ஜாலியான தீபாவளி ட்ரீட்!



தெலுங்கில் வெளியான ‘ஜதிரத்னலு’ படம் கொடுத்த வெற்றி, நல்ல விமர்சனங்கள் மூலம் தமிழ் சினிமாவையும் தட்டியிருக்கிறார் இயக்குநர் அனுதீப்.
விளைவு-அவருடைய இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா ரியாபோஷாக்பா, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளி பரிசாக வரவிருக்கிறது ‘பிரின்ஸ்’.

‘பிரின்ஸ்’ தீபாவளி பரிசாக என்ன கொடுக்கப் போகிறார்?

காமெடி பிளஸ் காதல் ஜாலியான ஒரு குடும்பப்படம்னு கதை எழுதிட்டேன். சிம்பிளா சின்னதா ஒரு பெயர் வைக்கணும்னு யோசிச்சிட்டு இருந்தப்ப சிவகார்த்திகேயன் சார் சொன்ன பெயர்தான் இந்த ‘பிரின்ஸ்’. தலைப்புக்கும் கதைக்கும் ரொம்ப பெருசா எல்லாம் கனெக்‌ஷன் யோசிக்கல. குடும்பமா உட்கார்ந்து ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு போகணும் அவ்வளவுதான்.
அப்படியான அனுபவத்தை ‘பிரின்ஸ்’ கொடுப்பார். வெல்கம் to தமிழ் சினிமா ப்ரோ?

ரொம்ப நன்றி. என் குடும்பம் இப்ப ஹைதராபாத்தில் இருக்காங்க. சொந்த ஊர் ‘ஜதிரத்னலு’ படத்தில் வரும் தெலுங்கானா மாநில சங்காரெட்டி மாவட்டம், அந்தோள் ஜோகி பேட்தான்.  
சின்ன வயசுல இருந்து சினிமா ரொம்ப பிடிக்கும். எப்படியாவது தேடிப் பிடிச்சு எல்லா மொழி படங்களையும் பார்த்திடுவேன். பாரதிராஜா சார், பாலச்சந்தர் சார் படங்கள் எல்லாம் ஒண்ணு கூட மிஸ் செய்ததே இல்ல.

என் அப்பா கவர்மெண்ட் டீச்சர். அவருக்கு சுத்தமா இந்த சினிமா ஆர்வம் எல்லாம் பிடிக்கவே இல்ல. இங்க இருந்தா நம்ம சினிமா கனவு கனவாகவே போயிடும்னு ஹைதராபாத்துக்கு வண்டி ஏறினேன். கொஞ்சம் கொஞ்சமா சினிமாவில் சின்னச் சின்ன டெக்னிக்கல் வேலைகள் எல்லாம் செய்து அசிஸ்டெண்ட் டைரக்டர்... அப்புறம் நானே ஸ்கிரிப்ட் எழுதி முதல் படம்... அந்த படத்துக்கு பெரிதா வரவேற்பு கிடைக்கல. அடுத்த படம்தான் ‘ஜதிரத்னலு’. நோட்டபிள் டைரக்டரா மாறினேன். இப்ப ‘பிரின்ஸ்’.

ஸ்டைலிஷ் டீச்சர், பிரிட்டிஷ் பிரின்ஸ் சிவகார்த்திகேயன் என்ன சொல்றார்?

என் அப்பா கவர்மெண்ட் டீச்சர் இல்லையா... அந்த தாக்கம்தான் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சாரும் டீச்சர். இந்தப் படத்தை 59 நாட்களில் முடிச்சிருக்கோம். அதுக்கு முதற்காரணம் சிவகார்த்திகேயன் சார்தான். டைமிங் பார்க்காம நடிச்சுக் கொடுத்தார். ஸ்க்ரிப்டுல எங்கயும் எதிலேயும் தலையிடாம எனக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுத்தார்.  

வெள்ளை வெளேர் மரியா ரியாபோஷாக்பா... யாரு சார் அவங்க?

