. இந்தியாவில் இருக்கும் எல்லா ராமாயணமும் வால்மீகி ராமாயணத்தின் மொழிபெயர்ப்பாக இருக்கவேண்டும் என்று சொல்வது தவறான பார்வை.
கன்னட ஆய்வாளரான டி.ஆர்.நாகராஜ், இந்தியாவின் எல்லா பிரதேசங்களிலும் வால்மீகி ராமாயணத்தில் வருவதுபோல ஒரு சரயு நதி ஓடுவதாகக்  குறிப்பிடுவார். இதுபோல
இந்தியாவில் எல்லாப் பிரதேசங்களிலும் ஒரு அயோத்தி காணப்படுகிறது.

இந்தியாவில் ஒரு மலையோ, ஒரு அருவியோ, ஒரு நிலப்பகுதியோ ராமன் போன பாதையாக, சீதை சென்ற பாதையாக இருப்பதை இன்றும் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். ‘சீதை இந்த இடத்தில்தான் இளைப்பாறினாள்’ என்று இன்றும் ஒரு குக்கிராமத்தில் ஒரு கல்லை அந்த மக்கள் வழிபடுவதைக் காணலாம். இது எல்லாமே ஆசிய, தெற்காசியப் பகுதிகளில் ராம கதை பரவலைத்தான் காண்பிக்கிறது. அது அப்படியே வால்மீகியைப் போலவே இருக்கவேண்டும் என்று அடம்பிடிப்பது ஒரு
இலக்கியத்துக்கு சரியானதல்ல.

உதாரணமாக, வால்மீகியின் ராமாயணத்தில் ராமன் ஒரு சாதாரண மனிதன். ஆனால், நம்ம ஊர் கம்பராமாயணத்தில் ராமன் ஒரு கடவுள். பெரியார்கூட ராமாயணத்தை எதிர்த்து ஒரு புத்தகம் வெளியிட்டார். அதுவும்கூட ஒருவகை ராமாயண கதையாகத்தான் கொள்ளவேண்டும். ஒரு கதையின் பலப்பல பரிமாணங்களைத் தீர்மானிப்பது ஒரு சமூகத்தின்
பண்பாட்டுத் தேவையே...’’ என்று சீனிவாச ராமானுஜம் முடிக்க, ஆய்வாளர் ஆ.சிவசுப்ரமணியன் வால்மீகி, கம்பராமாயணத்துக்கும் இடையிலான பல்வேறு பண்பாட்டு, வரலாற்றுத் தேவை எப்படி ராமன் கதையில் மாறுபாட்டை ஏற்படுத்தியது என்பதை சுட்டிக்காட்டினார்.

‘‘வால்மீகிக்கும் கம்பருக்குமான கால இடைவெளியே மிகப் பெரிது. வால்மீகியை ஆதிகவி என்பார்கள். வால்மீகி வாழ்ந்த காலம் வனங்கள் நிறைந்த காலம். ஆனால், கம்பர் வாழ்ந்தது பத்தாம் / பதினோராம் நூற்றாண்டு. சோழர் காலம், அதிலும் ராஜராஜன் காலம்கூட இல்லை. பின்னால் வந்த குலோத்துங்க சோழன் காலம். ராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற ஒரு காட்சியை வைத்தே இரண்டுக்குமான இடைவெளி யைப் புரிந்துகொள்ளலாம். வால்மீகியில் ராவணன் சீதையின் கூந்தலை ஒரு கரத்தால் பற்றி மறுகரத்தால் அவள் இரு தொடைகளையும் பிடித்து தன் மடியின் மேல் வைத்து கவர்ந்து செல்வதாகக் காட்சி இருக்கும்.

கம்பராமாயணத்தில் ராவணன் சீதையைத் தன் கைப்படாமல் தரையோடு தரையாக பெயர்த்து அவளைத் தூக்கிச் சென்றதாக வரும். இதனால் வால்மீகி ராமாயணம் இழுக்கானது, கம்பராமாயணம் பெருமை மிகுந்தது என்றெல்லாம் சொல்லமுடியாது. ஆதிகவி வாழ்ந்த காலம் அப்படி. ஒரு பழங்குடி சமூகம் வாழ்ந்த காலம் அது. கம்ப ராமாயணம் வந்தபோது அதற்கு முன்பே தமிழர்களிடம் பல சீரிய காப்பியங்கள் தோன்றிவிட்டன.

உதாரணமாக, சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கம்பராமாயணத்துக்கு முன் தோன்றியவை. மணிமேகலை காலத்திலேயே மனத்தால் ஒரு ஆடவனை நினைத்துவிட்டாலே கற்பு பறிபோய்விட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். இப்படி நினைக்கும் காலம் மணிமேகலை காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது.

ஆகவேதான், சீதையை ஒரு புனிதவதியாகக் காண்பிக்கிறார் கம்பர். இதுபோல இந்தியாவிலும் பல்வேறு தெற்காசிய பிரதேசங்களிலும் தோன்றிய பல்வேறு ராமாயணங்களை ஒரு சமூகத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியாகப் பார்ப்பதுதான் சரியாக இருக்கும். ஏ.கே ராமானுஜன் வால்மீகியையும், கம்பரையும் ஒப்பிட்டுத்தான் தன் ‘முந்நூறு இராமாயணம்’ என்ற புத்தகத்தை எழுதினார். ஒரு கதையில் இருந்து ஒரு மக்கள் சமூகத்தைப் படித்துக்கொள்ளவேண்டுமே தவிர ஒரு கதையை எல்லா மக்களுக்குமான வரலாறாகப் பார்ப்பது தவறானது...’’ என அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் ஆ.சிவசுப்ரமணியன்.

டி.ரஞ்சித்