கதைப்படி ஹீரோயின் வெளிநாட்டுப் பொண்ணா இருக்கணும். அதே சமயம் நம்ம கதையையும் புரிஞ்சு அதுக்கு ஏத்த மாதிரி நடிக்கணும். பார்த்த உடனே சிம்பதி கிரியேட் பண்ற அழகானபொண்ணாவும் இருக்கணும். தவிர எங்களுக்கு நேரம் ரொம்ப குறைவா இருந்துச்சு. ஏகப்பட்ட ஆடிஷன்ஸ் முடிச்சோம். நிறைய வீடியோ கூட பார்த்தோம். நிறைய மியூசிக்கல் வீடியோக்கள், நெட்ஃபிளிக்ஸ்... இங்கே எல்லாம் கூட தேடிப் பார்த்தேன்.

அப்பதான் உக்ரைன் நாட்டு பொண்ணுனு காஸ்டிங் டீம் ஒரு வீடியோ அனுப்பிச்சாங்க. அவங்களுக்கு பாஸ்போர்ட் இருக்கு. ஆனா, விசா பிரச்னையா இருந்துச்சு. எப்படியாவது அவங்களை இங்க கொண்டு வரணும்... நடிக்க வைக்கணும்னு முழுமூச்சா இறங்கி வேலை செய்தோம். அதுக்கேத்த மாதிரியே அவங்களும் வெறும் ரெண்டு நாட்கள் ரிஹர்சல்... பாட்டு சீன்களுக்கு கூட ஒரு நாள் ரிஹர்சல்னு பட்டையை கிளப்பிட்டாங்க. ரொம்ப டெடிகேஷன். அவங்களுக்கு ஆங்கிலம் கூட கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும். இத்தனை கஷ்டத்திலும் கூட கதையை புரிஞ்சுகிட்டு ஒவ்வொரு உணர்ச்சியையும் ரொம்ப அழகா ஸ்கிரீன்ல கொண்டு வந்தாங்க. அவங்களே தமிழ் பேசி நடிச்சிருக்காங்க!  

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் பற்றி சொல்லுங்க?

டிரெய்லரிலேயே பார்த்திருப்பீங்க. சிவகார்த்திகேயன் சாருக்கு அப்பாவா சத்யராஜ் சார். அடுத்து பிரேம்ஜிக்கு ‘சென்னை 28’ டைம்ல இருந்து நான் மிகப்பெரிய ஃபேன்.  எனக்கு வெங்கட் பிரபு சார் படங்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கும். பிரேம்ஜி அமரனை ஒரு படத்திலாவது நடிக்க  வைக்கணும்னு நினைச்சேன். இந்த கதை எழுதும்போதே இந்த கேரக்டருக்கு பிரேம்ஜிதான்னு முடிவு செய்துதான் எழுதினேன்.

நான் சினிமாட்டோகிராபி, ஃபோட்டோகிராபி பத்தி நிறைய விஷயங்கள் இந்த படத்திலே கத்துக்கிட்டேன்னா அதுக்கு காரணம் மனோஜ் பரமஹம்சா சார்தான். ஒரு லவ் படம் எப்படி எடுக்கணுமோ அப்படி சூப்பரா செய்துருக்கார். மியூசிக் தமன். ஏற்கனவே பாடல்கள் எல்லாம் செம ஹிட் ஆகிடுச்சு. அதைத் தாண்டி இந்த படத்துல வொண்டர்ஃபுல் பிஜிஎம் பேக்ரவுண்ட் ஸ்கோர் செய்திருக்கார். எடிட்டிங், பிரவீன் கே எல் சார். இவங்க கூட எல்லாம் வேலை செய்ததில் நான் நிறைய கத்துக்கிட்டேன்.

‘பிம்பிளிக்கி பிளாப்பி...’ இந்தப் பாடல் எங்கே எந்த சூழலில் உருவாச்சு?

இதுக்கு முன்னாடி சிவகார்த்திகேயன் சாருடைய நிறைய பாடல்கள் கேட்டிருக்கேன். அதிலும் கடைசியா வந்த ‘டான்’ படத்தின் ‘ஜலபுல ஜங்கு...’ பாட்டு செம வைரல். அதை மனசுல வச்சிக்கிட்டு அதே மாதிரி ஒரு ட்ரெண்ட் செட்டிங் பாட்டு உருவாக்கணும்னு முயற்சி செய்தேன். சிவகார்த்திகேயன் சார்தான் இந்த வார்த்தை கவுண்டமணி சாருடைய ஃபேமஸ் காமெடினு சொல்லி ‘பிம்பிளிக்கி பிளாப்பி...’யை சொன்னாரு. தெலுங்கு சினிமா கதை உருவாக்கம்... தமிழ் சினிமா கதை உருவாக்கம்... எது கஷ்டம்?

ஆக்சுவலி தமிழ், தெலுங்கு கதைகள் உருவாக்குவது பிரச்னை இல்ல. ஆனா, கதையை சொல்லும்போது தெலுங்கு ஆடியன்ஸை விட தமிழ் ஆடியன்ஸுக்கு காமெடியா இருந்தாலும் சரி... எமோஷனலா இருந்தாலும் சரி... எதார்த்தமா இருக்கணும்; அதே சமயம் ஆழமாகவும் இருக்கணும். அதைத்தான் புரிஞ்சுகிட்டேன்.

காமெடி ஜாலி திரைப்படமா இருந்தாலும் உங்க ‘ஜதிரத்னலு’ படத்தின் கதை சொல்லல் வித்தியாசமா இருந்தது. அப்படியான ஒரு அனுபவத்தை ‘பிரின்ஸ்’ கொடுக்குமா?நிச்சயம் கொடுக்கும். டிரைலர் பார்த்துட்டு இப்படித்தான் இருக்கும்னு வர்றவங்களுக்கு இந்த படத்தில் நிறைய சர்ப்ரைஸ் காத்திருக்கு. கவர்மெண்ட் ஸ்கூல் ஸ்டூடண்ட் சார்ந்த பல சமூக விஷயங்களும் படத்துல இருக்கு.

அதுவும் இப்ப இந்த சாதி, பார்டர் பிரச்னைகள் எல்லாம் நிறைய நடந்துகிட்டு இருக்கு. இப்ப இந்த பிரச்னையைக் காமெடியா ஜாலியாகவாவது சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கு. ‘பிரின்ஸ்’ அந்த வேலையை சரியா செய்யும். அதுக்காக கருத்து கந்தசாமியா அட்வைஸ் எல்லாம் இருக்காது. போகிற போக்குல தூவிட்டு போகும்.

இதுக்கு முன்னாடி இது மாதிரி நிறைய நடந்துருக்கு... ஆனா, இதுதான் முதல் முறை... என்ற டிரெய்லர் டயலாக்குக்கு என்ன அர்த்தம்?

ஆக்சுவலி அந்த சீன்... அந்த மொமெண்ட்ல ஒரு சில நிமிஷங்கள் நடந்துச்சு. சும்மா போற போக்குல ஆன் த ஸ்பாட்ல இந்த டயலாக்கை அப்படியே எழுதி வைச்சிட்டோம். ஆனா, டிரெய்லர்ல வைச்சப்ப இந்த அளவுக்கு இம்பேக்ட் ஏற்படும்னு நினைக்கவே இல்ல! ஜாலியா ஒரு டைமிங் காமெடிதான் அது. ‘பிரின்ஸ்’ ஆடியன்ஸுக்கு என்ன கொடுக்கும்? குடும்பமா, ஜாலியா, குழந்தைகள் சகிதமா சேர்ந்து படம் பார்க்கணும்னு நினைக்கிறவங்க ‘பிரின்ஸ்’ படத்துக்கு வரலாம். நமக்கு இந்த ரத்தம் தெறிக்கிற வயலன்ஸ், சீரியஸ் டார்க் காமெடி எல்லாம் வரவே வராது.

எதைச் சொன்னாலும் லைட்டா காமெடியா சொல்லிட்டு போகணும். குறிப்பா இந்த ஆன் த ஸ்பாட் காமெடி, எந்தப் பின்னணியும் இல்லாம சும்மா அடிச்சி விடுற ஜோக்ஸ் எல்லாம் ரொம்பப் பிடிக்கும். அதெல்லாம் நிறைஞ்ச ஒரு படம்.  தீபாவளி ஹாலிடேவுக்கு ஜாலியான கொண்டாட்டத்தை ‘பிரின்ஸ்’ கொடுப்பார். எல்லாருக்கும் ஹேப்பி தீபாவளி.

ஷாலினி நியூட்டன்